Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 8-10

கர்த்தரை நினை

“நான் இன்று கொடுக்கின்ற எல்லாக் கட்டளைகளையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் வாழ்ந்து வளர்ந்து உயர்ந்ததொரு சமுதாயமாக வரமுடியும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களிடம் சொன்னதுபோல் நீங்கள் சுதந்திரமான தேசத்தைப் பெறமுடியும். இந்தப் பாலைவனத்தில் கடந்துவந்த 40 ஆண்டு காலத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை நடத்தி வந்த எல்லா வழிகளையும் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். கர்த்தர் உங்களை சோதித்துக்கொண்டிருந்தார். உங்களைத் தாழ்மையானவர்களாக்க அவர் விரும்பினார். உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை அறிய அவர் ஆசைப்பட்டார். அவரது கட்டளைகளை நீங்கள் ஒழுங்காகப் பின்பற்றுகிறீர்களா என்பதை அவர் அறிய விரும்பினார். கர்த்தர் உங்களைத் தாழ்மையாக்கி உங்களைப் பசியால் வருத்தி, பின் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் இதுவரை பார்க்காத, “மன்னா” என்னும் உணவை உண்ணச் செய்தார். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? ஏனென்றால் மனிதன் வெறும் அப்பத்தைத் தின்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவர்கள் கர்த்தர் கூறியதைக் கேட்பதினாலேயே வாழலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார். கடந்த 40 ஆண்டுகளில் உங்களது ஆடைகள் பழைமையடைந்து போகவிடவில்லை. உங்களது கால்கள் வீக்கமடைந்துவிடவில்லை. (ஏனென்றால் கர்த்தர் உங்களைப் பாதுகாத்தார்.) உங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு தந்தை தன் மகனுக்கு கற்றுக்கொடுத்து அவனைத் திருத்துவதுபோல் தேவன் உங்களுக்கு விளக்கினார்.

“அத்தகைய உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றைப் பின்பற்றி அவரை மதிக்கவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு நல்ல தேசத்திலே வசிக்க அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கு பள்ளத்தாக்குகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் புறப்படுகின்ற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளும் தண்ணீர்வளம் நிறைந்தது. அந்த நிலம் கோதுமையையும், பார்லியையும், திராட்சைக் கொடிகளையும், அத்தி மரங்களையும், மாதுளஞ் செடிகளையும் விளைவிக்கும் வளமான நிலம். அது ஒலிவ மரங்களையும், எண்ணெய், தேன் ஆகியவற்றையும் கொடுக்கவல்ல நிலமாகும். அங்கே நீங்கள் தாராளமாக உண்டு வாழலாம். உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அது, பாறைகள் இரும்பாக இருக்கும் தேசமாக உள்ளது. அங்குள்ள மலைகளிலிருந்து செம்பு உலோகத்தை நீங்கள் வெட்டி எடுக்கலாம், 10 அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள்.

கர்த்தர் செய்தவற்றை மறந்துவிடாதே

11 “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 12 பின், நீங்கள் தாராளமான திருப்தியான உணவை உண்ணலாம். வசதியான வீடுகளை நீங்கள் கட்டி அவைகளை அனுபவித்து வாழலாம். 13 உங்களது ஆடு, மாடு, வெள்ளாடுகள் பெருகி வளார்ச்சியடையும். பொன்னும், வெள்ளியும் மிகுதியாகப் பெறலாம். நீங்கள் எல்லாவற்றையும் தாராளமாக அடையலாம்! 14 இவற்றையெல்லாம் அனுபவிக்கும்போது நீங்கள் கர்வம் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் கர்த்தர் உங்களை விடுவித்து அங்கிருந்து வெளியேற்றி இங்கு அழைத்து வந்தார். 15 மிகப்பெரிய பயங்கரமான பாலைவனத்தின் வழியாகக் கொள்ளிவாய் பாம்புகளும், கொடிய தேள்களும் நிறைந்த அந்தப் பாலைவனத்தில் வறண்ட நிலமாகத் தண்ணீரே இல்லாத கொடிய பாலைவனமாக இருந்தது. ஆனால், கர்த்தர் அங்கே பாறைகளுக்கு அப்பால் இருந்து உங்களுக்குத் தண்ணீரைத் தந்தார். 16 அந்தப் பாலைவனத்தில் உங்கள் முற்பிதாக்களும் பார்த்திராத ‘மன்னா’ என்னும் உணவை உங்களுக்கு உண்ணக் கொடுத்தார். கர்த்தர் உங்களைச் சோதித்தார். ஏன்? ஏனென்றால், முடிவில் எல்லாம் உங்களுக்கு நன்றாய் நடக்கும்படிக்கு தேவன் உங்களைப் பணியச் செய்தார். 17 ‘எனது சொந்த ஆற்றலினாலும், திறமையினாலுமே எல்லா வகையான இந்த வசதிகளைப் பெற்றேன்’ என்று ஒருநாளும் உனக்குள் சொல்லிவிடாதே. எச்சரிக்கையாய் இரு! 18 உங்கள் தேவனாகிய கர்த்தரையே நினைப்பீர்களாக! அவரே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தமது உடன்படிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, இந்நாளில் உங்களுக்கு இருக்கின்றச் செல்வங்களை, நீங்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றலைத் தந்தார்.

19 “உங்கள் தேவனாகிய கர்த்தரை என்றைக்கும் மறந்துவிடாதீர்கள். மற்ற பொய்த் தெய்வங்களை ஒருபோதும் பின்பற்றிவிடாதீர்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால் நான் இன்று உங்களை எச்சரிக்கின்றேன், நீங்கள் கண்டிப்பாக அழிந்துவிடுவீர்கள்! 20 கர்த்தர் உங்களுக்காக உங்கள் எதிரிகளை அழித்தார். ஆனால் நீங்களோ அவர்களின் பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றினால், உங்களையும் அவர்களைப் போன்றே அழித்துவிடுவார். ஏனென்றால் நீங்கள் தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுப்பதை நிறுத்திவிட்டீர்கள்!

கர்த்தர் இஸ்ரவேலருடன் இருப்பார்

“இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த ஆற்றினைக் கடந்து செல்பவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே உங்களால் ஏனாக்கியர்களை எதிர்க்க முடியும். தேவன் அக்கினியைப் போல் அவர்களை அழித்துவிடுவார்! கர்த்தர் அந்த ஜனங்களை அழித்துவிடுவார். அவர்களை உங்கள் முன்னால் வீழச்சியடையச் செய்வார். அவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடுவீர்கள். நீங்கள் அவர்களை விரைவில் அழித்துவிடுவீர்கள். தேவன் உங்களுக்குச் சொன்னபடியே இது விரைவில் நிகழும்.

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து அவர்களை உங்களுக்கு முன்பாகவே துரத்திடுவார். ஆனால், ‘நாம் நல்லவர்கள் என்பதால் கர்த்தர் நம்மை இந்த தேசத்திற்கு சுதந்திரமாக வாழும்படி அழைத்து வந்தார்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளாதீர்கள். அந்த ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியதற்கு நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள் என்பதால் அல்ல, அவர்கள் தீயவர்களாக இருந்தனர் என்பதே காரணமாகும், நீங்கள் நல்லவர்களாயும் நேர்மையாயும் வாழ்ந்ததால் அவர்களது தேசத்தில் சுதந்திரமாக வாழப் போகிறீர்கள் என்பதல்ல. தீயவழிகளில் அவர்கள் வாழ்வதினால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை வெளியே துரத்தினார். அதனாலேயே நீங்கள் அங்கே போகின்றீர்கள். அதுமட்டுமின்றி, தேவன் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் செய்த வாக்கினை நிறைவேற்ற விரும்பினார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் சுதந்திரமாக வசிக்க உங்களுக்கு இந்த நல்ல தேசத்தை தருகின்றார். ஆனால் நீங்கள் நல்லவர்கள் அல்ல, மிகவும் பிடிவாதமுள்ள ஜனங்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

கர்த்தரின் கோபத்தை நினைத்துப்பார்

“பாலைவனத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் ஏற்படுத்திய கோபத்தினை நினைத்துப் பாருங்கள், மறந்துவிடாதீர்கள்! நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இவ்விடத்தில் வந்து சேரும்வரை கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். ஒரேப் மலையிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீக்கள்! கர்த்தர் உங்களை அழித்துவிட நினைக்கும் அளவிற்கு கோபத்தை உண்டாக்கினீர்கள். கர்த்தர் உங்களுக்காக உடன்படிக்கையை எழுதிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலைமீது ஏறிச்சென்றேன். மலை மீதே 40 நாட்கள் இரவும், பகலும் தங்கினேன். நான் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன். 10 அப்போது கர்த்தர் என்னிடம் அந்தக் கற்பலகைகளைத் தந்தார். தேவன் அவரது கட்டளைகளை அந்த இரண்டு கற்பலகைகளில் தமது விரல்களால் எழுதியிருந்தார். தேவன் எழுதிய ஒவ்வொன்றும் நீங்கள் மலையருகில் கூடியபோது அக்கினியின் நடுவிலிருந்து பேசிய வார்த்தைகளின்படியே இருந்தன.

11 “இரவும் பகலுமாய் 40 நாட்கள் முடிந்த பின்பு, கர்த்தர் அந்த உடன்படிக்கையின்படி எழுதிய இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் கொடுத்தார். 12 பின் கர்த்தர் என்னிடம், ‘நீ எழுந்து இங்கிருந்து விரைவாக இறங்கிப்போ.. நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள், என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை இவ்வளவு விரைவாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் பொன்னை வார்த்து தங்களுக்கென்று ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார்கள்’ என்று கூறினார்.

13 “மேலும் கர்த்தர் என்னிடம், ‘நான் இந்த ஜனங்களைக் கவனித்தேன். இவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள்! 14 என்னைவிட்டு விடு! இவர்கள் எல்லோரையும் அழித்து விடுகிறேன். இவர்களில் ஒருவரது பெயரைக்கூட தங்கவிடமாட்டேன்! உன்னிடமிருந்து இவர்களைவிட மிகப் பெரிய பலம் வாய்ந்த ஜனங்கள் இனத்தை உருவாக்குவேன்’ என்று கூறினார்.

தங்கக் கன்றுக்குட்டி

15 “பின் மலையிலிருந்து திரும்பி கீழே இறங்கி வந்தேன். மலையானது அக்கினியால் எரிந்தது. உடன்படிக்கையை எழுதிய இரண்டு கற்பலகைகளும் என் கைகளில் இருந்தன. 16 நான் உங்களைக் கவனித்தபோது உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்ததைப் பார்த்தேன். தங்கத்தில் வார்க்கப்பட்ட கன்றுக்குட்டியை உருவாக்கியதை நான் பார்த்தேன்! கர்த்தர் உங்களுக்கு இட்ட வழியை விட்டு நீங்கள் வேகமாக விலகிச் சென்றதைக் கண்டேன்! 17 எனவே நான் எடுத்துவந்த இரண்டு கற்பலகைகளையும் ஓங்கி கீழே எறிந்தேன். உங்களின் கண்கள் முன்னாலேயே கற்பலகைகளை துண்டுத் துண்டுகளாகப் போட்டு உடைத்தேன். 18 பின் உங்களுடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்பாக முன்போல் மீண்டும் 40 நாட்கள் இரவு பகலாக விழுந்து கிடந்தேன். எவ்வகை உணவும் உண்ணவில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை. எதற்காக இதனைச் செய்தேன் என்றால் நீங்கள் செய்த பாவங்கள் மிகக் கொடுமையானவை. நீங்கள் செய்த இந்த செயல்கள் கர்த்தருக்குச் செய்த தீமைகள் ஆகும். கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள். 19 கர்த்தருக்கு இருந்த கடுமையான கோபத்தைக் கண்டு நான் பயந்தேன். உங்களை அழிக்கின்ற அளவுக்கு அவர் கோபம் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் நான் மன்றாடியதைக் கேட்டார். 20 ஆரோன் மீதும் கர்த்தர் கடுங்கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டும் என்றிருந்தார்! ஆனால் ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன். 21 நீங்கள் உருவாக்கிய எரிச்சலூட்டும் அந்தக் கன்றுக்குட்டியை எடுத்து தீயிலிட்டுக் கொளுத்தி தூள் தூளாக்கும்படி செய்தேன். அவற்றைப் புழுதியாகும்படிச் செய்தேன். பின் அந்தச் சாம்பலை மலையிலிருந்து வரும் ஆற்றில் போட்டுவிட்டேன்.

இஸ்ரவேலரை மன்னிக்கும்படி மோசே தேவனிடம் மன்றாடியது

22 “தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீர்கள். 23 காதேஸ்பர்னேயாவிலிருந்து விலகி வரச் செய்யும்போது கர்த்தர் உங்களிடம் சொன்னதைக் கேட்காமல் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள். கர்த்தர் உங்களிடம், ‘நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தை சுதந்திரமாக வாழ எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய நீங்கள் மறுத்தீர்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கவில்லை. கர்த்தருடைய கட்டளைகளையும் கவனிக்கவில்லை. 24 நான் உங்களைப்பற்றி அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்து வருகிறீர்கள்.

25 “ஆகவே கர்த்தருக்கு முன், இரவு பகலாக 40 நாட்கள் விழுந்து கிடந்தேன். ஏனென்றால், கர்த்தர் உங்களை அழித்துவிடுவதாகச் சொன்னார். 26 நான் கர்த்தரிடம் இவ்வாறு வேண்டினேன்: கர்த்தாவே! எங்கள் ஆண்டவரே! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். அவர்கள் உமக்கு உரியவர்கள். எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும், பலத்தினாலும் அவர்களை விடுவித்து அழைத்து வந்தீர். 27 உமது சேவகர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களிடம் நீர் சொன்ன வாக்கினை நினைத்துப் பாரும். உமக்கு இணங்காமல் போன இவர்களை மன்னியும். இவர்கள் சென்ற தீய வழிகளையும், செய்த பாவங்களையும் பாராது இருப்பீராக. 28 அப்படியும் உமது ஜனங்களாகிய இவர்களைத் தண்டிக்க விரும்பினால், அதைக் காணும் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி, இந்த ஜனங்களை அந்த தேசத்திற்கு அழைத்துச்சென்று சுதங்திரமாக்க முடியவில்லை. கர்த்தர் இவர்களை வெறுத்தார். எனவே, அவர் இவர்களை பாலைவனத்திற்குக் கொல்வதற்கென்று அழைத்துச் சென்றார்’ என்றும் கூறுவார்கள். 29 ஆனால், அவர்கள் உமது ஜனங்களே! கர்த்தாவே! இவர்கள் எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும் பலத்தினாலும் உம்மால் அழைத்து வரப்பட்ட உமது ஜனங்களாவார்கள்.

புதிய கற்பலகைகள்

10 “அந்த நேரத்தில், கர்த்தர் என்னிடம், ‘நீ முதலில் வைத்திருந்ததைப்போன்று இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏறி என்னிடம் வா. ஒரு மரப்பெட்டியையும் செய்து எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் உள்ள அதே வார்த்தைகளை நான் இந்தப் புதிய கற்பலகைகளின் மீது எழுதுவேன். பின் நீ அவ்விரு கற்பலகைகளையும் அந்த மரப் பெட்டிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.’

“அதன்படி நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தேன். முதலில் வைத்திருந்ததைப் போல் இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். பின் நான் மலையின் மீது ஏறிச் சென்றேன். இரண்டு கற்பலகைகளையும் கையில் வைத்திருந்தேன். முன்னர் நீங்கள் அனைவரும் கூட்டமாக கூடிவந்த நாளில், மலையில் அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடுப் பேசிய அந்த பத்துக் கட்டளைகளையும் அவர் அப்போது எழுதித் தந்ததின்படியே இந்தப் பலகைகளிலும் எழுதினார். பின் கர்த்தர் அந்த இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் தந்தார். மலையில் இருந்து திரும்பிக் கீழே இறங்கி வந்தேன். நான் செய்திருந்த மரப் பெட்டிக்குள் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படியே அப்பெட்டியில் அவைகளை வைத்தேன். இன்றுவரையிலும் அந்தக் கற்பலகைகள் அந்தப் பெட்டிக்குள்ளேயே உள்ளன.”

(இஸ்ரவேல் ஜனங்கள் பெனெயாக்கானுக்கு அடுத்த பேரோத்திலிருந்து மோசாராவிற்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் மரித்துவிட்டான். அவனை அடக்கம் செய்தார்கள். ஆரோனின் மகன் எலெயாசார் ஆரோனின் இடத்தில் ஆசாரியனாக ஊழியம் செய்தான். பின் இஸ்ரவேல் ஜனங்கள் அங்கிருந்து குத்கோதாவுக்கு சென்றனர். அங்கிருந்து ஆறுகள் ஓடும் தேசமான யோத்பாத்துக்கும் சென்றனர். அந்த நேரத்தில் கர்த்தர் மற்ற கோத்திரத்திலிருந்து லேவி குடும்பத்தைத் தனியாகப் பிரித்தெடுத்தார். லேவி குடும்பத்தை தமது சிறப்புப் பணிகளுக்காக பிரித்தெடுத்துக்கொண்டார். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கர்த்தருக்கு முன் பணியாற்றும் ஆசாரியர்களாக இருந்தனர். கர்த்தருடைய நாமத்தால் ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியும், ஆராதனை செய்தும் வந்தனர். அவர்கள் இன்று வரையிலும் இந்தச் சிறப்புப் பணிகளைச் செய்து வருகின்றார்கள். இதனாலேயே மற்ற கோத்திரத்தினர் பெற்ற நிலப்பங்கினைப் போல் லேவியின் கோத்திரம் பெறவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தபடி கர்த்தர் தாமே லேவியருக்கு சொத்தும் சுதந்திரமுமாக இருப்பார்.)

10 “நான் முன்பு தங்கியதைப்போல மலையின் மேலே 40 நாட்கள் இரவும், பகலுமாய் தங்கியிருந்தேன். கர்த்தர் இந்த முறையும் நான் வேண்டியதை கேட்டு அருளினார். நான் வேண்டியபடியே கர்த்தர் உங்களை அழிக்காமல்விட்டார். 11 கர்த்தர் என்னிடம், ‘நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடி, அந்தத் தேசத்தில் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு, அவர்களுக்கு முன் தலைமையேற்றுப் பயணப்பட்டுப் போ’ என்றார்.

கர்த்தரின் உண்மையான விருப்பம்

12 “இப்போதும், இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து உண்மையிலேயே விரும்புவது என்ன? கர்த்தர் உங்களிடம் விரும்புவது, நீங்கள் அவருக்கும் அவர் சொன்னவற்றுக்கும் மதிப்பளித்து அதன்படி செய்ய வேண்டும். தேவன் விரும்புவது, நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதையும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உங்கள் முழுமனதோடும், உங்களின் முழு ஆத்மதிருப்தியுடனும் சேவைச் செய்வதே. 13 ஆகையால், நான் இன்று உங்களுக்கு வழங்குகின்ற கர்த்தருடைய கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களின் நன்மைக்கென்றே இந்தக் கட்டளைகளும், சட்டங்களும் உள்ளன.

14 “எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை. 15 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள்.

16 “உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள். 17 ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். 18 அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். 19 எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள்.

20 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். அவரைவிட்டு ஒரு போதும் விலகாதீர்கள். நீங்கள் எப்போது வாக்களித்தாலும் நமது தேவனுடயை நாமத்தை பயன்படுத்த வேண்டும். 21 நீங்கள் நமது தேவனையே போற்றிப் புகழவேண்டும். கர்த்தரே உங்கள் தேவன். அவரே உங்கள் தேவன் முன்பு இந்த அற்புதங்களையும் மகத்துவங்களையும் உங்களுக்காச் செய்தார். நீங்கள் அனைவரும் உங்கள் கண்களால் அவர் செய்த அனைத்தையும் பார்த்தீர்கள். 22 உங்கள் முற்பிதாக்களில் எழுபது பேரே எகிப்திற்குள் சென்றார்கள். ஆனால் இன்றோ உங்கள் தேவனாகிய கர்த்தர் வானில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களைப்போல் உங்களை மிகப்பெரிய ஜனங்கள் சமுதாயமாக உருவாக்கியுள்ளார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center