லூக்கா 21:5-24
Tamil Bible: Easy-to-Read Version
தேவாலயத்தின் அழிவு
(மத்தேயு 24:1-14; மாற்கு 13:1-13)
5 சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.
6 ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார்.
7 சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.
8 இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். 9 யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.
10 பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். 11 பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.
12 “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். ராஜாக்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். 14 நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். 15 உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன். 16 உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள். 17 எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள். 18 ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது. 19 இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும்.
எருசலேமின் அழிவு
(மத்தேயு 24:15-21; மாற்கு 13:14-19)
20 “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21 அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22 தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23 அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24 வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.
Read full chapter2008 by Bible League International