Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எஸ்றா 6-7

தரியுவின் கட்டளை

எனவே, தனக்கு முன் அரசாண்ட ராஜாக்களின் ஆவணங்களைத் தேடும்படி ராஜா தரியு கட்டளையிட்டான். பணம் சேமித்து வைக்கபட்டிருந்த இடத்திலேயே அதிகாரப்பூர்வமான பத்திரங்களும் இருந்தன. ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்:

அரசாங்கப் பூர்வமான குறிப்பு: கோரேசின் முதலாம் ஆட்சி ஆண்டில், அவன் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்கு ஓர் கட்டளைக் கொடுத்தான். அந்த கட்டளை சொல்வது:

தேவனுடைய ஆலயம் மீண்டும் கட்டப்படட்டும். இது பலி கொடுப்பதற்குரிய இடமாக இருக்கும். இதற்குரிய அஸ்திபாரம் கட்டப்படட்டும். இந்த ஆலயம் 60 முழ உயரமும், 60 முழ அகலமுமாய் இருக்கட்டும். அதைச் சற்றி மூன்று வரிசை பெரிய கற்களும், ஒரு வரிசைப் பெரிய மரப்பலகைகளும் இருக்கட்டும். ராஜாவின் கருவூலத்திலிருந்து ஆலயம் கட்டப் பணம் கொடுக்கப்படும். தேவனுடைய ஆலயத்தில் உள்ள பொன்னும் வெள்ளியும் மீண்டும் அங்கேயே வைக்கப்பட வேண்டும். நேபுகாத்நேச்சார் அவற்றை எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டு போனான். அவை தேவனுடைய ஆலயத்தில் திரும்ப வைக்கப்பட வேண்டும்.

இப்போது, தரியுவாகிய நான், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், அப்பகுதியில் வசிக்கும் எல்லா அதிகாரிகளும் எருசலேமிற்கு வெளியே தங்கி இருங்கள் என்று கட்டளை கொடுக்கிறேன். வேலை செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தேவனுடைய ஆலய வேலையைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். யூத ஆளுநர்களும், யூதத் தலைவர்களும் ஆலயத்தை மீண்டும் கட்டட்டும். அவ்வாலயம் முன்பு இருந்த அதே இடத்திலேயே அவர்கள் கட்டட்டும்.

இப்போது இந்த கட்டளையை இடுகிறேன். யூதத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்ட நீங்கள் கீழ்க்கண்டச் செயல்களைச் செய்ய வேண்டும்: ஆலயம் கட்டுவதற்கான முழு பணத்தையும் நீங்கள் ராஜாவின் கருவூலத்தில் இருந்து தர வேண்டும். இப்பணம் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். இதனை விரைவாகச் செய்யுங்கள். அதனால் வேலை தடைப்படாமல் இருக்கும். அந்த ஜனங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுங்கள். அவர்களுக்கு இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடத் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுங்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் கோதுமை, திராட்சைரசம், உப்பு, ஒலிவ எண்ணெய் போன்றனவற்றைக் கேட்டால் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கவும். 10 இவற்றை நீங்கள் யூத ஆசாரியர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைக் கொடுத்து அவரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இவற்றைக் கொடுத்தால் ஆசாரியர்கள் எனக்கும் என் குமாரர்களுக்கும் ஜெபம் செய்வார்கள்.

11 அதோடு, இந்தக் கட்டளையையும் தருகிறேன்: யாராவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனது வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் பிடுங்கப்படும். பின்பு அம்மரச் சட்டம் அவனுடைய உடலில் சொருகப்படும். அவனது வீடும் மண் மேடாகும்வரை அழிக்கப்படும்.

12 தேவன் தமது நாமத்தை எருசலேமில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டளையை மாற்ற முயல்கிற எந்த ராஜாக்களையும் அல்லது எந்த ஜனங்களையும் தேவன் தோற்கடிப்பார் என்று நம்புகிறேன். யாராவது இந்த ஆலயத்தை எருசலேமில் அழிக்க முயன்றால் தேவன் அந்த நபரை அழித்துவிடுவார் என்று நம்புகிறேன்.

தரியுவாகிய நான், இந்தக் கட்டளையைத் தருகிறேன். இந்தக் கட்டளை முழுமையாகவும், விரைவாகவும் செய்யப்பட வேண்டும்!

ஆலயப் பணி முடிவும் பிரதிஷ்டையும்

13 எனவே, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநராக இருக்கும் தத்னாய் என்பவரும், சேத்தார்பொஸ்னாயும் அவர்களைச் சார்ந்த மற்ற ஜனங்களும், ராஜா தரியுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் அந்த கட்டளையை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தினார்கள். 14 எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது. 15 ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது.

16 அப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

17 இவ்வாறு தான் அவர்கள் தேவனுடைய ஆலயத்தை பிரதிஷ்டை செய்தது: அவர்கள் 100 காளைகள், 200 செம்மறியாட்டுக் கடாக்கள் மற்றும் 400 ஆண் ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றைப் பலி கொடுத்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களின் பாவப்பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக்கடாக்களைப் பலி கொடுத்தனர். அந்த 12 வெள்ளாடுகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்திற்கும் ஒன்று வீதம் கொடுக்கப்பட்டவை. 18 பிறகு அவர்கள் தங்கள் குழுவில் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்தனர். லேவியர்களை அவர்களின் குழுவிலும் தேர்ந்தெடுத்து எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலய வேலைக்கு நியமித்தனர். மோசேயின் புத்தகத்தில் சொன்னடியே அவர்கள் செய்து முடித்தார்கள்.

பஸ்கா

19 யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள். 20 ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர். 21 எனவே, இஸ்ரவேலின் அடிமைத்தனத்திலிருந்து மீட்புப் பெற்ற அனைத்து ஜனங்களும் பஸ்கா விருந்தை உண்டனர். அந்நாட்டிலுள்ள மற்றவர்கள் தம்மைக் கழுவி அந்நாட்டில் வசித்த ஜனங்களின் அசுத்தங்களிலிருந்து சுத்தம் செய்துக்கொண்டார்கள். இவ்வாறு சுத்தமானவர்களும் பஸ்கா விருந்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம், உதவிக்காகப் போக முடியும். 22 அவர்கள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை மிக மகிழ்ச்சியோடு ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். கர்த்தர் ஜனங்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். ஏனென்றால் அசீரியா ராஜாவின் போக்கையும் கர்த்தர் மாற்றியிருந்தார். எனவே அசீரியாவின் ராஜாவும் தேவனுடைய ஆலய வேலைக்கு பெரிதும் உதவியாக இருந்தான்.

எஸ்றா எருசலேமிற்கு வருகிறான்

பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளும் காலத்தில், இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு, செராயாவின் குமாரன் எஸ்றா, பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். இந்த செராயா அசரியாவின் குமாரன், அசரியா இல்க்கியாவின் குமாரன், இல்க்கியா சல்லூமின் குமாரன், சல்லூம் சாதோக்கின் குமாரன், சாதோக் அகிதூபின் குமாரன், அகிதூப் அமரியாவின் குமாரன், அமரியா அசரியாவின் குமாரன், அசரியா மெராயோதின் குமாரன், மெராயோத் சேராகியாவின் குமாரன், சேராகியா ஊசியின் குமாரன், ஊசி புக்கியின் குமாரன். புக்கி அபிசுவாவின் குமாரன், அபிசுவா பினெகாசின் குமாரன், பினெகாசு எலெயாசாரின் குமாரன், எலெயாசார் தலைமை ஆசாரியனான ஆரோனின் குமாரன். எஸ்றா எருசலேமிற்குப் பாபிலோனில் இருந்து வந்தான். எஸ்றா ஒரு போதகன். அவனுக்கு மோசேயின் சட்டங்கள் நன்றாகத் தெரியும். மோசேயின் சட்டங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்டவை. ராஜாவாகிய அர்தசஷ்டா எஸ்றா கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். ஏனென்றால், கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார். ஏராளமானவர்கள் எஸ்றாவோடு வந்தனர். அவர்கள் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள் ஆவார்கள். இந்த இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிற்கு ராஜா அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டில் வந்தனர். அர்தசஷ்டாவின் ஏழாவது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தில் எஸ்றா எருசலேமிற்கு வந்தான். எஸ்றாவும் அவனது குழுவும் முதல் மாதத்தின் முதல் நாளில் பாபிலோனை விட்டு நீங்கினார்கள். அவன் எருசலேமிற்கு ஐந்தாம் மாதத்தின் முதல் நாளில் வந்துசேர்ந்தான். தேவனாகிய கர்த்தர் எஸ்றாவோடு இருந்தார். 10 எஸ்றா எப்பொழுதும் கர்த்தருடையச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலும் கற்பதிலும் கவனம் செலுத்திவந்தான். எஸ்றா இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தருடைய கட்டளைகளையும் விதிகளையும் கற்றுத்தர விரும்பினான். அச்சட்டங்களைப் பின்பற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவவும் விரும்பினான்.

அர்தசஷ்டா எஸ்றாவிற்கு எழுதிய கடிதம்

11 எஸ்றா ஒரு ஆசாரியனும், போதிக்கிறவனுமாய் இருந்தான். இஸ்ரவேலர்களுக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளைப் பற்றியும், சட்டங்களைப் பற்றியும் அதிகம் தெரிந்து வைத்திருந்தான். அர்தசஷ்டா ராஜா ஆசாரியனான எஸ்றாவிற்குக் கொடுத்த கடிதத்தின் செய்தி இதுதான்:

12 அர்தசஷ்டா ராஜாவிடமிருந்து, ஆசாரியனும், பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களின் போதகனுமான எஸ்றாவுக்கு, வாழ்த்துக்கள்!

13 நான் பின்வருமாறு கட்டளையிடுகிறேன். எந்த ஒரு மனிதனோ, ஆசாரியனோ, அல்லது அரசாங்கத்திற்குள் வாழும் லேவியர்களில் யாராயினும், எஸ்றாவோடு எருசலேம் போக விரும்பினால், போகலாம்.

14 எஸ்றா, நானும் எனது 7 ஆலோசகர்களும் உன்னை அனுப்புகிறோம். நீ யூதாவிற்கும் எருசலேமிற்கும் போக வேண்டும். உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கு உங்கள் ஜனங்கள் எவ்வாறு கீழ்ப்படிகிறார்கள் என்பதைப் பார். உன்னோடு அந்தச் சட்டங்கள் உள்ளன.

15 நானும் எனது ஆலோசகர்களும் பொன்னும், வெள்ளியும் இஸ்ரவேலின் தேவனுக்குக் கொடுக்கிறோம். தேவன் எருசலேமில் வசிக்கிறார். இந்தப் பொன்னையும் வெள்ளியையும் நீ எடுத்துச் செல்லவேண்டும். 16 பாபிலோனிய எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் நீ போகவேண்டும். உங்கள் ஜனங்களிடமிருந்து அன்பளிப்புகளைச் சேகரியுங்கள், ஆசாரியர்களிடமிருந்தும், லேவியர்களிடமிருந்தும் அன்பளிப்புகளைச் சேகரியுங்கள். இவை எருசலேமில் உள்ள அவர்களுடைய தேவனுடைய ஆலயத்திற்கு உரியவை.

17 இப்பணத்தால் காளைகள், ஆட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவற்றை வாங்குங்கள். தானியக் காணிக்கைகளையும், பானங்களின் காணிக்கைகளையும் வாங்கி மற்ற பலிகளோடுக் கொடுங்கள். எருசலேமில் உள்ள உங்கள் தேவனுடைய ஆலயப் பலிபீடத்தில் அவற்றைப் பலியிடுங்கள். 18 இதில் மிச்சமுள்ள பொன்னையும் வெள்ளியையும், நீயும் மற்ற யூதர்களும் உங்கள் விருப்பம் போல் செய்யலாம். உங்கள் தேவனுக்கு விருப்பமானபடி அவற்றைச் செலவு செய்யலாம். 19 இவை எல்லாவற்றையும் எருசலேமின் தேவனிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். இவை அனைத்தும் உங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆராதனைக்கு உரியவை. 20 உங்கள் தேவனுடைய ஆலயத்திற்குத் தேவையான வேறு எதையும் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். உனக்குத் தேவையான எதையும் வாங்கிக் கொள்ள அரண்மனை கருவூலத்திலுள்ள பணத்தைப் பயன்படுத்தலாம்.

21 இப்போது, ராஜாவாகிய அர்தசஷ்டா, இந்த கட்டளையைத் தருகிறேன்: ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில், அரசப் பணத்தை வைத்து இருப்பவர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறேன். எஸ்றா கேட்பவற்றைக் கொடுங்கள். எஸ்றா ஒரு ஆசாரியன், அதோடு பரலோகத்தின் தேவனுடைய சட்டங்களைக் கற்பிக்கும் போதகன். இதனை விரைவாகவும் முழுமையாகவும் செய்க. 22 எஸ்றாவிற்கு இவற்றைக் கொடுங்கள்: 100 தாலந்து வெள்ளி, 100 கலக் கோதுமை, 100 கலம் திராட்சை ரசம், 100 கலம் எண்ணெய் வேறு ஏதாவது கேட்டாலும் கொடுங்கள். தேவையான உப்பையும் கொடுங்கள். 23 எஸ்றா அடையவேண்டுமென்று பரலோகத்தின் தேவன் கட்டளையிட்ட எதையும், நீங்கள் எஸ்றாவிற்கு விரைவாகவும், முழுவதுமாகவும் கொடுக்கவேண்டும். இதனை பரலேகத்தின் தேவனுடைய ஆலயத்திற்காகச் செய்யுங்கள். எனது அரசின் மீதோ, என் குமாரர்களின் மீதோ தேவன் கோபமுறுவதை நான் விரும்பவில்லை.

24 ஆலயத்தில் உள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள், மற்றும் தேவனுடைய ஆலயத்தில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் ஆகியவர்களை வரிசெலுத்த வைப்பது சட்ட விரோதமானது (சட்டத்திற்குப் புறம்பானது) என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ராஜாவைக் கௌரவப்படுத்தும் பொருட்டு பணம் தரத் தேவையில்லை. எந்த விதமான திறையும் செலுத்த வேண்டியதில்லை. 25 எஸ்றா, நீ தேவன் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்திப் பொதுத்துறை நீதிபதிகளையும், மத நீதிபதிகளையும் தேர்ந்தெடுக்கிற அதிகாரத்தை உனக்குத் தருகிறேன். இவர்கள் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் புறத்தில் வாழுகின்ற ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் தேவனுடைய சட்டங்களைத் தெரிந்த அனைவருக்கும் நியாயம் தீர்க்கவேண்டும். எவருக்காவது அந்தச் சட்டங்கள் தெரியாமல் இருந்தால் அவர்களுக்கு இந்த நீதிபதிகள் அவற்றைக் கற்பிக்கவேண்டும். 26 எவராவது உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கோ, ராஜாவின் சட்டங்களுக்கோ கீழ்ப்படியாமல் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு மரணதண்டனை, நாடு கடத்துதல், சொத்து பறிமுதல், சிறையிடுதல் போன்றவைத் தரப்படும்.

எஸ்றா தேவனைத் துதிக்கிறான்

27 கர்த்தர் ஆசீர்வதிக்கப்பட்டவர், நமது முற்பிதாக்களின் தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவர். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பெருமைப்படுத்தும் எண்ணத்தை ராஜாவின் மனத்தில் உருவாக்கியவர் தேவன். 28 என் மீது கர்த்தர் தனது மெய்யான அன்பை ராஜாவின் முன்பும், ஆலோசகர்கள் முன்பும் காட்டினார். தேவனாகிய கர்த்தர் என்னோடு இருந்தார், எனவே நான் தையரியமாக இருந்தேன். எருசலேமிற்கு என்னோடு வர இஸ்ரவேல் தலைவர்களை நான் கூட்டினேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center