Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 6-7

மீதியானியர் இஸ்ரவேலரிடம் போரிடுதல்

தீயவை என்று கர்த்தர் கூறிய காரியங்களை மீண்டும் இஸ்ரவேலர் செய்தனர். இஸ்ரவேலரை மீதியானியர் 7 ஆண்டுகள் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்.

மீதியானியர் மிக வல்லமையுடையவர்களாய் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே இஸ்ரவேலர், மலைகளில் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் பலவற்றை அமைத்தனர். பார்க்க இயலாத இடங்களிலும், குகைகளிலும் இஸ்ரவேலர் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தனர். மீதியானியரும், கிழக்கிலுள்ள அமலேக்கியரும் வந்து அவர்கள் பயிர்களை அழித்ததால் இஸ்ரவேலர் அவ்வாறு செய்தனர். அவர்கள் தேசத்தில் முகாமிட்டுத் தங்கி, இஸ்ரவேலர் பயிரிட்ட தானியங்களை அழித்தனர். காசா நகரம் வரைக்கும் உள்ள நிலங்களில் இஸ்ரவேலர் பயிரிட்ட பயிர்களை அந்த ஜனங்கள் பாழாக்கினர். இஸ்ரவேலர் உண்பதற்கு அவர்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அவர்களது ஆடுகள், பசுக்கள், கழுதைகள் ஆகியவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மீதியானின் ஜனங்கள் வந்து தேசத்தில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அழைத்து வந்தனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல் அவர்கள் மிகுதியாக வந்தனர். எண்ணக் கூடாத அளவிற்கு ஜனங்களையும் ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது. அந்த ஜனங்கள் எல்லோரும் தேசத்திற்குள் நுழைந்து அதனைப் பாழாக்கினர். மீதியானியரின் வருகையால் இஸ்ரவேலர் மிக ஏழைகளாயினர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள்.

மீதியானியர் எல்லாத் தீயகாரியங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். எனவே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். அத்தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். நான் உங்களை விடுவித்து அந்தத் தேசத்திலிருந்து அழைத்து வந்தேன். நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’ 10 பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார்.

கிதியோனை கர்த்தருடைய தூதன் சந்தித்தல்

11 அப்போது கர்த்தருடைய தூதன் கிதியோன் என்னும் பெயருள்ளவனிடம் வந்தான். ஓப்ரா என்னுமிடத்தில் ஒரு கர்வாலி மரத்தின் கீழே கர்த்தருடைய தூதன் வந்து உட்கார்ந்தான். அந்த கர்வாலி மரம் யோவாஸ் என்பவனுக்குச் சொந்தமாயிருந்தது. யோவாஸ் அபியேசேரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். யோவாஸ் என்பவன் கிதியோனின் தந்தை. திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். கர்த்தருடைய தூதன், கிதியோனுக்கருகே உட்கார்ந்தான். மீதியானியர் கோதுமையைப் பார்த்துவிடக் கூடாதென்று கிதியோன் மறைத்துவைக்க முயன்றான். 12 கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான்.

13 அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்” என்றான்.

14 கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார்.

15 ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான்.

16 கர்த்தர் கிதியோனிடம், “நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்” என்றார்.

17 கிதியோன் கர்த்தரிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் நீர்தான் என்பதற்கு ஏதேனும் சான்று காட்டும். 18 இங்கேயே தயவுசெய்து காத்திரும். நான் திரும்பி வரும்வரை எங்கும் போகாதிரும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க அனுமதியும்” என்றான்.

கர்த்தர், “நீ வரும்வரைக் காத்திருப்பேன்” என்றார்.

19 கிதியோன் உள்ளே சென்று, ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்தான். 20 பவுண்டு மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். இறைச்சியை ஒரு கூடையிலும், அது வேகப் பயன்படுத்திய தண்ணீரை ஒரு பானையிலும் எடுத்துக் கொண்டான். இறைச்சியையும், இறைச்சியை வேகவைத்த தண்ணீரையும், புளிப்பற்ற அப்பத்தையும் கிதியோன் கொண்டு வந்தான். கர்வாலி மரத்தின் கீழே அமர்ந்திருந்த கர்த்தருக்கு அந்த உணவைக் கிதியோன் கொடுத்தான்.

20 தேவனுடைய தூதன் கிதியோனை நோக்கி, “இறைச்சியையும், புளிப்பற்ற அப்பத்தையும் அங்கேயிருக்கும் பாறையில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்று” என்றார். கிதியோனும் அவ்வாறே செய்தான்.

21 கர்த்தருடைய தூதன் இறைச்சியையும் அப்பத்தையும் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் தொட்டான். பாறையிலிருந்து நெருப்பு தோன்றி இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதனும் மறைந்து போனான்.

22 அப்போது கிதியோன் தான் கர்த்தருடைய தூதனோடு பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எனவே கிதியோன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நான் கர்த்தருடைய தூதனை நேருக்கு நேராகச் சந்தித்தேன்!” என்று சத்தமிட்டான்.

23 ஆனால் கர்த்தர் கிதியோனிடம், “அமைதியாயிரு! பயப்படாதே! நீ மரிக்கமாட்டாய்!” என்றார்.

24 ஆகையால் கிதியோன் அங்கு தேவனை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். கிதியோன் அப்பலிபீடத்திற்கு “கர்த்தரே சமாதானம்” என்று பெயரிட்டான். ஓப்ரா நகரில் அப்பலிபீடம் இன்றும் உள்ளது. அபியேசர் குடும்பம் வாழும் இடம் ஓப்ரா ஆகும்.

பாகாலின் பலிபீடத்தை கிதியோன் அழித்தல்

25 அதே இரவில் கர்த்தர் கிதியோனிடம் பேசினார். கர்த்தர், “உன் தந்தைக்குச் செந்தமான ஏழு வயதுள்ள முழுமையாக வளர்ந்த காளையை எடுத்துக்கொள். பாகால் என்னும் பொய்த் தெய்வங்களுக்கென்று உன் தந்தை அமைத்த பலிபீடம் ஒன்று உள்ளது. பலிபீடத்தினருகே ஒரு மரத்தூணும் இருக்கிறது. அசேரா என்னும் பொய்த் தேவதையை மகிமைப் படுத்துவதற்காக அத்தூண் அமைக்கப்பட்டது. காளையால் பாகாலின் பலிபீடத்தை வீழ்த்தி, அசேராவின் கோவில் தூணை முறித்துவிடு. 26 அதன் பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தருக்காக முறைப்படி பலிபீடம் கட்டு. மேடான நிலத்தில் அப்பலிபீடத்தைக் கட்டு. பின்பு முழுமையாக வளர்ந்த காளையை அந்தப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்து. அசேரா தூணின் விறகை உனது பலியை எரிப்பதற்குப் பயன்படுத்து” என்றார்.

27 ஆகையால் கிதியோன் தன் வேலையாட்களில் 10 பேரை அழைத்துச்சென்று, தன்னிடம் கர்த்தர் கூறியபடியே செய்தான். அவனது குடும்பத்தாரும் நகர ஜனங்களும் அவன் செய்வதைப் பார்க்கக்கூடும் என்று அவன் பயந்தான். தன்னிடம் கர்த்தர் கூறியபடியே கிதியோன் செய்தான். ஆனால் அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்தான்.

28 நகர ஜனங்கள் மறுநாள் காலையில் விழித்தபோது, பாகாலின் பலிபீடம் அழிக்கப்பட்டிருப்பதையும், அசேராவின் தூண் முறிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். முன்னால் பாகாலின் பீடத்தருகே அசேராவின் தூண் இருந்த இடத்தில் கிதியோன் கட்டிய பலிபீடத்தையும், அதில் பலியிடப்பட்டிருந்த காளையையும் அவர்கள் கண்டனர்.

29 நகர ஜனங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “பலிபீடத்தை அழித்தவன் யார்? அசேராவின் தூணை உடைத்தவன் யார்? புதிய பலீபீடத்தில் காளையைப் பலியிட்டவன் யார்?” என்று கேட்டனர். அவர்கள் பல கேள்விகளைக் கேட்டு, அக்காரியங்களைச் செய்தவன் யார் என்பதை அறிய விரும்பினார்கள்.

ஒருவன் அவர்களுக்கு, “யோவாஸின் மகனாகிய கிதியோன் இதனைச் செய்தான்” என்றான்.

30 எனவே, நகர ஜனங்கள் யோவாஸிடம் வந்தனர். அவர்கள் யோவாஸிடம், “நீ உனது மகனை வெளியே அழைத்து வா. அவன் பாகாலின் பலிபீடத்தைத் தரைமட்ட மாக்கினான். பலிபீடத்தருகிலுள்ள அசேராவின் தூணை உடைத்தான். எனவே உன் மகன் மரிக்க வேண்டும்” என்றனர்.

31 தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து யோவாஸ், “நீங்கள் பாகாலுக்காகப் பரிந்து பேசுகிறீர்களா? பாகாலை மீண்டும் பாதுகாக்கப் போகிறீர்களா? பாகாலைச் சார்ந்திருக்கிறவன் எவனோ, அவன் காலைக்குள் கொல்லப்படக்கடவன். பாகால் உண்மையிலேயே பலமுள்ள தேவனாக இருந்தால் அவனது பலிபீடத்தை ஒருவன் அழிக்கும்போது தன்னை காப்பாற்றிக்கொண்டிருக்கலாமே” என்றான்.

32 யோவாஸ், “கிதியோன் பாகாலின் பலிபீடத்தை அழித்திருந்தால், பாகால் அவனோடு வழக்காடட்டும்” என்றான். அந்நாளில் யோவாஸ் கிதியோனுக்கு ஒரு புதிய பெயரிட்டான். அவனை யெருபாகால் என்று அழைத்தான்.

கிதியோன் மீதியானியரை முறியடித்தல்

33 இஸ்ரவேலரை எதிர்ப்பதற்கு மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கிலுள்ள பிற ஜனங்களும் ஒன்றாகக் கூடி வந்தனர். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டுத் தங்கினார்கள். 34 கர்த்தருடைய ஆவி கிதியோனுக்குள் வந்து மிகுந்த வல்லமை பெற்றான். அபியேசர் குடும்பம் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு கிதியோன் எக்காளம் ஊதி அழைத்தான். 35 மனாசேயின் கோத்திரத்தினரிடம் கிதியோன் செய்தி தெரிவிப்போரை அனுப்பினான். அவர்கள் மனாசேயின் ஜனங்களிடம் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராகும்படி கூறினார்கள். ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரத்தினரிடமும் அவன் செய்தி தெரிவிக்கும் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அதே செய்தியைத் தெரிவிப்பதற்குச் சென்றனர். கிதியோனையும் அவனது ஆட்களையும் சந்திப்பதற்காக அந்தக் கோத்திரத்தினர் சென்றனர்.

36 அப்போது கிதியோன் தேவனிடம், “இஸ்ரவேலரைக் காப்பதற்கு எனக்கு உதவுவதாகக் கூறினீர். அதற்குச் சான்று தாரும். 37 நான் தரையில் ஆட்டுத் தோலைப் போடுவேன். தரையெல்லாம் உலர்ந்திருக்க, தோலில் மட்டும் பனி பெய்திருந்தால், நீர் கூறியபடியே இஸ்ரவேலரை மீட்பதற்கு என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிவேன்” என்றான்.

38 அவ்வாறே நடந்தது. கிதியோன் காலையில் எழுந்து செம்மறியாட்டுத் தோலைப் பிழிந்தான். ஒரு கிண்ணம் நிறைய தண்ணீரைப் பிழிந்தெடுக்க முடிந்தது.

39 அப்போது கிதியோன் தேவனை நோக்கி, “என்னிடம் கோபங்கொள்ளாதிரும். இன்னும் ஒரே ஒரு விஷயம் குறித்து மட்டும் உம்மிடம் கேட்டுவிடுகிறேன். ஆட்டுத்தோலால் உம்மை மீண்டும் ஒருமுறை சோதிப்பேன். இம்முறை தரையெல்லாம் பனியால் ஈரமாயிருக்க, தோல் மட்டும் உலர்ந்திருக்கச் செய்யும்” என்றான்.

40 அன்றிரவு தேவன் அவ்வாறே நடக்கச் செய்தார். செம்மறியாட்டுத் தோல் உலர்ந்திருந்தது. தரையோ பனியால் ஈரமாயிருந்தது.

அதிகாலையில் யெருபாகாலும் (கிதியோன்) அவனது ஆட்களும் ஆரோத்திலுள்ள நீருற்றினருகில் தம் முகாம்களை ஏற்படுத்திக்கொண்டனர், மோரே என்னும் மலையடிவாரத்திலுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். இப்பகுதி, கிதியோனும் அவனது ஆட்களும் தங்கி இருந்த பகுதிக்கு வடக்கில் இருந்தது.

கர்த்தர் கிதியோனை நோக்கி, “மீதியானியரை வெல்வதற்கு உனது ஜனங்களுக்கு உதவப்போகிறேன். ஆனால் அவ்வேலைக்கு தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான வீரர்கள் உன்னோடிருக்கிறார்கள். இஸ்ரவேலர் என்னை மறந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொண்டதாக எண்ணுவதை நான் விரும்பவில்லை. எனவே இப்போது உன் வீரர்களுக்கு இதனை அறிவித்துவிடு. அவர்களிடம், ‘பயப்படுகிற எவனும் கீலேயாத் மலையை விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று கூறு” என்றார்.

அப்போது 22,000 பேர் கிதியோனை விட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். ஆனாலும் 10,000 பேர் மீதி இருந்தனர்.

அப்போது கர்த்தர் கிதியோனை நோக்கி, “இப்போதும் ஆட்கள் மிகுதியாக இருக்கிறார்கள், அவர்களை தண்ணீரருகே அழைத்துச் செல். உனக்காக அவர்களை அங்கு பரிசோதிப்பேன். ‘இந்த மனிதன் உன்னோடு செல்வான்’ என்று நான் கூறினால் அவன் போவான். ‘அவன் உன்னோடு செல்லமாட்டான்’ என்று நான் கூறினால் அவன் போகமாட்டான்” என்றார்.

எனவே கிதியோன் அவர்களை தண்ணீரருகே அழைத்துச் சென்றான். அங்கு கர்த்தர் கிதியோனை நோக்கி, “உனது ஆட்களில் நாயைப்போல் தண்ணீரை நக்கிக் குடிப்போரை ஒரு குழுவாகவும், மண்டியிட்டு தண்ணீரை குடிப்போரை மற்றொரு குழுவாகவும் பிரித்து விடு” என்றார்.

கைகளால் தண்ணீரை அள்ளி நாயைப் போல் நக்கிப் பருகியோர் 300 பேர். மற்ற எல்லோரும் மண்டியிட்டுத் தண்ணீரைப் பருகினார்கள். கர்த்தர் கிதியோனை நோக்கி, “நாயைப் போல் தண்ணீரை நக்கிய 300 பேரையும் நான் பயன்படுத்துவேன். நீ மீதியானியரை முறியடிக்கும்படி செய்வேன். பிறர் வீடுகளுக்குத் திரும்பட்டும்” என்றார்.

எனவே கிதியோன் பிற இஸ்ரவேலரைத் திருப்பி அனுப்பிவிட்டான். 300 மனிதரை மட்டும் கிதியோன் தன்னோடு இருக்கச் செய்தான். வீட்டிற்குச் சென்றவர்களது பொருட்களையும், எக்காளங்களையும் அந்த 300 பேரும் வைத்துக் கொண்டனர்.

கிதியோனின் முகாமிற்குக் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். இரவில் கர்த்தர் கிதியோனிடம், “எழுந்திரு, நீ மீதியானியரின் சேனையைத் தோற்கடிக்கச் செய்வேன். அவர்களின் முகாமிற்குச் செல். 10 தனியே செல்ல நீ பயப்பட்டால் உன் வேலைக்காரனாகிய பூராவையும் உன்னோடு அழைத்துச் செல். 11 மீதியானியரின் முகாமிற்குள் செல். அங்கே ஜனங்கள் பேசும் செய்திகளைக் கவனித்துக்கொள். அதன்பின் அவர்களைத் தாக்குவதற்கு அஞ்சமாட்டாய்” என்றார்.

எனவே கிதியோனும் அவனது வேலையாளாகிய பூராவும் பகைவர் முகாமின் ஓரத்திற்குச் சென்றனர். 12 அப்பள்ளத்தாக்கில் மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கிலிருந்து வந்த அனைத்து ஜனங்களும் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். வெட்டுக் கிளிகளின் கூட்டத்தைப் போல அவர்கள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தனர். கடற்கரை மணலைப் போன்று அவர்களுக்கு ஒட்டகங்கள் இருந்ததுபோல் தோன்றிற்று.

13 கிதியோன் பகைவரின் முகாமை நெருங்கி ஒரு மனிதன் பேசுவதைக் கேட்டான். அம்மனிதன் அவனது நண்பனுக்குத் தான் கண்ட கனவைக் கூறிக்கொண்டிருந்தான். அம்மனிதன், “மீதியானியரின் முகாமில் ஒரு உருண்டை வடிவமான அப்பமானது உருண்டு வருவதாகக் கனவுக் கண்டேன். அந்த அப்பம் மிக வலிமையாக முகாமைத் தாக்கியதால் கூடாரம் தாக்குண்டு தரைமட்டமாக விழுந்தது” என்றான்.

14 அம்மனிதனின் நண்பன் கனவின் பொருளை அறிந்திருந்தான். அம்மனிதனின் நண்பன், “உன் கனவிற்கு ஒரே ஒரு பொருளுண்டு. உனது கனவு இஸ்ரவேலின் மனிதனைப் பற்றியது. அது யோவாஸின் மகனாகிய கிதியோனைக் குறித்து உணர்த்துகிறது. மீதியானியரின் எல்லா சேனைகளையும் கிதியோன் தோற்கடிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் என்று இது பொருள்படுகிறது” என்றான்.

15 அம்மனிதர்கள் கனவையும் அதன் பெருளையும்பற்றிப் போசுவதை அவன் கேட்ட பின்னர், கிதியோன் தேவனை விழுந்து வணங்கினான். பின் அவன் இஸ்ரவேலரின் முகாமிற்குத் திரும்பிப் போனான். கிதியோன் ஜனங்களை அழைத்து, “எழுந்திருங்கள்! மீதியானியரை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்வார்” என்றான். 16 பின்பு கிதியோன் 300 பேரையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். கிதியோன் ஒவ்வொருவருக்கும் ஒரு எக்காளத்தையும் ஒரு வெறுமையான ஜாடியையும் கொடுத்தான். ஒவ்வொரு ஜாடியினுள்ளும் ஒரு எரியும் தீப்பந்தம் இருந்தது. 17 கிதியோன் அம்மனிதரைப் பார்த்து, “என்னைக் கூர்ந்து கவனித்து நான் செய்வதைச் செய்யுங்கள். பகைவரின் முகாம்வரைக்கும் என்னைத் தொடர்ந்து வாருங்கள். பகைவர்களது முகாமின் ஓரத்தை நான் அடைந்ததும் நான் செய்வதையே நீங்களும் செய்யுங்கள். 18 நீங்கள் எல்லோரும் பகைவரின் முகாம்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். நானும் என்னோடிருக்கும் ஆட்களும் எக்காளங்களை ஊதுவோம். நாங்கள் எக்காளங்களை ஊதியதும் நீங்களும் உங்கள் எக்காளங்களை ஊதுங்கள். உடனே சத்தமாக இவ்வாறு கூறுங்கள்: ‘கர்த்தருக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூறுங்கள்” என்றான்.

19 கிதியோனும் அவனோடிருந்த 100 மனிதர்களும் பகைவரது முகாமின் ஓரத்தை அடைந்தார்கள். பகைவர்கள் இரவுக் காவலாளரை மாற்றினதும் அவர்கள் அங்கு வந்தடைந்தனர். அது நள்ளிரவு ஜாமக்காவலின்போது நடந்தது. கிதியோனும் அவனது மனிதர்களும் எக்காளங்களை ஊதி, அவர்களுடைய ஜாடிகளை உடைத்தனர். 20 உடனே எல்லாக் குழுவினரும் எக்காளங்களை ஊதி ஜாடிகளை உடைத்தார்கள். அம்மனிதர்கள் தீப்பந்தங்களை இடது கைகளிலும், எக்காளங்களை வலது கைகளிலும் ஏந்திக் கொண்டனர். அவர்கள் எக்காளங்களை ஊதியதும், “கர்த்தருக்கென்று ஒரு பட்டயம், கிதியோனுக்கென்று ஒரு பட்டயம்!” எனச் சத்தமிட்டனர்.

21 கிதியோனின் மனிதர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டனர். முகாமிற்குள் மீதியானின் மனிதர்கள் கதறிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர். 22 கிதியோனின் 300 மனிதர்களும் எக்காளங்களை ஊதியபொழுது, மீதியானியர் ஒருவரையொருவர் தங்கள் வாள்களால் கொல்லும்படியாக கர்த்தர் செய்தார். சேரோ நகரத்திற்கு அருகேயுள்ள பெத்சித்தா என்னும் நகரத்திற்கு பகைவரின் படைகள் ஓட்டம் எடுத்தனர். தாபாத் நகரத்தின் அருகேயுள்ள ஆபேல்மேகொலா நகரத்தின் எல்லை வரைக்கும் அவர்கள் ஓடிச் சென்றார்கள்.

23 நப்தலி, ஆசேர், மனாசே கோத்திரத்தினரைச் சேர்ந்த வீரர்கள் மீதியானியரைத் துரத்துமாறு அனுப்பப்பட்டனர். 24 கிதியோன் எப்பிராயீமின் மலைநாடுகளுக்கெல்லாம் செய்தி அறிவிப்போரை அனுப்பினான். அவர்கள், “கீழிறங்கி வந்து மீதியானியரைத் தாக்குங்கள். பெத்தாபராவரைக்கும் யோர்தான் நதிமட்டும் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வாருங்கள். மீதியானியர் அங்கு வந்து சேரும்முன்னர் இதைச் செய்யுங்கள்” என்றார்கள்.

எனவே அவர்கள் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்களை அழைத்தனர். பெத்தாபரா வரைக்கும் நதிப்பிரதேசத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 25 எப்பிராயீம் மனிதர்கள் மீதியானிய தலைவர்களில் இருவரைப் பிடித்தனர். அவர்களின் பெயர்கள்: ஓரேபும், சேபும் ஆகும். எப்பிராயீம் ஆட்கள் ஓரேப் பாறை என்னுமிடத்தில் ஓரேபைக் கொன்றனர். சேப் ஆலை என்னுமிடத்தில் அவர்கள் சேபைக் கொன்றனர். எப்பிராயீம் மனிதர்கள் மீதியானியரைத் தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் அவர்கள் முதலில் ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை வெட்டி, அத்தலைகளைக் கிதியோனிடம் கொண்டு வந்தனர். அச்சமயம் கிதியோன் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கும் இடத்தில் இருந்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center