Historical
ஆசாவின் மாற்றங்கள்
15 தேவனுடைய ஆவி அசரியாவின் மீது வந்தது. அசரியா ஓபேதின் குமாரன். 2 அசரியா, ஆசாவைச் சந்திக்கச் சென்றான். அசரியா, “ஆசாவே, யூதா மற்றும் பென்யமீனின் எல்லா ஜனங்களே! என்னைக் கவனியுங்கள். நீங்கள் கர்த்தரோடு இருக்கும்போது அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் கர்த்தரைத் தேடினால் கண்டுகொள்ளலாம். ஆனால் நீங்கள் அவரை விட்டு விலகினால் அவரும் விலகி விடுவார். 3 நீண்ட காலத்திற்கு இஸ்ரவேலர்கள் உண்மையான தேவன் இல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் போதிக்கும் ஆசாரியர் இல்லாமலும், சட்டங்கள் இல்லாமலும் இருந்தார்கள். 4 ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் துன்பம் வந்தபோது அவர்கள் மீண்டும் கர்த்தருடைய பக்கம் திரும்பினார்கள். அவரே இஸ்ரவேலின் தேவன். அவர்கள் கர்த்தரைத் தேடினார்கள்; கண்டுகொண்டனர். 5 அந்தக் கஷ்டகாலங்களில் எவராலும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியவில்லை. எல்லா நாடுகளிலும் துன்பங்கள் ஏற்பட்டன. 6 ஒரு நாடு இன்னொரு நாட்டை அழித்தது. ஒரு நகரம் இன்னொரு நகரத்தை அழித்தது. தேவன் அவர்களுக்கு எல்லாவிதமான துன்பங்களையும் கொடுக்கவேண்டும் என்று எண்ணியதால் இவ்வாறு நிகழ்ந்தது. 7 ஆனால் ஆசா, நீயும் யூதா மற்றும் பென்யமீனின் ஜனங்களும் பலமுடையவர்களாக இருங்கள். பலவீனமாய் இருக்காதீர்கள். எதையும் கைவிட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்கள் பணிகளுக்குத்தக்க வெகுமதி கிடைக்கும்!” என்றான்.
8 ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியான ஓபேதின் வார்த்தைகளையும் கேட்டதும் ஊக்க உணர்வை அடைந்தான். பிறகு அவன் யூதா மற்றும் பென்யமீன் பகுதிகளில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களை அப்புறப்படுத்தினான். எப்பிராயீம் மலைநாட்டில் தான் கைப்பற்றிய ஊர்களில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தினான். கர்த்தருடைய ஆலய முன்வாயிலின் முன்னால் இருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்தான்.
9 பிறகு ஆசா, யூதா மற்றும் பென்யமீன் ஜனங்கள் அனைவரையும் எருசலேமில் கூட்டினான். அவன் எப்பிராயீம், மனாசே, சிமியோன் ஆகிய கோத்திரத்தினர்களையும் கூட்டினான். அவர்கள் வாழ்வதற்காக இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதாவிற்கு குடியேறியவர்கள். இதுபோல் ஏராளமான ஜனங்கள் யூதாவிற்கு வந்தனர். ஏனென்றால் ஆசாவின் தேவனாகிய கர்த்தர் ஆசாவோடு அங்கே இருப்பதைக் கண்டனர்.
10 ஆசாவும், அந்த ஜனங்கள் அனைவரும் எருசலேமில் கூடினார்கள். அது ஆசாவின் 15வது ஆட்சியாண்டின் மூன்றாவது மாதமாகும். 11 அப்போது அவர்கள் 700 காளைகளையும், 7,000 ஆடுகளையும் பலியிட்டனர். இப்பலிப் பொருட்களையும் மற்ற விலையுயர்ந்தவற்றையும் ஆசாவின் படையினர் தம் எதிரிகளிடமிருந்து அபகரித்து வந்தனர். 12 பிறகு அவர்கள் தம் மனப்பூர்வமாகவும், ஆத்மபூர்வமாகவும் தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வதாக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அவரே அவர்களது முற்பிதாக்களால் சேவைசெய்யப்பட்ட தேவன். 13 எவனொருவன் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்ய மறுக்கிறானோ அவன் கொல்லப்பட்டான். அவன் முக்கியமானவனா அல்லது முக்கியம் இல்லாதவனா, அவன் ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல. 14 பிறகு ஆசாவும், ஜனங்களும் கர்த்தருக்கு முன்னால் ஒரு சபதம் செய்தார்கள். அவர்கள் மிக உரத்தகுரலில் கூவினார்கள். மேலும் செம்மறியாட்டுக் கடாவின் கொம்புகளையும், எக்காளங்களையும் ஊதினார்கள். 15 யூதா ஜனங்கள் அனைவரும் அந்த உறுதிமொழியைக் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால் அவர்கள் தம் மனப்பூர்வமாகச் சத்தியம் செய்தனர். அவர்கள் மனப் பூர்வமாக தேவனைப் பின்பற்றினர். அவர்கள் தேவனைத் தேடிக் கண்டடைந்தனர். எனவே கர்த்தர் நாடு முழுவதிலும் உள்ள ஜனங்களுக்கு சமாதானத்தை அளித்தார்.
16 ஆசா ராஜா தன் தாயான மாகாளை ராஜாத்தி என்ற பதவியிலிருந்து நீக்கிவிட்டான். ஏனென்றால் அவள் அஷா என்னும் தேவதையை வழிபடும் கம்பத்தை உருவாக்கினாள். ஆசா அந்த அஷா கம்பத்தை உடைத்து துண்டுத்துண்டாக நொறுக்கிவிட்டான். பிறகு அத்துண்டுகளை கீதரோன் சமவெளியில் சுட்டெரித்தான். 17 பல மேடைகளோ யூதா நாட்டில் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தன. எனினும் ஆசாவின் இதயம் அவனது வாழ்நாள் முழுவதும் கர்த்தரோடு இருந்தது.
18 ஆசா, தானும் தன் தந்தையும் அளித்த பரிசுத்த அன்பளிப்புகளை தேவனுடைய ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தான். அவை பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. 19 ஆசாவின் 35வது ஆட்சியாண்டுவரை நாட்டில் போர் இல்லாமல் இருந்தது.
ஆசாவின் இறுதி ஆண்டுகள்
16 ஆசாவின் 36வது ஆட்சி ஆண்டில் யூதா நாட்டினை பாஷா தாக்கினான். பாஷா இஸ்ரவேலின் ராஜா ஆவான். அவன் ராமா என்னும் நகருக்குச் சென்று அதையே ஒரு கோட்டையாகக் கட்டினான். ஜனங்கள் யூதாவின் ராஜாவாகிய ஆசாவிடம் செல்வதையோ அல்லது அவனிடமிருந்து திரும்புவதையோ தடுப்பதற்கான இடமாக ராமா ஊரினைப் பயன்படுத்தினான். 2 கர்த்தருடைய ஆலயத்தில் கருவூலத்தில் இருந்த பொன்னையும் வெள்ளியையும் ஆசா வெளியே எடுத்தான். அரண்மனை கருவூலத்தில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் ஆசா எடுத்தான். பிறகு அவன் பென்னாதாத்துக்கு தூது அனுப்பினான். பென்னாதாத் ஆராம் நாட்டு ராஜா. அவன் தமஸ்கு நகரத்தில் இருந்தான். ஆசாவின் செய்தி இது: 3 “பென்னாதாத் நீயும் நானும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வோம். உன் தந்தையும் என் தந்தையும் செய்த ஒப்பந்தம் போன்று இருக்கட்டும். நான் உனக்குப் பொன்னும் வெள்ளியும் அனுப்புவேன். நீ இப்போது பாஷாவுடன் உள்ள ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடு. அதனால் அவன் எனக்குத் துன்பம் தராமல் விலகிவிடுவான்.”
4 பென்னாதாத் ராஜாவாகிய ஆசா சொன்னவற்றை ஒத்துக்கொண்டான். அவன் தனது படைத் தளபதிகளை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களைத் தாக்கினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல், மாயீம், நப்தலிப் பகுதியில் இருந்த ஊர்கள் ஆகியவற்றைத் தாக்கினார்கள். இந்நகரங்களில் கருவூலங்களும் பண்டகச்சாலைகளும் இருந்தன. 5 இஸ்ரவேல் நகரங்கள் தாக்கப்படுவதை பாஷா கேள்வியுற்றான். எனவே அவன் ராமாவில் கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு விலகிப்போனான். 6 பிறகு ஆசா ராஜா யூதா ஜனங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் ராமா நகரத்திற்குச் சென்றார்கள். அங்கு கோட்டை கட்டுவதற்காக பாஷா வைத்திருந்த கல், மரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அவற்றால் அவர்கள் கேபா, மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினார்கள்.
7 அப்போது யூதாவின் ராஜாவாகிய ஆசாவிடம் அனானி எனும் ஞானதிருஷ்டிக்காரன் வந்தான். அனானி ராஜாவிடம், “ஆசா, நீ உதவிக்காக ஆராம் நாட்டு ராஜாவையே சார்ந்திருந்தாய். உனது தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை. நீ உன் உதவிக்காக கர்த்தரைச் சார்ந்திருக்கவேண்டும். ஆனால் உதவிக்காகக் கர்த்தரைச் சாராததால் ஆராம் நாட்டு படையும் உன் கைகளில் இருந்து விலகிப்போனது. 8 எத்தியோப்பியர்களிடமும் லூபியர்களிடமும் வலிமைமிக்க பெரிய படை இருந்தது. அவர்களிடம் ஏராளமான இரதங்களும் குதிரை வீரர்களும் இருந்தனர். ஆனால் நீ உதவிக்கு கர்த்தரை நாடியபோது அவர் இவர்களை வெல்லும்படி உதவினார். 9 கர்த்தருடைய கண்கள் பூமியில் உள்ள அனைவர் மீதும் சுற்றிவரும். தனக்கு உண்மையானவர்களை அவர் தேடி அவர்களை பலமுள்ளவர் ஆக்குவார். ஆசா நீ முட்டாள்தனமாக நடந்துக்கொண்டாய். எனவே இப்போது முதல் நீ போர்களை சந்திப்பாய்” என்றான்.
10 ஆசாவிற்கு அனானி மீது அவன் பேசிய சொற்களுக்காக கோபம் வந்தது. அவன் எந்தவித காரணமின்றி அனானியைச் சிறையில் அடைத்தான். இக்காலக் கட்டத்தில் ஆசா பலரிடம் கொடூரமாக நடந்துக்கொண்டான்.
11 தொடக்கம் முதல் இறுதிவரை ஆசா செய்த செயல்கள் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 12 ஆசாவின் 39வது ஆட்சியாண்டில் அவன் காலில் நோய் வந்தது. இது மிக மோசமான நோய். எனினும் கர்த்தருடைய உதவியை நாடவில்லை. உதவிக்காக மருத்துவர்களை நாடினான். 13 ஆசா தனது 41வது ஆட்சியாண்டில் மரித்தான். அவன் தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். 14 தாவீதின் நகரத்திலே ஆசா தனக்கென்று ஒரு கல்லறை அமைத்திருந்தான். ஜனங்கள் அவனை அதிலேயே அடக்கம் செய்தனர். அவனை வாசனைப் பொருட்களாலும் பலவகை மணக்கலவைகளாலும் அமைக்கப்பட்ட மெத்தை மீது வைத்தனர். ஆசாவை கௌரவிப்பதற்காக ஜனங்கள் ஒரு பெரும் நெருப்பை உண்டாக்கினார்கள்.
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்
17 யூதாவின் புதிய ராஜாவாக ஆசாவின் இடத்திலே அவனது குமாரனான யோசபாத் ஆனான். இவன் யூதாவை பலமுள்ளதாக ஆக்கினான். இஸ்ரவேலை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு அவன் யூதாவை பலப்படுத்தினான். 2 அவன் யூதாவின் அனைத்து நகரங்களிலும் படை வீரர்கள் அடங்கிய குழுக்களை நிறுத்தினான். அந்நகரங்கள் எல்லாம் யூதாவிலும், அவன் தந்தையால் கைப்பற்றப்பட்ட எப்பிராயீம் நகரங்களிலும் யோசபாத் கோட்டைகளைக் கட்டினான்.
3 கர்த்தர் யோசாபாத்தோடு இருந்தார். ஏனென்றால் இவனது சிறுவயதில் இவன் தன் முற்பிதாவான தாவீதைப்போன்று நற்செயல்களைச் செய்தான். இவன் பாகால் விக்கிரகங்களைப் பின்பற்றவில்லை. 4 யோசபாத் தன் முற்பிதாக்களைப்போன்றே தேவனைப் பின்பற்றினான். அவன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான். இவன் இஸ்ரவேல் ஜனங்களைப்போன்று வாழ்க்கை நடத்தவில்லை. 5 யோசபாத்தை யூதாவின் பலம் பொருந்திய ராஜாவாக கர்த்தர் ஆக்கினார். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொண்டு வந்தனர். இதனால் யோசபாத் பெருஞ் செல்வமும் பெருமையும் அடைந்தான். 6 யோசபாத்தின் மனம் கர்த்தருடைய வழியில் மகிழ்ச்சியைக் கண்டது. அவன் யூதா நாட்டில் மேடைகளை அகற்றினான். விக்கிரகங்களையும் அழித்தான்.
7 யோசபாத் தன் தலைவர்களை யூத நகரங்களில் கற்பிக்கச் செய்தான். இவை இவனது மூன்றாவது ஆட்சியாண்டில் நடந்தது. பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா, ஆகியோர் இவனால் அனுப்பப்பட்ட தலைவர்கள். 8 இவர்களோடு லேவியர்களையும் அனுப்பினான். லேவியர்களில் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகியோர் இருந்தனர். இவர்களோடு ஆசாரியர்களில் எலிஷாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பினான். 9 இவர்கள் யூதாவிலுள்ள ஜனங்களுக்குப் போதித்தனர். அவர்களிடம் கர்த்தருடைய சட்டபுத்தகம் இருந்தது. அவர்கள் யூதாவின் அனைத்து நகரங்களுக்கும் சென்று அதனைப் போதித்தனர்.
10 யூதாவின் அருகிலுள்ள மற்ற நாட்டினரும் கர்த்தருக்குப் பயந்தனர். எனவே அவர்கள் யோசபாத்துக்கு எதிராகப் போரைத் தொடங்காமல் இருந்தனர். 11 சில பெலிஸ்திய ஜனங்களும் யோசபாத்துக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் யோசபாத்துக்கு வெள்ளியையும் கொண்டுவந்தார்கள். ஏனென்றால், அவன் ஒரு வலிமைமிக்க அரசனென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சில அரபியர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். அவர்கள் 7,700 ஆட்டுக் கடாக்களையும், 7,700 வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுத்தனர்.
12 யோசபாத் மிக பலமுள்ளவனாக ஆனான். அவன் கோட்டைகளையும், பொருட்கள் வைப்பதற்கான கருவூலங்களையும் யூதாவில் கட்டினான். 13 யூதா நகரங்களில் பொருட்களை விநியோகம் செய்தான். எருசலேமில் யோசபாத் பயிற்சி மிக்க படைவீரர்களை வைத்திருந்தான். 14 இவ்வீரர்கள் தம் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இதுதான் அவர்கள் விபரம்:
யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைவனாக இருந்தான். 3,00,000 வீரர்களுக்கு அவன் தளபதியாக இருந்தான்.
15 யோகனான் எனும் தளபதியிடம் 2,80,000 வீரர்கள் இருந்தனர்.
16 அமசியா எனும் தளபதியிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். அமசியா சிக்ரியின் குமாரன். அமசியா, தன்னை கர்த்தருடைய சேவையில் ஈடுபடுத்துவதில் மகிழ்ச்சியடைந்தான்.
17 பென்யமீனின் கோத்திரத்தில் இருந்து பின்வரும் சேனாதிபதிகள் இருந்தனர். எலியாதாவிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் வில், அம்பு, கேடயம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். எலியாதா மிகப் பலம் பொருந்திய வீரன்.
18 யோசபாத்திடம் 1,80,000 வீரர்கள் போருக்குத் தயாரானவர்களாக இருந்தனர்.
19 அனைவரும் யோசபாத் ராஜாவுக்குச் சேவைச் செய்துவந்தனர். ராஜாவுக்கு யூத நாட்டு கோட்டைகளில் பணிசெய்ய வேறு வீரர்களும் இருந்தனர்.
மிகாயா ஆகாப் ராஜாவை எச்சரிக்கிறான்
18 யோசபாத்துக்கு மிகுந்த செல்வமும், சிறப்பும் இருந்தது. இவன் ஆகாப் ராஜாவோடு ஒரு திருமண ஒப்பந்தம் செய்துகொண்டான். 2 சில ஆண்டுகளுக்குப் பிறகு யோசபாத் ஆகாபைப் பார்க்க சமாரியா நகரத்திற்குச் சென்றான். ஆகாப் பல ஆடுகளையும் பசுக்களையும் பலி கொடுத்தான். யோசபாத்துக்கும் அவனோடு உள்ள ஜனங்களுக்கும் அவற்றைக் கொடுத்தான். ஆகாப் யோசபாத்திடம் ராமோத் கிலியாத்தைத் தாக்கும்படி உற்சாகப்படுத்தினான். 3 ஆகாப் யோசபாத்திடம், “கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடு வருகின்றீரா?” என்று கேட்டான். ஆகாப் இஸ்ரவேலின் ராஜா. யோசபாத் யூதாவின் ராஜா. யோசபாத் ஆகாபிடம், “நான் உன்னைப் போன்றவன். என் ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்களே. நாங்கள் உங்களோடு போரிலே சேர்ந்துக்கொள்வோம்” என்றான். 4 யோசபாத் மேலும் ஆகாபிடம், “ஆனால் முதலில், நாம் நமது கர்த்தரிடமிருந்து செய்தியை எதிர்ப்பார்ப்போம்” என்றான்.
5 எனவே ராஜா ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை அணிதிரட்டினான். ஆகாப் அவர்களிடம், “நம்மால் ராமோத் கீலேயாத்துக்கு எதிராகப் போக முடியுமா அல்லது முடியாதா?” என்று கேட்டான்.
தீர்க்கதரிசிகளோ, “போக முடியும், ராமோத் கீலேயாத்தைத் தோற்கடிக்க தேவன் உதவுவார்” என்றனர்.
6 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய தீர்க்கதரிசி யாராவது இங்கே இருக்கிறார்களா? கர்த்தருடைய விருப்பத்தை அவர்கள் மூலம் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
7 பிறகு ராஜா ஆகாப், யோசபாத்திடம், “இன்னும் ஒருவன் இங்கே இருக்கிறான். அவன் மூலமாக நாம் கர்த்தரிடம் கேட்கலாம். ஆனால் நான் அந்த மனிதனை வெறுக்கிறேன். ஏனென்றால் அவன் எனக்காக கர்த்தரிடமிருந்து எந்த நல்லச் செய்தியையும் சொல்லமாட்டான். எப்பொழுதும் அவன் எனக்காகக் கெட்ட செய்திகளையே வைத்திருப்பான். அவனது பெயர் மிகாயா, அவன் இம்லாவின் குமாரன்” என்றான். ஆனால்
யோசபாத்தோ, “ஆகாப், நீ அப்படிச் சொல்லக்கூடாது!” என்றான்.
8 பிறகு ராஜா ஆகாப் தனது ஒரு அதிகாரியை அழைத்து, “வேகமாகப் போய், இம்லாவின் குமாரனான மிகாயாவை அழைத்து வா” என்றான்.
9 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் அரச உடை அணிந்து கொண்டனர். அவர்கள் தம் சிங்காசனங்களில் சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு அருகே உள்ள களத்தில் அமர்ந்திருந்தனர். அந்த 400 தீர்க்கதரிசிகளும் இரு ராஜாக்களின் முன் தங்கள் செய்தியைச் சொன்னார்கள். 10 கெனானாவின் குமாரனான சிதேக்கியா தனக்கு இரும்பு கொம்புகளைச் செய்தான். அவன், “இதுதான் கர்த்தர் சொன்னது: நீ இந்த இரும்பு கொம்புகளை அணிந்துக் கொண்டு அராமியரை அழிந்துபோகும்வரை தாக்குவாய்” என்றான். 11 அனைத்து தீர்க்கதரிசிகளும் இதனையே சொன்னார்கள். அவர்கள், “ராமோத் கீலேயாத் நகரத்திற்கு செல். நீ வெற்றி பெறுவாய். அராமிய ஜனங்களை வெல்லும்படி கர்த்தர் உதவுவார்” என்றனர்.
12 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம் போய், “மிகாயா! கவனி. அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே மாதிரி கூறுகின்றனர். ராஜா வெற்றிபெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் சொல்வதையே நீயும் கூறு. நீயும் நல்ல செய்தியைக் கூறவேண்டும்” என்றான்.
13 ஆனால் மிகாயா, “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தான்.
14 பிறகு மிகாயா ஆகாப் ராஜாவிடம் வந்தான். ராஜா அவனிடம், “மிகாயா நாங்கள் ராமோத் கீலேயாத் நகரத்திற்குப் போரிடப் போகலாமா வேண்டாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “போ அவர்களோடு போர் செய். அந்த ஜனங்களை வெல்ல கர்த்தர் துணைசெய்வார்” என்றான்.
15 ராஜா ஆகாப் மிகாயாவிடம், “கர்த்தருடைய நாமத்தால் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டுமென்று பலமுறை உன்னை நான் சத்தியம் செய்ய வைத்தேன்” என்றான்.
16 பிறகு மிகாயா, “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்” என்றான்.
17 இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாப் யோசபாத்திடம், “கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்” என்றான்.
18 அதற்கு மிகாயா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்: கர்த்தர் தன் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். பரலோகத்தின் படை அவரது வலதுபுறமும் இடதுபுறமும் உள்ளன. அனைத்து படைகளும் அவரைச் சுற்றிலும் நின்றுக்கொண்டிருக்கிறது. 19 கர்த்தர், ‘ராமோத் கீலேயாத் நகரின் மேல் படையெடுக்குமாறு செய்து அப்போரில் ஆகாப் மரிக்குமாறு செய்ய, யாரால் தந்திரமாய்ச் செயல்பட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறானதைக் கூறினார்கள். 20 பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார். 21 அதற்கு அது, ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் பொய் சொல்லும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்குக் கர்த்தர், ‘நீ ஆகாபை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவாய். எனவே போய் அவ்வாறே செய்’ என்றார்.
22 “இப்போது ஆகாப் கவனி. பொய் சொல்லும் ஆவியை உன் தீர்க்கதரிசிகளின் வாயில் கர்த்தர் இருக்கச் செய்துள்ளார். எனவே கர்த்தர் சொன்னபடி உனக்கு தீமையே ஏற்படும்” என்றான்.
23 பிறகு சிதேக்கியா மிகாயாவின் அருகில் சென்று அவனது முகத்திலே அறைந்தான். சிதேக்கியாவின் தந்தை கெனானா. சிதேக்கியா, “மிகாயா, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னிடம் வந்து இவ்வாறு பேச வைத்தது?” என்று கேட்டான்.
24 அதற்கு மிகாயா, “சிதேக்கியா! நீ உள்ளறைக்குள்ளே ஓடி பதுங்கும் நாளிலே அதனைக் காண்பாய்” என்றான்.
25 பிறகு ஆகாப் ராஜா, “மிகாயாவை அழைத்துக் கொண்டு நகர ஆளுநராகிய ஆமோனிடத்திலும் அரச குமாரனாகிய யோவாசிடத்திலும் செல்லுங்கள். 26 அவர்களிடம், இதுதான் ராஜா சொன்னது: ‘மிகாயாவைச் சிறையிலே அடையுங்கள். நான் போரிலிருந்து திரும்பி வரும்வரை சிறிது அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் தராதீர்கள்’ எனக் கூறுங்கள்” என்றான்.
27 அதற்கு மிகாயா, “ஆகாப்! நீ போர்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால், பிறகு கர்த்தர் என் மூலமாகப் பேசவில்லை. ஜனங்களே! நான் சொல்வதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” என்றான்.
ராமோத் கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறான்
28 இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் ராமோத் கீலேயாத்தைத் தாக்கினார்கள். 29 ஆகாப் ராஜா யோசபாத்திடம், “நான் போர்க்களத்திற்குள் நுழையுமுன் என் தோற்றத்தை மாற்றிக்கொள்வேன். ஆனால் நீ உனது உடையையே அணிந்துகொள்” என்றான். எனவே இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் தன் ஆடையை மாற்றிக்கொண்டான். இருவரும் போர்க்களத்துக்குச் சென்றார்கள்.
30 ஆராம் ராஜா தனது இரதப்படைத் தளபதியிடம் ஒரு கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “எவரோடும் சண்டையிடவேண்டாம். அவன் பெரியவனாயினும் சரி, சிறியவனாயினும் சரியே. ஆனால் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் மட்டும் சண்டையிடுங்கள்” என்றான். 31 இரதப்படைத் தளபதிகள் யோசபாத்தைக் கண்டதும் “இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அங்கே இருக்கிறான்!” என்று எண்ணினார்கள். எனவே யோசபாத்தைத் தாக்க அவர்கள் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் சத்தமிட்டு வேண்டினபடியால் கர்த்தர் அவனுக்கு உதவினார். தேவன் இரதப்படைத் தளபதிகளை யோசபாத்தை விட்டு விலகும்படி செய்தார். 32 அவர்களுக்கு இவன் இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாப் இல்லை என்று தெரிந்ததும் துரத்துவதை விட்டுவிட்டனர்.
33 ஆனால் ஒரு வீரன் எந்தவித குறியும் இல்லாமல் ஒரு அம்பை விட்டான், அது இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபின் மீது பாய்ந்தது. அது ஆகாபின் உடலில் கவசம் இல்லாத பகுதியின் மேல் பாய்ந்தது. ஆகாப் தன் இரதவோட்டியிடம், “இரதத்தைத் திருப்பிக் கொள். நான் காயப்பட்டிருக்கிறேன். என்னை போர்களத்துக்கு வெளியே கொண்டு செல்!” என்றான்.
34 அன்று போர் மிகவும் மோசமாக நடை பெற்றது. அன்று மாலைவரை ஆகாப் ஆராமியருக்கு எதிராக இரதத்தில் நின்றுக்கொண்டிருந்தான். சூரியன் மறைந்ததும் அவன் மரித்தான்.
2008 by World Bible Translation Center