Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 26-31

தாவீதின் பாடல்

26 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
    நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
    கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
    என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
    உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
    அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
    தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.

கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
    என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
    நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
    மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.

கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
    அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
    தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன்.
    எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
    கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.

தாவீதின் பாடல்

27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
    யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
    எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
    என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
    போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
    ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
    இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
    கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”

ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
    அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
    அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
    அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
    மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
    கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.

கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
    என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
    கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
    உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
    என்னை விட்டு விடாதிரும்!
    என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
    ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
    எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
    என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
    என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
    கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
    பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.

தாவீதின் ஒரு பாடல்

28 கர்த்தாவே, நீர் என் பாறை.
    உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
    உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
    உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
    “ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
    ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
    எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
    அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
    தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
    அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.

கர்த்தரைத் துதிப்பேன்,
    இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
    அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
    நான் மிகவும் மகிழ்கிறேன்!
    அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
    கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.

தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
    உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!

தாவீதின் பாடல்

29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
    உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
    மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
    அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
    லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
    இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
    இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
    கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
    கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.

10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார்.
    என்றென்றும் கர்த்தரே அரசர்.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
    கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.

தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.

30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
    எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
    எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
    நீர் என்னைக் குணமாக்கினீர்.
கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
    என்னை வாழவிட்டீர்.
    குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”.
    ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
    மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!

இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
    அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
    “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
    எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
    நான் மிகவும் பயந்தேன்.
தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
    எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
    மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
    என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
    என்னிடம் தயவாயிரும்!
    கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
    என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
    மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
    ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
    எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்

31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
    என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
தேவனே, எனக்குச் செவிகொடும்.
    விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
    எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
தேவனே, நீரே என் பாறை.
    எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
    அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
    என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
    கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன்.
தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது.
    நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர்.
    என் தொல்லைகளை நீர் அறிகிறீர்.
எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர்.
    அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும்.
கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும்.
    என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன.
    என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன.
10 என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது.
    பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது.
என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன.
    என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது.
11 என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
    என் அக்கம் பக்கத்தாரும் என்னை வெறுக்கிறார்கள்.
என் உறவினர்கள் தெருவில் என்னைப் பார்க்கிறார்கள்.
    அவர்கள் எனக்குப் பயந்து என்னை விட்டு விலகுகிறார்கள்.
12 காணாமற்போன கருவியைப் போலானேன்.
    ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள்.
13 ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன்.
    அந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.
    அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.

14 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
    நீரே என் தேவன்.
15 என் உயிர் உமது கைகளில் உள்ளது.
    என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.
    என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்!
17 கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன்.
    எனவே நான் ஏமாந்து போகமாட்டேன்.
தீயோர் ஏமாந்து போவார்கள்.
    அமைதியாக கல்லறைக்குச் செல்வார்கள்.
18 அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள்.
    அத்தீயோர் பெருமைக்காரர்.
    ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும்.

19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.
    உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.
    அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள்.
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும்.
    உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும்.
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.
    ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
    உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.

23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.
    தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார்.
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார்.
    அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,
    வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center