Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 58-65

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல்.

58 நியாயாதிபதிகளாகிய நீங்கள் உங்கள் தீர்ப்புகளில் நியாயமானவர்களாக இருக்கவில்லை.
    நீங்கள் ஜனங்களுக்குச் சரியான நீதி வழங்கவில்லை.
நீங்கள் தீயகாரியங்களைச் செய்வதைக் குறித்தே எண்ணுகிறீர்கள்.
    இந்நாட்டில் நீங்கள் கொடிய குற்றங்களைச் செய்கிறீர்கள்.
அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
    பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார்கள்.
அவர்கள் பாம்புகளைப்போன்று ஆபத்தானவர்கள்.
    காதுகேளாத விரியன் பாம்புகளைப் போன்று, அவர்கள் உண்மையைக் கேட்க மறுக்கிறார்கள்.
பாம்பாட்டிகளின் இசையையோ, பாடல்களையோ, விரியன் பாம்புகளால் கேட்க முடிவதில்லை.
    அத்தீயோரும் அப்பாம்புகளைப் போன்றவர்களே.

கர்த்தாவே, அந்த ஜனங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.
    எனவே கர்த்தாவே, அவர்கள் பற்களை உடைத்துவிடும்.
வழிந்தோடுகிற தண்ணீரைப்போன்று அந்த ஜனங்கள் மறைந்துபோகட்டும்.
    பாதையின் களைகளைப்போல் அவர்கள் சிதைக்கப் படட்டும்.
அவர்கள், அசையும்போதெல்லாம் கரைந்து போகிற நத்தையைப் போலாகட்டும்.
    அவர்கள் பகலின் ஒளியைக் காணாமல் பிறக்கும்போதே மரித்துப்போன குழந்தையைப்போல இருக்கட்டும்.
நெருப்பில் வைக்கப்படும் பானையைச் சூடேற்றுவதற்காக
    விரைந்து எரியும் முட்களைப்போன்று அவர்கள் விரைவில் அழியட்டும்.

10 நல்லவனுக்குத் தீமைசெய்த ஜனங்கள் தண்டிக்கப்படுவதை, அவன் பார்க்கையில் மகிழ்ச்சியடைவான்.
    அக்கெட்ட மனிதர்களின் இரத்தத்தால் அவன் தனது பாதங்களைக் கழுவுவான்.
11 அவ்வாறு நிகழும்போது, ஜனங்கள், “நல்லோர் உண்மையிலேயே பயன்பெறுவர்,
    உலகை நியாயந்தீர்க்கும் தேவன் உண்மையாகவே இருக்கிறார்” என்பார்கள்.

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.

59 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்.
    ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை.
    கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
    எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும்.
    அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.

அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
    ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
    அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள்.
    அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
    அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.
தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
    தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
10 தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
    என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
11 தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
    என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
12 அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
    அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும்.
    அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
13 உமது கோபத்தில் அவர்களை அழியும்.
    அவர்களை முற்றிலுமாக அழியும்!
யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும்,
    தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!

14 ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
15 அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
    அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
16 ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
    ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
    தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
17 உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.
    ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
    நீரே என்னை நேசிக்கும் தேவன்.

“உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது.

60 தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர்.
    தயவாய் எங்களிடம் திரும்பி வாரும்.
நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர்.
    நம் உலகம் பிரிந்து விழுந்தது.
    அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும்.
நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர்.
    நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர்.
    அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும்.

உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்!
    என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும்.

தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்:
    “நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்!
இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன்.
    அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன்.
    அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.
கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை.
    எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன்.
    யூதா என் நியாயத்தின் கோல்.
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
    ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
    நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!”

9-10 தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்!
    வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்?
ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்?
    தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும்.
ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்!
    நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.
11 தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்!
    மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது!
12 தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும்.
    தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும்.

நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

61 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
    என் ஜெபத்தைக் கேளும்.
நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
    எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
    நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
    நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.

தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
    உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
    அவர் என்றென்றும் வாழட்டும்!
அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
    உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.
    நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.

எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
    என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
    ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
    உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
    பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.

எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
    நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
மேன்மையான என் நிலையை எண்ணி
    அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
    வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.

தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
    தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
தேவனே என் அரண்.
    தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
    உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
    அவர் எனக்குப் பலமான அரண்.
    தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
    தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
    தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
    உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
    ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
    திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
    அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
    வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.

12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
    ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.

யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்

63 தேவனே, நீரே என் தேவன்.
    நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
    என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
    நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
    என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
    உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
    மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
    நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
    நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
    நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.

சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
    அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் அரசனோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
    அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
    ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.

இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல்.

64 தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன்.
    என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும்.
என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
    அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும்.
அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள்.
    அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை.
    அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.
அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான,
    சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.
    அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள்.
    அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி, “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
    அவர்கள் பலியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது.
ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்!
    தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.
தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள்.
    ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும்.
அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும்.
    அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள்.
    அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள்.
அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள்.
    தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
10 நல்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
    அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள்.
    நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.

65 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.
    நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன்.
நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.
    நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர்.
    உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர்.
எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்
    அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.
தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
    நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!
    உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம்.
தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.
    நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர்.
அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர்.
    உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.
    அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம்.
சீறும் கடலை தேவன் அமைதியாக்கினார்.
    “சமுத்திரம்” போல ஜனங்களை தேவன் பூமியில் உண்டாக்கினார்.
நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.
    சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும்.
நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.
    நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர்.
தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர்.
    இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்:
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.
    வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர்.
நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர்.
    இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர்.
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.
    பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.
    பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின.
    ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center