Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 120-132

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

120 நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது,
    உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!
கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.

பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா?
    நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?
வீரனின் கூரிய அம்புகளும்,
    சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.

பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும்
    கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.
சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு
    நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
நான் சமாதானம் வேண்டும் என்றேன்.
    ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
    ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
    படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.
தேவன் உன்னை விழவிடமாட்டார்.
    உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
    தேவன் ஒருபோதும் உறங்கார்.
கர்த்தர் உன் பாதுகாவலர்.
    அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
    இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
    கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
    இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்

122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
    நான் மிகவும் மகிழ்ந்தேன்.
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.
இது புதிய எருசலேம்.
    ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
    கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
    அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
    தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
    “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
    உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”

என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
    இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
    இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

123 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
    நீர் பரலோகத்தில் அரசராக வீற்றிருக்கிறீர்.
தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
    அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள்.
அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம்.
    நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.
கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும்.
    நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.
நாங்கள் வெறுப்படையும் அளவுக்கு இழிவுரைகளையும் அவமானங்களையும், சோம்பேறி ஜனங்களாகிய பெருமைக்காரர்களினால் பெற்றிருந்தோம்.
    பிறரைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்

124 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
    இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
    இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
    உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
    நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும்
    நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
    தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.

கர்த்தரைத் துதியுங்கள்!
    நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை.

வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
    வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.
    கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

125 கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள்.
    அவர்கள் அசைக்கப்படுவதில்லை.
    அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
    என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார்.
நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை.
    அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.

கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும்.
    பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.
கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள்.
    அக்கொடியோரை கர்த்தர் தண்டிப்பார்.

இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
    அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
    பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
    “இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
    நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
    தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
    ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
    ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்

127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
    கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
    தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.

பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
    குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
ஒரு இளைஞனின் மகன்கள்
    ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
    அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
    அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது மகன்கள் அவனைக் காப்பார்கள்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

128 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.

நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள்.
    நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும்.
வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்.
    மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்.
    வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.
நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன்.

இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

129 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
    இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.
என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
    ஆனால் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை.
என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள்.
    எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
ஆனால் நல்லவராகிய கர்த்தர் கயிறுகளை அறுத்துக்
    கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார்.
சீயோனை வெறுத்த ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் போரிடுவதை நிறுத்தி, ஓடிப்போய்விட்டார்கள்.
அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள்.
    வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும்.
ஒரு வேலையாளுக்கு ஒரு கை நிரம்ப அந்த புல் கிடைக்காது.
    ஒரு குவியல் தானியமும் கிடைப்பதில்லை.
அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள்.
    ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
    எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
    உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
    நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
    அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.

கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
    கர்த்தர் நம்மை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறார்.
    கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
    நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
    எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
நான் அமைதியாக இருக்கிறேன்.
    என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
    என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
    அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம்

132 கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான்.
    யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.
தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன்,
    நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
நான் தூங்கமாட்டேன்,
    என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும்,
    யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.

எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம்.
    கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.
நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம்.
    தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும்.
    கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள்.
    உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
10 உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக,
    நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும்.
11 கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார்.
    தாவீதிடம் நேர்மையோடிருப்பதாக கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
12 கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால்,
    உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார்.

13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்.
    அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.
14 கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும்.
    நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்.
15 நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன்.
    ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.
16 மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன்.
    என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
17 இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன்.
    நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.
18 தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன்.
    ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center