Beginning
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும் மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
8 கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன்.
உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.
9 எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே.
அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.
10 தீயோருக்கு வேதனைகள் பெருகும்.
கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.
11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.
பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.
33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
2 சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
4 தேவனுடைய வாக்கு உண்மையானது!
அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.
தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.
34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
தாவீதின் பாடல்
35 கர்த்தாவே, என் யுத்தங்களையும்
என் போர்களையும் நீரே நடத்தும்.
2 கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும்.
எழுந்திருந்து எனக்கு உதவும்.
3 ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும்.
கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும்.
4 சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும்.
அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள்.
அவர்களை வெட்கமடையச் செய்யும்.
5 காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும்.
கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
6 கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும்.
கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
7 நான் பிழையேதும் செய்யவில்லை.
ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
8 எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும்.
அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும்.
அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.
9 அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன்.
அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
10 “கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை.
கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர்.
ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து
அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன்.
11 சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர்.
அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
12 நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன்.
ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர்.
கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும்.
13 அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன்.
உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன்.
அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா?
14 அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன்.
அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன்.
தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன்.
அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன்.
துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன்.
15 ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர்.
அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல.
ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை.
அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள்.
16 அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள்.
அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
17 என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்?
அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள்.
கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும்.
18 கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன்.
வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன்.
19 பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது.
தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள்.
20 என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை.
இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள்.
21 என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா!
நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள்.
22 கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும்.
எனவே சும்மா இராதேயும்.
என்னை விட்டு விலகாதேயும்.
23 கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும்.
என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும்.
24 எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும்.
அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும்.
25 அந்த ஜனங்கள், “ஆஹா!
எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும்.
கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!”
என அவர்கள் கூறவிடாதேயும்.
26 என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன்.
எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள்.
எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும்.
27 எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள்.
அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன்.
அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்!
அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள்.
28 எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன்.
ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.
2008 by World Bible Translation Center