Chronological
இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்(A)
23 பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். 2 ,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. 4 மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை.
5 ,“அவர்கள் நற்செயல்களைச் செய்வதற்கான ஒரே காரணம் மற்றவர்கள் அவற்றைக் காண வேண்டும் என்பதே. அவர்கள் வேத வாக்கியங்களில் வாசகங்களைக் கொண்ட தோல் பைகளை அணிந்து செல்கிறார்கள். அவற்றை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலும் மக்கள் காணும்படியாகப் பிரார்த்தனைக்கான சிறப்பு உடையை மிக நீண்டதாக அணிகிறார்கள். 6 அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். 7 கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு மரியாதை செய்யவும் மக்கள் தங்களை ‘போதகரே’ என அழைக்கவும் விரும்புகிறார்கள்.
8 ,“ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். 9 உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. 11 உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். 12 தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். 14 [a]
15 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் உங்களுக்கு ஒரு சீஷனைத் தேடுகிறீர்கள். நீங்கள் அவனைக் கண்டடைந்து அவனை உங்களை விட மோசமானவனாக மாற்றுகிறீர்கள். மேலும் நரகத்திற்கு உரிய நீங்கள் மிகவும் பொல்லாதவர்களே.
16 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 17 நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா? தங்கத்தைப் பரிசுத்தமாக்குவது தேவாலயமே! எனவே, தேவாலயமே பெரியது.
18 ,“மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. 20 பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான். 21 மேலும் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன், உண்மையில் தேவாலயத்தையும் அதில் வாசம் செய்பவரையும் பயன்படுத்துகிறான். 22 பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான்.
23 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள்.
25 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. 26 பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும்.
27 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. 28 அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.
29 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். 30 மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். 31 அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். 32 உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.
33 ,“நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். 34 ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர்கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள்.
35 ,“ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் மகனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். 36 நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.
எருசலேம் மக்களுக்கு எச்சரிப்பு(B)
37 ,“எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ [b] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
யூத அதிகாரிகளின் கேள்வி(A)
20 ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். 2 அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.
3 இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். 4 மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
5 ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். 6 ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். 7 எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.
8 எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
திராட்சைத்தோட்ட உவமை(B)
9 பின்னர் இயேசு மக்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தன் வயலில் திராட்சைச் செடிகளை பயிரிட்டான். சில உழவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகையாகக் கொடுத்தான். பின்னர் நீண்டகாலம் அங்கிருந்து சென்றுவிட்டான். 10 திராட்சைப் பழங்களைப் பறிக்கும் காலம் நெருங்கியது. அம்மனிதன் உழவர்களிடம் அவனது வேலைக்காரனைத் தனக்குரிய பாகமான திராட்சை பழங்களைப் பெற்றுவருமாறு அனுப்பினான். ஆனால் உழவர்கள் அந்த வேலைக்காரனை அடித்து ஒன்றுமே தராமல் அனுப்பிவிட்டார்கள். 11 எனவே அம்மனிதன் இன்னொரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த உழவர்கள் இந்த வேலைக்காரனையும் கூட அடித்தார்கள். அவனைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்காமல் அவனை அனுப்பிவிட்டார்கள். 12 எனவே அம்மனிதன் உழவர்களிடம் மூன்றாவது வேலைக்காரனை அனுப்பினான். உழவர்கள் அவனை அடித்துக் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.
13 “வயலின் சொந்தக்காரன். ‘நான் இப்போது என்ன செய்வேன்? நான் எனது மகனை அனுப்புவேன். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். உழவர்கள் என் மகனை மதிக்கக்கூடும்’ என்று எண்ணினான். 14 உழவர்கள் மகனைப் பார்த்ததும் தமக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். இவ்வயல் இவனுக்கே சேரும். இவனைக் கொன்றுவிட்டால் இவ்வயல் நமக்குச் சொந்தமாகும்’ என்று பேசிக்கொண்டனர். 15 எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்றுவிட்டனர்.
“வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்? 16 அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்றுபோடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான்” என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர்.
அவர்கள், “இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது” என்றனர். 17 ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு “அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது:
“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக் கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று’ (C)
18 அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.
19 யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.
யூத அதிகாரிகளின் தந்திரம்(D)
20 எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) 21 எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். 22 இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.
23 இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, 24 “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”
என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.
25 இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.
26 அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.
சதுசேயர்களின் தந்திரம்(E)
27 சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி, 28 “போதகரே, திருமணமான மனிதன் குழந்தைகளின்றி இறந்துபோனால், அவனது சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மோசே எழுதி இருந்தார். அப்படியானால் இறந்த சகோதரனுக்காகக் குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கும். 29 ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான். 30 பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான். 31 மூன்றாமவனும் அவளை மணந்து பின்னர் இறந்தான். ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். 32 அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள். 33 எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள்.
34 இயேசு சதுசேயரை நோக்கி, “பூமியில் மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்கின்றனர். 35 சிலர் மரணத்தினின்று எழும்பி அடுத்த உலகத்தில் பங்கு பெறும் தகுதியைப் பெறுவர். அந்த வாழ்வில் அவர்கள் மணம் செய்துகொள்ளமாட்டார்கள். 36 அந்த வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். அவர்களால் சாகமுடியாது. அவர்கள் மரணத்தினின்று எழுந்ததால் தேவனின் மக்களாவர். 37 மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவர் என்பதை மோசே தெளிவாகக் காட்டினான். எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன் [a] என்றும் கூறினான். 38 அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.
39 வேதபாரகரில் சிலர், “போதகரே, உங்கள் பதில் நன்றாக இருந்தது” என்றனர். 40 அடுத்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை.
கிறிஸ்து தாவீதின் குமாரனா?(F)
41 பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்? 42 சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார்.
“‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,
43 உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’ (G)
44 தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.
வேதபாரகருக்கு எச்சரிக்கை(H)
45 தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு பேசினார். எல்லா மக்களும் இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 46 “வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிற அவர்கள் அங்கிகளை அணிந்துகொண்டு அவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். மக்கள் அவர்களைச் சந்தையிடங்களில் மதிப்பதையும் விரும்புகிறார்கள். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கையில் அமர ஆசைப்படுகிறார்கள். 47 ஆனால் விதவைகள் தம் வீட்டில் வைத்திருக்கிற பொருட்களையெல்லாம் கொள்ளையிடுகிறவர்கள் அவர்களே ஆவார்கள். நீண்ட பிரார்த்தனைகளைச் சொல்லித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். தேவன் இவர்களை மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.
உண்மையான ஈகை(I)
21 தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார். 2 அப்போது இயேசு ஓர் ஏழை விதவையைக் கண்டார். பெட்டியினுள் அவள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். 3 இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை இரண்டு சிறிய நாணயங்களையே கொடுத்தாள். ஆனால், அச்செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அவள் உண்மையில் அதிகமாகக் கொடுத்தாள். 4 செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார்.
தேவாலயத்தின் அழிவு(J)
5 சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.
6 ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார்.
7 சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.
8 இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். 9 யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.
10 பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். 11 பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.
12 “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். அரசர்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். 14 நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். 15 உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன். 16 உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள். 17 எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள். 18 ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது. 19 இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும்.
எருசலேமின் அழிவு(K)
20 “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21 அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22 தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23 அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24 வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.
அஞ்சாதீர்கள்(L)
25 “சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள். 26 மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும். 27 அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள். 28 இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.
அழியாத தேவ வார்த்தை(M)
29 பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30 அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31 நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.
32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.
33 “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.
ஆயத்தமாயிருங்கள்
34 “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36 எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
37 பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார். 38 ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள்.
2008 by World Bible Translation Center