லூக்கா 21:25-36
Tamil Bible: Easy-to-Read Version
அஞ்சாதீர்கள்
(மத்தேயு 24:29-31; மாற்கு 13:24-27)
25 “சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள். 26 மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும். 27 அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள். 28 இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.
அழியாத தேவ வார்த்தை
(மத்தேயு 24:32-35; மாற்கு 13:28-31)
29 பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30 அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31 நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.
32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.
33 “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.
ஆயத்தமாயிருங்கள்
34 “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36 எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
Read full chapter2008 by Bible League International