Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 9-12

ஒரு புதிய நாள் வருகிறது

கடந்த காலத்தில், ஜனங்கள் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் பிற்காலத்தில், அந்த நாட்டை தேவன் மேம்படுத்துவார். அது கடலுக்கு அருகில் உள்ள நாடும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள நாடும், யூதரல்லாதவர்கள் வாழும் கலிலேயா நாடும் சேர்ந்ததாகும்.

இப்போது இருளில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் ஓரிடத்தில் வாழ்கின்றனர். அது மரண இருளைபோன்ற இடம். ஆனால் அவர்கள் மேல் பெரிய வெளிச்சம் உதிக்கும்.

தேவனே, நாட்டை வளரும்படிச் செய்ய வேண்டும். ஜனங்களை நீர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஜனங்கள் தம் மகிழ்ச்சியை உம்மிடம் காட்டுவார்கள். அது அறுவடை காலத்தின் மகிழ்ச்சியைப்போன்று இருக்கும். போரில் வென்று ஜனங்கள் தம் பங்கைப் பகிர்ந்துகொள்ளும்போதுள்ள மகிழ்ச்சியைப்போன்று அது இருக்கும். ஏனென்றால், நீர் அவர்களின் மிகுந்த பாரத்தை நீக்குவீர். ஜனங்களின் முதுகில் இருக்கும் பெரிய நுகத்தடியை நீக்குவீர். உமது ஜனங்களைப் பகைவர்கள் தண்டிக்கப் பயன்படுத்திய கோலையும் விலக்கி விடுவீர். இது நீங்கள் மீதியானியரைத் தோற்கடித்த காலத்தைப்போன்று இருக்கும்.

போர் செய்வதற்காக நடந்து சென்ற ஒவ்வொரு காலணியும் அழிக்கப்படும். இரத்தம் தோய்ந்த ஒவ்வொரு சீருடையும் அழிக்கப்படும். அவை நெருப்பிலே வீசப்படும்.

விசேஷித்த மகன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு மகனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். அவரது நாமமானது “ஆலோசகர், வல்லமை மிக்க தேவன், நித்திய பிதா, அதிசயமுள்ளவர், சமாதானத்தின் இளவரசர்” என்று இருக்கும். அவரது அரசாங்கத்தில் பலமும் சமாதானமும் இருக்கும். தாவீதின் குடும்பத்திலிருந்து வரும் இந்த அரசர் நன்மையையும் நீதியையும் பயன்படுத்தி தமது அரசாங்கத்தை என்றென்றைக்கும் ஆண்டு வருவார்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் ஜனங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர். அந்தப் பலமான அன்பு இவற்றையெல்லாம் செய்யக் காரணமாய் இருக்கின்றது.

தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார்

எனது கர்த்தர் யாக்கோபின் ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) எதிராக ஒரு கட்டளையிட்டார். இஸ்ரவேலின்மேல் அந்தக் கட்டளை வரும்.

பிறகு எப்பிராயீமில் (இஸ்ரவேலில்) உள்ள ஒவ்வொருவரும், சமாரியாவில் உள்ள தலைவர்களும்கூட தேவன் அவர்களைத் தண்டித்தார் என்பதை அறிந்துகொள்வார்கள்.

இப்போது அந்த ஜனங்கள் பெருமையும் ஆணவமும் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், 10 “இந்தச் செங்கற்கள் விழலாம், ஆனால் நாங்கள் மீண்டும் கட்டுவோம். நாங்கள் பலமான கற்களால் கட்டுவோம். இந்தச் சிறு மரங்கள் வெட்டப்படலாம். ஆனால் நாங்கள் புதிய மரங்களை நடுவோம். அப்புதிய மரங்கள் பெரியதாகவும், உறுதியுடையதாகவும் இருக்கும்” என்றனர். 11 எனவே, கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகப்போரிட ஜனங்களை கண்டுபிடிப்பார். கர்த்தர் ரேத்சீனின் பகைவர்களை அவனுக்கு எதிராகக் கொண்டுவருவார். 12 கர்த்தர் கிழக்கிலிருந்து ஆராமியரையும் மேற்கிலிருந்து பெலிஸ்தர்களையும் கொண்டுவருவார். அவர்கள் தம் படையால் இஸ்ரவேலர்களைத் தோற்கடிப்பார்கள். ஆனால், கர்த்தர் மேலும் இஸ்ரவேலர்களோடு கோபமாக இருப்பார். கர்த்தர் அந்த ஜனங்களை மேலும் தண்டிக்கத் தயாராக இருப்பார்.

13 தேவன் அவர்களைத் தண்டிப்பார். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் அவரிடம் திரும்பமாட்டார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றமாட்டார்கள். 14 எனவே கர்த்தர் இஸ்ரவேலின் தலையையும் வாலையும் வெட்டி வீசுவார். ஒரே நாளில் கர்த்தர் கிளைகளையும் நாணலையும் வெட்டிப்போடுவார். 15 (தலை என்றால் மூப்பர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் என்று பொருள். வால் என்றால் பொய் சொல்லும் தீர்க்கதரிசிகள் என்று பொருள்).

16 ஜனங்களை வழிநடத்துபவர்கள் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். அவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் அழிந்துபோகிறார்கள். 17 அனைத்து ஜனங்களும் தீமையானவர்கள். எனவே இளைஞர்களைப்பற்றி கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். அவர்களின் விதவைகளிடமும், அநாதைகளிடமும் அவர் இரக்கம் காட்டமாட்டார். ஏனென்றால், அனைவரும் தீமையானவர்கள். ஜனங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானவையே. ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். எனவே, தேவன் தொடர்ந்து ஜனங்களிடம் கோபமாக உள்ளார். தேவன் தொடர்ந்து அந்த ஜனங்களை தண்டிக்கிறார்.

18 தீமையானது சிறு நெருப்பைப்போன்றது. முதலில் அது முட்களையும் நெருஞ்சியையும் எரிக்கும். பிறகு அது காட்டிலுள்ள பெரும் புதர்களை எரிக்கின்றது. இறுதியாக அது பெருநெருப்பாகி எல்லாம் புகையோடு போகும்.

19 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கோபமாக இருக்கிறார். எனவே, இந்த நாடு எரியும். எல்லா ஜனங்களும் நெருப்பில் எரிவார்கள். எவரும் தன் சகோதரனைக் காப்பாற்ற முயலமாட்டார்கள். 20 ஜனங்கள் வலது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். இடது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். பிறகு ஒவ்வொருவரும் திரும்பித் தங்களையே தின்பார்கள். 21 (இதற்கு மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் எதிர்த்துப்போராடுவார்கள். பிறகு இருவரும் யூதாவிற்கு எதிராகத் திரும்புவார்கள் என்று பொருள்).

கர்த்தர் இன்னும் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாக இருக்கிறார். கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டிக்கத் தயாராக உள்ளார்.

10 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது. அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர்.

சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது. நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப்போனவனைப்போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்.

G o d W ill P u n is h A s s y ria’s P rid e

தேவன், நான் அசீரியாவை ஒரு தடியைப்போன்று பயன்படுத்துவேன். கோபத்தில் நான் இஸ்ரவேலைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவேன். நான் அசீரியாவை அனுப்பி தீமை செய்கிற என் ஜனங்களுக்கு எதிராகப்போராடச் சொல்லுவேன். நான் அந்த ஜனங்கள் மேல் கோபமாக இருக்கிறேன். அவர்களை எதிர்த்துப்போரிடுமாறு அசீரியாவிற்குக் கட்டளையிட்டேன். அசீரியா அவர்களைத் தோற்கடிக்கும். அவர்களது செல்வங்களை அசீரியா எடுத்துக்கொள்ளும். இஸ்ரவேல் அசீரியாவிற்கு மிதிக்கப்படுகிற அழுக்கைப்போலிருக்கும்.

“ஆனால் நான்தான் அதனைக் பயன்படுத்துகிறேன் என்பது அசீரியாவிற்குத் தெரியாது. எனக்கு அது ஒரு கருவி என்பது அசீரியாவிற்கு புரியாது. மற்றவர்களை அழிக்கவேண்டும் என்று மட்டுமே அசீரியா விரும்புகிறது. அசீரியா பல நாடுகளை அழிக்கவேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறது. அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் அரசர்களைப்போன்றவர்கள்!’ கல்னோ நகரமானது கர்கேமிசைப்போன்றது. ஆமாத் நகர் அர்பாத்தை போன்றது. சமாரியா தமஸ்குவைப்போன்றது. 10 நான் அந்தத் தீமையான அரசுகளைத் தோற்கடித்தேன், இப்போது அவற்றை நான் கட்டுப்படுத்துகிறேன். அவர்களால் தொழுதுகொள்ளப்படுகிற விக்கிரகங்கள் எருசலேம் மற்றும் சமாரியாவில் உள்ள விக்கிரகங்களைவிட எண்ணிக்கையில் மிகுந்தவை. 11 நான் சமாரியாவையும் அதிலுள்ள விக்கிரகங்களையும் தோற்கடித்தேன். நான் எருசலேமையும் அந்த ஜனங்கள் செய்த விக்கிரகங்களையும் தோற்கடிப்பேன் என்றனர்” என்பார்.

12 எனது ஆண்டவர், எருசலேமில் சீயோன் மலையிலும் செய்யவேண்டுமென்று திட்டமிட்டவற்றைச் செய்து முடிப்பார். பிறகு கர்த்தர் அசீரியாவைத் தண்டிப்பார். அசீரியாவின் அரசன் வீண் பெருமைகொண்டவன். அவனது பெருமை அவனைப் பல தீய செயல்களைச் செய்ய வைத்தது. எனவே, தேவன் அவனைத் தண்டிப்பார்.

13 அசீரியாவின் அரசன், “நான் ஞானமுள்ளவன். எனது சொந்த ஞானத்தாலும் பெலத்தாலும் நான் பல பெரியக் காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் பல நாடுகளைத் தோற்கடித்துள்ளேன். நான் அவற்றின் செல்வங்களைப் பறித்துள்ளேன். அங்குள்ள ஜனங்களை நான் அடிமைகளாக எடுத்துள்ளேன். நான் மிகவும் பெலமுள்ளவன். 14 எனது சொந்தக் கைகளால் அனைத்து ஜனங்களின் செல்வங்களையும் ஒருவன் ஒரு பறவையின் முட்டைகளையெல்லாம், எடுத்துக்கொள்வதுபோல் எடுத்துக்கொண்டேன். பறவை தன் கூட்டையும் முட்டைகளையும் விட்டுவிட்டுப்போகும். அக்கூட்டைக் காப்பாற்ற எதுவுமில்லை. எந்தப் பறவையும் தன் அலகாலும் இறக்கைகளாலும் எதிர்த்துப்போரிடாது. எனவே, ஜனங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதைப்போலவே, பூமியில் உள்ள ஜனங்களையெல்லாம் நான் எடுத்துக்கொள்வதை, எவரும் தடுக்க முடியாது” என்றார்.

15 ஒரு கோடரி அதைப் பயன்படுத்தி வெட்டுகிற வனைவிடச் சிறந்ததல்ல. அரிவாளானது அதை வைத்திருப்பவனைவிடச் சிறந்ததல்ல. ஆனால் அசீரியாவோ தன்னை தேவனைவிட முக்கியமானதாகவும் பெலமுடையதாகவும் நினைக்கிறது. தடியானது தன்னைப் பயன்படுத்தி தண்டிப்பவனைவிட பெலமுள்ளதாகவும், முக்கியமானதாகவும் நினைப்பது போன்றதாகும். 16 அசீரியா தன்னைப் பெரிதாக நினைத்துகொள்ளும். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவிற்கு எதிராக மிகப் பயங்கரமான நோயை அனுப்புவார். நோயுற்றவன் தன் எடையை இழப்பது போன்று அசீரியா தனது செல்வத்தையும் பெலத்தையும் இழக்கும். பிறகு அசீரியாவின் மகிமையும் அழியும். எல்லாம் அழியும்வரை நெருப்பு எரிவதுபோல் அது இருக்கும். 17 இஸ்ரவேலின் வெளிச்சமானவர் (தேவன்) ஒரு நெருப்பைப்போன்றவர். பரிசுத்தமானவர் ஜுவாலையைப்போன்றவர். அது ஒரு நெருப்பைப்போன்று முதலில் முட்களையும் நெருஞ்சிகளையும் எரிக்கும். 18 பிறகு, அது பெரிய மரங்களையும், திராட்சைச் தோட்டங்களையும் எரிக்கும், இறுதியாக, ஜனங்கள் உட்பட எல்லாமே அழிக்கப்படும். தேவன் அசீரியாவை அழிக்கும்போது அப்படி இருக்கும். அசீரியா அழுகிய தடியைபோன்றிருக்கும். 19 காட்டில் சில மரங்கள் மட்டும் அவனுக்காக விடப்பட்டிருக்கும். ஒரு சிறுபிள்ளைகூட அவற்றை எண்ண முடியும்.

20 அப்போது, இஸ்ரவேலில் மீதியுள்ள ஜனங்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும் தம்மை அடித்தவர்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தரை உண்மையாகவே சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வார்கள். 21 யாக்கோபின் குடும்பத்தில் மீதியுள்ள ஜனங்கள் மீண்டும் வல்லமைமிக்க தேவனைப் பின்பற்றுவார்கள்.

22 உங்கள் ஜனங்கள் மிகுதியானவர்கள். அவர்கள் கடற்கரையின் மணலைப்போன்றவர்கள். ஆனால் கொஞ்சம் ஜனங்களே தேவனிடம் திரும்பி வருவார்கள். ஆனால் முதலில் உனது நாடு அழிக்கப்படும். நாட்டை அழித்துவிடுவதாக தேவன் அறிவித்திருக்கிறார். பிறகே, நாட்டுக்கு நன்மை வந்து சேரும். இது ஆறு நிரம்பிவருவது போன்றது. 23 சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், நிச்சயமாக இந்த நாட்டை அழிப்பார்.

24 எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “சீயோன் மலையில் வாழும் என் ஜனங்களே, அசீரியாவுக்கு அஞ்சவேண்டாம்! முன்பு உங்களை எகிப்து அடித்ததுபோன்று அது அடிக்கும். உங்களைக் காயப்படுத்த அசீரியா தடியைப் பயன்படுத்தியது போன்று அது இருக்கும். 25 ஆனால் சிறிது காலத்தில் என் கோபம் நிறுத்தப்படும். அசீரியா உங்களைப்போதுமான அளவிற்குத் தண்டித்துவிட்டது என்று நான் திருப்தி அடைவேன்” என்றார். 26 பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவை ஒரு சவுக்கால் அடிப்பார். கடந்த காலத்தில், கர்த்தர் மீதியானியர்களை காகத்தின் பாறை அருகில் தோற்கடித்தார். கர்த்தர் அசீரியாவைத் தாக்குவதுப்போல் இருக்கும். முன்பு கர்த்தர் எகிப்தைத் தண்டித்தார். அவர் தன் தடியைக் கடலுக்குமேல் ஓங்கினார். தம் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அது அசீரியாவிலிருந்து கர்த்தர் தம் ஜனங்களைக் காப்பாற்றியது போலவே இருக்கும்.

27 உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும்.

இஸ்ரவேலுக்குள் அசீரியப் படைகள் நுழைதல்

28 படையானது “ஆயாத்து” அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப்படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும். 29 அப்படை ஆற்றை மாபாலில் “கடக்கும்” அது கேபாவில் தூங்கும். ராமா அதைப் பார்த்து அஞ்சும், சவுலின் ஊராகிய கிபியாவின் ஜனங்கள் ஓடிச்செல்வார்கள்.

30 பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்! 31 மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள். 32 இந்நாளில், படையானது நோபிலே நிறுத்தப்படும். அப்படையானது எருசலேம் மலையான சீயோனுக்கு எதிராகப்போரிடத் தயார் செய்யும்.

33 கவனி! சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய எனது ஆண்டவர், அசீரியா என்னும் மரத்தை வெட்டித் தள்ளுவார். கர்த்தர் தமது பெரும் பலத்தால் இதனைச் செய்துமுடிப்பார். பெரிய முக்கிய ஜனங்கள் வெட்டி வீசப்படுவார்கள். அவர்கள் முக்கியம் இல்லாமல் போவார்கள். 34 கர்த்தர் அக்காட்டினைத் தனது கோடரியால் வெட்டுவார். லீபனோனில் உள்ள (முக்கிய ஜனங்களான) பெரிய மரங்களும் விழும்.

சமாதானத்தின் அரசர் வந்துகொண்டிருக்கிறார்

11 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு குழந்தை துளிர் தோன்றி வளரத் தொடங்கியது. அந்தக் கிளையானது ஈசாயின் குடும்பத்தில் வேரிலிருந்து தோன்றி வளரும். கர்த்தருடைய ஆவி அந்தச் சிறு (பிள்ளையின்) துளிர்மேல் இருக்கும். ஆவியானவர் ஞானம், புரிந்துகொள்ளுதல், வழிநடத்துதல், வல்லமை போன்றவற்றைத் தருகிறார். ஆவியானவர் அந்த பிள்ளைக்கு கர்த்தரைத் தெரிந்துகொள்ளவும், அவரை மதிக்கவும் உதவுவார். இந்தப் பிள்ளை கர்த்தருக்கு மரியாதை கொடுக்கும். பிள்ளையை இது மகிழ்ச்சி உடையதாகச் செய்யும்.

அவர் தமது கண்கண்டபடி நியாயம்தீர்க்கமாட்டார். அவர் தமது காதில் கேட்டபடி தீர்ப்பு அளிக்கமாட்டார். - அவர் ஏழை ஜனங்களை நீதியுடனும் பொறுமையுடனும் நியாயம்தீர்ப்பார். இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களுக்குச் சரியாகத் தீர்ப்பு செய்து காரியங்களைச் செய்வார். அவர் ஜனங்களை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்தால், பிறகு அவர் கட்டளையிடுவார், அந்த ஜனங்கள் அடிக்கப்படுவார்கள். ஜனங்கள் மரிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தால், அவர் கட்டளையிட, பாவிகள் கொல்லப்படுவார்கள். நன்மையும் நீதியும் இந்தக் குழந்தைக்குப் பலத்தைக் கொடுக்கும். அவை அவருக்கு இடுப்பைச்சுற்றிக் கட்டப்படும் கச்சையைப்போல இருக்கும்.

அப்போது, ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளோடு சமாதானமாய் வாழும், புலிகள் வெள்ளாட்டுக் குட்டிகளோடு சமாதானமாய் படுத்துக்கொள்ளும். கன்றுக்குட்டியும் இளஞ்சிங்கமும் காளையும் சமாதானமாக ஒரே இடத்தில் வாழும். ஒரு சிறு பிள்ளை அவைகளை வழிநடத்துவான். பசுக்களும் கரடியும் சமாதானமாக சேர்ந்து மேயும். அவற்றின் குட்டிகள் ஒன்றையொன்று காயப்படுத்தாமல் சேர்ந்து படுத்துக்கொள்ளும். சிங்கமானது, பசுவைப்போன்று புல்லைத் தின்னும். பாம்புகளும் கூட ஜனங்களைக் கடிக்காது. ஒரு குழந்தை நல்லபாம்பின் புற்றினருகில் விளையாட முடியும். ஒரு குழந்தை ஒரு விஷமிக்க பாம்பின் துளையில் கையை விடமுடியும்.

இவையனைத்தும் சமாதானத்தைக் காட்டும். ஒருவரும் மற்றவரைத் துன்புறுத்தமாட்டார்கள். எனது பரிசுத்தமான மலையிலுள்ள ஜனங்கள் பொருட்களை அழிக்க விரும்பமாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் உண்மையிலேயே கர்த்தரை அறிந்திருக்கின்றனர். கடல் நிறைய தண்ணீர் இருப்பது போன்று அவர்களிடம் கர்த்தரைப்பற்றிய அறிவு நிறைந்திருக்கும்.

10 அப்போது, ஈசாயின் குடும்பத்தில் இருந்து ஒருவர் வருவார். அவர் ஒரு கொடியைப்போல இருப்பார்.

“அக்கொடி” அனைத்து நாடுகளையும் காட்டி அவரைச் சுற்றிவரும். நாடுகளெல்லாம் தான் செய்ய வேண்டியதைப்பற்றி அவரிடம் கேட்கும். அவர் இருக்கின்ற இடமெல்லாம் மகிமை நிறைந்திருக்கும்.

11 அப்போது, என் ஆண்டவரான தேவன், மீண்டும் தமது கையை உயர்த்தி மீதியான ஜனங்களை அழைத்துக்கொள்வார். இதனை தேவன் இரண்டாம் முறையாகச் செய்கின்றார். (இவர்கள் தேவனுடைய ஜனங்கள். இவர்கள் அசீரியா, வட எகிப்து, தென் எகிப்து, எத்தியோப்பியா, ஏலாம், பாபிலோனியா, ஆமாத், மற்றும் தூர நாடுகளிலும் மீதியாயிருந்தவர்கள்). 12 தேவன் இந்தக் “கொடியை” அனைத்து ஜனங்களுக்கும் அடையாளமாக ஏற்றுவார். யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள் தம் நாட்டைவிட்டுப்போகும்படி பலவந்தப்படுத்தப்படுவார்கள். ஜனங்கள் பூமியில் உள்ள தூரநாடுகளுக்கெல்லாம் சிதறிப்போனார்கள். ஆனால் தேவன் அனைவரையும் ஒன்று சேர்ப்பார்.

13 அப்போது, எப்பிராயீம் யூதாவின் மீது பொறாமைகொள்ளாது. யூதாவில் எந்தப் பகைவரும் விடுபடமாட்டார்கள். யூதா எப்பிராயீமுக்கு எவ்விதத் துன்பமும் கொடுக்காது.

14 ஆனால் எப்பிராயீமும் யூதாவும் பெலிஸ்தர்களைத் தாக்குவார்கள். இந்த இரு நாடுகளும் சிறு மிருகங்களைப் பிடிக்கும் பறவைகளைப்போன்று சேர்ந்து பறக்கும். அவர்கள் இருவரும் கிழக்கு நாட்டு ஜனங்களின் ஐசுவரியத்தை கொள்ளையிடுவார்கள். எப்பிராயீமும் யூதாவும் ஏதோம், மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவார்கள்.

15 கர்த்தர் கோபங்கொண்டு எகிப்திலுள்ள கடலை இரண்டாகப் பிளந்தார். இதுபோல, கர்த்தர் தனது கையை ஐபிராத்து ஆற்றின் மேல் அசைப்பார். அவர் ஆற்றை அடித்ததும் அது ஏழு சிறு ஆறுகளாகப் பிரியும். இந்தச் சிறு ஆறுகள் ஆழம் குறைந்தவை. இவற்றில் ஜனங்கள் தம் பாதரட்சைச் கால்களோடு எளிதாக நடந்துபோகலாம். 16 தேவனுடைய ஜனங்கள் அசீரியாவை விட்டுச் செல்ல ஒரு பாதை கிடைக்கும். இது தேவன் எகிப்தை விட்டு ஜனங்களை வெளியே கொண்டுவந்ததுபோல இருக்கும்.

தேவனைத் துதிக்கும் பாடல்

12 அப்போது நீ கூறுவாய்,
“கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்
    நீர் என் மீது கோபமாக இருந்தீர்.
ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்!
    என் மீது உமது அன்பைக் காட்டும்”.
என்னை தேவன் காப்பாற்றுகிறார்.
    நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை.
அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தராகிய யேகோவா எனது பெலம்.
    அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.
    நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன்.

உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
    பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய்.
பிறகு நீ கூறுவாய்:
    “கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்
அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!”
கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
    ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள்.
    எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள்.
சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப்பற்றிச் சத்தமிடுங்கள்!
    இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center