Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மத்தேயு 25

பத்துப் பெண்கள் பற்றிய உவமை

25 ,“மணமகனுக்காக காத்திருந்த பத்துப் பெண்களுக்கு ஒப்பாக பரலோக இராஜ்யம் இருக்கும். அப்பெண்கள் தங்களுடன் விளக்குகளைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஐந்து பெண்கள் முட்டாள்கள்; ஐந்து பெண்கள் புத்திசாலிகள். ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை. புத்திசாலிப் பெண்களோ விளக்குகளையும் தேவையான அதிக எண்ணெயை ஜாடிகளிலும் கொண்டு வந்திருந்தனர். மணமகன் வர நேரமானதால் அப்பெண்கள் களைப்பு மிகுதியால் தூங்க ஆரம்பித்தனர்.

,“நள்ளிரவில் யாரோ, ‘மணமகன் வந்தாயிற்று! வந்து மணமகனை சந்தியுங்கள்!’ என்று அறிவித்தார்கள்.

,“பின் பெண்கள் அனைவரும் விழித்தெழுந்தார்கள். தம் விளக்குகளைத் தயார் செய்தார்கள். முட்டாள் பெண்கள் புத்திசாலிப் பெண்களிடம் ‘எங்களிடம் விளக்குகளிலிருந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. உங்களிடமுள்ள எண்ணெயிலிருந்து சிறிது கொடுங்கள்’ என்று கேட்டார்கள்.

,“அதற்கு புத்திசாலிப் பெண்கள், ‘இல்லை. எங்களிடமுள்ள எண்ணெய் எங்களுக்கே போதாது, எண்ணெய் விற்பவர்களிடம் சென்று உங்களுக்கு எண்ணெய் வாங்கி வாருங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

10 ,“ஆகவே, முட்டாள் பெண்கள் எண்ணெய் வாங்கச் சென்றார்கள். அவர்கள் வெளியில் சென்றிருந்தபொழுது மணமகன் வந்தான். தயாராக இருந்த பெண்கள் மணமகனுடன் விருந்துண்ண சென்றார்கள். உடனே, கதவு மூடப்பட்டு பூட்டப்பட்டது.

11 ,“பின்னர், வெளியில் சென்ற பெண்கள் திரும்பினார்கள். அவர்கள், ‘ஐயா! ஐயா! கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுங்கள்’ என்றார்கள்.

12 ,“ஆனால் மணமகனோ, ‘உண்மையாகவே நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டான்.

13 ,“எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.

மூன்று வேலைக்காரர்களைப் பற்றிய உவமை(A)

14 ,“பரலோக இராஜ்யம், தன் வீட்டை விட்டு வேறொரு இடத்திற்குப் பயணமான ஒருவனுக்கு ஒப்பாகும். புறப்பட்டுச் செல்வதற்கு முன் அவன் தனது மூன்று வேலைக்காரர்களுடன் பேசினான். தான் புறப்பட்டுச் சென்றபின் தனது உடமைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொன்னான். 15 ஒவ்வொரு வேலைக்காரனும் எதைப் பார்த்துக் கொள்ள முடியுமென அவன் தீர்மானித்தான். அதற்கேற்ப ஒருவனிடம் ஐந்து பை நிறையப் பணமும் [a] மற்றொருவனிடம் இரண்டு பை நிறையப் பணமும் மூன்றாவது வேலைக்காரனிடம் ஒரு பை நிறையப் பணமும் கொடுத்தான். பின் அவன் புறப்பட்டுப் போனான். 16 ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது. 17 அதே போல இரண்டு பை பணம் பெற்றவனுக்கும் நடந்தது. அவன் தான் பெற்ற இரண்டு பை பணம் முதலிட்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டினான். 18 ஆனால், ஒரு பை பணம் பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.

19 ,“நீண்ட காலம் கழித்து எஜமானன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன செய்தார்கள் எனத் தன் மூன்று வேலைக்காரர்களிடமும் கேட்டான். 20 ஐந்து பை பணம் பெற்ற வேலைக்காரன் மேலும் ஐந்து பை பணத்தைக் கொண்டு வந்து தன் எஜமானிடம் சொன்னான், ‘எஜமானே! நீர் என்னை நம்பி ஐந்து பை பணம் தந்தீர்கள். ஆகவே, நான் அதை முதலிட்டு மேலும் ஐந்து பை பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான்.

21 ,“அதற்கு எஜமானன், ‘நீ செய்தது சரி. நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிது பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய், மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்!’ என்றான்.

22 ,“பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான்.

23 ,“அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்!’ என்றான்.

24 ,“பின் ஒரு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர் நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். 25 எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான்.

26 ,“எஜமான் அவனை நோக்கி, ‘நீ ஒரு மோசமான சோம்பேறி வேலைக்காரன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். 27 எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான்.

28 ,“ஆகவே, எஜமானன், தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம் வைத்திருப்பவனிடம் கொடுங்கள். 29 தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவனும் மேலும் அதிகம் பெறுவான். அவனுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகக் கிடைக்கும். ஆனால் தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்தாதவனிடமிருந்து அனைத்தும் பறிக்கப்படும்.’ என்றான். 30 பிறகு அந்த எஜமானன், ‘பயனற்ற அந்த வேலைக்காரனைத் தூக்கி வெளியே இருளில் எறியுங்கள். அவ்விடத்தில் மக்கள் கூக்குரலிட்டு பற்களைக் கடித்துக் கொண்டு வேதனையால் அழுது கொண்டிருப்பார்கள்’ என்றான்.

மனிதகுமாரனின் நியாயத்தீர்ப்பு

31 ,“மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். அரசராகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார்.

34 ,“பின் அரசனானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. 35 நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். 36 நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார்.

37 ,“அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? 38 எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? 39 எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள்.

40 ,“பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார்.

41 ,“பின் அரசர் தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டார். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. 42 நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. 43 நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.

44 ,“அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள்.

45 ,“அப்போது அரசர், ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார்.

46 ,“பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center