Beginning
4 பிள்ளைகளே, உங்கள் தந்தையின் போதனைகளைக் கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். 2 ஏனென்றால் நான் உங்களுக்குப் போதிப்பவையெல்லாம் மிக முக்கியமானவை, நல்லவை. எனவே எனது போதனைகளை எக்காலத்திலும் மறக்கவேண்டாம்.
3 ஒரு காலத்தில் நானும் இளமையாக இருந்தேன். நான் என் தந்தையின் சிறிய பையனாகவும், என் தாயின் ஒரே மகனாகவும் இருந்தேன். 4 என் தந்தை இவற்றை எனக்குக் கற்றுத்தந்தார். அவர், “நான் சொல்லுகின்றவற்றை நினைவில் வைத்துக்கொள். எனது கட்டளைகளுக்கு அடிபணி. அப்போது நீ வாழ்வாய். 5 ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள். என் வார்த்தைகளை மறக்காதே. எப்பொழுதும் என் அறிவுரைகளைப் பின்பற்று. 6 ஞானத்திலிருந்து விலகாதே. பிறகு ஞானம் உன்னைக் காப்பாற்றும். ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பாதுகாக்கும்” என்றார்.
7 நீ ஞானத்தைப் பெற விரும்பும்போதே உன்னில் ஞானம் துவங்கும். எனவே, ஞானத்தைப் பெற உனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பயன்படுத்து. பின்னர் நீ ஞானத்தைப் பெறுவாய். 8 ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பெரியவனாக்கும். ஞானத்தை முக்கியமுள்ளதாக்கு. ஞானம் உனக்கு மதிப்பைக்கொண்டுவரும். 9 உன் வாழ்வில் நிகழும் அனைத்திலும் ஞானமே மிக உயர்ந்ததாக இருக்கும்.
10 மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம். 11 நான் உனக்கு ஞானத்தைப்பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். 12 இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம். 13 எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும்.
14 தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம். 15 பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல். 16 தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது. 17 அவர்களால் மற்றவர்களுக்குத் தீமை செய்யாமலும் மற்றவர்களைப் புண்படுத்தாமலும் வாழமுடியாது.
18 நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது. 19 ஆனால் தீயவர்களோ இருண்ட இரவைப் போன்றவர்கள். அவர்கள் இருளில் காணாமற்போவார்கள். அவர்கள் தங்களால் பார்க்க முடியாதவற்றில் விழுந்துவிடுவார்கள்.
20 என் மகனே, நான் சொல்லுகின்றவற்றைக் கவனி. என் வார்த்தைகளை ஜாக்கிரதையுடன் கேள். 21 என் வார்த்தைகள் உன்னைவிட்டுப் போகாதபடி பார்த்துக்கொள். நான் சொல்லுகின்றவற்றை நினைவுபடுத்திக்கொள். 22 என்னைக் கவனிக்கின்றவர்களுக்கு எனது போதனைகள் வாழ்வைத் தரும். எனது வார்த்தைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். 23 உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.
24 உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே. 25 நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே. 26 நீ செய்கின்றவற்றில் எச்சரிக்கையாக இரு. நல்ல வாழ்க்கையை நடத்து. 27 நேரான பாதையில் இருந்து விலகாதே. அப்பாதையே நல்லதும் சரியானதும் ஆகும். ஆனால் எப்பொழுதும் தீமையில் இருந்து விலகியிரு.
விபச்சாரத்தை விட்டு விலக்கும் ஞானம்
5 என் மகனே, எனது ஞானமுள்ள போதனையைக் கவனமுடன் கேள். அறிவைப்பற்றிய என் வார்த்தைகளில் கவனம் செலுத்து. 2 பிறகு ஞானத்தோடு வாழ்வதற்கு நினைவுகொள்வாய். நீ என்ன சொல்வாயோ அதில் கவனமாக இருப்பாய். 3 அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம். 4 ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும். 5 அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள். 6 அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல்.
7 என் பிள்ளைகளே! இப்பொழுது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்லுகின்றவற்றை மறந்துவிடாதீர்கள். 8 விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்கின்ற பெண்ணிடமிருந்து விலகி நில். அவளது வீட்டுக் கதவின் அருகில் போகாதே. 9 நீ அவற்றை செய்தால் நீ பெறவேண்டிய மதிப்பை மற்ற ஜனங்கள் பெறுவார்கள். நீ வருடக்கணக்கில் உழைத்துப் பெற்றப் பொருட்களை அந்நியன் ஒருவன் பெறுவான். முடிவில் உன் வாழ்வை இழப்பாய். தீயவர்கள் உன்னிடமிருந்து அதனை எடுத்துக்கொள்வார்கள். 10 உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள். 11 உன் வாழ்வின் முடிவில் நீ உனது செயலைக்குறித்து வருத்தப்படுவாய். உன் வாழ்க்கையை நீயே அழித்துக்கொள்கிறாய். ஆரோக்கியமும் உனக்குச் சொந்தமான அனைத்தும் அழியும். 12-13 பிறகு நீ, “நான் ஏன் என் பெற்றோர்கள் சொன்னதைக் கேட்காமல் போனேன். என் போதகர்கள் சொன்னதை ஏன் கேட்காமல் போனேன். நான் ஒழுக்கமாய் இருக்க மறுத்தேன். நான் திருத்தப்படமறுத்தேன். 14 இப்போது ஏறக்குறைய எல்லாவித பிரச்சனைகளிலும் அகப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானத்தை ஜனங்கள் அனைவரும் பார்க்கின்றனர்” என்று சொல்லுவாய்.
15-16 உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே. 17 உனது பிள்ளைகள் உனக்கு மட்டுமே உரியவர்களாக இருக்க வேண்டும். உன் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களோடு உன் பிள்ளைகளைப் பகிர்ந்துகொள்ளாதே. 18 எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. 19 அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும். 20 ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.
21 நீ செய்கிற அனைத்தையும் கர்த்தர் தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ எங்கே போகிறாய் என்று கவனிக்கிறார். 22 கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும். 23 அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.
ஒருவனுக்கு கடன் வாங்கிக்கொடுக்க உதவுவதால் வரும் ஆபத்து
6 என் மகனே! அடுத்தவனது கடனுக்கு நீ பொறுப்பாளி ஆகாதே. அடுத்தவன் தன் கடனைச் செலுத்த முடியாதபோது நீ அக்கடனைச் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாயா? அடுத்தவன் வாங்கும் கடனுக்கு உன்னைப் பொறுப்பாளியாக ஆக்கிக்கொண்டாயா? 2 அப்படியானால் நீ அகப்பட்டுக்கொண்டாய். உன் சொந்த வார்த்தைகளாலேயே நீ அகப்பட்டுக்கொண்டாய். 3 நீ அடுத்தவனது அதிகாரத்தின் கீழ் இருக்கிறாய். எனவே அவனிடம் போய் உன்னை விடுவித்துக்கொள். உன்னை அக்கடனிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக்கொள். 4 அதுவரை தூங்காதே, ஓய்வுக்கொள்ள எண்ணாதே. 5 வேட்டைக்காரனிடமிருந்து மான் தப்பி ஓடுவதுபோன்று, நீ அந்த வலையிலிருந்து தப்பி ஓடு. வலையிலிருந்து பறவை தப்புவதுபோன்று தப்பிவிடு.
சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து
6 சோம்பேறியே! நீ எறும்பைப்போல இருக்க வேண்டும். எறும்பு என்ன செய்கிறது என்று பார். அதனிடமிருந்து கற்றுக்கொள். 7 அந்த எறும்புக்கு ஒரு அரசனோ, தலைவனோ, எஜமானோ இல்லை. 8 ஆனால் அது கோடைக்காலத்தில் தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்துக்கொள்ளும். தன் உணவை அது பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் போதுமான அளவுக்கு அதனிடத்தில் உணவு உள்ளது.
9 சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? 10 அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். 11 ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் மேலும் மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக்கொண்டு போனது போல இருக்கும்.
தீய மனிதன்
12 ஒன்றுக்கும் உதவாத தீயமனிதன் பொய்யையும் தீயவற்றையும் கூறுகிறான். 13 அவன் தன் கண்ணைச் சிமிட்டி, கைகளாலும் கால்களாலும் சைகைக்காட்டி ஜனங்களை ஏமாற்றுகிறான். 14 அவன் கெட்டவன். அவன் எப்பொழுதும் தொல்லை செய்யவே திட்டமிடுவான். அவன் எல்லா இடங்களிலும் தொல்லை செய்வான். 15 ஆனால் அவன் தண்டிக்கப்படுவான். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவனுக்குத் துன்பம் வரும். அவன் விரைவில் அழிந்துப்போவான். எவராலும் அவனுக்கு உதவிசெய்ய முடியாது.
கர்த்தரால் வெறுக்கப்படும் ஏழு காரியங்கள்
16 கர்த்தர் இந்த ஆறு அல்லது ஏழு காரியங்களையும் வெறுக்கிறார்.
17 கர்வம் கொண்ட கண்கள், பொய்களைக் கூறும் நாவுகள், அப்பாவி ஜனங்களைக்கொல்லும் கைகள்.
18 தீயவற்றைச் செய்யத் திட்டமிடும் மனது, கெட்டவற்றைச் செய்ய ஓடும் கால்கள்,
19 வழக்கு மன்றத்தில் பொய்யைச் சொல்லுபவன், உண்மையில்லாதவற்றைக் கூறுபவன், விவாதங்களைத் தொடங்கி வைத்து அடுத்தவர்களுக்குள் சண்டை மூட்டுபவன்.
Warning Against Adultery
20 என் மகனே, உன் தந்தையின் கட்டளைகளை நினைவுபடுத்திக்கொள். உன் தாயின் போதனைகளையும் மறக்காதே. 21 அவர்களது வார்த்தைகளை எப்போதும் நினைவுபடுத்திக்கொள். அவற்றை உன் கழுத்தைச் சுற்றிலும் கட்டிக்கொள். அவைகளை உன் இருதயத்தின்மேல் வைத்துக்கொள். 22 நீ எங்கே சென்றாலும் அவர்களின் போதனைகள் உனக்கு வழிகாட்டும். நீ தூங்கும்போதும் அவை உன்னைக் கவனித்துக்கொள்ளும். நீ விழித்து எழுந்ததும் அவை உன்னோடு பேசி உனக்கு வழிகாட்டும்.
23 உன் பெற்றோர்களின் கட்டளைகளும் போதனைகளும் உனக்குச் சரியான பாதையைக் காட்டும் விளக்குகளைப் போன்றவை. அவை உன்னைத் திருத்தும்; வாழ்க்கைக்கான பாதையில் நீ செல்ல உனக்குப் பயிற்சி தரும். 24 பாவமுள்ள பெண்ணிடம் உன்னைப் போகவிடாமல் தடுக்கும். அவர்களது போதனைகள், தன் கணவனை விட்டு விலகி வந்த பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காப்பாற்றும். 25 அப்பெண் அழகுள்ளவளாக இருக்கலாம். ஆனால், அந்த அழகு உன் உள்ளத்தை அழித்து உன்னைத் தூண்டாமல் பார்த்துக்கொள். அவளது கண்கள் உன்னைக் கவர்ந்துக்கொள்ளவிடாதே. 26 வேசியானவள் ஒரு ரொட்டித்துண்டுக்குரிய விலையையே பெறுவாள். ஆனால் அடுத்தவன் மனைவியோ உனது வாழ்க்கையையே இழக்கச் செய்வாள். 27 ஒருவன் தன் மடியிலே நெருப்பை வைத்திருந்தால் அது அவனது ஆடைகளை எரித்துவிடும். 28 ஒருவன் நெருப்புக்குள் இறங்கி நடந்தால் அவனது பாதங்கள் எரிந்து கருகும். 29 இது போலவே இன்னொருவனது மனைவியோடு படுப்பவன் துன்பப்படுவான்.
30-31 பசியின் காரணமாக ஒருவன் உண்பதற்காக உணவைத் திருடலாம். அகப்பட்டுக்கொண்டால், திருடியதைப்போல ஏழு மடங்குக்கு அதிகமாக அபராதம் செலுத்தவேண்டும். அது அவனுடைய அனைத்துப் பொருட்களுக்கும் ஈடானதாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் அவனைப் புரிந்துக்கொள்வார்கள். அவனது மரியாதையைக் குறைத்துக்கொள்ளமாட்டார்கள். 32 ஆனால் ஒருவன் முட்டாள்தனமாக விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தால், அவன் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவனது அழிவிற்கு அவனே காரணம். 33 ஜனங்களிடம் அவன் தனது மதிப்பு முழுவதையும் இழந்துவிடுவான். இந்த அவமானத்தை அவனால் எப்பொழுதும் நீக்க முடியாது. 34 அப்பெண்ணின் கணவன் பொறாமை கொள்ளுவான். அவன் கோபமாகவும் இருப்பான். அவன் இவனைத் தண்டிக்க எதையாவது செய்வான். 35 அவனது கோபத்தைத் தடுக்க எந்தப் பொருளையும் எவ்வளவு தொகையையும் தர இயலாது.
2008 by World Bible Translation Center