Chronological
தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய உவமை
20 ,“பரலோக இராஜ்யமானது சிறிது நிலம் வைத்திருந்த ஒருவனைப் போன்றது, அவன் தனது நிலத்தில் திராட்சை விளைவித்தான். ஒரு நாள் காலை தன் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடிப் போனான். 2 ஒரு நாள் வேலைக்கு ஒரு வெள்ளிக்காசு கூலி தர அவன் ஒத்துக்கொண்டான். பிறகு வேலை ஆட்களைத் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பினான்.
3 ,“சுமார் ஒன்பது மணிக்கு அம்மனிதன் சந்தைப் பக்கமாகப் போனான். அங்கு சிலர் வேலை ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். 4 எனவே அவன் அவர்களிடம், ‘நீங்கள் சென்று என் தோட்டத்தில் வேலை செய்தால், நீங்கள் செய்யும் வேலைக்குத் தகுந்தாற்போல உங்களுக்கு ஊதியம் தருகிறேன்’ என்றான். 5 எனவே, அவர்களும் அவன் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றார்கள்.
, “மீண்டும் அவன் பன்னிரண்டு மணி அளவிலும் மூன்றுமணி அளவிலும் வெளியில் சென்று, ஒவ்வொரு முறையும் மேலும் சிலரைத் தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தான். 6 மீண்டும் ஐந்து மணி அளவில் சந்தைவெளிக்குச் சென்றான். மேலும் சிலர் அங்கே நின்றிருப்பதைக் கண்டு அவர்களிடம், ‘ஏன் நாள் முழுக்க வேலை எதுவும் செய்யாமல் இங்கே நின்றிருந்தீர்கள்’ என்று கேட்டான்.
7 ,“அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு யாரும் வேலை தரவில்லை’ என்றார்கள்.
, “அதற்கு அந்த திராட்சைத் தோட்டக்காரன், ‘அப்படியானால், நீங்கள் என் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்யலாம்’ என்றான்.
8 ,“அன்று மாலை திராட்சைத் தோட்டக்காரன் வேலைக்காரர்களைக் கவனிக்கும் மேற்பார்வையாளனிடம், ‘வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்குப் பணம் கொடுத்துவிடு. நான் கடைசியாக அழைத்து வந்தவர்களுக்கு முதலில் பணம் கொடு. இப்படியே அனைவருக்கும் நான் முதலில் அழைத்து வந்தவன் வரைக்கும் பணம் கொடு’ என்றான்.
9 ,“மாலை ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள் தங்கள் கூலியை வாங்க வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளி நாணயம் கிடைத்தது. 10 பின்னர் முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் தங்கள் கூலியைப் பெற வந்தபொழுது, தங்களுக்கு அதிகக் கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கும் தலைக்கு ஒரு வெள்ளி நாணயமே கிடைத்தது. 11 அவர்கள் ஒரு வௌ்ளி நாணயம் மட்டுமே கூலியாகக் கிடைத்தபொழுது, தோட்டத்துச் சொந்தக்காரனிடம் புகார் செய்தார்கள். 12 அவர்கள், ‘கடைசியாக வேலைக்கு வந்தவர்கள், ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். ஆனால், நாங்கள் நாள் முழுவதும் வெயிலில் கடுமையாக உழைத்துள்ளோம். ஆனால், எங்களுக்குச் சமமாக அவர்களுக்கும் கூலி கொடுத்துள்ளீர்கள்’ என்று புகார் கூறினார்கள்.
13 ,“ஆனால் தோட்டக்காரனோ அந்த ஆட்களில் ஒருவனிடம், ‘நண்பனே, நான் உனக்கு சரியாகவே கூலி கொடுத்துள்ளேன். ஒரு வெள்ளி நாணயத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டாய். சரிதானே? 14 எனவே, உன் கூலியைப் பெற்றுக்கொண்டு செல். நான் கடைசியாக வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் உனக்கும் சமமாகவே கூலி கொடுக்க விரும்புகிறேன். 15 நான் என் பணத்தில் என் விருப்பப்படி செய்யலாம். நான் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையா?’ என்று கூறினான்.
16 ,“ஆகவே, இப்பொழுது கடைசி ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் முதல் ஸ்தானத்திற்குச் செல்வார்கள். மேலும் இப்பொழுது முதல் ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் கடைசி ஸ்தானத்திற்குச் செல்வார்கள்” என்றார்.
தமது மரணத்தைப் பற்றி பேசுதல்(A)
17 இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம், 18 ,“நாம் எருசலேமுக்குப் போய்கொண்டிருக்கிறோம். தலைமை ஆசாரியர்களிடமும் வேதபாரகர்களிடமும் மனித குமாரன் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனித குமாரன் இறக்க வேண்டும் என்பார்கள். 19 யூதர்கள் அல்லாத வேற்று மனிதர்களிடம் மனித குமாரனை ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் கேலி செய்து சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்து கொல்வார்கள். ஆனால், மூன்றாவது நாள் மரணத்திலிருந்து மனித குமாரன் உயிர்த்தெழுவார்” என்று கூறினார்.
ஒரு தாய் விசேஷ உதவி கேட்டல்(B)
20 பின்னர், செபதேயுவின் மகன்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள்.
21 இயேசு அவளிடம்,, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார்.
அவள்,, “எனது ஒரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது வலது பக்கம் இருக்கவும், மற்றொரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது இடது பக்கம் இருக்கவும் வாக்களியுங்கள்” என்று கேட்டாள்.
22 அதைக் கேட்ட இயேசு அவளது மகன்களிடம்,, “நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அனுபவிக்கப்போகும் துன்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
, “ஆம், எங்களால் முடியும்” என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம்,, “மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை” என்றார்.
24 இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள். 25 இயேசு எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்களின் மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள். 26 ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும். 27 உங்களில் ஒருவன் முதலாவதாக வர விரும்பினால், அவன் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் ஊழியம் செய்ய வேண்டும். 28 மனித குமாரனும் அப்படியே. தனக்கு மற்றவர்கள் ஊழியம் செய்வதற்காக அவர் வரவில்லை. மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே மனித குமாரன் வந்தார். பலரது வாழ்வை இரட்சிப்பதற்கு தன் உயிரைக் கொடுக்கவே மனித குமாரன் வந்தார்” என்று கூறினார்.
இரண்டு குருடர்களை இயேசு குணமாகுதல்(C)
29 இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். 30 சாலையோரம் அமர்ந்திருந்த இரு குருடர்கள், இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று உரக்கக் கூவினார்கள்.
31 அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும் மேலும் சத்தமாக,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று கூவினார்கள்.
32 இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து,, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
33 அதற்குக் குருடர்கள்,, “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்” என்றார்கள்.
34 அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
அரசனைப் போல எருசலேமுக்குள் நுழைதல்(D)
21 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒலிவ மலைக்கு அருகில் பெத்பகேயுவில் அவர்கள் முதலில் தங்கினார்கள். அங்கு இயேசு தமது சீஷர்களில் இருவரை அழைத்து நகருக்குள் செல்லப் பணித்தார். 2 அவர்களிடம் இயேசு,, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 3 யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாயிருக்கின்றன. விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.
4 தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது.
5 ,“சொல்லுங்கள், சீயோன் நகர மக்களிடம்,
‘இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார்.
பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார்.
ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” (E)
6 இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். 7 அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். 8 இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். 9 சிலர் இயேசுவுக்கு முன்னால் நடந்தார்கள். மற்றவர்கள் அவருக்குப் பின்னே நடந்தார்கள். அவர்கள்,
, “தாவீதின் குமாரனே வாழ்க! [a]
‘கர்த்தரின் பெயரினால் வருகிறவரே வாழ்க! கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவரே, வாழ்க!’ (F)
, “பரலோகத்திலுள்ள தேவனே வாழ்க!”
என்றனர்.
10 பின்னர், இயேசு எருசலேம் நகருக்குள் சென்றார். நகரிலிருந்த அனைவரும் குழப்பமடைந்து,, “யார் இந்த மனிதன்?” என்று வினவினார்கள்.
11 இயேசுவைத் தொடர்ந்து வந்த ஏராளமான மக்கள்,, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்துள்ள தீர்க்கதரிசி” எனப் பதிலளித்தனர்.
இயேசு ஆலயத்திற்குள் செல்லுதல்(G)
12 இயேசு ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பொருட்களை விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டுமிருந்த அனைவரையும் வெளியேற்றினார். பலவகையான நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களின் மேஜைகளைக் கவிழ்த்தார். புறாக்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் மேஜைகளையும் கவிழ்த்தார். 13 அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் இயேசு,, “ஏற்கெனவே வேத வாக்கியங்களில் ‘பிரார்த்தனை செய்வதற்கான இடம் என்னுடைய வீடு!’ [b] என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய வீட்டைக் கொள்ளைக்காரர்கள் பதுங்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்” [c] என்று கூறினார்.
14 சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். 15 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன.
16 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம்,, “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள்.
இயேசு அவர்களிடம்,, “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே(தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார்.
17 பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார்.
விசுவாசத்தின் வல்லமை(H)
18 மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார். 19 இயேசு சாலையோரம் அத்திமரம் ஒன்றைக் கண்டார். அத்திப்பழங்களை உண்பதற்காக அம்மரத்தின் அருகில் சென்றார். ஆனால், மரத்தில் பழம் எதுவும் இல்லை. வெறும் இலைகள் மட்டுமே இருந்தன. எனவே இயேசு மரத்தை நோக்கி,, “இனி ஒருபொழுதும் உன்னிடம் பழம் உண்டாகாது” என்று கூறினார். உடனே அம்மரம் உலர்ந்து பட்டுப்போனது.
20 இதைக் கண்ட சீஷர்கள் மிகவும் வியப்புற்றனர். அவர்கள் இயேசுவிடம்,, “எப்படி அத்திமரம் இவ்வளவு விரைவில் உலர்ந்து பட்டுப்போனது?” என்று கேட்டார்கள்.
21 இயேசு அவர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்களும் விசுவாசத்துட னும் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்குச் செய்ததைப் போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் உங்களால் இன்னும் அதிகமாகச் சாதிக்க இயலும். இம்மலையைப் பார்த்து ‘மலையே போய் கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் சொன்னால் அது நடக்கும். 22 நீங்கள் நம்பிக்கையோடு பிரார்த்தனையில் வேண்டுகிற எதுவும் கிடைக்கும்” என்று பதிலுரைத்தார்.
இயேசுவின் அதிகாரத்தை யூதத்தலைவர்கள் சந்தேகித்தல்(I)
23 இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம்,, “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள்.
24 இயேசு அவர்களுக்கு,, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், நானும் இவைகளைச் செய்ய என்ன அதிகாரம் பெற்றிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 25 யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார்.
தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள்,, “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார். 26 மாறாக ‘அது மனிதனால் ஆனது’ என்றால் மக்கள் நம்மீது கோபம் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அனைவரும் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள்” என்று கூறிக் கொண்டார்கள்.
27 எனவே அவர்கள் இயேசுவிடம்,, “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.
பின்பு இயேசு,, “அப்படியெனில் இவைகளைச் செய்வதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்று கூறினார்.
இரண்டு மகன்கள் பற்றிய உவமை
28 ,“ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான்.
29 ,“அதற்கு அவன், ‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர், அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் என நினைத்தான். அவ்வாறே செய்தான்.
30 ,“பின்னர், அத்தந்தை தனது மற்றொரு மகனிடம் சென்றான். அவனிடம், ‘மகனே, இன்றைக்கு எனது திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். அதற்கு அவனது மகன், ‘சரி தந்தையே, நான் போய் வேலை செய்கிறேன்’ என்றான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லவில்லை.
31 ,“இரண்டு மகன்களில் யார் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தான்?” என்று இயேசு கேட்டார். யூதத் தலைவர்கள்,, “மூத்த மகன்” என்று பதில் சொன்னார்கள்.
அப்போது இயேசு,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், வரி வசூலிப்பவர்களும், வேசிகளும், தீயவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு முன்னரே பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவார்கள். 32 வாழ்க்கையின் சரியான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்காக யோவான் வந்தான். ஆனால், நீங்கள் யோவானை நம்பவில்லை. வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் யோவானை நம்பினார்கள். அவர்கள் யோவான் மீது நம்பிக்கை வைத்ததை நீங்கள் கண்டீர்கள். ஆனாலும் நீங்கள் மனந்திருந்தி யோவானை நம்பவில்லை” என்றார்.
திராட்சைத் தோட்ட உவமை(J)
33 ,“இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தோட்டமிருந்தது. அவன் அதில் திராட்சை பயிரிட்டான். தன் தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரெழுப்பி திராட்சை இரசம் சேகரிக்கும் குழியையும் வெட்டினான். பின் ஒரு கோபுரத்தையும் கட்டினான். பிறகு தோட்டத்தை சில விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு ஒரு பயணம் மேற்கொண்டான். 34 பின்னர், திராட்சைப் பழங்களைப் பறிக்கவேண்டிய காலம் வந்தபொழுது, தனது வேலைக்காரர்களை குத்தகைக்காரர்களிடம் விளைச்சலில் தனது பங்கை வாங்கி வர அனுப்பினான்.
35 ,“ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். 36 எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள். 37 ஆகவே, தோட்டக்காரன் தன் மகனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் மகனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான்.
38 ,“ஆனால் மகனைக் கண்ட விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். நிலம் இவனுக்கே சொந்தமாகும். நாம் இவனைக் கொன்றால் நிலம் நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 39 எனவே, அந்த விவசாயிகள் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனின் மகனைத் தோட்டத்திற்கு வெளியில் எறிந்து கொன்றார்கள்.
40 ,“திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார்.
41 அதற்கு யூத ஆசாரியர்களும் தலைவர்களும், “அவன் நிச்சயம் அந்தத் தீயவர்களைக் கொல்வான். பின் தனது நிலத்தை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடுவான். அதாவது அறுவடை காலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கைச் தனக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவான்” என்றனர்.
42 இயேசு அவர்களுக்குக் கூறினார்,, “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்:
, “‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று.
இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’ (K)
43 ,“எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். 44 இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.
45 இயேசு கூறிய இந்த உவமைகளைத் தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் கேட்டனர். தம்மைப்பற்றியே இயேசு பேசினார் என்பதை அவர்கள் அறிந்தார்கள். 46 எனவே இயேசுவைக் கைது செய்ய ஒரு வழி தேடினார்கள். ஆனால், அவர்கள் மக்களைக் குறித்து பயந்தார்கள். ஏனெனில் மக்கள் இயேசுவைத் தீர்க்கதரிசி என நம்பினர்.
2008 by World Bible Translation Center