Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 14-16

இஸ்ரவேலர் தேவனின் விசேஷ ஜனங்கள்

14 “நீங்கள் எல்லோரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள். உங்களில் ஒருவன் மரித்ததற்காக நீங்கள் உங்களை கீறிக்கொள்ளாமலும், மொட்டையடித்து சவரம் செய்யாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் நீங்கள் மற்ற ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த உலகில் உள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே தமது சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

இஸ்ரவேல் ஜனங்கள் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவுகள்

“கர்த்தர் வெறுக்கின்ற எந்தப் பொருளையும் நீங்கள் உண்ணக்கூடாது. நீங்கள் உண்ணத்தகுந்த மிருகங்களாவன: மாடுகள், செம்மறி ஆடு, வெள்ளாடு, மான், வெளிமான், கலைமான், வரையாடு, புள்ளிமான், சருகுமான், புல்வாய், ஆகியனவாகும். நீங்கள் கால்களில் விரிகுளம்புகளுடைய மிருகங்களையும், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கின்ற மிருகங்களையும், அசைபோடுகின்ற சகல மிருகங்களையும உண்ணலாம். ஆனால் ஒட்டகங்களையும், முயல்களையும் குழிமுயல்களையும் உண்ணக் கூடாது. இவைகள் அசைபோடும் மிருகங்களாக இருந்தாலும் அவைகளுக்கு விரிகுளம்புகள் இல்லை. ஆகவே அந்த மிருகங்கள் உங்களுக்கு அசுத்தமான உணவாகும். நீங்கள் பன்றிகளை உண்ணக்கூடாது. அவை விரிகுளம்பு உள்ளதாய் இருந்தாலும் அசை போடாது. ஆகவே இவை உங்களுக்கு சுத்தமான உணவு இல்லை. இவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. இவற்றின் மரித்த உடலைக்கூட தொடக்கூடாது.

“நீங்கள் துடுப்பும், செதில்களும் உள்ள எந்த வகையான மீனையும் உண்ணலாம். 10 ஆனால் துடுப்புகளும். செதில்களும் இல்லாத தண்ணீருக்குள் வசிக்கும் எதையும் உண்ணக்கூடாது. இவை உங்களுக்கான சுத்தமான உணவு அல்ல.

11 “சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் உண்ணலாம். 12 ஆனால் கழுகுகள், கருடன்கள், கடலுராஞ்சிகள் ஆகியவற்றையும், 13 பைரி, வல்லூற்று எவ்வகை பருந்தும், 14 எந்த வகையான காகங்களும், 15 தீக்குருவி, கூகை, செம்புகம், சகலவிதமான டேகையும், 16 ஆந்தை, கோட்டான், நாரைகள், 17 கூழக் கடா, குருகு, தண்ணீர்க் காகம், 18 கொக்கு, சகலவித ராஜாளியும், புழுக்கொத்தி, வௌவால், ஆகியவற்றை உண்ணக்கூடாது.

19 “பறப்பனவற்றில் எல்லா வகையான ஊர்வன யாவும் சுத்தமற்றவை. ஆகவே அவற்றை உண்ணக் கூடாது. 20 ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம்.

21 “தானாக மரித்துப்போன எந்த விலங்கையும் உண்ண வேண்டாம். நீங்கள் அவற்றை உங்கள் ஊரிலுள்ள வழிப்போக்கருக்குக் கொடுத்துவிடலாம், அவர்கள் அதனை உண்ணலாம். அல்லது அந்நியருக்கு விற்றுவிடலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் அவற்றை உண்ணக்கூடாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனங்கள்.

“வெள்ளாட்டுக் குட்டியை, அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்.

பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பது

22 “உங்கள் வயல்களின் எல்லா விளைச்சலிலுமிருந்து பத்தில் ஒரு பங்கை வருடந்தோறும் தனியாக எடுத்து வையுங்கள். 23 அதை நீங்கள் கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொண்ட சிறப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருக்க நீங்கள் அங்கே செல்ல வேண்டும். அந்த இடத்தில் உங்களது தானியத்திலும், உங்களது திராட்சைரசத்திலும், உங்கள் எண்ணெயிலும் எடுத்துவைத்த பத்தில் ஒரு பங்கையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலையீற்றையும் கொண்டுவந்து கர்த்தர் உங்களுக்கு நியமிக்கும் தேவாலயத்தில் உண்டு மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதையளிக்கும்படி எப்பொழுதும் நினைவாயிரு. 24 ஆனால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கின்றபோது தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட இடமானது நீங்கள் குடியிருக்கிற இடத்திலிருந்து, மிகத் தொலைவில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் பத்தில் ஒரு பங்கு காணிக்கைப் பொருட்களை தூக்கி எடுத்துச் செல்ல இயலாமல் போகலாம். அப்படி நடக்குமென்றால் 25 நீங்கள் ஒதுக்கிவைத்த பங்குப் பொருட்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவேண்டும். 26 தேவாலயத்திற்கு வந்த பின்பு, நீங்கள் உங்கள் தேவைக்கேற்ற மாடுகள், ஆடுகள், திராட்சைரசம் போன்ற உணவுப் பொருட்களை அந்த பணத்தினால் வாங்கிக்கொள்ளலாம், பின்பு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்டு மகிழலாம். 27 உங்கள் நகரில் வசிக்கின்ற லேவியரை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (அவர்களுக்கும் உங்கள் உணவை பகிர்ந்தளியுங்கள்) ஏனெனில், அவர்களுக்கு உங்களைப் போன்று எந்த சொத்தும் சுதந்திரமும் கிடையாது.

28 “மூன்று ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் அந்த ஆண்டு உங்களுக்குக் கிடைத்த பலன் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை ஒதுக்கி வைக்கவேண்டும். மற்ற ஜனங்கள் பயன்படுத்தக் கூடிய உங்கள் பட்டணங்களில் அந்த உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருங்கள். 29 இந்த உணவுப் பொருட்கள் லேவியர்களுக்கு சொந்தம் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கென்று சொந்தமான எந்த நிலமும் அவர்களுக்கு இல்லை. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உங்கள் ஊரில் தேவை உள்ள ஜனங்களுக்கும் ஆகும். அது அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும், உரியது, அவர்கள் வந்து உண்டு திருப்தி அடையட்டும். இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.

கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு

15 “ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீங்கள் செய்யவேண்டிய முறையாவது: ஒவ்வொருவரும் தான் மற்ற இஸ்ரவேலருக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை ரத்து செய்துவிட வேண்டும். அவன் மற்ற இஸ்ரவேல் சகோதரனிடம் அந்தப் பணத்தை திரும்ப தன்னிடம் செலுத்துமாறு கேட்கக்கூடாது. ஏனென்றால், கர்த்தர் உங்களுக்குக் கூறியதின்படி அந்தக் கடனை அவ்வாண்டிலேயே ரத்து செய்திட வேண்டும். நீங்கள் அந்நியர்களுக்குக் கொடுத்த கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்கலாம். ஆனால், உன் இஸ்ரவேல் சகோதரனிடம் அவ்வாறு கேட்கக்கூடாது. உங்கள் நாட்டில் ஏழை ஜனங்கள் யாரும் இருக்கக் கூடாது. ஏனென்றால், கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார். ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் மாத்திரம் இது நடக்கும். நான் இன்று உங்களுக்குச் சொன்ன தேவனுடைய ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும். பின்பு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால், நீங்கள் பல ஜாதிகளுக்கு கடன் கொடுப்பீர்கள். ஆனால், நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்கும் அவசியம் உங்களுக்கு இருக்காது. நீங்கள் அவர்களை ஆளலாம். அவர்கள் யாரும் உங்களை ஆள இயலாது.

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள் யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது. நீங்கள் அவனுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடன் கொடுத்து உதவவேண்டும்.

“கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராக கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார்.

10 “அந்த ஏழை நபருக்குத் தாராளமாகக் கொடுங்கள். அவர்களுக்குக் கொடுப்பதை இழிவாகக் கருதாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இந்த நற்செயலைச் செய்வதால் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிப்பார். 11 தேசத்திலே ஏழை எளியவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதனால் தான் உன் தேசத்தில் உள்ள ஏழை எளிய சகோதரனுக்கு நீங்கள் உதவத் தயாராக இருக்கவேண்டுமென நான் கட்டளையிடுகிறேன். அவர்களுக்குத் தேவைப்படும்போது கொடுங்கள்.

அடிமைகள் விடுதலை பெற அனுமதித்தல்

12 “எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும். 13 அவ்வாறு அவர்கள் உங்களிடமிருந்து விடுதலையாகிச் செல்லும்போது, அவர்களை ஒன்றுமில்லாதவர்களாய் அனுப்பிவிடாதீர்கள். 14 நீங்கள் அவர்களுக்கு உங்களது ஆடு மாடுகளில் சிலவற்றையும், கொஞ்சம் தானியத்தையும், கொஞ்சம் திராட்சை ரசத்தையும் கொடுத்து அனுப்ப வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் தாராளமாகக் கொடுக்குமளவு ஏராளமான நன்மைகளால் உங்களை ஆசீர்வதித்தார். அதே போல் நீங்களும் உங்களது அடிமைகளுக்குத் தாராளமாகக் கொடுங்கள். 15 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். அதை நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் இன்று உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கின்றேன்.

16 “ஆனால், உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம். 17 நீங்கள் அந்த அடிமையை உங்கள் வீட்டுக் கதவுக்கு எதிராக நிறுத்தி, ஒரு கூர்மையான சிறிய கம்பியினால் அந்த அடிமையின் காதில் ஒரு துளை போடவேண்டும். அவன் உங்களுக்கு என்றைக்கும் அடிமையாயிருப்பான் என்பதை இது காட்டும், உங்களோடு இருக்க விரும்பும் உங்களின் பெண் அடிமைக்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.

18 “உங்கள் அடிமைகளை விடுதலையாக்கி அனுப்பிவிடுவதை தவறாக எண்ண வேண்டாம். ஆறு ஆண்டுகளாக ஒரு வேலையாளுக்குரிய சம்பளத்தில் பாதிக் கூலிக்கு அவர்கள் உங்களுக்கு சேவை செய்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.

மந்தைகளின் தலையீற்றுகளைப் பற்றிய விதிகள்

19 “உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு மாடுகளின் தலையீற்று ஆண்களையெல்லாம் கர்த்தருக்குரியதாக்குங்கள். அவற்றை உங்கள் பணிகளுக்காகப் பயன்படுத்தாதீர்கள். அவற்றில் உள்ள தலையீற்று ஆட்டினை மயிர் கத்தரியாமல் இருக்க வேண்டும். 20 ஆண்டுதோறும் அவற்றை நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திற்கு எடுத்துச்சென்று, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்ணுங்கள்.

21 “ஆனால், அந்தக் கால்நடைகளுக்கு முடம், குருடு முதலான எந்த ஒரு பழுது இருந்தாலும் அவற்றை உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம். 22 நீங்கள் உங்கள் வீடுகளிலேயே அவற்றின் இறைச்சியை உண்ணலாம். யார் வேண்டுமானாலும், அசுத்தமானவனும் சுத்தமானவனும் அதை உண்ணலாம். வெளிமான்களையும், கலைமான்களையும் புசிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே இந்த இறைச்சியையும் புசிக்கவேண்டும். 23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் உண்ணாமல், அதைத் தண்ணீரைப்போன்று தரையிலே ஊற்றிவிட வேண்டும்.

பஸ்கா

16 “ஆபிப் மாதம் வருவதைக் கவனித்து, அந்த மாதத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவை நீங்கள் கொண்டாட வேண்டும். ஏனென்றால், ஆபிப் மாதத்திலேயே இரவு நேரத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். நீங்கள் எல்லோரும் கர்த்தர் தமக்குச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்திற்கு, அந்தக் கொண்டாட்ட தினத்தில் செல்லவேண்டும். அங்கே, உங்கள் கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடு, மாடுகளைப் பலியிடுவாயாக. அந்த நாளில் புளிப்புள்ள அப்பத்தை நீங்கள் உண்ணக்கூடாது. புளிப்பில்லாத அப்பங்களையே ஏழு நாட்களுக்கு உண்ண வேண்டும், இந்த அப்பங்கள் ‘துன்பத்தின் அப்பங்கள்’ என்று அழைக்கப்படும்! இவை எகிப்தில் நீங்கள் அடைந்த துன்பங்களை நினைவூட்டுவதாக இருக்கும். எவ்வளவு விரைவாக நீங்கள் அந்த தேசத்திலிருந்து வெளியேறினீர்கள் என்பதை பஸ்காதோறும் நீங்கள் உயிரோடு இருக்கின்ற நாளெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏழு நாட்களுக்கு உங்களுடைய தேசத்தில் யார் வீட்டிலும் பளிப்புள்ள அப்பங்கள் இருக்ககூடாது. நீங்கள் முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையும் மறுநாள் காலைவரை மீதி வைக்காமல் உண்டுவிட வேண்டும்.

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய எந்த நகரத்திலும் நீங்கள் பஸ்காவைப் பலியிடக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் தமக்கென்று சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்காவைப் பலியிடவேண்டும். அங்கே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சூரியன் மறையும் மாலைப் பொழுதில் பஸ்காவைப் பலியிடவேண்டும். அந்த நாள் உங்களுக்கு விடுமுறை நாள். உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்கா இறைச்சியை சமைத்து அன்று இரவே உண்ணவேண்டும். பின் மறுநாள் விடியற் காலையில் நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுங்கள். ஆறு நாட்கள் புளிப்பில்லாத அப்பத்தையே நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்த நாளில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.

வாரங்களின் பண்டிகை (பெந்தெகோஸ்தே)

“உங்களது அறுவடைக்காலம் துவங்குவதிலிருந்து ஏழு வாரங்களை எண்ணிக்கொள்ளுங்கள். 10 பின் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் தேவனுக்குக் கொடுக்க விரும்புகின்ற சிறப்பான அன்பளிப்பைக் கொண்டு வருவதின் மூலம் இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்ப உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 11 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்துக்குச் செல்லுங்கள். நீஙகளும் உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதானத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள். அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது வேலையாட்கள், லேவியர்கள், உங்களிடத்தில் இருக்கின்ற அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், ஆகிய எல்லோரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். 12 எகிப்தில் நீங்கள் அடிமைகளாக இருந்ததை எண்ணிப் பாருங்கள். ஆகையால் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்

அடைக்கலக் கூடாரப் பண்டிகை

13 “நீங்கள், உங்கள் தானியக் களத்தின் பலனையும், உங்கள் திராட்சைரச ஆலைகளின் பலனையும் சேர்த்தபின்பு, ஏழு நாட்கள் உங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும். 14 இந்தப் பண்டிகையை உங்களுக்குள் மகிழ்வாகக் கொண்டாடுங்கள். நீங்கள், உங்கள் மகன்கள், உங்கள் மகள்கள், உங்கள் வேலையாட்கள், உங்களை சார்ந்த பகுதியில் வசிக்கும் லேவியர்கள், அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், எல்லோருமாகச் சேர்ந்து கொண்டாடுங்கள், 15 இந்தப் பண்டிகையை உங்கள் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏழு நாட்கள் கொண்டாடி மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும்படி இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது விளைச்சல்களையும், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்களாக!

16 “வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும். 17 ஒவ்வொருவரும் தன் தகுதிக்கு ஏற்றவாறு காணிக்கையைச் செலுத்தவேண்டும். கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்றவாறு உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

ஜனங்களுக்கான நீதிபதிகளும், தலைவர்களும்

18 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் அனைத்துப் பட்டணங்களிலும் நீங்கள் நீதிபதிகளையும், தலைவர்களையும் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு கோத்திரமும் இவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும். 19 நீங்கள் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் மற்ற ஜனங்களை மீறி சிலரை மாத்திரம் ஆதரித்துப் பேசாதீர்கள். நியாயத்தில் உங்கள் மனது புரளாதபடி நீங்கள் லஞ்சம் வாங்காமல் இருங்கள். பணமானது ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நல்லவன் சொல்லக் கூடிய சரியான தீர்ப்பை மாற்றிவிடும். 20 நல்லவற்றையும், நேர்மையானவற்றையுமே நீங்கள் செய்ய வேண்டும்! நீங்கள் எப்போதும் நல்லவராக, நேர்மையானவராக இருப்பதற்குப் பாடுபட வேண்டும்! பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தில் வாழ்வையும், சுதந்திரத்தையும் பெறுவீர்கள்.

தேவன் விக்கிரகங்களை வெறுக்கிறார்

21 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தின் அருகில் அஷெரா தேவதைக்கென்று எந்த ஸ்தம்பத்தையும் வைக்கக் கூடாது. 22 அதுமட்டுமின்றி பொய்யான தெய்வங்களைத் தொழுதுகொள்வதற்கான சிற்ப கற்களையும் அங்கே வைக்ககூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவற்றையெல்லாம் வெறுக்கின்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center