Historical
இஸ்ரவேலரை எண்ணுவதினால் தாவீது பாவம் செய்கிறான்
21 இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாத்தான் எழுந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிட தாவீதை ஊக்கப்படுத்தினான். 2 எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான்.
3 ஆனால் யோவாப், “இப்போது இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது ராஜாவும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான்.
4 ஆனால், தாவீது ராஜாவோ உறுதியாக இருந்தான். ராஜா சொன்னபடியே யோவாப் செய்தான். எனவே அவன் இஸ்ரவேலின் முழுவதற்கும் போய் கணக்கிட்டான். பிறகு அவன் எருசலேமிற்குத் திரும்பி வந்தான். 5 அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 11,00,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். 6 யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது ராஜாவின் கட்டளையை விரும்பவில்லை. 7 தேவனுடைய பார்வையில் தாவீது இந்த தீயச்செயலைச் செய்துவிட்டான். எனவே, தேவன் இஸ்ரவேலரைத் தண்டித்தார்.
தேவன் இஸ்ரவேலரைத் தண்டிக்கிறார்
8 பிறகு தாவீது தேவனிடம், “நான் முட்டாள்தனமான செயலைச் செய்துவிட்டேன். இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி ஒரு தீய பாவத்தைச் செய்துவிட்டேன். இப்போது உங்கள் தொண்டனாகிய எனது பாவத்தை என்னிடமிருந்து நீக்குமாறு கெஞ்சுகிறேன்” என்றான்.
9-10 காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார்.
11-12 பிறகு காத் தாவீதிடம் சென்று, அவனிடம், “‘தாவீதே நீ விரும்புகிற தண்டனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்: மூன்று ஆண்டுகள் உணவில்லாமல் இருப்பது, அல்லது மூன்று மாதங்கள் உனது பகைவர்கள் தம் ஆயுதங்களால் துரத்த ஓடிக்கொண்டே இருப்பது, அல்லது மூன்று நாட்கள் கர்த்தர் தரும் தண்டனை. இதனால் பயங்கரமான நோய் நாடு முழுவதும் பரவும், கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் முழுவதுமுள்ள ஜனங்களை அழிப்பான்’ என்று கர்த்தர் சொல்கிறார். தேவன் என்னை அனுப்பினார். இப்போது, நான் அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீ முடிவு செய்” என்றான்.
13 தாவீது காத்திடம், “நான் இக்கட்டில் அகப்பட்டுக்கொண்டேன்! என்னை மனிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொள்ளவிடாதே. மனிதர்கள் என் தண்டனையை முடிவுசெய்வதை நான் விரும்பவில்லை. கர்த்தர் இரக்கம் உள்ளவர், எனவே அவரே என் தண்டனையை முடிவுசெய்யட்டும்” என்றான்.
14 எனவே கர்த்தர் கொடிய நோயை இஸ்ரவேலரிடம் பரப்பினார். 70,000 பேர் மரித்தனர். 15 தேவன், எருசலேமை அழிக்க ஒரு தூதனை அனுப்பினார். ஆனால், அத்தூதன் எருசலேமை அழிக்கத் தொடங்கும்போது, கர்த்தர் அதனைப் பார்த்து வருத்தப்பட்டார். கர்த்தர் அத்தூதனிடம், “நிறுத்து! இதுபோதும்!” என்றார். கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தருகில் நின்றான்.
16 கர்த்தருடைய தூதன் ஆகாயத்தில் நிற்பதைத் தாவீது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அத்தூதன் எருசலேம் நகரை நோக்கி தன் வாளை உருவிக்கொண்டு நின்றான். தாவீதும், மற்ற தலைவர்களும் தரையில் முகம்படும்படி குனிந்து வணங்கினார்கள். தாவீதும், தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிக்காட்ட சிறப்பான ஆடையை அணிந்திருந்தனர். 17 தாவீது தேவனிடம், “பாவம் செய்தவன் நான் ஒருவனே! ஜனங்களை எண்ணி கணக்கிடும்படி நானே கட்டளையிட்டேன்! நானே தவறு செய்தவன்! இஸ்ரவேல் ஜனங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை! தேவனாகிய கர்த்தாவே, என்னையும் என் குடும்பத்தையும் தண்டியும்! உமது ஜனங்களை அழிக்கும் கொடிய நோயை நிறுத்தும்!” என்றான்.
18 பிறகு கர்த்தருடைய தூதன் காத்திடம் பேசினான். அவன், “தாவீதிடம், கர்த்தரை தொழுதுகொள்ள ஒரு பலிபீடம் கட்டுமாறு கூறு. தாவீது, அப்பலிபீடத்தை எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கட்டவேண்டும்” என்றான். 19 காத் இவற்றை தாவீதிடம் கூற, தாவீது ஒர்னானின் களத்துக்குப் போனான்.
20 ஒர்னா கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். அவன் திரும்பி தேவதூதனைப் பார்த்தான். ஒர்னானின் நான்கு குமாரர்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். 21 தாவீது ஒர்னாவிடம் சென்றான், ஒர்னா களத்தைவிட்டு வெளியே வந்தான். தாவீதின் அருகிலே போய் அவன் முன்பு தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
22 தாவீது ஒர்னாவிடம், “உனது களத்தை எனக்கு விற்றுவிடு நான் உனக்கு முழு விலையையும் தருவேன். பிறகு இந்த இடத்தை கர்த்தரை தொழுது கொள்வதற்கான பலிபீடத்தைக் கட்டப் பயன்படுத்துவேன். அதன் பிறகே இப்பயங்கர நோய் போகும்” என்றான்.
23 ஒர்னா தாவீதிடம், “களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனது ராஜா, மற்றும் ஆண்டவன். உமது விருப்பப்படி செய்யும். நான் உங்களுக்கு தகனபலியிட மாடுகளும், விறகுகளும் தருவேன். தானியக் காணிக்கைக்காக, கோதுமையைத் தருவேன். நான் இவை அனைத்தையும் தருவேன்!” என்றான்.
24 ஆனால் தாவீது ராஜா, “இல்லை, நான் உனக்கு முழு விலையையும் தருவேன். நான் உனக்குரிய எதையும் எடுத்து கர்த்தருக்கு கொடுக்கமாட்டேன். இலவசமாக எதையும் எடுத்து காணிக்கை செலுத்தமாட்டேன்” என ஒர்னாவிடம் கூறினான்.
25 எனவே தாவீது ஒர்னாவுக்கு 15 பவுண்டு தங்கத்தைக் கொடுத்தான். 26 தாவீது கர்த்தருக்கு அங்கே பலிபீடத்தைக் கட்டினான். தாவீது சர்வாங்க தகன பலியையும், சமாதானப் பலியையும் அளித்தான். தாவீது, கர்த்தரிடம் ஜெபம் செய்தான். வானிலிருந்து அக்கினியை வரவழைத்து, கர்த்தர் தாவீதிற்குப் பதில் சொன்னார். அந்த அக்கினி தகனபலிபீடத்தில் வந்து விழுந்தது. 27 பிறகு கர்த்தர் தூதனுக்கு அவனது வாளை உறையில் போடும்படி கட்டளையிட்டார்.
28 ஒர்னாவின் களத்தில் கர்த்தர் தனக்குப் பதில் சொன்னதை தாவீது கண்டான். எனவே, தாவீது கர்த்தருக்கு தானே பலிகளைச் செலுத்தினான். 29 தகன பலிபீடமும் பரிசுத்தக் கூடாரமும் மலைமீது கிபியோனில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருக்கும்போது மோசே இந்தப் பரிசுத்தக் கூடாரத்தை அமைத்தான். 30 தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.
22 தாவீது, “தேவனாகிய கர்த்தருடைய ஆலயமும் சர்வாங்க தகனபலிக்கான பலிபீடமும் இங்கே கட்டப்படும்” என்றான்.
தாவீது ஆலயத்திற்கு திட்டமிடுகிறான்
2 தாவீது இஸ்ரவேலில் வாழும் அயல் நாட்டுக்காரர்களைக் கூடும்படிக் கட்டளையிட்டான். அவர்களில் கல்தச்சர்களைத் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய ஆலயத்திற்கானக் கற்களை வெட்டும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான். 3 தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான். 4 எண்ண முடிகிற அளவிற்கும் அதிகமான அளவில் கேதுரு மரங்களையும் பெற்றான். சீதோன், தீரு போன்ற நகர ஜனங்கள் கேதுருமரங்களை தாவீதிற்குக் கொண்டுவந்தனர்.
5 தாவீது, “நாம் கர்த்தருக்காக மிகவும் மகத்தான ஆலயத்தை கட்டவேண்டும். ஆனால் என் குமாரன் சாலொமோன் இளைஞனாக இருக்கிறான். அவன் எதையெதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதனை இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஆலயமானது மிக மகத்தானதாக இருக்க வேண்டும். அது தன் உயர்வாலும் அழகாலும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெறும். எனவே, நான் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட திட்டமிடுகிறேன்” என்றான். எனவே தாவீது இறப்பதற்கு முன்பு ஆலயம் கட்டுவதற்கான திட்டங்களை அமைத்தான்.
6 பிறகு தாவீது தன் குமாரன் சாலொமோனை அழைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுமாறு சொன்னான். 7 தாவீது சாலொமோனிடம், “என் மகனே, எனது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட நான் விரும்பினேன். 8 ஆனால் கர்த்தர் என்னிடம், ‘தாவீது, நீ பல போர்களைச் செய்து அதில் பலரைக் கொன்றிருக்கிறாய். எனவே எனது நாமத்தில் நீ ஆலயம் கட்டக் கூடாது. 9 ஆனால் உனக்கு ஒரு குமாரன் இருப்பான். அவன் சமாதான புருஷனாக இருப்பான். நான் உனது குமாரனுக்குச் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுப்பேன். அவனைச் சுற்றியுள்ள பகைவர்கள் அவனுக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவனது பெயர் சாலொமோன். சாலொமோன் ராஜாவாக இருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சமாதானமும் அமைதியும் தருவேன். 10 சாலொமோன் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். அவன் எனது குமாரனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பலமுள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!” என்றான்.
11 தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய். 12 கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். 13 நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே.
14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.
17 பிறகு தாவீது, இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவருக்கும் தனது குமாரன் சாலொமோனுக்கு உதவும்படி கட்டளையிட்டான். 18 தாவீது தலைவர்களிடம், “தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அவர் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உதவினார். கர்த்தருக்கும், அவரது ஜனங்களுக்கும் இப்போது இந்த நிலம் கட்டுப்பட்டிருக்கிறது. 19 இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் கொடுங்கள். அவர் சொன்னபடி செய்யுங்கள். தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள். கர்த்தருடைய நாமத்துக்காக ஆலயம் கட்டுங்கள். பிறகு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வாருங்கள். மற்ற பரிசுத்தமான பொருட்களையும் ஆலயத்திற்குள் கொண்டு வாருங்கள்” என்றான்.
லேவியர்கள் ஆலயத்திற்கு சேவை செய்யத் திட்டமிடுகிறார்கள்
23 தாவீது முதியவன் ஆனான். எனவே இஸ்ரவேலின் புதிய ராஜாவாகத் தன் குமாரன் சாலொமோனை ஆக்கினான். 2 அனைத்து இஸ்ரவேல் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் தாவீது ஒன்றுக்கூட்டினான். 3 அவன் லேவியர்களில் 30 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களை எண்ணினான். ஆக மொத்தம் 38,000 பேர் இருந்தனர். 4-5 தாவீது அவர்களிடம், “24,000 லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை மேற்பார்வை பார்க்க வேண்டும். 6,000 லேவியர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கவேண்டும். 54,000 லேவியர்கள் வாசல் காவலர்களாக இருக்கட்டும். 4,000 லேவியர்கள் இசைக் கலைஞர்களாக இருக்கட்டும். அவர்களுக்காக சிறப்பான இசைக் கருவிகளை தயாரித்து வைத்துள்ளேன். கர்த்தரை துதித்துப்பாட அவர்கள் அக்கருவிகளைப் பயன்படுத்துவார்கள்” என்றான்.
6 தாவீது லேவியர்களை 3 குழுவாகப் பிரித்தான். அவர்கள் லேவியின் மூன்று குமாரர்களான கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோரின் கோத்திரத்தினராக இருந்தனர்.
கெர்சோன் கோத்திரத்தினர்
7 லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். 8 லாதானுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூத்த குமாரனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற குமாரர்கள் சேத்தாம், யோவேல். 9 சிமேயின் குமாரர்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.
10 சிமேயிற்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்பவை அவர்களின் பெயர்கள் ஆகும். 11 யாகாத் மூத்த குமாரன். சீனா அடுத்த குமாரன். ஆனால் எயூஷீக்கும் பெரீயாவுக்கும் அதிகப் பிள்ளைகள் இல்லை. எனவே இருவரும் ஒரே குடும்பமாக எண்ணப்பட்டனர்.
கோகாத் கோத்திரத்தினர்
12 கோகாத்திற்கு 4 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர். 13 அம்ராமிற்கு ஆரோன், மோசே என இரு பிள்ளைகள் இருந்தார்கள். ஆரோன் சிறப்புக் குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆரோனும் அவனது சந்ததியினரும் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் சிறப்பானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய சேவைக்குப் பரிசுத்தப் பொருட்களைத் தயார் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரோனும், அவனது சந்ததியினரும் நறுமணப் பொருட்களை கர்த்தருக்கு முன்பு எரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆசாரியர்களாகப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எல்லாக் காலத்திலும் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் அளித்தனர்.
14 மோசே தேவனுடைய மனிதன். லேவி கோத்திரத்தினரின் ஒரு பகுதியினர், மோசேயின் பிள்ளைகள் ஆவார்கள். 15 கெர்சோமும், எலியேசரும் மோசேயின் குமாரர்கள். 16 செபுவேல், கெர்சோமின் மூத்த குமாரன். 17 ரெகபியா, எலியேசரின் மூத்த குமாரன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான குமாரர்கள் இருந்தனர்.
18 செலோமித், இத்சாரின் மூத்தகுமாரன்.
19 எரியா எப்ரோனின் மூத்த குமாரன். அமரியா இரண்டாவது குமாரன். யாகாசியேல் மூன்றாவது குமாரன். எக்காமியாம் நான்காவது குமாரன்.
20 ஊசியேல் மீகாவின் மூத்த குமாரன், இஷியா இரண்டாவது குமாரன்.
மெராரி கோத்திரத்தினர்
21 மகேலியும், மூசியும் மெராரியின் குமாரர்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் குமாரர்கள் இருந்தனர். 22 எலெயாசார் ஆண் பிள்ளைகள் இல்லாமலேயே மரித்துப்போனான். அவனுக்குப் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். எலெயாசாரின் குமாரத்திகள் உறவினரையே மணந்துகொண்டனர். அவர்களின் உறவினர்கள் கீஸின் குமாரர்கள். 23 மூசியின் குமாரர்களாக மகலி, ஏதேர், ஏரோமோத் எனும் மூன்று பேர் இருந்தனர்.
லேவியர்களின் வேலை
24 இவர்கள் லேவியரின் சந்ததியினர். அவர்கள் குடும்ப வாரியாகக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரின் பெயரும் பட்டியலிடப்பட்டது. இருபதும், அதற்கு மேலும் உள்ள வயதினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணி செய்தனர்.
25 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தனது ஜனங்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்திருந்தார். கர்த்தர், எருசலேமிற்கு எல்லாக் காலத்திலும் வாழ்வதற்கு வந்திருந்தார். 26 எனவே பரிசுத்தக் கூடாரத்தை இனி தூக்கிக்கொண்டு செல்லும் வேலை லேவியர்களுக்கு இல்லை. ஆலயப்பணியில் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களைத் தூக்குகிற வேலையும் இல்லை” என்றான்.
27 இஸ்ரவேல் ஜனங்களுக்கு, லேவியர் கோத்திரத்தை எண்ணிக் கணக்கிடும்படி தாவீது கடைசியாக அறிவுறுத்தினான். அவர்கள் இருபதும் அதற்கும் மேலும் வயது கொண்டவர்களை எண்ணினார்கள்.
28 ஆரோனின் சந்ததியினர் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது லேவியர்கள் உதவுவதை வேலையாகக் கொண்டனர். அவர்கள் ஆலயத்தின் பிரகாரங்களையும் பக்கத்து அறைகளையும் கவனித்துக்கொண்டனர். எல்லாப் பரிசுத்தமானப் பொருட்களையும் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்தனர். தேவனுடைய ஆலயத்திற்குள் பணி செய்வதில் இது அவர்களின் வேலையாய் இருந்தது. 29 ஆலய மேஜையின் மேல் அப்பத்தை வைக்கும் பொறுப்பு இவர்களுடையது. மாவு, தானியக் காணிக்கை, புளிக்காத மாவில் அப்பம் செய்யும் வேலை போன்றவற்றைக் கவனித்துக்கொண்டனர். சட்டிகளில் சுடுகிற வேலைக்கும், கலவை பலிகளுக்கும் அவர்களே பொறுப்பாளர்களாக இருந்தனர். எல்லா வகையான அளவிடுகின்ற வேலைகளையும் செய்தார்கள். 30 லேவியர்கள் ஒவ்வொரு காலையிலும் கர்த்தருக்கு முன்பு நின்று நன்றி சொல்லியும் துதித்தும் பாடினார்கள். இதனை ஒவ்வொரு மாலையிலும் கூடச் செய்து வந்தனர். 31 சிறப்பு ஓய்வு நாட்கள், மாதப் பிறப்பு நாட்கள், திருவிழாக்கள், சிறப்பு விடுமுறை நாட்கள் ஆகிய காலங்களில் அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியைச் செலுத்தினார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு முன்னால் பணிவிடைச் செய்தார்கள். ஒவ்வொரு வேளையும் எத்தனை லேவியர்கள் பணிவிடைச் செய்யவேண்டும் என்பதிலும் சில சட்டவிதிகள் இருந்தன. 32 லேவியர்கள் எதையெதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களோ, அவற்றையெல்லாம் செய்தனர். பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். பரிசுத்த இடத்தின் பொறுப்பையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் ஆரோனின் சந்ததியினர். தமது உறவினர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் உதவினார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் பணி விடைகளை ஆசாரியர்களுக்கு உதவியாகச் செய்து வந்தனர்.
2008 by World Bible Translation Center