Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 9-12

சவுல் தன் தந்தையின் கழுதைகளைத் தேடுகிறான்

பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் முக்கியமானவனாக இருந்தான். இவன் அபியேலின் மகன். அபியேல் சேரோரின் மகன், சேரோர் பெகோராத்தின் மகன், பெகோரோத் பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த அப்பியாவின் மகன். கீஸுக்கு சவுல் என்ற மகன் இருந்தான். இவன் அழகான இளைஞன். இவனைப்போல் அழகுள்ளவன் யாரும் இல்லை. இஸ்ரவேலில் எல்லோரும் இவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரம் இருந்தான்.

ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துப் போயின. எனவே அவன் தன் மகன் சவுலிடம், “ஒரு வேலைக்காரனை அழைத்துப்போய் கழுதைகளைத் தேடு” என்றான். சவுல் கழுதைகளைத் தேடிப் போனான். அவன் எப்பிராயீம் மலைச்சரிவுகளிலும் சலிஷா பகுதிகளிலும் தேடினான். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சாலீம் நாட்டுப் பக்கம் போனார்கள். அங்கேயும் இல்லை. பிறகு பென்யமீன் நாட்டுப் பக்கத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக, சவுலும் வேலைக்காரனும் சூப் நாட்டிற்கு வந்தனர். சவுல் தன் வேலைக்காரனிடம், “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றான்.

ஆனால் வேலைக்காரனோ, “ஒரு தேவமனிதன் இங்கே இருக்கிறார். ஜனங்கள் அவரை மதிக்கின்றனர். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. எனவே, நாம் நகரத்திற்குள் போவோம். நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தைப்பற்றி தேவமனிதன் கூறக்கூடும்” என்றான்.

சவுல் தன் வேலைக்காரனிடம், “உறுதியாக, நாம் நகருக்குள் போவோம், ஆனால் அவருக்கு எதைக் கொடுப்பது? தேவமனிதனுக்கு கொடுக்க அன்பளிப்புகள் எதுவுமில்லை. நம்மிடம் உணவு கூட இல்லையே?” என்றான்.

மீண்டும் அந்த வேலைக்காரன், “பாருங்கள், என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. இதனைத் தேவமனிதனுக்கு கொடுப்போம். பிறகு நாம் அடுத்துப் போக வேண்டிய இடத்தைப்பற்றி அவர் சொல்வார்” என்றான்.

9-11 சவுல் தனது வேலைக்காரனிடம், “நல்ல யோசனை! நாம் போவோம்!” என்றான். எனவே, தேவமனிதன் தங்கி இருந்த நகருக்கு அவர்கள் சென்றார்கள்.

சவுலும், வேலைக்காரனும் நகரை நோக்கி மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். சாலையில் அவர்கள் சில இளம் பெண்களை சந்தித்தார்கள். அந்த இளம் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருத்தார்கள். சவுலும், வேலைக்காரனும் அந்த இளம் பெண்களிடம், “சீயர் இங்குதான் இருக்கிறாரா?” என்ற கேட்டார்கள், (முற்காலத்தில், இஸ்ரவேலில் இருந்த ஜனங்கள் தீர்க்கதரிசியை, “சீயர்” என்று அழைத்தார்கள். எனவே, அவர்கள் தேவனிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால், “நாம் சீயரிடம் போகலாமா?” என்பார்கள்.)

12 அந்த இளம் பெண்கள், “ஆம், சீயர் இங்குதான் இருக்கிறார். அவர் சாலையில் சற்று தூரத்தில் தங்கி இருக்கிறார். அவர் இன்றுதான் ஊருக்கு வந்தார். சமாதான பலிகளைச் செலுத்துவதற்காக இன்று சிலர் அவரை ஆராதனை இடத்தில் சந்திக்கிறார்கள். 13 ஊருக்குள் நீங்கள் விரைவாகச் சென்றால், ஆராதனை செய்யுமிடத்தில் அவர் உண்ணப்போகும் முன் அவரைச் சந்தித்துவிடலாம். அத்தீர்க்கதரிசி பலியை ஆசீர்வதிப்பார். எனவே அவர் அங்கு சேரும் முன்பு ஜனங்கள் உண்ணத் தொடங்கமாட்டார்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் விரைவாகச் சென்றால் அத்தீர்க்கதரிசியை சந்திக்க முடியும்” என்றார்கள்.

14 சவுலும் அவனது வேலைக்காரனும் நகரை நோக்கி மலையில் ஏறத்தொடங்கினார்கள். நகருக்குள் நுழையும் சமயத்தில், சாமுவேல் அவர்களை நோக்கி வந்தான். அப்பொழுதுதான் சாமுவேல் ஆராதனை இடத்திற்கு போக நகரை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான்.

15 சவுல் வருவதற்கு ஒருநாள் முன்பு, கர்த்தர் சாமுவேலிடம், 16 “நாளை இந்நேரத்தில் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவன். அவனை இஸ்ரவேல் ஜனங்களின் புதிய தலைவனாக நீ அபிஷேகம் செய். அவன் பெலிஸ்தர்களிடமிருந்து என் ஜனங்களைக் காப்பாற்றுவான். நான் என்னுடைய ஜனங்களின் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். அழுகையைக் கேட்டிருக்கிறேன்.” என்றார்.

17 சாமுவேல் சவுலைப் பார்த்தான். அப்போது கர்த்தர், “நான் சொன்னது இவனைப் பற்றித்தான். இவனே எனது ஜனங்களை ஆள்வான்” என்றார்.

18 சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான்.

19 அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன். 20 மூன்று நாட்களுக்கு முன்னால் இழந்த கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அனைத்து இஸ்ரவேலரும் உன்னை விரும்புகின்றனர்! அவர்கள் உன்னையும் உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் விரும்புகின்றனர்” என்றான்.

21 அதற்கு சவுல், “ஆனால் நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இதுதான் இஸ்ரவேலில் மிகவும் சிறிய கோத்திரம், இதில் எனது குடும்பந்தான் பென்யமீன் கோத்திரத்திரலே மிகவும் சிறியது. இவ்வாறிருக்க இஸ்ரவேல் என்னை விரும்புவதாக எப்படி சொல்கிறீர்?” என்று கேட்டான்.

22 பிறகு சாமுவேல், சவுலையும் அவனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு உணவு சாப்பிடும் பகுதிக்குப் போனான். ஏறக்குறைய 30 பேர் சேர்ந்து உணவு உண்ணவும் பலியை பங்கிட்டுக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனர். சாமுவேல், சவுலுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் மேஜையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்தான். 23 சாமுவேல் சமையற்காரனிடம், “நான் எடுத்து வைக்கச் சொன்ன இறைச்சியின் ஒரு பகுதியைப் பரிமாறு” என்றான்.

24 சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான்.

25 அவர்கள் உண்டு குடித்ததும் ஆராதனை இடத்திலிருந்து கீழே இறங்கி மீண்டும் நகரத்திற்குள் சென்றார்கள். சாமுவேல் சவுலுக்காக ஒரு படுக்கையை மேல் வீட்டில் அமைத்தான். 26 சவுல் அதில் உறங்கினான்.

மறுநாள், அதிகாலையில் சவுலை மேல் வீட்டிற்கு அழைத்தான். “எழு, நான் உன்னை உன் வழியிலே அனுப்புவேன்” என்றான். அவனும் தயார் ஆகி சாமுவேலோடு வீட்டைவிட்டு வெளியேறினான்.

27 சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.

சாமுவேல் சவுலை அபிஷேகம் செய்கிறான்

10 சாமுவேல் சிறப்புக்குரிய எண்ணெய் இருக்கும் ஜாடியை எடுத்தான். அதனைச் சவுலின் தலையில் ஊற்றி, முத்தமிட்டுச் சொன்னான், “கர்த்தர் உன்னை இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாக அபிஷேகித்திருக்கிறார். கர்த்தருடைய ஜனங்களை நீ கட்டுப்படுத்துவாய். அவர்களைச் சுற்றியுள்ள எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவாய். கர்த்தர் உன்னை அவருடைய ஜனங்களின் மேல் அரசனாக்கியுள்ளார். இது உண்மை என்பதை நிரூபிக்க ஒரு அடையாளம் உள்ளது. இன்று நீ என்னை விட்டுப் போனதும் பென்யமீன் எல்லையில் செல்சாவில் ராகேலின் கல்லறை அருகில் இருவரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீ தேடிப் போன கழுதைகள் கிடைத்தன. உன் தந்தை கழுதைகளைப்பற்றிய கவலைகளை விட்டுவிட்டார். இப்போது அவர் உன்னைப் பற்றி கவலைப்படுகிறார். அவர், என் மகனுக்காக என்ன செய்வேன்?’ என்கிறார் என்பார்கள்” என்றான்.

மேலும் சாமுவேல் “பின்பு தாபோரிலுள்ள பெரிய சிந்தூர மரத்தடிவரை போவாய், அங்கே மூன்று பேர் உண்னை சந்திப்பார்கள். அவர்கள் பெத்தேலுக்கு தேவனை தொழுதுகொள்ளச் செல்பவர்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், மூன்றாமவன் ஒரு புட்டி திராட்சை ரசத்தையும் வைத்திருப்பார்கள். அவர்கள் உனது நலனை விசாரிப்பார்கள். அவர்கள் இரண்டு அப்பங்களைத் தருவார்கள். நீ அவர்களிடம் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு நீ கிபியாத் எலோகிமுக்குப் போவாய். அங்கே பெலிஸ்தரின் கோட்டை உண்டு. நீ நகரத்துக்குள் போகும்போது தீர்க்கதரிசிகளின் கூட்டம் ஒன்று வெளியே வரும். அவர்கள் ஆராதனை ஸ்தலத்திலிருந்து வருவார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். அவர்கள் சுரமண்டலமும், தம்புரும், புல்லாங்குழலும், இரட்டை வால் யாழும் இசைப்பார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு உன் மீது இறங்குவார். நீயும் அவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனிதன் ஆவாய். இவை ஆனதும், தேவன் உன்னோடு இருப்பதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செய்ய ஆரம்பி.

“நீ எனக்கு முன்னால் கில்காலுக்கு இறங்கிப்போ. நான் பிறகு அங்கு வருவேன். நான் சர்வாங்க தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்துவேன். ஆனால் நீ 7 நாட்கள் காத்திருக்க வேண்டும். பிறகு நீ செய்ய வேண்டியவற்றைப்பற்றி நான் சொல்வேன்” என்றார்.

சவுல் தீர்க்கதரிசிகளைப் போல் ஆகிறான்

சவுல் சாமுவேலை விட்டு போனபோது, தேவன் சவுலின் வாழ்க்கையை மாற்றினார். அந்த நாளில் இந்த அடையாளங்கள் எல்லாம் நடந்து முடிந்தன. 10 சவுலும் அவனது வேலைக்காரனும் கிபியாத் எலோகிம் மலைக்குச் சென்றனர். அங்கே, அவன் தீர்க்கதரிசிகளின் குழுவை சந்தித்தான். தேவனுடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு சவுலின் மேல் இறங்கினார். அவனும், தீர்க்கதரிசிகளுடன் தீர்க்கதரிசனம் சொன்னான். 11 அவனை முன்பே அறிந்திருந்தவர்கள் அவன் தீர்க்கதரிசிகளோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டனர். அவர்கள், “கீஸின் மகனுக்கு என்ன ஆயிற்று? சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்று பேசிக்கொண்டனர்.

12 கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் “ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்” என்றான். அதனால் “சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?” என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது.

சவுல் வீட்டிற்கு திரும்புகிறான்

13 சவுல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்த பின், தன் வீட்டிற்கு அருகிலுள்ள தொழுதுகொள்ளுகிற இடத்திற்கு வந்தான்.

14 அப்போது சவுலின் சிறிய தகப்பன் சவுலிடமும் அவனது வேலைக்காரனிடமும், “நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?” எனக் கேட்டான்.

“நாங்கள் கழுதைகளைத் தேடிப் போனோம். கிடைக்காததால் சாமுவேலை சந்திக்கச் சென்றோம்” என்றான்.

15 “சாமுவேல் என்ன சொன்னார் என்று தயவு செய்து சொல்?” எனச் சவுலின் சிறிய தகப்பன் கேட்டான்.

16 அதற்கு சவுல், “சாமுவேல் கழுதைகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்று சொன்னார்” என்று பதிலுரைத்தான். அரசாட்சியைப்பற்றி சாமுவேல் கூறியதைப் பற்றி சவுல் எதுவும் சொல்லவில்லை.

சவுலை அரசனாக சாமுவேல் அறிவிக்கிறான்

17 சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மிஸ்பாவில் கர்த்தரை சந்திக்க கூடுமாறு கூறினான். 18 சாமுவேல் இஸ்ரவேலரைப் பார்த்து, “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘நான் இஸ்ரவேலரை எகிப்திற்கு வெளியே அழைத்து வந்தேன். உங்களுக்குத் தீங்கு செய்ய முயன்ற எகிப்தியர்களிடமிருந்தும் மற்ற அரசுகளிடமிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றினேன்’ 19 ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.

20 சாமுவேல் இஸ்ரவேலர்களின் எல்லா கோத்திரங்களையும் கூட்டினான். பின் புதிய அரசனைத் தேர்ந்தெடுத்தான். முதலில் பென்யமீனின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான். 21 அவன் பென்யமீன் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பங்களையும் வந்து கடந்துப்போகச் சொல்லின பின்பு மாத்திரி குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் கடந்துபோகும்போது கீசின் மகனாகிய சவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

ஆனால் ஜனங்கள் அவனைத் தேடியபோது அவன் காணப்படவில்லை. 22 பிறகு அவர்கள் கர்த்தரிடம், “அவன் இன்னும் இங்கே வரவில்லையா?” எனக் கேட்டனர். அதற்கு கர்த்தர், “சவுல் கிடங்கில் பொருட்களுக்கு மறைவில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான்” என்றார்.

23 ஜனங்கள் ஓடிப்போய் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். அவன் அவர்கள் மத்தியில் நின்றான். அவனது தலை மற்றவர்களைவிட உயர்ந்திருந்தது.

24 சாமுவேல் அனைத்து ஜனங்களிடமும், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனைப் பாருங்கள். அவனைப் போன்று சிறப்புடையவன் வேறுயாருமில்லை” என்றார்.

பிறகு ஜனங்கள் “அரசனே நீடுழி வாழ்க!” என்று குரலெழுப்பினார்கள்.

25 சாமுவேல் அரசாங்கத்தின் விதிகளை ஜனங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் ஒரு புத்தகத்தில் அவ்விதிகளை எழுதினான். அந்த புத்தகத்தை கர்த்தருக்கு முன்பு வைத்தான். பின் ஜனங்களை வீட்டிற்கு போகுமாறு கூறினான்.

26 சவுலும் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். தேவன் சில வீரர்களின் இதயத்தைத் தொட அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துச் சென்றார்கள். 27 ஆனால் சில கயவர்கள், “இவன் எவ்வாறு நம்மைக் காப்பாற்றுவான்?” என்றனர். அவர்கள் சவுலைப் பற்றி கெட்டவற்றைக் கூறி அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொடுக்க மறுத்தனர். சவுல் ஒன்றும் கூறவில்லை.

நாகாஸ் எனும் அம்மோனிய அரசன்

நாகாஸ் அம்மோனிய அரசன், காத் மற்றும் ரூபன் கோத்திரங்களை காயப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு ஆண்களின் வலது கண்ணை பிடுங்கி யாரும் அவர்களுக்கு உதவி செய்யாதபடி தடுத்தான். யோர்தான் நதி ஓரத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஆண்களுக்கும் அப்படியே செய்தான். எனவே 7,000 இஸ்ரவேலர்கள் அம்மோனியரிடமிருந்து தப்பி யாபேஸ் கீலேயாத்திற்கு வந்தனர்.

11 ஒரு மாதத்திற்குப்பின் நாகாஸ் தன் சேனையோடு யாபேஸ் கீலேயாத்தின் நகரை முற்றுகையிட்டான். யாபேஸ் ஜனங்கள், நாகாஸை நோக்கி, “நீங்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்துக்கொண்டால் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்றனர்.

ஆனால் அம்மோனியனான நாகாஸ் “நான் ஒவ்வொரு மனிதனின் வலது கண்ணையும் பிடுங்கிய பிறகுதான் ஒப்பந்தத்தைச் செய்து கொள்வேன். அதுதான் எல்லா இஸ்ரவேலரையும் அவமானப்படுத்தும்!” என்றான்.

யாபேசின் தலைவர்கள் நாகாசிடம், “எங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுங்கள். அனைத்து இஸ்ரவேலருக்கும் தூது அனுப்புகிறோம். யாரும் உதவிக்கு வரவில்லை என்றால், உங்களிடம் வந்து சரணடைந்து விடுகிறோம்” என்று கூறினார்கள்.

சவுல் யாபேஸ் கீலேயாத்தைக் காப்பாற்றுகிறான்

சவுல் வசித்த கிபியாவுக்கு தூதுவர்கள் வந்தார்கள். அவர்கள் செய்தியை ஜனங்களிடம் சொன்னார்கள். ஜனங்கள் மிகவும் சத்தமாக அழுதார்கள். அச்சமயம் சவுல் தன் பசுக்களோடு வயல் வெளியில் இருந்தான். அவன் உள்ளே வந்தபோது அவர்களின் கூக்குரலைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் யாபேஸில் இருந்து வந்த தூதுவர்கள் சொன்ன செய்தியைச் சொன்னார்கள். சவுல் அவர்கள் சொன்னதைக் கேட்டான். பின் தேவனுடைய ஆவியானவர் அவன் மீது மிகுந்த வல்லமையோடு இறங்கினார். அவன் சீறி எழுந்தான். அவன் இரண்டு பசுக்களைத் துண்டுத் துண்டாக வெட்டி அத்துண்டுகளைத் தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் அதனை இஸ்ரவேல் முழுவதும் எடுத்துச் செல்லுமாறு கூறினான். இஸ்ரவேல் ஜனங்களிடம், “சவுலையும் சாமுவேலையும் பின்பற்றி வாருங்கள். யாராவது இதைக் கேட்டு கூடி வந்து உதவாவிட்டால் அவர்களின் பசுவுக்கும் இப்படியே செய்யப்படும்!” எனச் சொல்லி அனுப்பினான்.

கர்த்தரிடமிருந்து பெரும் பயம் ஜனங்கள் மேல் வந்தது. அவர்கள் ஒன்று கூடினார்கள். சவுல் ஆண்களை பேசேக்கில் கூட்டினான். அவர்களில் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து 3,00,000 பேரும், யூதாவின் ஜனங்களிலிருந்து 30,000 பேரும் கூடி இருந்தனர்.

சவுலும் அவனது படையும் யாபேசிலிருந்து வந்த தூதர்களிடம், “நாளை மதியத்தில் நீங்கள் காப்பற்றப்படுவீர்கள் என கீலேயாத்திலுள்ள யாபேசியர்களுக்குக் கூறுங்கள்” என்றான்.

தூதுவர்கள் சவுலின் செய்தியை யாபேசியர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். 10 பின் அவர்கள் அம்மோனியனான நாகாசிடம், “நாளை நாங்கள் உங்களிடம் வருவோம், அப்போது உங்கள் விருப்பம்போல் செய்யலாம்” என்றனர்.

11 மறுநாள் தனது வீரர்களை சவுல் மூன்று குழுக்களாக பிரித்தான். சூரிய உதயத்தின் போது, சவுலும், அவனது வீரர்களும் அம்மோனிய கூடாரங்களுக்குள் புகுந்து மதியத்திற்குள் அம்மோனியர்களைத் தோற்கடித்தனர். இரண்டு பேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி அவர்கள் பல திசைகளிலும் சிதறிப்போனார்கள்.

12 பின் ஜனங்கள் சாமுவேலிடம், “சவுலை அரசன் ஆக்கவேண்டாம் எனக் கூறியவர்கள் எங்கே? இழுத்து வாருங்கள், அவர்களைக் கொல்வோம்!” என்றனர்.

13 ஆனால் சவுலோ, “இல்லை இன்று யாரையும் கொல்லக்கூடாது! கர்த்தர் இன்று இஸ்ரவேலரைக் காப்பாற்றினார்!” என்றான்.

14 பின்பு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், கில்காலுக்குப் போவோம், அங்கே சவுலை மீண்டும் அரசனாக்குவோம்” என்றார்.

15 அனைவரும் கில்காலுக்குப் போனார்கள். அங்கே கர்த்தருடைய முன்னிலையில் ஜனங்கள் சவுலை அரசனாக்கினார்கள். கர்த்தருக்கு சமாதான பலிகளை கொடுத்தனர். சவுலும் இஸ்ரவேலரும் அதனை சிறப்பாக கொண்டாடினார்கள்.

சாமுவேல் இஸ்ரவேலரிடம் அரசனைப் பற்றி பேசுகிறான்

12 சாமுவேல் இஸ்ரவேலரிடம், “நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு அரசனை நியமித்திருக்கிறேன். இப்போது உங்களை வழி நடத்த ஒரு அரசன் இருக்கிறான். எனக்கு முதுமையும் நரையும் வந்துவிட்டது. ஆனால் என் மகன்கள் உங்களுடன் இருக்கிறார்கள். நான் சிறுவயது முதலே உங்களது தலைவனாக இருந்திருக்கிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை கர்த்தரிடமும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனிடமும் சொல்லவேண்டும். நான் ஏதாவது உங்கள் பசுவையோ, கழுதையையோ திருடியிருக்கிறேனா? யாரையாவது புண்படுத்தியோ, ஏமாற்றியோ இருக்கிறேனா? நான் பணத்தையோ பாதரட்சையை லஞ்சமாக பெற்றிருக்கிறேனா? அப்படி எதாவது செய்திருந்தால் நான் அதை சரி செய்துக் கொள்வேன்” என்றான்.

இஸ்ரவேலர்களோ, “இல்லை! நீங்கள் எங்களுக்கு எப்போதும் தீமை செய்யவில்லை. எங்களை ஏமாற்றவோ, எங்கள் பொருட்களை எந்தக் காலத்திலும் எடுத்துக் கொள்ளவோயில்லை!” என்றனர்.

சாமுவேல் அவர்களிடம், “கர்த்தரும், அரசரும் இன்று சாட்சிகளாக உள்ளனர். நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்கிறார்கள். என்னிடம் தவறில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்” என்றான். “ஆமாம்! கர்த்தரே சாட்சி!” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.

பின் சாமுவேல் ஜனங்களிடம், “இங்கே நடந்ததை கர்த்தர் பார்த்திருக்கிறார். கர்த்தர் தாமே மோசேயையும், ஆரோனையும், தேர்ந்தெடுத்தவர். அவரே எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை மீட்டுக்கொண்டவர். இப்போது அங்கே நில்லுங்கள். உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் கர்த்தர் செய்த நன்மைகளைப்பற்றிச் சொல்வேன்.

“யாக்கோபு எகிப்துக்குப் போனார். பின்னர் எகிப்தியர்கள் அவருடைய சந்ததிகளுக்கு வாழ்க்கையை கடின மாக்கித் துன்புறுத்தினார்கள். கர்த்தரிடம் உதவிக்காக அழுதார்கள். கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்துக் காப்பாற்றி இங்கே வாழும் பொருட்டு அழைத்து வந்தனர்.

“ஆனால் உங்கள் முற்பிதாக்கள் தமது தேவனாகிய கர்த்தரை மறந்துவிட்டனர். எனவே கர்த்தர் அவர்களை சிசெராவிடம் அடிமைகளாகுமாறு செய்தார். சிசெரா, ஆத்சோர் என்னும் இடத்தில் இருந்த படையின் சேனாதிபதி. பின்னர் கர்த்தர் அவர்களை பெலிஸ்தரின் கையிலும் மோவாப் அரசர்களிடமும் அடிமையாக்கினார். உங்கள் முற்பிதாக்களுக்கு எதிராக அவர்கள் எல்லோரும் சண்டையிட்டனர். 10 ஆனால், உங்கள் முற்பிதாக்கள் கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதார்கள். அவர்கள், ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம். கர்த்தரை விட்டு பொய்த் தெய்வங்களான பாலையும், (பாகாலையும்) அஸ்த்தரோத்தையும் சேவித்தோம். இப்போது எங்களைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களுக்கு சேவை செய்கிறோம்’ என்றனர்.

11 “எனவே, கர்த்தர் எருபாகாலையும், (கிதியோன்) பேதானையும், யெப்தாவையும், சாமுவேலையும் அனுப்பினார். கர்த்தர் உங்களைச் சுற்றியுள்ள பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார். நீங்கள் பாதுகாப்பாயுள்ளீர்கள். 12 ஆனால், நாகாஸ் அரசன் உங்களுக்கு எதிராகச் சண்டையிட வந்தான். நீங்கள், ‘இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்!’ என்றீர்கள்! தேவனாகிய கர்த்தர் ஏற்கெனவே உங்கள் அரசராக இருந்தார்! எனினும் நீங்கள் கேட்டீர்கள். 13 இப்போது ஒரு அரசனைத் தோந்தெடுத்துள்ளீர்கள். கர்த்தர் அவரை உங்கள் அரசனாக்கினார். 14 கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்க வேண்டும். நீங்கள் அவருக்கு சேவை செய்து அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவருக்கு எதிராகப் போராடக்கூடாது. நீங்களும் உங்கள் அரசனும் உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றவேண்டும். இவற்றைச் செய்தால் தேவன் உங்களைக் காப்பார். 15 ஆனால், நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவரது கட்டளைகளுக்கு எதிராக போரிட்டால் பின் அவர் உங்களுக்கு எதிராவார். கர்த்தர் உங்களையும் உங்கள் அரசனையும் அழிப்பார்!

16 “இப்பொழுது நீங்கள் அமைதலாயிருந்து கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன் செய்யப்போகும் பெரியக் காரியத்தைப் பாருங்கள். 17 இப்போது கோதுமை அறுவடைக்காலம். நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். இடியையும் மழையையும் கேட்பேன். நீங்கள் அரசன் வேண்டுமென்று கேட்டது கர்த்தருக்கு விரோதமான காரியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான்.

18 எனவே, சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். அன்றே கர்த்தர் இடியையும் மழையையும் அனுப்பினார். ஜனங்கள் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தனர். 19 அனைத்து ஜனங்களும் சாமுவேலிடம், “உம்முடைய அடியார்களாகிய எங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபியுங்கள், நாங்கள் அழிந்துவிட விட்டு விடாதேயும்! நாங்கள் பலமுறை பாவம் செய்திருக்கிறோம். இப்போது அரசனைக் கேட்டு மேலும் பாவம் செய்து விட்டோம்” என்றனர்.

20 சாமுவேல் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இது உண்மை! நீங்கள் எல்லா தீமைகளையும் செய்தீர்கள். ஆனால் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்கள். முழு மனதோடு கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். 21 விக்கிரகங்கள் வெறும் சிலைகளே அவைகள் உதவாது. அவற்றைத் தொழுதுகொள்ள வேண்டாம். விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது! காப்பாற்றாது! அவைகள் ஒன்றுமில்லை.

22 “ஆனால், கர்த்தர் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை தமது சொந்த ஜனங்களாக ஆக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். எனவே, அவரது பெரிய பெயரினிமித்தம் தம் ஜனங்களை அவர் விட்டுவிடமாட்டார். 23 என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். 24 ஆனால், நீங்கள் கர்த்தரை கனம் பண்ண வேண்டும். முழு இருதயத்துடன் அவருக்கு சேவை செய்ய வேண்டும். அவர் செய்த அதிசயமான காரியங்களை மறவாதீர்கள்! 25 நீங்கள் கடினப்பட்டு தீமை செய்தால், தேவன் உங்களையும் உங்கள் அரசனையும் அழுக்கை துடப்பத்தால் நீக்குவதுப்போல் எறிந்துவிடுவார்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center