Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மாற்கு 13

ஆலயத்தின் எதிர்கால அழிவு(A)

13 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான்.

இயேசுவோ, “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்,” என்றார்.

பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம், “இவை எப்போது நடைபெறும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். இவை நிகழும் காலத்தை நாம் எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளமுடியும்?” என்று கேட்டனர்.

இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும். நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டுக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவில்லை என்று சொல்லும் காலம் வரும். பல்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் ஏற்படும். இவை ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் ஏற்படும் வேதனைபோல உருவாகும்.

“நீங்கள் கவனமாயிருங்கள். மக்கள் உங்களைக் கைது செய்து நியாயம் வழங்குவார்கள். தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை அடிப்பார்கள். நீங்கள் ஆளுநர்கள் முன்பும், மன்னர்களின் முன்பும், கட்டாயமாக நிறுத்தப்படுவீர்கள். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் இவை உங்களுக்கு ஏற்படும். 10 இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். 11 நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார்.

12 “சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் மக்கள் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். இறுதிவரை உறுதியாக யார் இருக்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.

14 “பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள். [a] (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள். 15 மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல் எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும். எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால் அவன் பொருள்களை எடுக்கக் கீழே இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும் இருப்பானாக. 16 எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக.

17 “அந்தக் காலம் கருவுற்ற பெண்களுக்கும், கைக் குழந்தையுள்ள பெண்களுக்கும் மிகக் கொடுமையானதாக இருக்கும். 18 மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள். 19 ஏன்?அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது. 20 அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.

21 “அக்காலத்தில் சிலர் ‘அதோ பாருங்கள் கிறிஸ்து, இதோ இவர்தான் கிறிஸ்து’ என்று கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். 22 கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் வந்து அநேக அற்புதங்களையும், அரிய செயல்களையும் செய்வார்கள். அவர்கள் இவற்றை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமே செய்வார்கள். அப்படிச் செய்து அவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். 23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.

24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு,

“‘சூரியன் இருளாகும்.
    சந்திரன் ஒளி தராது.
25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.
    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’ (B)

26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 27 பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள்.

28 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். 29 இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள். 30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

32 “எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார். 33 கவனமாய் இருங்கள். எப்பொழுதும் தயாராக இருங்கள். அக்காலம் எப்போது வரும் என உங்களுக்கும் தெரியாது.

34 “இது, பயணம் செய்பவன் தன் வீட்டைவிட்டுப் போவதைப் போன்றது. அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுப்போகிறான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு வேலையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். ஒரு வேலைக்காரன் வாசலைக் காவல் காப்பான். எப்பொழுதும் வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும் என்று சொல்வான். அதைப் போலவே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். 35 எனவே, நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பி வருவான் என்று எவருக்கும் தெரியாது. ஒரு வேளை அவன் பிற்பகலில் வரலாம், அல்லது நடு இரவில் வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம், அல்லது சூரியன் உதயமாகும்போது வரலாம். 36 வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல் வருவான். நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக அவன் கண்டுபிடிக்க மாட்டான். 37 நான் இதனை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் சொல்கிறேன், தயாராக இருங்கள்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center