Beginning
5 இஸ்ரவேல் ஜனங்கள் கடந்துபோகும் மட்டும் கர்த்தர் யோர்தான் நதியை உலர்ந்து போகச் செய்தார். யோர்தான் நதிக்குக் கிழக்கிலிருந்து மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழி முழுவதும் வாழ்ந்த எமோரியரின் அரசர்களும், மத்தியதரைக் கடலின் கரையில் வாழ்ந்த கானானிய அரசர்களும் இதைக் கேள்விப்பட்டு மிகவும் பயந்தார்கள். அதற்குப்பின் அவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து நின்று போர் செய்வதற்குத் துணியவில்லை.
இஸ்ரவேலர் விருத்தசேதனம் செய்யப்படுதல்
2 அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நெருப்பை உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்து இஸ்ரவேலின் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்” என்றார்.
3 எனவே யோசுவா நெருப்பு உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்தான். பின் அவன் இஸ்ரவேல் ஜனங்களை கிபியாத் ஆர்லோத் என்னுமிடத்தில் விருத்தசேதனம் செய்தான்.
4-7 அவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்த காரணம் இதுதான்: இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு, படையில் பங்குவகிக்கக்கூடிய ஆண்கள் எல்லோருக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. பாலைவனத்திலிருந்தபோது, போர் செய்யும் ஆண்களில் பலர் கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே கர்த்தர் அந்த ஜனங்கள், “நன்றாக விளைகிற தேசத்தைக் காணமாட்டார்கள்” என்று உறுதியாகக் கூறினார். கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாக உறுதி கூறியும், அம்மனிதர்களினிமித்தம், தேவன் ஜனங்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அவர்கள் மரிக்கும்வரை அலையச் செய்தார். போர் செய்யும் அந்த ஆண்கள் மரித்தனர், அவர்கள் மகன்கள் போரிடும் ஸ்தானத்தை ஏற்றார்கள். ஆனால் பாலைவனத்தில் பிறந்த சிறுவர் எவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே யோசுவா அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தான்.
8 யோசுவா எல்லா மனிதருக்கும் விருத்தசேதனம் செய்து முடித்தான். அவர்கள் குணமடையும்வரைக்கும் அங்கேயே முகாமிட்டிருந்தார்கள்.
கானானில் முதல் பஸ்கா
9 அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நீங்கள் அனைவரும் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். அது உங்களை வெட்கமடையச் செய்தது. ஆனால் இன்று நான் அவ்வெட்கத்தைப் போக்கிவிட்டேன்” என்றார். எனவே யோசுவா அவ்விடத்திற்குக் “கில்கால்” எனப் பெயரிட்டான். இன்றளவும் அந்த இடம் “கில்கால்” என்றே அழைக்கப்படுகிறது.
10 எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாடினர். அப்போது மாதத்தின் பதினான்காவது நாள் மாலையாக இருந்தது. 11 பஸ்காவிற்கு மறு நாள், ஜனங்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டனர். புளிப்பின்றி செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் அவர்கள் சாப்பிட்டனர். 12 மறுநாள், காலையில் வானத்திலிருந்து கிடைத்த விசேஷ உணவு காணப்படவில்லை. கானானில் விளைந்த உணவைச் சாப்பிட்ட நாளில் அது நிகழ்ந்தது. அப்போதிலிருந்து இஸ்ரவேலின் ஜனங்கள் வானத்திலிருந்து விசேஷ உணவைப் பெறவில்லை.
The Commander of the Lord’s Army
13 யோசுவா எரிகோவை நெருங்கியபோது அண்ணாந்து பார்த்து, அவனுக்கு முன்பாக ஒருவர் நிற்பதைக் கண்டான். அவர் கையில் ஒரு வாள் இருந்தது. யோசுவா அவரிடம் சென்று, “நீர் எங்கள் ஜனங்களின் நண்பரா, அல்லது எங்கள் பகைவரில் ஒருவரா?” என்று கேட்டான்.
14 அவர் அதற்கு பதிலாக, “நான் உன் பகைவன் அல்ல. கர்த்தருடைய படையின் சேனாதிபதி நான். நான் உன்னிடம் இப்போதுதான் வந்திருக்கிறேன்” என்றார்.
உடனே யோசுவா தன் மரியாதையை வெளிப்படுத்துவதற்கு தரையில் விழுந்து வணங்கினான். அவன், “நான் உமது ஊழியன். எனது எஜமானராகிய நீர் ஏதேனும் எனக்குக் கட்டளை வைத்திருக்கிறீரா?” என்று கேட்டான்.
15 கர்த்தருடைய படையின் சேனாதிபதி, “உனது பாதரட்சையைக் கழற்று. நீ நிற்குமிடம் பரிசுத்தமானது” என்று கூறினார். யோசுவா அவ்வாறே கீழ்ப்படிந்தான்.
எரிகோ பிடிக்கப்படுதல்
6 எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள். நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை.
2 அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “பார், நீ எரிகோ நகரத்தை வீழ்த்தும்படி செய்வேன். நீ அந்நகரத்தின் அரசனையும், போர் செய்யும் ஜனங்களையும் தோற்கடிப்பாய். 3 உனது சேனையோடு ஒவ்வொரு நாளும் நகரை ஒரு முறை சுற்றிச் செல். ஆறு நாட்கள் இவ்வாறு செய். 4 வெள்ளாட்டுக் கடாவின் கொம்பால் செய்த எக்காளங்களை ஏழு ஆசாரியர்கள் சுமக்கும்படி சொல். பரிசுத்தப் பெட்டியையும் சுமந்து செல்லுங்கள். ஆசாரியர்களை பரிசுத்தப் பெட்டிக்கு முன் அணிவகுத்துச் செல்லும்படி கூறு. ஏழாம் நாள், ஏழுமுறை அணிவகுத்துச் செல்லும் போது ஆசாரியர்களிடம் எக்காளம் ஊதும்படி கூறு. 5 ஆசாரியர்கள் எக்காளத்தை உரத்த குரலில் ஊதும் சத்தத்தை நீ கேட்டதும், எல்லா ஜனங்களையும் உரத்த சத்தம் எழுப்பச் சொல். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, நகரத்தின் சுவர்கள் இடிந்து விழும். உனது ஜனங்கள் நகரத்திற்குள் நுழைவார்கள்” என்றார்.
The Battle Against Jericho
6 நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து அவர்களிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து செல்லுங்கள். ஏழு ஆசாரியர்களிடம் எக்காளத்தைச் சுமந்துக்கொண்டு பெட்டிக்கு முன் அணிவகுத்துப் போகச்சொல்லுங்கள்” என்றான்.
7 பின் யோசுவா ஜனங்களிடம், “இப்போது புறப்பட்டுச் செல்லுங்கள்! நகரைச் சுற்றிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக ஆயுதமேந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்” என்றான்.
8 யோசுவா ஜனங்களிடம் பேசி முடித்த பிறகு, கர்த்தருக்கு முன்பாக அந்த ஏழு ஆசாரியர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஏழு எக்காளங்களை ஏந்திக் கொண்டு, அணிவகுத்துச் சென்றபோது ஊதினார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். 9 ஆயுதமேந்திய வீரர்கள் ஆசாரியர்களுக்கு முன்பு சென்றனர். பரிசுத்தப் பெட்டிக்குப் பின்பு சென்றோர் அணிவகுத்துச் செல்லும்போது, எக்காளம் ஊதினார்கள். 10 போர் முழக்கம் செய்யாதபடிக்கு யோசுவா ஜனங்களுக்குக் கூறியிருந்தான். அவன், “சத்தம் போடாதீர்கள். நான் சொல்லும் நாள் வரைக்கும் எந்த வார்த்தையும் பேசாதீர்கள். அதன் பிறகு சத்தமிடலாம்!” என்றான்.
11 நகரத்தைச் சுற்றிலும் ஒருமுறை கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் சுமந்து வருமாறு யோசுவா செய்தான். பின்பு அவர்கள் முகாமிட்டிருக்கும் இடத்திற்குச் சென்று இரவைக் கழித்தனர்.
12 மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர். 13 ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள். 14 எனவே இரண்டாம் நாளும், அவர்கள் எல்லோரும் நகரைச் சுற்றிலும் ஒருமுறை சென்றனர். பின் அவர்கள் முகாமிற்குத் திரும்பினார்கள். இவ்வாறே ஆறு நாட்கள் தொடர்ந்து செய்தனர்.
15 ஏழாவது நாள், அதிகாலையிலேயே எழுந்து நகரத்தைச் சுற்றிலும் ஏழு முறை நடந்தனர். முந்தின நாட்களில் நடந்து சென்றதுபோலவே சென்றார்கள். ஆனால், அன்றைய தினம் ஏழுமுறை நகரைச் சுற்றி வந்தனர். 16 ஏழாவது முறை நகரைச் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது, யோசுவா: “இப்போது, சத்தமிடுங்கள்! கர்த்தர் இந்நகரத்தை உங்களுக்குத் தருகிறார்! 17 நகரமும் அதிலுள்ளவை அனைத்தும் கர்த்தருக்குரியவை. ராகாப் என்னும் வேசியும் அவள் வீட்டினரும் மட்டுமே உயிரோடிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனென்றால் ராகாப் இரண்டு ஒற்றர்களுக்கும் உதவினாள். 18 எல்லாவற்றையும் நாம் அழிக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். எந்தப் பொருட்களையும் எடுக்காதீர்கள். அவற்றை எடுத்து நமது முகாமிற்குக்கொண்டு வந்தால் நீங்கள் அழிக்கப்படுவதுடன், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லலோருக்கும் தொல்லையை வரவழைப்பீர்கள். 19 எல்லா வெள்ளியும், பொன்னும், வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கர்த்தருக்குரியவை. அப்பொருட்கள் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.
20 ஆசாரியர்கள் எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டு ஜனங்கள் ஆரவாரம் செய்தபோது சுவர்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் நேரே நகரத்திற்குள் நுழைந்தனர். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரை வென்றனர். 21 அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர்.
22 யோசுவா இரண்டு ஒற்றரோடும் பேசினான். யோசுவா, “அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்” என்றான்.
23 அவ்விதமே அவ்விருவரும் அவளுடைய வீட்டிற்குள் சென்று ராகாபை அழைத்து வந்தனர். அவளது தந்தை, தாய், சகோதரர், அவள் குடும்பத்தினர், அவளோடிருந்த ஜனங்கள் எல்லோரையும் வெளியே அழைத்து வந்து, இஸ்ரவேலரின் முகாமிற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை வைத்தனர்.
24 பின் இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தை எரித்தனர். வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு ஆகியவற்றாலான பொருட்களைத் தவிர பிறவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். அப்பொருட்களை மட்டும் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்ந்தனர். 25 ராகாப் என்னும் வேசியையும், அவளது குடும்பத்தாரையும், அவளோடிருந்தவர்களையும் யோசுவா காப்பாற்றினான். யோசுவா எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பியபோது ராகாப் அவர்களுக்கு உதவியதால் யோசுவா அவர்களை வாழவிட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இன்னும் ராகாப் வாழ்கிறாள்.
26 அப்போது:
“எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும்
கர்த்தரால் அழிவைக் காண்பான்.
இந்த நகரின் அஸ்திபாரத்தை இடுபவன்,
தன்னுடைய முதலாவதாகப் பிறந்த மகனை இழப்பான்.
நகரவாயிலை அமைப்பவன்
தனது கடைசி மகனை இழப்பான்”
என்ற சாப அறிவிப்பை யோசுவா வெளியிட்டான்.
27 கர்த்தர் யோசுவாவோடிருந்தார். நாடு முழுவதும் யோசுவாவின் புகழ் பரவியது.
ஆகானின் பாவம்
7 இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருந்தனர். சிம்ரி என்பவனின் பேரனும், கர்மீ என்பவனின் மகனுமாகிய யூதா கோத்திரத்தைச் சார்ந்த ஆகான் என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அழிக்கப்பட வேண்டிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தான். எனவே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் மிகுந்த கோபமடைந்தார்.
2 அவர்கள் எரிகோவை தோற்கடித்த பிறகு, யோசுவா சில மனிதரை ஆயீக்கு அனுப்பினான். ஆயீ, பெத்தாவேனுக்கு அருகில், பெத்தேலுக்குக் கிழக்காக உள்ளது. யோசுவா அவர்களிடம், “ஆயீக்குச் சென்று அவ்விடத்தின் பெலவீனங்களைத் தெரிந்து வாருங்கள்” என்றான். அம்மனிதர்களும் அந்த இடத்தை உளவறிந்து வருவதற்கு சென்றனர்.
3 பின்னர் அவர்கள் யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயீ ஒரு பலவீனமான பகுதி. அவ்விடத்தை தோற்கடிக்க நம் ஜனங்கள் அனைவரும் தேவையில்லை. 2,000 அல்லது 3,000 ஆட்களை அங்கு போர்செய்ய அனுப்புங்கள். படை முழுவதையும் பயன்படுத்த வேண்டியிராது. நம்மை எதிர்த்துப் போர் செய்வதற்குச் சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள்.
4-5 எனவே சுமார் 3,000 மனிதர் ஆயீக்குப் போனார்கள். ஆனால் ஆயீயின் ஜனங்கள், இஸ்ரவேலரில் சுமார் 36 பேரைக் கொன்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் ஓடிவிட்டனர். நகரவாசலிலிருந்து இஸ்ரவேலரை மலைச் சரிவு வரைக்கும் துரத்தினார்கள். ஆயீயின் ஜனங்கள் அவர்களைப் பயங்கரமாகத் தோற்கடித்தனர்.
இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டு அஞ்சி, துணிவிழந்தனர். 6 யோசுவா இதைக் கேட்டபோது, துயரமுற்றுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து வணங்கினான். மாலைவரைக்கும் அங்கேயே இருந்தான். இஸ்ரவேலரின் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு சாம்பலைத் தலையில் தூவிக்கொண்டனர்.
7 யோசுவா, “எனது ஆண்டவராகிய கர்த்தாவே! எங்கள் ஜனங்களை நீர் யோர்தான் நதியைக் கடக்க வைத்தீர். ஏன் எங்களை இத்தனை தூரம் அழைத்து வந்து எமோரியரால் அழிவுற வைக்கிறீர்? நாங்கள் திருப்தியோடு யோர்தானின் அக்கரையில் வாழ்ந்திருக்கலாம்! 8 கர்த்தாவே! எனது உயிரின் மீது ஆணையிடுகிறேன், நான் சொல்லக்கூடியது எதுவுமில்லை. இஸ்ரவேலரைப் பகைவர்கள் சூழ்ந்துள்ளனர். 9 கானானியரும் இந்நாட்டின் எல்லா ஜனங்களும் நடந்ததை அறிவார்கள். அவர்கள் எங்களைத் தாக்கி அழிப்பார்கள்! அப்போது உமது மேலான பெயரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்வீர்” என்றான்.
10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்! 11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். 12 அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன்.
13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம்.
14 “‘நானை காலையில் கர்த்தரின் முன்பாக எல்லோரும் வரவேண்டும். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன்பு நிற்கும்போது, கர்த்தர் ஒரு கோத்திரத்தாரைத் தேர்ந்தெடுப்பார். அப்போது அந்தக் கோத்திரத்தினர் கர்த்தரின் முன் நிற்கவேண்டும். கர்த்தர் அந்தக் கோத்திரத்திலிருந்து ஒரு வம்சத்தை தேர்ந்தெடுப்பார். பின் அவ்வம்சத்திலிருந்து கர்த்தர் ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பார். பின் கர்த்தர் அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பார். 15 அழிக்க வேண்டிய பொருளை வைத்திருக்கிறவன் அப்போது அகப்படுவான். அம்மனிதனும், அவனுக்குச் சொந்தமானவையெல்லாம் அவனோடு நெருப்பினால் அழிக்கப்படவேண்டும். அம்மனிதன் கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை மீறினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த தீமையான காரியத்தைச் செய்தான்!’ என்று சொல்” என்றார்.
16 மறுநாள் அதிகாலையில், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரின் முன்னால் நிற்கும்படி செய்தான். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன் நின்றனர். கர்த்தர் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார் 17 எனவே அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாக் குழுக்களும் கர்த்தருக்கு முன்னே நின்றனர். கர்த்தர் சேரா குழுவினரைத் தேர்ந்தெடுத்தார். பின் சேரா குழுவினரின் எல்லாக் குடும்பத்தாரும் கர்த்தருக்கு முன்னே நின்றார்கள். சிம்ரியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
18 யோசுவா அக்குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கர்த்தருக்கு முன் வருமாறு கூறினான். கர்த்தர் கர்மீயின் மகன் ஆகானைத் தேர்ந்தெடுத்தார். (கர்மீ சிம்ரியின் மகன், சிம்ரி சேராவின் மகன்.)
19 யோசுவா ஆகானை நோக்கி, “மகனே, உனது விண்ணப்பங்களைச் சொல். நீ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தி, உனது பாவங்களை அவரிடம் கூறு. நீ செய்ததை எனக்குக் கூறு. என்னிடமிருந்து எதையும் மறைக்காதே!” என்றான்.
20 ஆகான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தது உண்மை. நான் செய்தது இதுவே: 21 நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான்.
22 எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது. 23 அவர்கள் அப்பொருட்களைக் கூடாரத்திற்கு வெளியே எடுத்து வந்து, அவற்றை யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கொண்டு சென்று, கர்த்தருக்கு முன் அவற்றைத் தரையில் போட்டனர்.
24 சேராவின் மகனாகிய ஆகானை யோசுவாவும், ஜனங்களும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வெள்ளி, மேலாடை, பொன், ஆகானின் மகன்கள், மகள்கள், அவனது ஆடு மாடுகள், கழுதைகள் கூடாரம், பிற பொருட்களையும் ஆகோர் பள்ளத்தாக்கில் சேர்ப்பித்தனர். 25 அப்போது யோசுவா, “எங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகளுக்கு நீ காரணமாக இருந்தாய்! இப்போது கர்த்தர் உனக்குத் தொல்லையளிப்பார்!” என்றான். அப்போது ஜனங்கள் ஆகானின் மீதும் அவன் குடும்பத்தினர் மீதும் அவர்கள் மரிக்கும்படி கற்களை வீசினார்கள். பிறகு ஜனங்கள் அவர்களின் உடல்களையும் அவர்களின் பொருட்களையும் எரித்தனர். 26 ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.
ஆயீ அழிக்கப்படுதல்
8 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் அரசனை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன். 2 எரிகோவுக்கும் அதன் அரசனுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் அரசனுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார்.
3 யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான். 4 யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக்குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள். 5 நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம். 6 அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம். 7 அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
8 “கர்த்தர் கூறுகிறபடியே நீங்கள் செய்ய வேண்டும். என்னைக் கவனியுங்கள். நகரத்தைத் தாக்குவதற்கான கட்டளையை நான் இட்டதும் நகரத்தைக் கைப்பற்றி, அதற்குத் தீ மூட்டுங்கள்” என்றான்.
9 யோசுவா அம்மனிதர்களை மறைவிடங்களுக்கு அனுப்பியபின் காத்திருந்தான். அவர்கள் பெத்தேலுக்கும் ஆயீக்கும் மத்தியிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர். அது ஆயீக்கு மேற்கிலிருந்தது. அன்றிரவு யோசுவா தனது ஜனங்களோடு தங்கியிருந்தான்.
10 மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர். 11 யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12 அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான். 13 யோசுவா அவனது ஆட்களைப் போருக்குத் தயாராக்கினான். நகரத்திற்கு வடக்கே பெரிய முகாம் இருந்தது. மற்ற ஆட்கள் மேற்கே மறைந்திருந்தனர். இரவில் யோசுவா பள்ளத்தாக்கினுள் இறங்கிச் சென்றான்.
14 இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் அரசனும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் அரசன் நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை.
15 யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர். 16 நகரத்து ஜனங்கள் சத்தமிட்டுக் கொண்டே, யோசுவாவையும் அவனது மனிதர்களையும் துரத்த ஆரம்பித்தனர். எல்லா ஜனங்களும் நகரத்திற்கு வெளியே வந்தனர். 17 ஆயீ, பெத்தேல் ஆகியவற்றின் எல்லா ஜனங்களும் இஸ்ரவேல் படையைத் துரத்தினார்கள். நகரம் திறந்திருந்தது. யாரும் நகரத்தைப் பாதுகாப்பதற்காகப் பின் தங்கவில்லை.
18 அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் ஈட்டியை ஆயீ நகரத்திற்கு நேராக நீட்டு, நான் உனக்கு அந்நகரத்தைக் கொடுப்பேன்” என்றார். எனவே யோசுவா ஆயீ நகரத்திற்கெதிராக அவனது ஈட்டியை நீட்டினான். 19 மறைந்திருந்த இஸ்ரவேலர் இதைக் கண்டனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து நகரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். பிறகு வீரர்கள் நகரத்திற்கு நெருப்பூட்டினர்.
20 ஆயீ நகர ஜனங்கள் திரும்பிப் பார்த்து, தங்கள் நகரம் எரிவதையும், வானத்திற்கு நேராகப் புகை எழும்புவதையும் கண்டனர். எனவே அவர்கள் தங்கள் வலிமையையும் துணிவையும் இழந்து, இஸ்ரவேலரைத் துரத்துவதைக் கைவிட்டனர். இஸ்ரவேலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி ஆயீ நகர மக்களோடு போரிட்டனர். ஆயீ நகர ஜனங்கள் ஓடி ஒளிவதற்கு எந்த இடமும் அகப்படவில்லை. 21 யோசுவாவும் அவனது ஆட்களும், நகரம் தங்கள் வசமானதையும், நகரத்திலிருந்து புகையெழுவதையும் கண்டதும் ஓடுவதை நிறுத்தி, திரும்பிவந்து, ஆயீ நகர ஜனங்ககளை எதிர்த்தனர். 22 அப்போது ஒளிந்திருந்த மனிதர்களும் நகரத்திலிருந்து வந்து போரில் உதவினார்கள். ஆயீ நகர ஜனங்களை இஸ்ரவேலர் இருபுறமும் சூழ்ந்து வளைந்துகொண்டனர். இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்தனர். ஆயீ நகர மனிதர்கள் தப்பி, உயிரோடிராதபடி இஸ்ரவேலர் அவர்களோடு போரிட்டு அழித்தனர். 23 ஆனால், ஆயீ நகர அரசனை உயிரோடு பிடித்து யோசுவாவிற்கு முன்னால் வீரர்கள் கொண்டு வந்தனர்.
போரைப்பற்றிய விமர்சனம்
24 போரின்போது, இஸ்ரவேலின் படை வீரர்கள் ஆயீ நகர ஜனங்களை வயல்களுக்கும், பாலைவனத்திற்கும் துரத்தினார்கள். ஆயீயின் மனிதர்களை இஸ்ரவேல் சேனையினர் வயல்களிலும், பாலைவனத்திலும் கொன்று குவித்தனர். பின் இஸ்ரவேல் வீரர்கள் ஆயிக்குச் சென்று அங்கு உயிரோடிருந்த ஜனங்களையும் கொன்றனர். 25 ஆயீயின் எல்லா ஜனங்களும் அன்று மரித்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாக 12,000 பேர் இருந்தனர். 26 தனது ஆட்கள் நகரை அழிப்பதற்கு அடையாளமாக யோசுவா அவனது ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்தான். நகரத்தின் ஜனங்கள் அனைவரும் அழியும்வரைக்கும் அவ்வாறே நின்றிருந்தான். 27 இஸ்ரவேலர் மிருகங்களையும், பிற பொருட்களையும் தங்களுக்காக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் இவ்வாறு செய்யும்படி கர்த்தர் ஏற்கெனவே யோசுவாவிடம் கூறியிருந்தார்.
28 யோசுவா ஆயீ நகரை எரித்தான். அந்நகரம் வெறும் கற்களின் குவியலாக்கப்பட்டது. இன்று வரைக்கும் அது அப்படியே உள்ளது. 29 ஆயீயின் அரசனை யோசுவா ஒரு மரத்தில் தூக்கிலிட்டான். மாலையில், அரசனின் உடலை அப்புறப்படுத்துமாறு தனது ஆட்களுக்குக் கூறினான். அவர்கள் நகர வாசலுக்கு வெளியே அவனது உடலை வீசி, பின் அவ்வுடலைக் கற்களால் மூடினார்கள். கற்களின் குவியலும் இன்றளவும் அங்கேயே உள்ளது.
ஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல்
30 அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான். 31 இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான். மோசேயின் சட்ட புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தபடி யோசுவா பலிபீடத்தைக் கட்டினான். வெட்டப்படாத கற்களால் பலிபீடம் கட்டப்பட்டது. அக்கற்களின் மீது எந்த கருவியும் பட்டிருக்கவில்லை. கர்த்தருக்குத் தகன பலிகளை அப்பலிபீடத்தில் செலுத்தினர். சமாதான பலிகளையும் செலுத்தினர்.
32 அவ்விடத்தில் யோசுவா மோசேயின் சட்டங்களைக் கற்களில் எழுதினான். இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லோரும் பார்க்கும்படியாக அவன் இதைச் செய்தான். 33 பரிசுத்தப் பெட்டியைச் சூழ்ந்து தலைவர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேலரும் நின்றனர். கர்த்தருடைய உடன்படிக்கையுள்ள பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களுக்கு முன்னே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இஸ்ரவேலின் ஜனங்களும், பிறரும் அங்கே நின்றிருந்தனர். பாதி ஜனங்கள் கூட்டத்தினர் ஏபால் மலைக்கு முன்பும், மற்றொரு பாதியினர் கெரிசீம் மலைக்கு முன்னேயும் நின்றார்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இப்படி செய்யும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான்.
34 சட்டங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் அப்போது யோசுவா வாசித்தான். ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் குறித்து வாசித்தான். சட்ட புத்தகத்தில் எழுதியிருந்த முறைப்படியே எல்லாவற்றையும் வாசித்தான். 35 இஸ்ரவேலரோடு வாழ்ந்த அந்நியரும், எல்லாப் பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்தனர். மோசே கொடுத்த ஒவ்வொரு கட்டளையையும் யோசுவா வாசித்தான்.
2008 by World Bible Translation Center