மாற்கு 13:1-13
Tamil Bible: Easy-to-Read Version
ஆலயத்தின் எதிர்கால அழிவு
(மத்தேயு 24:1-25; லூக்கா 21:5-24)
13 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய, பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான்.
2 இயேசுவோ, “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்,” என்றார்.
3 பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம், 4 “இவை எப்போது நடைபெறும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். இவை நிகழும் காலத்தை நாம் எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளமுடியும்?” என்று கேட்டனர்.
5 இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். 6 பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். 7 போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும். 8 நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டுக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவில்லை என்று சொல்லும் காலம் வரும். பல்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் ஏற்படும். இவை ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் ஏற்படும் வேதனைபோல உருவாகும்.
9 “நீங்கள் கவனமாயிருங்கள். மக்கள் உங்களைக் கைது செய்து நியாயம் வழங்குவார்கள். தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை அடிப்பார்கள். நீங்கள் ஆளுநர்கள் முன்பும், மன்னர்களின் முன்பும், கட்டாயமாக நிறுத்தப்படுவீர்கள். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் இவை உங்களுக்கு ஏற்படும். 10 இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். 11 நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார்.
12 “சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் மக்கள் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். இறுதிவரை உறுதியாக யார் இருக்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.
Read full chapter2008 by Bible League International