Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 24-28

24 “சர்வ வல்லமையுள்ள தேவன், ஜனங்களின் வாழ்வில் கேடுகள் நிகழும் காலத்தை அறிந்த போதும்
    அவர் அதற்குப் பரிகாரம் செய்யும் காலத்தை அவரைப் பின்பற்றுவோர் அறியமுடியாமலிருப்பது ஏன்?

“அயலானின் நிலத்தின் பகுதியை அடைவதற்காக ஜனங்கள் எல்லைக் குறிப்புகளை மாற்றுகிறார்கள்.
    ஜனங்கள் மந்தைகளைத் திருடி, வேறு மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
பெற்றோரற்ற அனாதைப் பிள்ளைகளுக்குச் சொந்தமான கழுதையை அவர்கள் திருடுகிறார்கள்.
    விதவை தான் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும்வரை அவளது பசுவைக் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள்.
தீயோர் பால் மணம் மாறாத குழந்தையை அதன் தாயிடமிருந்து பிரிக்கிறார்கள்.
    கடனுக்கு உறுதிப்பொருளாக அவர்கள் ஒரு ஏழையின் குழந்தையை எடுத்துக்கொள்கிறார்கள்.
ஏழைகள் வீடின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அலையும்படி வற்புறுத்துகிறார்கள்.
    தீயோரிடமிருந்து அந்த ஏழைகள் தங்களை ஒளித்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

“பாலைவனத்தில் உணவு தேடி அலையும் காட்டுக் கழுதைகளைப்போல் ஏழைகள் இருக்கிறார்கள்.
    அவர்கள் உணவு தேடுவதற்காக அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள்.
    அவர்களின் குழந்தைகளுக்காக உணவு பெறும் பொருட்டு அவர்கள் மாலையில் வெகு நேரம்வரை உழைக்கிறார்கள்.
வயல்களில் வைக்கோலும் புல்லும் வெட்டியபடி ஏழைகள் இரவில் வெகு நேரம் உழைக்க வேண்டும்.
    வயல்களில் திராட்சைப் பழங்களைப் பறித்துச் சேர்ப்பவர்களாய், அவர்கள் செல்வந்தர்களுக்காக உழைக்க வேண்டும்.
இரவு முழுவதும் ஆடையின்றி ஏழைகள் தூங்க வேண்டும்.
    குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்குப் போர்வைகள் இல்லை.
அவர்கள் பர்வதங்களில் மழையால் நனைந்திருக்கிறார்கள்.
    குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை.
    எனவே அவர்கள் பெரிய பாறைகளுக்கு அருகே அண்டிக்கொள்கிறார்கள்.
10 ஏழைகளுக்கு ஆடையில்லை. எனவே அவர்கள் வேலை செய்யும்போது நிர்வாணமாயிருக்கிறார்கள்.
    தீயோருக்கு அவர்கள் தானியக்கட்டுகளைச் சுமந்துச் செல்கிறார்கள்.
    ஆனால் அந்த ஏழைகள் பசியோடிருக்கிறார்கள்.
11 ஏழைகள் ஒலிவ எண்ணெயைப் பிழிந்தெடுக்கிறார்கள்.
    திராட்சைரசம் பிழியும் இடத்தில் அவர்கள் திராட்சைக்கனிகளின் மேல் நடக்கிறார்கள்.
    ஆனால் அவர்களுக்குப் பருகுவதற்கு எதுவுமில்லை.
12 நகரத்தில் மரிப்போரின் துயரக்குரல்களை நீ கேட்க முடியும்.
    துன்புறும் அந்த ஜனங்கள் உதவிக்காக குரலெழுப்புகிறார்கள்.
    ஆனால் தேவன் செவிசாய்ப்பதில்லை.

13 “சிலர் ஒளிக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள்.
    தேவன் விரும்புவது எதுவென அவர்கள் அறிய விரும்பமாட்டார்கள்.
    தேவன் விரும்புகிறபடி அவர்கள் வாழமாட்டார்கள்.
14 ஒரு கொலைகாரன் அதிகாலையில் எழுந்து திக்கற்ற ஏழைகளைக் கொல்கிறான்.
    இரவில் அவன் ஒரு திருடனாகிறான்.
15 விபச்சாரம் செய்பவன் (தகாத நெறியில் ஒழுகுபவன்) இரவுக்காகக் காத்திருக்கிறான்.
    ‘யாரும் என்னைப் பார்க்கமாட்டார்கள்’ என அவன் நினைக்கிறான்.
    ஆயினும் அவன் தனது முகத்தை மூடிக்கொள்கிறான்.
16 இரவில் இருள் சூழ்ந்திருக்கும்போது, தீயோர் ஜனங்களின் வீடுகளை உடைத்து உள்ளே நுழைகிறார்கள்.
    ஆனால் பகலொளியில், அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்துகொண்டு பூட்டிக்கொள்கிறார்கள்.
    அவர்கள் ஒளியைவிட்டு விலகியிருக்கிறார்கள்.
17 தீயோருக்கு மிக இருண்ட இரவுகள் காலை நேரத்தைப் போன்றது.
    ஆம், அந்த மரண இருளின் பயங்கரத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள்!

18 “வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொருள்களைப்போன்று தீயோர் அகற்றப்படுவார்கள்.
    அவர்களுக்குச் சொந்தமான நிலம் சபிக்கப்பட்டது, எனவே அவர்கள் தங்கள் வயல்களிலிருந்து திராட்சைக் கனிகளைத் திரட்டமாட்டார்கள்.
19 குளிர் காலத்துப் பனியிலிருந்து வரும் தண்ணீரை, வெப்பமும், உலர்ந்ததுமான காலம் கவர்ந்துவிடும்.
    எனவே அந்தப் பாவிகள் கல்லறைக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்.
20 தீயவன் மரிப்பான், அவனது சொந்த தாயார் கூட அவனை மறந்துவிடுவார்.
    அவன் உடலைத் தின்னும் புழுக்களே, அவனை விரும்புகிறவளாயிருக்கும்.
ஜனங்கள் அவனை நினைவுகூரமாட்டார்கள்.
    எனவே அத்தீயவன் மரத்துண்டைப்போன்று உடைந்துபோவான்.
21 குழந்தைகளற்ற பெண்களைத் (மலடிகளை) தீயோர் துன்புறுத்துவர்.
    கணவர்களை இழந்த பெண்களுக்கு (விதவைகளுக்கு) உதவ அவர்கள் மறுக்கிறார்கள்.
22 ஆற்றலுள்ள மனிதர்களை அழிக்க, தீயோர் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்.
    தீயோர் ஆற்றல் பெறக்கூடும், ஆனால், அவர்களுக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையின் மீது நிச்சயமில்லை.
23 தீயோர் குறுகியகாலம் பாதுகாப்பாகவும் ஆபத்தின்றியும் உணரலாம்.
    தேவன் அவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்.
24 தீயோர் சிலகாலம் வெற்றியடையலாம்.
    ஆனால் அவர்கள் அழிந்துப்போவார்கள்.
தானியத்தைப்போன்று அவர்கள் அறுக்கப்படுவார்கள்.
    அத்தீய ஜனங்கள் பிறரைப் போலவே எல்லோராலும் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.

25 “இவை உண்மையென நான் வாக்குறுதியளிக்கிறேன்!
    நான் பொய் கூறியதாக யார் நிரூபிக்கக் கூடும்?
    நான் தவறிழைத்தேனெனயார் காட்டக் கூடும்?” என்றான்.

பில்தாத் யோபுக்குப் பதில் கூறுகிறான்

25 சூகியனான பில்தாத் பதிலாக:

“தேவனே அரசாள்பவர்.
    ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார்.
தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.
அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது.
    தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.
தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்?
    மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல.
    நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.
ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள்.
    பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.

யோபு பில்தாதுக்குப் பதில் தருகிறான்

26 அப்போது யோபு பதிலாக:

“பில்தாத், சோப்பார், எலிப்பாஸ் ஆகியோரே, சோர்வுற்று நலிந்த இம்மனிதனுக்கு நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள்?
    ஆம், நீங்கள் உண்மையிலேயே நல்ல ஊக்கமூட்டுபவர்களாக இருந்திருக்கிறீர்கள்!
உண்மையிலேயே நீங்கள் என் தளர்ந்துப்போன கரங்களை மறுபடியும் பெலப்படசெய்தீர்கள்.
ஆம், ஞானமற்றவனுக்கு நீங்கள் அற்புதமான அறிவுரையைத் தந்திருக்கிறீர்கள்!
    நீங்கள் எத்தனை ஞானவான்கள் என்பதை உண்மையாகவே காட்டியிருக்கிறீர்கள்! [a]
இவற்றைச் சொல்ல உங்களுக்கு உதவியவர் யார்?
    யாருடைய ஆவி உங்களுக்கு எழுச்சியூட்டியது?

“பூமிக்கு அடியிலுள்ள வெள்ளங்களில் மரித்தோரின் ஆவிகள் பயத்தால் நடுங்குகின்றன.
ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும்.
    மரணம் தேவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை.
வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார்.
    வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்கவிட்டார்.
தேவன் அடர்ந்த மேகங்களை தண்ணீரால் நிரப்புகிறார்.
    மிகுந்த பாரம் மேகங்களை உடைத்துத் திறக்காதபடி தேவன் பார்க்கிறார்.
முழு நிலாவின் முகத்தை தேவன் மூடுகிறார்.
    அவர் தமது மேகங்களை அதன் மீது விரித்து அதைப் போர்த்துகிறார்.
10 தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து
    ஒளியும், இருளும் சந்திக்கும்படிச் செய்தார்.
11 தேவன் பயமுறுத்தும்போது
    வானைத் தாங்கும் அஸ்திபாரங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன.
12 தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது.
    தேவனுடைய ஞானம் ராகாபின் உதவியாளர்களை அழித்தது.
13 தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும்.
    தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது.
14 தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே.
    தேவனிடமிருந்து ஒரு சிறிய இரகசிய ஒலியையே நாம் கேட்கிறோம்.
    தேவன் எத்தனை மேன்மையானவரும் வல்லமையுள்ளவரும் என்பதை ஒருவனும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றான்.

27 பின்பு யோபு தன் விரிவுரையைத் தொடர்ந்தான். அவன்,

“உண்மையாகவே, தேவன் உயிரோடிருக்கிறார்.
    தேவன் உண்மையாக வாழ்வதைப்போல, அவர் உண்மையாக என்னோடு அநீதியாய் நடக்கிறார்.
    ஆம், சர்வ வல்லமையுள்ள தேவன் என் வாழ்க்கையைக் கசப்பாக்கினார்.
ஆனால் என்னில் உயிருள்ளவரையிலும்
    தேவனுடைய உயிர்மூச்சு என் மூக்கில் இருக்கும் மட்டும்
என் உதடுகள் தீயவற்றைப் பேசாது,
    என் நாவு ஒருபோதும் பொய் கூறாது.
நீங்கள் சொல்வது சரியென நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
    நான் மரிக்கும் நாள் மட்டும், நான் களங்கமற்றவன் என்று தொடர்ந்து சொல்வேன்.
நான் செய்த நல்லவற்றைத் கெட்டியாகப் (இறுகப்) பிடித்துக்கொள்வேன்.
    நியாயமாக நடப்பதை விட்டுவிடமாட்டேன்.
    நான் வாழும்வரை என் மனச்சாட்சி என்னை உறுத்தாது.
ஜனங்கள் எனக்கெதிராக எழுந்து நிற்கிறார்கள்.
    தீயோர் தண்டிக்கப்படுவதைப் போல என் பகைவர்கள் தண்டனை பெறுவார்கள் என நம்புகிறேன்.
ஒருவன் தேவனைப்பற்றிக் கவலைப்படாவிட்டால், அவன் மரிக்கும்போது, அவனுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை.
    தேவன் அவன் உயிரை எடுக்கும்போது, அம்மனிதனுக்கு நம்பிக்கை எதுவுமில்லை.
அத்தீயவனுக்குத் தொல்லைகள் விளையும், அவன் தேவனை நோக்கி உதவி வேண்டுவான்.
    ஆனால் தேவன் அவனுக்குச் செவிசாய்க்கமாட்டார்!
10 சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பேசுவதில் அவன் களிப்படைந்திருக்க வேண்டும்.
    எப்போதும் அம்மனிதன் தேவனிடம் ஜெபம் செய்திருக்க வேண்டும்.

11 “தேவனுடைய வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.
    சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திட்டங்களை நான் உங்களிடம் மறைக்கமாட்டேன்.
12 உங்கள் சொந்தக் கண்களால் தேவனுடைய வல்லமையைக் கண்டிருக்கிறீர்கள்.
    எனவே அந்தப் பயனற்ற காரியங்களை நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?
13 தீயோருக்காக தேவன் திட்டமிட்டது இதுவே
    சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து கொடியோர் இதையே பெறுவார்கள்.
14 தீயவனுக்குப் பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் அவனது பிள்ளைகள் மரிப்பார்கள்.
    தீயவனின் பிள்ளைகளுக்கு உண்பதற்கு போதிய உணவு இராது.
15 அவனது எல்லாப் பிள்ளைகளும் மரிப்பார்கள்.
    அவனது விதவை அவனுக்காகத் துக்கப்படமாட்டாள்.
16 தீயோனுக்குத் துகளைப்போன்று மிகுதியான வெள்ளி கிடைக்கலாம்.
    களிமண் குவியலைப்போன்று அவனிடம் பல ஆடைகள் இருக்கலாம்.
17 ஆனால் அவனது ஆடைகள் நல்லவனுக்குக் கிடைக்கும்.
    களங்கமற்ற ஜனங்கள் அவனது வெள்ளியைப் பெறுவார்கள்.
18 தீயவன் ஒரு வீட்டைக் கட்டலாம், ஆனால் அது நீண்டகாலம் நிலைக்காது.
    அது ஒரு சிலந்தி வலையைப்போன்றும், காவலாளியின் கூடாரத்தைப்போன்றும் இருக்கும்.
19 தீயவன் ஒருவன் படுக்கைக்குப் போகும்போது, செல்வந்தனாக இருக்கலாம்.
    ஆனால் அவனது கண்களை அவன் திறக்கும்போது, எல்லா செல்வங்களும் மறைந்திருக்கும்.
20 அவன் அச்சமடைவான்.
    அது வெள்ளப் பெருக்கைப் போன்றும், புயல்வீசி எல்லாவற்றையும் அடித்துச் செல்வதைப்போன்றும் இருக்கும்.
21 கிழக்குக் காற்று அவனை அடித்துச் செல்லும், அவன் அழிந்துபோவான்.
    புயல் அவன் வீட்டிலிருந்து அவனை இழுத்துச் செல்லும்.
22 புயலின் வல்லமையிலிருந்து தீயவன் ஓடிப்போக முயல்வான்
    ஆனால், இரக்கமின்றி புயல் அவனைத் தாக்கும்.
23 தீயவன் ஓடிப்போகும்போது, மனிதர்கள் கைகொட்டுவார்கள்.
    தீயவன் வீட்டைவிட்டு ஓடுகிறபோது, அவர்கள் அவனைப் பார்த்து சீட்டியடிப்பார்கள்.”

The V a lu e of W is d o m

28 “வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு,
    ஜனங்கள் பொன்னை உருக்கிப் புடமிடும் (தூயதாக்கும்) இடங்கள் உண்டு.
மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள்,
    செம்பு பாறையிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது.
வேலையாட்கள் குகைகளுக்குள் விளக்குகளை எடுத்துச்செல்கிறார்கள்.
    அவைகளை குகைகளின் ஆழமான பகுதிகளில் தேடுகிறார்கள்.
    ஆழ்ந்த இருளில் அவர்கள் பாறைகளைத் தேடிப்பார்க்கிறார்கள்.
தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள்.
    ஜனங்கள் வசிக்காத (வாழாத) தூரமான இடங்களிலும், ஒருவரும் சென்றிராத இடங்களிலும், அவர்கள் நிலத்தினுள் ஆழமாகப் போகிறார்கள்.
    மற்ற ஜனங்களைக் காட்டிலும் ஆழமான இடங்களில், அவர்கள் கயிறுகளிலிருந்து தொங்குகிறார்கள்.
நிலத்தின் மேல் உணவு விளைகிறது,
    ஆனால் நிலத்திற்குக் கீழே, அனைத்தும் நெருப்பினால் உருக்கப்பட்டதுபோல, அது வேறு மாதிரியாகத் தோன்றுகிறது.
நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும்.
    அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு.
நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது.
    அந்த இருண்ட பாதைகளை வல்லூறும் பார்த்ததில்லை.
காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை.
    சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை.
வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள்.
    அப்பணியாட்கள் பர்வதங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள்.
10 வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள்.
    எல்லா பாறைகளின் பொக்கிஷங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
11 பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள்.
    அவர்கள் மறை பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள்.

12 “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்?
    நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம்,
    பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.
14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
    கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது!
    ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது!
16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ,
    நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது!
    பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது.
    சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.
19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல.
    தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.

20 “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது?
    எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது.
    வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.
22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை.
    நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.

23 “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார்.
    தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார்.
24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது.
    வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.
25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார்.
    கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
26 எங்கே மழையை அனுப்புவதென்றும்,
    இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.
27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார்.
    ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
28 தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள்.
    அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center