Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 16-17

16 லேவியர்கள், உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்காகத் தாவீது கட்டியிருந்த இடத்தில் வைத்தனர். பிறகு தேவனுக்கு அவர்கள் சர்வாங்க தகன பலியையும், சமாதான பலியையும் கொடுத்தனர். தாவீது சர்வாங்க தகனபலியையும், சமாதான பலியையும் கொடுத்த பிறகு, கர்த்தருடைய பேரால் ஜனங்களை ஆசீர்வதித்தான். பிறகு அவன், ஒரு துண்டு அப்பத்தையும், இறைச்சி துண்டையும் உலர்ந்த திராட்சைகளையும், எல்லா இஸ்ரவேலிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் கொடுத்தான்.

உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு சேவை செய்வதற்காக தாவீது சில லேவியர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு துதிப்பாடுவதும், அவருக்கு நன்றி சொல்வதும் வேலையாய் இருந்தது. ஆசாப், முதல் குழுவின் தலைவன். இவர்கள் கைத்தாளங்களை இசைத்தனர். சகரியா, இரண்டாவது குழுவின் தலைவன். மற்ற லேவியர்கள்: ஏயேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா. ஓபேத் ஏதோம், ஏயெல் ஆகியோர். இவர்கள் தம்புரு, சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை இசைத்தனர். பெனாயாவும் யாகாசியேலும் ஆசாரியர்கள். இவர்கள் எப்போதும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். தாவீது கர்த்தரைத் துதித்து பாடுமாறு ஆசாப்பிடமும் அவனது சகோதரனிடமும் இவ்வேலையைக் கொடுத்தான்.

தாவீதின் நன்றிப்பாடல்

கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள்,
    ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள்.
கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள்,
    அவரது அதிசயங்களையும் கூறுங்கள்.
10 கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள்,
    கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!
11 கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள்,
    எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள்.
12 கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள்,
    அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட.
13 இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள்.
    யாக்கோபின் சந்ததியினர்,
    கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
14 கர்த்தர் நமது தேவன்,
    அவரது வல்லமை எங்கும் உள்ளது.
15 அவரது உடன்படிக்கையை எப்போதும் நினைவு கொள்ளுங்கள்,
    ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கும் அவர் கட்டளையிட்டுள்ளார்.
16 கர்த்தர் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை நினைவுகொள்ளுங்கள்,
    அவர் ஈசாக்குக்கு செய்த வாக்குறுதியையும் கூட.
17 கர்த்தர் யாக்கோபுக்காக சட்டத்தைச் செய்தார்,
    இது இஸ்ரவேலோடு செய்த உடன்படிக்கை, இது என்றென்றும் தொடரும்.
18 கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
    வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.”

19 அங்கே சில ஜனங்களே இருந்தனர்,
    சில அந்நியர்களும் இருந்தனர்.
20 அவர்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள்.
    அவர்கள் ஒரு அரசிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள்.
21 ஆனால் கர்த்தர், அவர்களை எவரும் புண்படுத்தாதபடி செய்தார்;
    அவர்களைப் புண்படுத்தாதபடி ராஜாக்களை எச்சரித்தார்.
22 கர்த்தர் அந்த ராஜாக்களிடம் சொன்னது, “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களையும்
    எனது தீர்க்கதரிசிகளையும் புண்படுத்தாதீர்கள்.”
23 கர்த்தரை பாடுங்கள், பூமியெங்கும் கர்த்தர் நம்மை காப்பாற்றும்
    நற்செய்தியை ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டும்.
24 கர்த்தருடைய மகிமையை அனைத்து நாடுகளுக்கும் கூறுங்கள்,
    எவ்வளவு அற்புதமானவர் என்பதையும் கூறுங்கள்.
25 கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர்.
    அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.
26 ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே.
    ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்!
27 வலிமையும், மகிழ்ச்சியும் கர்த்தர் வசிக்கும் இடத்தில் உள்ளன.
    கர்த்தர் ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் போன்றவர்.
28 குடும்பங்களே, ஜனங்களே
    கர்த்தருடைய மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
29 கர்த்தருடைய மகிமையைத் துதியுங்கள், அவரது பெயருக்கு மரியாதை செலுத்துங்கள்,
    கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வாருங்கள்,
    கர்த்தரை பரிசுத்த அலங்காரத்துடன் தொழுதுகொள்ளுங்கள்.
30 கர்த்தருக்கு முன்னால் உலகமுழுவதும் நடுங்குகிறது!
    ஆனால் அவர் பூமியை வலிமை உள்ளதாகச் செய்தார், இந்த பூமி (நகராது) அசையாது.
31 பூமியும், வானமும் மகிழ்ச்சியடையட்டும்,
    “கர்த்தர் ஆளுகிறார்!” என்று ஒவ்வொருவரும் எங்கும் சொல்லட்டும்.
32 கடலும், அதிலுள்ளவையும் முழங்கட்டும்!
    வயலும், அதிலுள்ள அனைத்தும் மகிழட்டும்!
33 கர்த்தருக்கு முன்னால் காட்டு மரங்களும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்!
    ஏனென்றால், கர்த்தர் வந்துக்கொண்டிருக்கிறார்.
    உலகை நியாயந்தீர்க்க அவர் வருகிறார்.
34 ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.
    கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக.
35 கர்த்தரிடம் “எங்களை காத்திடும் தேவனே, எங்கள் மீட்பரே,
    எங்களை ஒன்றுக் கூட்டிடும், மற்ற ஜனங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்,
பிறகு உமது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்.
    பிறகு உம்மை எங்கள் பாடல்களால் துதிப்போம்” என்று சொல்லுங்கள்.
36 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் துதிக்கத்தக்கவர்,
    அவர் எப்பொழுதும் துதிக்கப்படட்டும்!

அனைத்து ஜனங்களும் கர்த்தரைத் துதித்து, “ஆமென்!” என்று சொன்னார்கள்.

37 பிறகு தாவீது, ஆசாப்பையும் அவனது சகோதரர்களையும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் விட்டுவிட்டு வந்தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் பெட்டிக்கு முன்பு சேவைச் செய்ய வைத்தான். 38 தாவீது, அங்கே ஆசாப்பு மற்றும் அவன் சகோதரர்களோடு ஓபேத்ஏதோமையும் 68 லேவியர்களையும் சேவைச் செய்ய விட்டு, விட்டு வந்தான். ஓபேத்ஏதோமும் ஓசாவும் வாசல் காவல்காரர்கள். ஓபேத்ஏதோம் எதித்தூனின் குமாரன் ஆவான்.

39 கிபியோனிலுள்ள மேட்டில் இருக்கிற கர்த்தருடைய கூடாரத்தில் சேவை செய்வதற்காக தாவீது சோதாக்கையும் மற்ற ஆசாரியர்களையும் விட்டு வைத்தான். 40 ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் சோதாக்கும், மற்ற ஆசாரியர்களும் பலிபீடத்தில் சர்வாங்கதகன பலிகளைக் கொடுத்தனர். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எழுத்தின் மூலமாக வழங்கிய சட்டத்தின்படி அவர்கள் செய்தார்கள். 41 ஏமானையும், எதித்தூனையும், மற்ற லேவியர்களையும் கர்த்தரைத் துதித்துப் பாடுவதற்காகத் தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால், கர்த்தருடைய அன்பு என்றும் தொடர்ந்திருக்கும் போன்ற பாடல்களை பாட 42 ஏமானும், எதித்தூனும் அவர்களோடு இருந்தனர். அவர்களின் வேலை எக்காளத்தை ஊதுவதும், கைத்தாளம் இடுவதும் ஆகும். தேவனுக்காக பாடல்கள் பாடப்பட்டபோது அவர்கள் வேறு இசைக் கருவிகளையும் இசைத்து வந்தனர். எதித்தூனின் குமாரர்கள் வாசலைக் காத்தனர்.

43 விழா முடிந்த பிறகு, மிஞ்சியுள்ள ஜனங்கள் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள். தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கச் சென்றான்.

கர்த்தர் தாவீதிற்கு வாக்குறுதியளித்தல்

17 தாவீது, தன் வீட்டிற்குச் சென்ற பிறகு, அவன் தீர்க்கதரிசி நாத்தானிடம், “பார், நான் கேதுரு மரங்களால் ஆன வீட்டில் இருக்கிறேன். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியோ கூடாரத்தில் இருக்கிறது. எனவே தேவனுக்காக நான் ஒரு ஆலயம் கட்ட விரும்புகிறேன்” என்றான்.

நாத்தான் தாவீதிற்கு, “நீர் என்ன விரும்புகிறீரோ அதனைச் செய்யும், உம்மோடு தேவன் இருக்கிறார்” என்று பதிலுரைத்தான்.

ஆனால், அன்று இரவு தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது. தேவன்,

“போய் எனது தொண்டனான தாவீதிடம் கூறு: ‘தாவீது, எனக்காக ஆலயம் கட்ட வேண்டியவன் நீயல்ல. 5-6 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு வீட்டிலும் வசித்ததில்லை. நான் கூடாரத்துடனேயே திரிந்து கொண்டிருந்தேன். இஸ்ரவேலர்களுக்காகச் சிறப்பான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள், எனது ஜனங்களின் மேய்ப்பர்களைப் போன்றவர்கள். இஸ்ரவேலுக்குள் நான் பல்வேறு இடங்களுக்குத் திரிந்து கொண்டிருந்தபோது, நான் அந்தத் தலைவர்களிடம் எனக்குக் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டுமாறு சொன்னதில்லை. எனவே நீங்கள் ஏன் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டவில்லை?’ என்று அவர்களை நான் ஒரு பொழுதும் கேட்டதில்லை.

“இப்போது, இவற்றை என் தொண்டனான தாவீதிடம் கூறு: அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘நீ, வயல்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். என் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உன்னை ராஜாவாக்கினேன். நீ எங்கே போனாலும் அங்கெல்லாம் நான் உன்னோடு இருந்தேன். நான் உனக்கு முன்னால் போய் உன் பகைவர்களை அழித்தேன். இப்போது, உன்னைப் பூமியிலேயே மிக புகழ்ப்பெற்றவர்களில் ஒருவனாக ஆக்குவேன். இந்த இடத்தை நான் என் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கிறேன். அவர்கள் இதில் மரங்களை நடுவார்கள். அம்மரங்களுக்கு அடியில் சமாதானத்தோடு இருப்பார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். தீயவர்கள் முன்புபோல அவர்களுக்குத் தீங்கு செய்யமாட்டார்கள். 10 பல தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டன. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் பகைவர்களையும் தோற்கடிப்பேன்.

“‘கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று நான் உனக்குக் கூறுகிறேன். 11 நீ மரித்த பிறகு, உன் முற்பிதாக்களோடு சேருவாய். பிறகு, உன் சொந்த குமாரனைப் புதிய ராஜா ஆக்குவேன். அவன் உனது குமாரர்களில் ஒருவன். அவனது அரசைப் பலமாக்குவேன். 12 உனது குமாரன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். நான் உனது குமாரனின் சந்ததியை என்றென்றும் ஆட்சி செலுத்தும்படி செய்வேன். 13 நான் அவனது தந்தையாக இருப்பேன். அவன் எனது குமாரனாக இருப்பான். உனக்கு முன்பு சவுல் ராஜாவாக இருந்தான். நான் அவனுக்கு அளித்த ஆதரவை நீக்கினேன். ஆனால் நான் உன் குமாரன் மீது கொண்ட அன்பை நிறுத்தமாட்டேன். 14 நான் அவனை எனது ஆலயத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்றென்றும் பொறுப்பாளியாக்குவேன். அவனது ஆட்சி என்றென்றும் தொடர்ந்திருக்கும்!’” என்றார்.

15 நாத்தான் தான் கண்டத் தரிசனத்தை தாவீதிடம் கூறினான். தேவன் சொன்னதையும் கூறினான்.

தாவீதின் ஜெபம்

16 பிறகு தாவீது ராஜா பரிசுத்தக் கூடாரத்திற்குப் போனான். கர்த்தருக்கு முன்பு உட்கார்ந்தான்.

தாவீது, “தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் எவ்வளவோ செய்திருக்கிறீர். இது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை 17 இவற்றுக்கெல்லாம் மேலாக, எதிர்காலத்தில் என் குடும்பத்திற்கு என்னென்ன நடைபெறும் என்பதையும் நான் அறியுமாறு செய்துவிட்டீர். நீர் என்னை ஒரு மிக முக்கியமான மனிதனாக நடத்தினீர். 18 இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறீர். நான் உமது ஊழியன். இதை நீர் அறிவீர். 19 கர்த்தாவே, எனக்காக இந்த அற்புதங்களைச் செய்துள்ளீர். நீர் இவற்றைச் செய்தீர் ஏனென்றால், இவற்றை நீர் விரும்பினீர்.

20 உம்மைப்போல் எவருமில்லை கர்த்தாவே. உம்மைத்தவிர வேறு தேவன் இல்லை. வேறு எந்தத் தெய்வமும் இதுபோல் அற்புதங்களைச் செய்ததாக நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை! 21 இஸ்ரவேலைப்போன்று வேறு நாடுகளும் இல்லை. இந்த அதிசயங்களை நீர் செய்த நாடு பூமியிலேயே இஸ்ரவேல் ஒன்று மட்டும்தான். நீர் எங்களை எகிப்திலிருந்து விடுவித்தீர், என்னைச் சுதந்தரமாக்கினீர். உமக்கே நீர் புகழ் சேர்த்தீர்! உமது ஜனங்களுக்கு முன்னால் நீர் சென்றீர். மற்ற ஜனங்கள் தமது நாடுகளை எங்களுக்காக விட்டுச்செல்லும்படி செய்தீர்! 22 இஸ்ரவேல் ஜனங்களை என்றென்றும் உமது ஜனங்களாக ஏற்றுக்கொண்டீர்! கர்த்தாவே, நீர் அவர்களின் தேவனும் ஆனீர்!

23 “கர்த்தாவே, நீர் இந்த வாக்குறுதியை எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் செய்தீர். இப்போது, உமது வாக்குறுதிகளை என்றென்றும் காப்பாற்றுவீர், சொன்னபடியே செய்யும்! 24 நம்பிக்கைக்கு நீர் உரியவர் என்பதைக் காட்டும். ஜனங்கள் உமது நாமத்தை எப்போதும் பெருமைபடுத்துவார்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலரின் தேவன்!’ என்று என்றென்றும் ஜனங்கள் கூறுவார்கள். நான் உமது தொண்டன். எனது குடும்பத்தைப் பலமுள்ளதாக்கி என்றென்றும் உமக்குச் சேவைச் செய்ய அனுமதியும்.

25 “என் தேவனே, உமது ஊழியக்காரனாகிய என்னிடம் பேசினீர். எனது குடும்பத்தை அரச குடும்பம் ஆக்குவீர் என்பதைத் தெளிவாக்கிவிட்டீர். அதனால் நான் தைரியமாய் இருக்கிறேன். அதனால் தான் உம்மிடம் வேண்டுதல்களை வைத்த வண்ணம் இருக்கிறேன். 26 கர்த்தாவே நீரே தேவன், நீரே இந்த நன்மைகளெல்லாம் எனக்குச் செய்வதாகக் கூறிவிட்டீர். 27 கர்த்தாவே! எனது குடும்பத்தை ஆசீர்வதிக்க மனம்கொண்டீர். வாக்களிக்கும் அளவிற்குக் கருணைகொண்டுள்ளீர். எனது குடும்பம் என்றென்றும் உமக்குச் சேவைச் செய்யும் பாக்கியத்தையும் கருணையோடு தந்துள்ளீர். கர்த்தாவே, நீரே எனது குடும்பத்தை ஆசீர்வதித்துவிட்டீர். எனவே எனது குடும்பம் என்றென்றும் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டது!” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center