Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 9-16

முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
    கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்.
    உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள்.
    ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.

நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர்.
    கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர்.
    எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர்.
    உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர்.
பகைவன் ஒழிக்கப்பட்டான்!
    கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன.
    அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை.

ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்.
    கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார்.
    உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.
உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார்.
    எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர்.
    அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர்.
    கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.

10 உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும்.
    கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.

11 சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள்.
    கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள்.
12 உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார்.
    அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர்.
    கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.
13 நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:
    “கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும்.
    பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
    ‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
14 அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.
    என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.”

15 பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள்.
    அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர்.
    பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர்.
16 கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார்.
    தீயவை செய்வோரை கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர்.

17 தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள்.
    அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள்.
18 துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும்.
    அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும்.
    ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை.
19 கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந்தீரும்.
    தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும்.
20 ஜனங்களுக்குப் பாடம் கற்பியும்.
    அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

10 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்?
    தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.
பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள்.
    அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.
தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள்.
    பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள்.
தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள்.
    தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள்.
தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள்.
    அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. [a]
    தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள்.
தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள்.
    அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.
அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள்.
    அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள்.
அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.
    ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள்.
    ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.
    ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.
    நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!”
    என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.

12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்!
    தேவனே, அத்தீயோரைத் தண்டியும்!
    ஏழைகளை மறவாதேயும்!

13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள்.
    ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.
14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர்.
    அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்!
தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள்.
    கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர்.
    எனவே அவர்களுக்கு உதவும்!

15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.
16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.
    அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.
    அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.
    துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும்.
    தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

11 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்?
    நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.

தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
    அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள்.
    நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள்.
நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
    நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?

கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
    பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார்.
நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார்.
    கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
    கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
    வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள்.
ஆனால் கர்த்தர் நல்லவர்.
    நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார்.
    நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.

செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

12 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.
    நல்லோர் மடிந்துபோயினர்.
    பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.
அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.
    பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார்.
    தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார்.
அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.
    யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.

ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.
    உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள்.
களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.

கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.
    நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை.
    ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.

கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.
    இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.
அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.
    உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள்.
    அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
    என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
    என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
    எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?
எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
    எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
    இல்லையெனில் நான் மடிவேன்.
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
    என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.

கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
    நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.

தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல்

14 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.
    கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள்.
    அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.

கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
    ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார்.
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
    எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.

தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.
    அத்தீயோர் தேவனை அறியார்கள்.
தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு.
    கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.
5-6 ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள்.
    ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான்.
தேவன் நல்லவர்களோடு இருப்பார்.
    எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.

சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.
    கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்!
கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர்.
    ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார்.
    அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.

தாவீதின் பாடல்

15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
    உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
    உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
    அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
    அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
    ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
    அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
    குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.

அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.

தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்

16 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர்,
    என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
பூமியிலுள்ள தன் சீடருக்கு கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார்.
    அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதை கர்த்தர் காட்டுகிறார்.

பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள்.
    அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன்.
    அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.
என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும்.
    கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
என் பரம்பரைச் சொத்து அற்புதமானது.
    நான் பெற்ற பங்கு மிக அழகானது.
எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
    இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.

என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
    அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும்.
    என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர்.
    உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர்.
    கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும்.
    உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center