Historical
தாவீது பல நாடுகளை வெல்கிறான்
18 பிறகு தாவீது பெலிஸ்தரைத் தாக்கித் தோற்கடித்தான். காத் நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள சிறு நகரங்களையும் பெலிஸ்தரின் வசமிருந்து கைப்பற்றினான்.
2 பிறகு தாவீது மோவாப் நாட்டைத் தோற்கடித்தான். மோவாபியர்கள் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். அவர்கள் தாவீதிற்கு புகழுரைகளைச் செலுத்தினார்கள்.
3 தாவீது, ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகவும் சண்டையிட்டான். ஆதாரேசர் சோபா நாட்டின் ராஜா. தாவீது, அப்படைகளோடு ஆமாத் நகரத்தின்வரை போரிட்டான். தாவீது இவ்வாறு செய்வதற்குக் காரணம் என்னவென்றால் ஆதாரேசர் தனது அரசை ஐபிராத்து நதிவரை பரப்ப விரும்பினான். 4 தாவீது, ஆதாரேசரிடமிருந்து 1,000 இரதங்களையும் 7,000 இரதமோட்டிகளையும் 20,000 வீரர்களையும் கைப்பற்றினான். ஆதாரேசரின் பெரும்பாலான குதிரைகளைத் தாவீது முடமாக்கினான். அவை தேர் இழுக்கப் பயன்படுவன. ஆனால் தாவீது, அவற்றில் நூறு இரதக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டான்.
5 தமஸ்குஸ் நகரத்தில் இருந்து ஆர்மீனியர்கள் ஆதாரேசருக்கு உதவி செய்யவந்தனர். ஆனால் தாவீது, அவர்களையும் தோற்கடித்து 22,000 ஆர்மீனியர்களைக் கொன்றான். 6 பிறகு தாவீது, ஆராமில் உள்ள தமஸ்குஸ் நகரில் கோட்டை அமைத்தான். ஆர்மீனியர்கள் தாவீதின் வேலைக்காரர்களாகி அவனுக்குப் புகழுரைகளைக் கொண்டுவந்தனர். தாவீது எங்கெங்கு போனானோ அங்கெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றிகளைத் தந்தார்.
7 தாவீது ஆதாரேசரின் படைத்தளபதிகளிடமிருந்து தங்கள் கேடயங்களைப் பறித்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். 8 திப்காத்திலும் கூனிலுமுள்ள வெண்கலத்தையும் தாவீது எடுத்து வந்தான். இந்நகரங்கள் ஆதாரேசருக்கு உரியவை. பிறகு சாலொமோன் இந்த வெண்கலத்தை ஆலயத்திற்குரிய வெண்கலத்தொட்டி, தூண், தட்டுமுட்டு போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தினான்.
9 ஆமாத் நகரத்தின் ராஜா தோயூ. ஆதாரேசர் சோபா நாட்டின் ராஜா. தோயூ, தாவீது ஆதாரேசரின் படைகளை வென்றுவிட்டதை அறிந்தான். 10 எனவே, தோயூ அவனது குமாரனான ஆதோராமை ராஜா தாவீதினிடம் அனுப்பி சமாதானத்தைத் தெரிவித்து ஆசீர்வாதத்தை வேண்டினான். தாவீது ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்கடித்ததால் அவன் இவ்வாறு நடந்துக்கொண்டான். முன்பு போர்க்களத்தில் ஆதாரேசர் தோயூவோடு இருந்தான். ஆதோராம், தாவீதிற்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். 11 தாவீது ராஜா அவற்றைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தருக்கு கொடுத்துவிட்டான். ஏதோம், மோவாப், அம்மோனியர், பெலிஸ்தர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து பெற்ற பொன், வெள்ளி போன்றவற்றையும் தாவீது இவ்வாறே செய்து பரிசுத்தப்படுத்தினான்.
12 உப்பு பள்ளத்தாக்கிலே செருயாவின் குமாரனான அபிசாயி 18,000 ஏதோமியரைக் கொன்றான். 13 அபிசாயி ஏதோமில் அரண் அமைத்தான். அனைத்து ஏதோமியரும் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். தாவீது செல்லுமிடங்களில் எல்லாம் கர்த்தர் வெற்றியளித்தார்.
தாவீதின் முக்கிய அதிகாரிகள்
14 தாவீது, அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் ராஜா ஆனான். அவன் ஒவ்வொருவருக்கும் சரியானதையும், நியாயமானதையும் செய்தான். 15 செருயாவின் குமாரனான யோவாப் தாவீதின் படைத்தளபதியாக இருந்தான். ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் வரலாறு எழுதுபவனாக இருந்தான். 16 சாதோக்கும், அபிமெலேக்கும் ஆசாரியர்கள். சாதோக் அகிதூபின் குமாரன். அபிமெலேக் அபியதாரின் குமாரன். சவிஷா எழுத்துக்காரன். 17 பெனாயா, கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். பெனாயா யோய்தாவின் குமாரன். தாவீதின் குமாரர்களும் முக்கிய அதிகாரிகளாய் இருந்தனர். அவர்கள் தாவீதின் பக்கம் தொண்டு செய்தனர்.
தாவீதின் ஆட்களை அம்மோனியர் அவமானப்படுத்தியது
19 நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் ராஜாவாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது குமாரன் ராஜா ஆனான். 2 பிறகு தாவீது, “நாகாஸ் என்னிடம் அன்பாய் இருந்தான், எனவே நான் அவனது குமாரன் ஆனூனிடம் அன்பாய் இருப்பேன்” என்றான். அதனால் தாவீது தூதுவர்களை ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அனுப்பினான். தாவீதின் தூதுவர்கள் அம்மோன் நாட்டிற்கு ஆனூனுக்கு ஆறுதல் சொல்லச் சென்றனர்.
3 ஆனால் அம்மோனிய தலைவர்கள் ஆனூனிடம், “முட்டாளாகாதே, தாவீது உண்மையிலேயே உனக்கு ஆறுதல் சொல்லவும், மரித்துப்போன உன் தந்தையைக் கௌரவப்படுத்தவும் தூதுவர்களை அனுப்பவில்லை! அவன் உன்னையும், உன் நாட்டையும் உளவறியவே தூதுவரை அனுப்பியுள்ளான். அவன் உண்மையில் உன் நாட்டை அழிக்கவே விரும்புகிறான்!” என்றனர். 4 எனவே, ஆனூன் தாவீதின் தூதுவர்களைக் கைதுசெய்து அவர்களது தாடியை வெட்டினான். இடுப்புப் பக்கத்தில் அவர்களின் ஆடையையும் வெட்டினான். பிறகு வெளியே துரத்திவிட்டான்.
5 தாவீதின் ஆட்களுக்கு வீட்டிற்குத் திரும்பிப் போக அவமானமாக இருந்தது. சிலர் தாவீதிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டதைச் சொன்னார்கள். எனவே தாவீது தன் ஆட்களுக்கு, “உங்களது தாடி முழுவதும் வளரும்வரை எரிகோவிலேயே தங்கியிருங்கள். பிறகு உங்கள் வீட்டிற்கு வரலாம்” என்று செய்தி அனுப்பினான்.
6 அம்மோனியர்கள் தமது செயல்களாலேயே தாம் தாவீதிற்குப் பகையானதைக் கண்டனர். பின் ஆனூனும் அம்மோனியர்களும் 75,000 பவுண்டு வெள்ளியை செல விட்டு மெசொப்பொத்தாமியாவிலிருந்து இரதங்களையும் இரதமோட்டிகளையும் வாங்கினார்கள். அவர்கள் இரதங்களையும் இரதமோட்டிகளையும் மாக்கா, சோபா எனும் சீரியரின் நாடுகளிலிருந்தும் பெற்றனர். 7 அம்மோனியர்கள் 32,000 இரதங்களை வாங்கினார்கள். அவர்கள் மாக்காவின் அரசுக்கு அதனுடைய படைகள் வந்து உதவுவதற்காகப் பணம் செலுத்தினர். மாக்காவின் அரசின் ஆட்களும் வந்து மேதேபாவுக்கு அருகில் பாசறை அமைத்தனர். அம்மோனியர்கள் தம் நகரங்களை விட்டு வெளியே வந்து போருக்கு தயாரானார்கள்.
8 அம்மோனியர்கள் போருக்குத் தயாராக இருப்பதை தாவீது அறிந்தான். எனவே, அவன் யோவாபையும், இஸ்ரவேலின் முழு படையையும் அனுப்பினான். 9 அம்மோனியர்கள் வெளியே வந்து போருக்குத் தயாரானார்கள். அவர்கள் நகர வாசல்களுக்கு அருகில் இருந்தார்கள். உதவி செய்வதற்கு வந்த ராஜாக்களும் வயல்வெளிகளில் தனியாகத் தங்கியிருந்தார்கள்.
10 யோவாப், தனக்கு எதிராக இரண்டு படைகள் போர்ச் செய்ய தயாராக இருப்பதைக் கண்டான். ஒரு படை தனக்கு முன்பும் இன்னொரு படை தனக்குப் பின்னாலும் இருப்பதை அறிந்தான். உடனே தமது படையில் உள்ள சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை ஆராம் படையோடு போரிட அனுப்பினான். 11 மீதமிருந்த இஸ்ரவேலியப் படையை யோவாப் அபிசாயின் தலைமையின் கீழ் அமைத்தான். அபிசாயி அவனது சகோதரன். அவ்வீரர்கள் அம்மோனிய படையோடு போரிடச் சென்றனர். 12 யோவாப் அபிசாயிடம், “ஆராமிலுள்ள படைகள் என்னைவிட பலமானதாக இருந்தால், நீ வந்து உதவவேண்டும். ஆனால், அம்மோனியப் படைகள் உன்னைவிடப் பலமானதாக இருந்தால், நான் வந்து உனக்கு உதவுவேன். 13 நாம் நமது ஜனங்களுக்காகவும் தேவனுடைய நகரங்களுக்காகவும் போராடும்போது பலமாகவும், தைரியமாகவும் இருக்கவேண்டும். தனக்குச் சரி என்று எண்ணுவதைக் கர்த்தர் செய்வார்!” என்றான்.
14 யோவாபும், அவனது படையும் ஆராம் படையைத் தாக்கியது, ஆராம் படை தோற்று ஓடியது. 15 அம்மோனியரின் படை ஆராம் படை ஓடுவதைப் பார்த்து, தானும் ஓடியது. அது அபிசாயிடமும் அவனது படைகளிடமும் இருந்து ஓடியது. அம்மோனியர்கள் தம் நகரங்களுக்கும் யோவாப் எருசலேமிற்கும் திரும்பிச் சென்றனர்.
16 ஆராமிய தலைவர்கள், இஸ்ரவேலரால் தாம் தோற்கடிக்கப்பட்டதை அறிந்தனர். எனவே, அவர்கள் உதவிக்காகத் தூதுவர்களை ஐபிராத்து நதிக்கு கிழக்குப்புறத்தில் வசிப்பவர்களிடம் அனுப்பினார்கள். ஆராமில் இருந்து வந்த ஆதாரேசரின் படைத் தலைவன் சோப்பாக். அவனும் மற்ற ஆராமிய வீரர்களை வழிநடத்தினான்.
17 ஆராமியர்கள் மீண்டும் போருக்குத் தயாராகக் கூடுவதை தாவீது கேள்விப்பட்டான். எனவே அவனும் எல்லா இஸ்ரவேலர்களையும் கூட்டினான். யோர்தான் நதியைக் கடந்து தாவீது வழிநடத்தினான். அவர்கள் ஆராமியர்களுக்கு நேருக்கு நேராக வந்தனர். தாவீது போருக்குத் தயாராகி ஆராமியர்களைத் தாக்கினான். 18 ஆராமியர்கள் இஸ்ரவேலரிடம் தோற்று ஓடினார்கள். தாவீதும் அவனது படைகளும் 7,000 ஆராமிய இரத மோட்டிகளையும் 40,000 ஆராமிய வீரர்களையும் கொன்றனர். தாவீதின் படை ஆராமியப் படையின் தளபதியான சோபாக்கையும் கொன்றது.
19 ஆதாரேசரின் அதிகாரிகள், தாம் இஸ்ரவேலர்களால் தோற்கடிக்கப்படுவது அறிந்ததும் தாவீதோடு சமாதானம் செய்துகொண்டனர். அவர்கள் தாவீதின் வேலைக்காரர்கள் ஆனார்கள். எனவே ஆராமியர்கள் அம்மோனியர்களுக்கு மீண்டும் உதவ மறுத்துவிட்டனர்.
யோவாப் அம்மோனியர்களை அழிக்கிறான்
20 அடுத்த ஆண்டு வசந்தகால வேளையில், இஸ்ரவேல் படையைக் கூட்டி யோவாப் போருக்குத் தயார் செய்தான். பொதுவாக ராஜாக்கள் போருக்கு வெளியே புறப்பட்டுச் செல்லும் காலம் அது. ஆனால் தாவீது எருசலேமில் இருந்தான். இஸ்ரவேல் படை அம்மோன் நாட்டிற்குப் போய் அதை அழித்தது. பிறகு அவர்கள் ரப்பா நாட்டிற்குச் சென்று அங்கே முற்றுகையிட்டது. ஆட்களை உள்ளேயோ, வெளியேயோ போகவிடாமல் செய்தனர். யோவாப்பும் இஸ்ரவேல் படையும் அந்நகரம் அழியும்வரை போரிட்டனர்.
2 தாவீது அம்மோனிய ராஜாக்களின் கிரீடத்தை எடுத்தான். அந்தத் தங்க மகுடம் 75 பவுண்டு இருந்தது. அதில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அம்மகுடம் தாவீதின் தலையில் சூட்டப்பட்டது. பிறகு தாவீது ரப்பா நகரிலிருந்து மேலும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டான். 3 தாவீது ரப்பாவிலிருந்து ஜனங்களைக் கூட்டிவந்து அவர்களைப் பலவந்தமாக ரம்பம், இரும்பு, ஊசிகள், கோடரி போன்றவற்றால் வேலைசெய்ய வைத்தான். தாவீது இதனை அனைத்து அம்மோனிய நகரங்களின் ஜனங்களுக்கும் விதித்தான். பிறகு தாவீதும், அவனது படையும் எருசலேமுக்குத் திரும்பியது.
இராட்சத பெலிஸ்தர் வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்
4 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தர்களுடன் கேசேர் நகரில் போரிட்டனர். அப்போது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத குமாரனான சிப்பாயி என்பவனைக் கொன்றான். எனவே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளானார்கள்.
5 இன்னொரு தடவை, மீண்டும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களோடு போரிட்டனர். யாவீரின் குமாரன் எல்க்கானான். இவன் லாகேமியைக் கொன்றான். லாகெமி கோலியாத்தின் சகோதரன். கோலியாத் காத் நகரைச் சேர்ந்தவன். லாகேமியின் ஈட்டி மிகப் பெரிதாகவும் பலமானதாகவும் இருந்தது. அது தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் போல் இருந்தது.
6 பிறகு இஸ்ரவேலர் பெலிஸ்தர்களோடு காத் நகரில் இன்னொரு தடவை போரிட்டனர். இந்நகரில் ஒரு பெரிய மனிதன் இருந்தான். அவனுக்கு 24 கைவிரல்களும் கால் விரல்களும் இருந்தன. அவனுக்கு ஒவ்வொரு கையிலும், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்கள் இருந்தன. எனவே அவன் இராட்சதர்களின் குமாரன்தான். 7 அவன் இஸ்ரவேலரைக் கேலிச் செய்தபோது, யோனத்தான் அவனைக் கொன்றான். யோனத்தான் சிமேயாவின் குமாரன். சிமேயா தாவீதின் சகோதரன் ஆவான்.
8 பெலிஸ்தர்கள் காத்திலுள்ள இராட்சதர்களுக்கு பிறந்தவர்கள். தாவீதும் அவனுடைய வீரர்களும் இவர்களைக் கொன்றனர்.
2008 by World Bible Translation Center