Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
பிரசங்கி 1-4

இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின் மகனும் எருசலேமின் அரசனுமானவன். எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான். தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன் உண்டா?

காரியங்கள் என்றும் மாறுவதில்லை

ஜனங்கள் வாழ்கிறார்கள், ஜனங்கள் மரிக்கிறார்கள்; ஆனால், பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது. சூரியன் உதயமாகிறது. சூரியன் அஸ்தமிக்கிறது. பின் சூரியன் மீண்டும் அதே இடத்தில் உதயமாகவே விரைந்து செல்கிறது.

காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வீசுகின்றது.

அனைத்து ஆறுகளும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை.

வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை. நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை.

எதுவும் புதியதல்ல

துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்டதுபோலவே செய்யப்படுகின்றன. வாழ்க்கையில் [a] எதுவும் புதியதில்லை.

10 ஒருவன், “பாருங்கள் இது புதிது” என்று கூறலாம். ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது. நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன.

11 நீண்டகாலத்திற்கு முன்பு நடந்ததை ஜனங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில், இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை. பின்னர் மற்றவர்களுக்கும் தங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்களென்பது நினைவில் இருக்காது.

ஞானம் மகிழ்ச்சியைக்கொண்டுவருமா?

12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலரின் அரசனாக இருந்தேன். 13 நான் கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். எனவே ஞானத்தைப் பயன்படுத்தி வாழ்விலுள்ள அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்பினேன். தேவன் நாம் செய்யும்படி கொடுத்த வேலைகளெல்லாம் கடினமானவை என்று நான் கற்றுக்கொண்டேன். 14 பூமியின்மேல் செய்யப்படுகிற அனைத்து செயல்களையும் நான் பார்த்தேன். அவை அனைத்தும் காலத்தை வீணாக்கும் காரியம் என்பதையும் அறிந்துகொண்டேன். இது காற்றைப் பிடிப்பது போன்றதாகும். 15 நீ இவற்றை மாற்ற இயலாது. ஏதாவது வளைந்து இருந்தால், அது நேராக இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது.

16 நான் எனக்குள், “நான் மிகவும் ஞானமுள்ளவன். எனக்கு முன்னால் எருசலேமை ஆண்ட மற்ற அரசர்களைவிட நான் ஞானமுள்ளவன். உண்மையில் ஞானம் என்பதும் அறிவு என்பதும் எத்தகையவை என்பதை நான் அறிவேன்” என்று கூறினேன்.

17 முட்டாள்தனமாகச் சிந்திப்பதைவிட, ஞானமும் அறிவும் எவ்வகையில் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன். ஆனால் ஞானத்தை அடைய முயல்வது காற்றைப் பிடிக்க முயல்வது போன்றது என்பதை நான் கற்றுக்கொண்டேன். 18 மிகுதியான ஞானத்திலே மிகுதியான சலிப்பும் உள்ளது. அதிகமான ஞானத்தைப் பெறுகிற எவனும் அதிகமான வருத்தத்தையும் அடைகிறான்.

கேளிக்கைகளை அனுபவிப்பது மகிழ்ச்சியைக்கொண்டுவருமா?

நான் எனக்குள்: “நான் வேடிக்கை செய்வேன். என்னால் முடிந்தவரை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். ஆனால் நான் இவையும் பயனற்றவை என்று கற்றுக்கொண்டேன். எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது.

எனவே என் மனதை ஞானத்தால் நிரப்பும்போது என் உடலை திராட்சைரசத்தால் நிரப்ப முடிவு செய்தேன். இந்த முட்டாள்தனத்தை நான் முயற்சி செய்தேன். ஏனென்றால் நான் மகிழ்ச்சியடைவதற்குரிய வழியைக் கண்டுபிடிக்க எண்ணினேன். ஜனங்களின் குறுகிய வாழ்வில் அவர்கள் என்ன நன்மை செய்யக்கூடும் என்று பார்க்க விரும்பினேன்.

கடின உழைப்பு மகிழ்ச்சியைத் தருமா?

பிறகு நான் பெரிய செயல்களைச் செய்யத் துவங்கினேன். வீடுகளைக் கட்டினேன். திராட்சைத் தோட்டங்களை எனக்காக நட்டேன். நான் தோட்டங்களை அமைத்தேன், பூங்காவனங்களை உருவாக்கினேன். எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன். நான் எனக்காக குளங்களை அமைத்தேன். அதன் மூலம் பழமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினேன். நான் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன். என் வீட்டிலும் அடிமைகள் பிறந்தனர். பல பெருஞ்செல்வங்கள் எனக்குச் சொந்தமாயின. எனக்கு மாட்டுமந்தையும் ஆட்டுமந்தையும் இருந்தன. எருசலேமில் மற்றவர்களைவிட எனக்கு ஏராளமான செல்வங்கள் இருந்தன.

நான் எனக்காகப் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்தேன். அரசர்களிடமிருந்தும் அவர்களின் நாடுகளிலிருந்தும் பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டேன். எனக்காகப் பாடிட ஆண்களும் பெண்களும் இருந்தனர். எவரும் விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தன.

நான் செல்வந்தனாகவும் புகழுடையவனாகவும் ஆனேன். எனக்குமுன் எருசலேமில் வாழ்ந்த எந்த மனிதரையும்விட நான் பெரிய ஆளாக இருந்தேன். எப்பொழுதும் எனது ஞானம் எனக்கு உதவுவதாக இருந்தது. 10 என் கண்கள் பார்த்து நான் விரும்பியதை எல்லாம் பெற்றேன். நான் செய்தவற்றிலெல்லாம் மனநிறைவு பெற்றேன். என் இதயம் பூரித்தது, இம்மகிழ்ச்சியே எனது அனைத்து கடின உழைப்பிற்கும் கிடைத்த வெகுமதி.

11 ஆனால் பின்னர் நான் செய்த அனைத்தையும் கவனித்தேன். நான் செய்த கடின உழைப்பை எல்லாம் நினைத்துப் பார்த்தேன். அவை அனைத்தும் காலவிரயம் என்று முடிவுசெய்தேன். இது காற்றைப் பிடிப்பதுபோன்றது. நம் வாழ்க்கையில் நாம் செய்த அனைத்திலிருந்தும் இலாபகரமானது எதுவுமில்லை.

ஒருவேளை ஞானமே பதிலாயிருக்கலாம்

12 ஒரு அரசனால் செய்ய முடிந்ததைவிட ஒரு மனிதனால் அதிகமாகச் செய்யமுடியாது. சில அரசர்கள் ஏற்கெனவே நீங்கள் செய்ய விரும்புவதையே செய்திருக்கிறார்கள். அந்த அரசர்கள் செய்தவையும் காலவிரயம் என்று நான் கற்றுக்கொண்டேன். எனவே மீண்டும் நான் ஞானமுள்ளவனாக இருப்பதைப்பற்றியும், அறிவற்றவனாக இருப்பதைப்பற்றியும் பைத்தியக்காரத்தனமான செயல்களைப்பற்றியும் எண்ணினேன். 13 இருட்டைவிட ஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிட ஞானம் சிறந்தது என்று கண்டேன். 14 ஞானமுள்ளவன் தான் செல்லுமிடத்தை அறிய சிந்தனையைக் கண்களாகப் பயன்படுத்துகிறான். ஆனால் முட்டாளோ, இருட்டில் நடப்பவனைப் போன்றுள்ளான்.

ஆனால் ஞானமுள்ளவனுக்கும் முட்டாளுக்கும் ஒரே வழியிலேயே முடிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டேன். இருவரும் மரித்துப்போகின்றனர். நான் எனக்குள், 15 “ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும் எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று எண்ணினேன். நான் எனக்குள், “ஞானமுள்ளவனாக இருப்பதும் பயனற்றதே” என்று சொன்னேன். 16 ஞானமுள்ளவனும் முட்டாளும் மரித்துப்போகின்றனர். ஜனங்கள் ஞானவான்களையும், முட்டாள்களையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில் தாங்கள் செய்தவற்றையெல்லாம் ஜனங்கள் மறந்துபோகிறார்கள். எனவே ஞானமுள்ளவனும் முட்டாளும் உண்மையில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி உண்டா?

17 இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது. இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்ற எண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப் பிடிப்பதுபோன்ற முயற்சி.

18 நான் செய்த கடினமான உழைப்பு அனைத்தையும் வெறுத்தேன். நான் கடினமாக உழைத்திருக்கிறேன். ஆனால் நான் உழைத்தவற்றுக்கான பலனை எனக்குப் பின்னால் வாழ்பவர்களுக்கு வைத்துப் போக வேண்டும். நான் அவற்றை என்னோடு எடுத்துச் செல்ல இயலாது. 19 வேறு ஒருவன் நான் உழைத்ததும், கற்றதுமான அனைத்தையும் ஆளுவான். அவன் ஞானமுள்ளவனா முட்டாளா என்பதை நான் அறியேன். இதுவும் அறிவற்றதுதான்.

20 எனவே, நான் செய்த அனைத்து உழைப்பைப்பற்றியும் வருத்தம் அடைந்தேன். 21 ஒருவனால் தனது ஞானம், அறிவு, திறமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உழைக்கமுடியும். ஆனால் அவன் இறந்ததும், அவனது உழைப்பை மற்றவர்கள் பெறுகின்றனர். அவர்கள் எந்த உழைப்பையும் செய்வதில்லை. ஆனால் அனைத்தையும் பெறுகின்றனர். இது எனக்குச் சோர்வுண்டாக்குகிறது. இது நேர்மையற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் உள்ளது. 22 ஒருவனது அனைத்து உழைப்புக்கும் போராட்டங்களுக்கும் பிறகு வாழ்வில் அவனுக்கு என்ன கிடைக்கிறது? 23 அவனது வாழ்வு முழுவதும் வலியும், சலிப்பும், கடின உழைப்புமே மிஞ்சுகிறது. இரவிலும்கூட அவனது மனம் ஓய்வு பெறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதுதான்.

24-25 என்னைவிட வேறு எவராது வாழ்வில் மகிழ்ச்சிபெற முயற்சி செய்ததுண்டா? எனவே ஒரு மனிதன் செய்யவேண்டியது என்னவென்றால் நன்றாக உண்பது, குடிப்பது, செய்யவேண்டியவற்றை மட்டும் மகிழ்ச்சியாக செய்வதுதான். இதையே நான் கற்றுக்கொண்டேன். இவை தேவனிடமிருந்து வருகிறது என்பதையும் நான் பார்த்தேன். 26 ஒருவன் நன்மையைச் செய்து தேவனைப் பிரியப்படுத்தினால், தேவன் அவனுக்கு ஞானம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றைக்கொடுக்கிறார். ஆனால் பாவம் செய்கிறவனுக்கு கூட்டுகிற வேலையையும், சுமக்கிற வேலையையும் தருகிறார். தேவன் கெட்டவர்களிடம் உள்ளவற்றை எடுத்து நல்லவர்களுக்குக்கொடுக்கிறார். ஆனால் இவை அனைத்தும் பயனற்றவை. இது காற்றைப் பிடிக்கும் முயற்சிதான்.

ஒரு காலம் உண்டு

எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு.

பிறப்பதற்கு ஒரு காலமுண்டு,
    மரிப்பதற்கு ஒரு காலமுண்டு,
நடுவதற்கு ஒரு காலமுண்டு,
    பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு.
கொல்வதற்கு ஒரு காலமுண்டு,
    குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு,
அழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
    கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு.
அழுவதற்கு ஒரு காலமுண்டு,
    சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு,
வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு,
    மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு.
ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு,
    ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. [b]
தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு,
    தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.
சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு,
    இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு,
பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு,
    பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு.
துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
    அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு,
அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு,
    பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.
அன்பு செய்ய ஒரு காலமுண்டு,
    வெறுக்கவும் ஒரு காலமுண்டு,
சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு,
    சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.

தேவன் தன் உலகைக் கட்டுப்படுத்துகிறார்

ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா? 10 தேவன் நமக்குக்கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான் பார்க்கிறேன். 11 அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயே செய்துவருகிறார்.

12 ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன். 13 எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள்.

14 தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும். 15 ஏற்கெனவே நடந்து முடிந்தவை முடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும். நாம் அவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் தேவன், மிகமோசமாக நடத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். [c]

16 நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில் பார்த்தேன். வழக்குமன்றமானது நன்மையாலும் நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது. 17 எனவே நான் எனக்குள்ளே: “தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார். ஜனங்களின் செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தை தேவன் திட்டமிட்டுள்ளார். தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார்” என்கிறேன்.

ஜனங்கள் விலங்குகளைப் போன்றவர்கள்தானா?

18 ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் எனக்குள்ளே, “ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப்போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார்” என்று சொல்லிக்கொண்டேன். 19 மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர் மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுபோல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா? 20 மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்றுபோலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன. 21 ஒரு மனிதனின் ஆவிக்கு என்ன நிகழும் என்பதை யார் அறிவார்? மனிதனின் ஆவி மேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழே பூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார்?

22 எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற்செயல் என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான் என்று நான் கண்டுகொண்டேன். அதையே அவன் அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்ல யாராலும் முடியாது.

மரித்துப்போவது நல்லதா?

ஏராளமான ஜனங்கள் மோசமாக நடத்தப்படுவதை மீண்டும் நான் பார்த்தேன். அவர்களது கண்ணீரைப் பார்த்தேன். துக்கப்படும் அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான் பார்த்தேன். கொடுமையானவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன். புண்பட்ட அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் நான் பார்த்தேன். இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன். பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.

ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்யவேண்டும்?

பிறகு நான் “ஏன் ஜனங்கள் இவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள்?” என்று நினைத்தேன். ஜனங்கள் வெற்றிபெறவும் மற்றவர்களை விடச் சிறப்புபெறவும் முயற்சி செய்வதை நான் பார்த்தேன். ஏனென்றால் ஜனங்கள் அனைவரும் பொறாமை உடையவர்கள். அவர்கள் தம்மைவிட மற்றவர் அதிகம் பெறுவதை விரும்பமாட்டார்கள். இது அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப்போன்றது என எண்ணினேன்.

சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும் அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து திருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன்.

மீண்டும், அர்த்தமில்லாத சிலவற்றை நான் பார்த்தேன். ஒருவனுக்குக் குடும்பம் இல்லாமல் இருக்கலாம். அவனுக்கு ஒரு மகனோ அல்லது சகோதரனோகூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் அவன் தொடர்ந்து கடினமாக உழைக்கிறான். அவன் தன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதில்லை. அவன் மிகுதியாக உழைக்கிறான். அவன் வேலைசெய்வதை நிறுத்தி, “நான் யாருக்காகக் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏன் வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது?” என்று தன்னைத்தான் கேட்பதில்லை. இதுவும் மிக மோசமானதும், அர்த்தமற்றதுமான ஒன்றாகும்.

நண்பர்களும் குடும்பமும் பலம் கொடுக்கிறது

ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால், அவர்கள் தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம்.

10 ஒருவன் விழுந்தால், இன்னொருவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் தனியாக இருந்து விழும்போது உதவுவதற்கு யாரும் இல்லாமல் கிடப்பது மிகவும் மோசமானது.

11 இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாக இராது. 12 ஒருவனாக இருப்பவனைப் பகைவன் எளிதில் தோற்கடித்துவிடுவான். அவனால் இருவரைத் தோற்கடிப்பது கடினம். மூன்று பேராய் இருப்பது இன்னும் பலம். அவர்கள் மூன்று புரிகளை உடைய கயிறு அறுப்பதற்குக் கடினமாய் இருப்பதைப் போன்றவர்கள்.

ஜனங்கள், அரசியல் மற்றும் புகழ்

13 ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும் உள்ள இளைய தலைவன், முதியவனாகவும் முட்டாளாகவும் உள்ள அரசனைவிடச் சிறந்தவன். முதிய அரசன் எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான். 14 இந்த ஆட்சியில் அந்த இளைய அரசன் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஒருவேளை அவன் சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம். 15 ஆனால் இந்த வாழ்க்கையில் ஜனங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் இதனை அறிவேன். ஜனங்கள் அந்த இளைய தலைவனைப் பின்பற்றுகிறார்கள். அவன் புதிய அரசனாக வருவான். 16 ஏராளமான ஜனங்கள் அவனைப் பின்பற்றுவார்கள். ஆனால் பிறகு, அதே ஜனங்கள் அவனை விரும்பமாட்டார்கள். இதுவும் அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப் போன்றது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center