Beginning
சோப்பார் யோபுவிடம் பேசுகிறான்
11 அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான்.
2 “இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்!
இத்தனை பேச்சுக்களும் யோபுவுக்கு நீதி வழங்குகின்றனவா? இல்லை?
3 யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா?
நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா?
4 யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை,
நான் தூயவன் என நீர் காணமுடியும்’ என்கிறாய்.
5 யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி,
நீ கருதுவது தவறென உனக்குச் சொல்வார் என விரும்புகிறேன்.
6 தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும்.
ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார்.
தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை.
7 “யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா?
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ?
8 அது பரலோகத்திற்கும் உயர்ந்தது.
மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது.
அதுபற்றி நீர் அறியக்கூடுமோ?
9 தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது.
பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது.
10 “தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால்,
ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது.
11 உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார்.
தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார்.
12 ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது.
மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான்.
13 ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும்.
உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.
14 உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும்.
உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே.
15 அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும்.
நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும்.
16 அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும்.
வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும்.
17 நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்.
வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.
18 அப்போது நீ பாதுகாவலை உணர்வாய்.
ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு.
தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார்.
19 நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள்.
பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள்.
20 தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது.
அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான்.
யோபு சோப்பாருக்குப் பதிலளிக்கிறான்
12 பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக,
2 “நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும்.
3 நானும் உன்னைப் போன்றே புத்திசாலி.
உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல.
இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்?
4 “என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள்.
உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.
5 தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள்.
6 ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை.
தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள்.
அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன்.
7 “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும்.
வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும்.
8 அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும்.
அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும்.
9 கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.
10 வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும்
தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
11 நாவு உணவைச் சுவைப்பதுப்போல
காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும்.
12 முதிர்ந்தோர் ஞானவான்கள்,
புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
13 ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை.
ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை.
14 தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது.
15 தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும்.
தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும்.
16 தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார்.
ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள்.
17 தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார்,
அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார்.
18 அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும்,
ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார்.
19 தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார்.
அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார்.
20 நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார்,
முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார்.
21 தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார்,
தலைவர்களின் ஆற்றலை அவர் நீக்கிவிடுகிறார்.
22 இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார்,
மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
23 தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார்.
பின்பு அவர் அவற்றை அழிக்கிறார்.
அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார்,
பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார்.
24 தேவன் தலைவர்களை மூடராக்குகிறார்,
அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார்.
25 அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள்.
குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான்.
13 யோபு, “நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன்.
நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்.
அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன்.
2 உங்களுக்கு தெரிந்தவற்றை நான் அறிவேன்.
நானும் உங்களைப் போலவே புத்திசாலி.
3 ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை.
சர்வ வல்லமையுள்ள தேவனோடு நான் பேச விரும்புகிறேன்.
என் தொல்லைகளைப்பற்றி நான் தேவனோடு வாதாட விரும்புகிறேன்.
4 ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள்.
ஒருவரையும் குணப்படுத்த முடியாத தகுதியற்ற மருத்துவர்களைப்போல் இருக்கிறீர்கள்.
5 நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும்.
6 “இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள்.
நான் சொல்லவேண்டியவற்றிற்குச் செவிகொடுங்கள்.
7 நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா?
நீங்கள் கூறும் பொய்களை, நீங்கள் கூறவேண்டுமென்று தேவன் விரும்பியதாக நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
8 எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா?
தேவனுக்காக வழக்குகள் கொண்டுவர முடியுமா?
9 உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா?
நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா?
10 ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால்,
தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
11 தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது.
நீங்கள் அவரைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
12 உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை.
உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.
13 “அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்!
பிறகு எனக்கு நேரிடும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
14 நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி
என் உயிரை என் கைகளில் எடுப்பேன்.
15 தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன்.
அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன்.
16 தேவன் என்னை வாழவிட்டால்,அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும்.
தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.
17 நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள்.
நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள்.
18 நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன்.
எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன்.
நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.
19 நான் தவறென யாரேனும் நிரூபித்தால்
உடனே நான் வாய் பேசாதிருப்பேன் (அமைதியாக இருப்பேன்)
20 “தேவனே, எனக்கு இரண்டு காரியங்களைத் தாரும்,
அப்போது உம்மிடமிருந்து ஒளிந்திருக்கமாட்டேன்.
21 என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்,
பயங்கரங்களால் என்னை அச்சுறுத்துவதை நிறுத்தும்.
22 பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன்.
அல்லது என்னைப் பேசவிடும், நீர் எனக்குப் பதில் தாரும்.
23 நான் எத்தனை பாவங்கள் செய்துள்ளேன்?
நான் என்ன தவறு செய்தேன்?
என் பாவங்களையும் எனது தவறுகளையும் எனக்குக் காட்டும்.
24 தேவனே, ஏன் என்னைவிட்டு விலகுகிறீர்?
ஏன் உமது பகைவனைப்போல் என்னை நடத்துகிறீர்?
25 என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா?
நான் காற்றில் பறக்கும் ஒரு இலைமட்டுமேயாவேன்.
ஒரு சிறிய காய்ந்த வைக்கோல் துண்டினை நீர் தாக்குகிறீர்.
26 தேவனே, எனக்கெதிராகக் கசப்பானவற்றைக் கூறுகிறீர்.
நான் இளமையில் செய்த பாவங்களுக்காக என்னை துன்புறச் செய்கிறீரா?
27 என் பாதங்களில் நீர் விலங்குகளை இட்டீர்.
நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர்.
எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர்.
28 அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும்,
அந்த பூச்சிகளால் அரிக்கப்படும் துணியைப் போலவும் நான் சோர்ந்து அழிந்துப்போகிறேன்” என்றான்.
2008 by World Bible Translation Center