Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 21-23

கொலை செய்யப்பட்டவனைக் குறித்த காரியம்

21 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்தில் உள்ள வயலில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டறிந்தால், அவனைக் கொன்றது யார் என்று யாருக்கும் தெரிய வில்லை என்றால், உங்களது தலைவர்களும், நீதிபதிகளும் அந்த இடத்திற்கு வந்து கொல்லப்பட்ட நபரைச் சுற்றிலும் உள்ள ஊர்களின் தொலைவை அளந்து பார்க்க வேண்டும். மரித்துக்கிடப்பவனுக்கு அருகிலுள்ள ஊர் எது என்பதை நீங்கள் அறிந்தவுடன், அந்த ஊரின் தலைவர்கள், அவர்களது மந்தையிலிருந்து ஒரு மாட்டினைக் கொண்டுவரச் செய்ய வேண்டும். அந்த மாடானது கன்று இல்லாத கிடாரியாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்விதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படாத மாடாக அது இருக்க வேண்டும். அந்த ஊரின் தலைவர்கள் அந்த மாட்டை அந்த ஊரின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவர வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கானது உழுதிட முடியாமலும், எவ்விதப் பயிரையும் பயிர் செய்ய முடியாத நிலமாகவும் இருக்க வேண்டும். பின் அந்த தலைவர்கள் அந்த மாட்டின் தலையைப் பள்ளத்தாக்கில் விழுமாறு வெட்டிப் போடவேண்டும். லேவியின் சந்ததியினரான ஆசாரியர்கள் அத்தருணத்தில் அங்குச் செல்லவேண்டும். (உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவைச் செய்வதற்கும், அவருடைய நாமத்தால் ஜனங்களை ஆசீர்வதிக்கவும் இந்த ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்களே யாருடைய மனதும் புண்படாதவாறு சரியாக விசாரித்து அதற்கேற்ற முடிவை சகல வழக்கிற்கும் ஏற்ற தீர்ப்பாக அளிப்பார்கள்.) கொலை செய்யப்பட்ட மனிதனுக்கு அருகிலுள்ள ஊரின் தலைவர்கள் எல்லோரும், பள்ளத்தாக்கில் கழுத்து வெட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டக் கிடாரின்மேல் தங்கள் கைகளை கழுவிட வேண்டும். பின்பு, அந்தத் தலைவர்கள் சொல்ல வேண்டியது: ‘நாங்கள் இந்த மனிதனைக் கொல்லவில்லை. இது நடந்ததையும் நாங்கள் பார்க்கவில்லை. கர்த்தாவே, இஸ்ரவேலரை காப்பாற்றும், நாங்கள் உமது ஜனங்கள். இப்போதும் எங்கள்மேல் குற்றம் இல்லாத இரத்தப் பழியைச் சுமத்தாமல் காப்பீராக. ஏதுமறியாத மனிதனைக் கொல்லுகின்ற குற்றத்தை சுமத்தாது காப்பீராக,’ இவ்வாறு அவர்கள் குற்றமற்ற ஒருவனைக் கொல்லும் குற்றத்தைச் செய்தவர்களாகமாட்டார்கள். இவ்வாறாக, நீங்கள் சரியானவற்றை செய்வதன் மூலம் உங்களுக்குள்ளிருந்து அந்த குற்றத்தை விலக்குவீர்கள்.

போரில் கைதான பெண்கள்

10 “நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம். 11 அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13 அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள். 14 அவளோடு வாழ்வது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவன் அவளை விவாகரத்து செய்து, அவள் இஷ்டம்போல் அவளை வாழ அனுமதித்து விடவேண்டும். நீங்கள் அவளை விற்க முடியாது. நீங்கள் அவளை அடிமையாக நடத்தவும் கூடாது. ஏனென்றால் உங்களில் ஒருவன் அவளோடு ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டாயிற்று.

மூத்த மகன்

15 “ஒருவன் இரண்டு மனைவிகளைப் பெற்றிருந்து, அவன் ஒருத்தி மேல் மட்டும் மற்றவளைவிட அன்பு செலுத்திட, இரண்டு மனைவிகளும் அவனது குழந்தைகளைப் பெற்றிருக்க, அதில் முதல் குழந்தை, இவன் அதிகம் நேசிக்காத மனைவியின் குழந்தையாக இருக்கலாம். 16 தந்தையானவன் தனது சொத்தினை தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில் தான் நேசிக்காமல் வெறுக்கிற மனைவியிடத்தில் பிறந்த முதல் பிள்ளைக்கு சேஷ்ட புத்திர சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர தான் விரும்பும் மனைவியிடத்தில் பிறந்த குழந்தைக்குக் கொடுக்ககூடாது. 17 அவன் தான் நேசிக்காத மனைவியிடம் பிறந்த முதல் மகனை தனது குடும்பத்தின் மூத்த பிள்ளையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் தனது மூத்த மகனுக்கு தன்னுடைய எல்லாவற்றிலும் இரண்டு பங்கினைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அந்த குழந்தையே மூத்த பிள்ளைக்கான உரிமையைப் பெறுகிறது.

கீழ்ப்படிய மறுக்கும் பிள்ளைகள்

18 “தன் தந்தையின் சொல்லையும், தாயின் சொல்லையும் கேட்காமலும், அவர்களுக்கு அடங்காமலும் கீழ்ப்படிய மறுக்கின்ற தண்டனைக்குரிய மகன் ஒருவனுக்கு இருந்தால் அவனை தண்டித்தும் இன்னும் அவர்கள் சொன்னபடிக் கேட்க மறுப்பவனாய் இருந்தால், 19 அவனது தந்தையும், தாயும் அவனை அழைத்துக்கொண்டு, அந்த ஊர் தலைவர்களிடம் வந்து, ஊர் கூடுமிடத்தில் வந்து நிற்கவேண்டும். 20 அவர்கள் நகரத் தலைவர்களிடம்: ‘எங்களது மகன் எங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்து, எங்களுக்கு அடங்காதவனாக இருக்கிறான். நாங்கள் அவனிடம் செய்யச் சொல்வது எதையும் அவன் செய்வதில்லை. அவன் அளவுக்கு அதிகமாகக் குடிக்கவும், சாப்பிடவும் செய்கிறான்’ என்று சொல்ல வேண்டும். 21 பின் ஊரிலுள்ளவர்கள் அந்த மகனை மரிக்கும்வரை கற்களால் அடிப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மத்தியில் உள்ள இந்த தீமையை விலக்கிவிடுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

கொலைக் குற்றவாளிகள் கொல்லப்படுவதும், தூக்கில் இடப்படுவதும்

22 “ஒருவன் மரணதண்டனை பெறத்தக்க பாவம் செய்த குற்றவாளியாக இருக்கலாம், ஜனங்கள் அவனைக் கொன்ற பிறகு அவனது உடலை மரத்திலே தொங்கவிட வேண்டும். 23 இரவு முழுவதும் அவனது உடலை மரத்திலேயே தொங்கவிடக் கூடாது. அந்த நாளிலேயே அவனை நீங்கள் அடக்கம் செய்திட வேண்டும். ஏனென்றால், மரத்தின்மேல் தூக்கிலிடப்பட்ட அவன் தேவனால் சபிக்கப்பட்டவன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தை நாசபடுத்தக் கூடாது.

பிற சட்டங்கள்

22 “உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் ஆடாவது மாடாவது வழிதப்பிச் செல்வதைக் கண்டால், நீங்கள் அதைக் காணாதவர்போல் இருந்துவிடாதீர்கள். அதை உரியவர்களிடம் திருப்பிக்கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை, அதன் சொந்தக்காரர் உங்களுக்கு அருகில் குடியில்லாதவராகவோ, அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராகவோ இருந்தால் நீங்கள் அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று, உரியவர் தேடிவரும்வரை உங்களிடமே வைத்திருந்து அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும். அது போன்றே அவர்களது கழுதைனயக் கண்டாலும், அவர்களது ஆடைகளையோ மற்றும் எந்தப் பொருளானாலும் சரி, நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தால், அவற்றைக் காணாததுபோல் இராமல் உரியவர்களுக்கு உதவவேண்டும்.

“உங்களின் பக்கத்து வீட்டுக்காரரின் கழுதையாவது, மாடாவது சாலையில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், அதைப் பார்க்காதது போல் சென்றுவிடாமல், நீங்கள் அவருடன் சேர்ந்து தூக்கிவிட உதவிசெய்ய வேண்டும்.

“ஒரு பெண், ஆணின் உடைகளை அணியக் கூடாது. அதுபோல் ஒரு ஆண் பெண்ணின் ஆடைகளை அணியக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இதை மிகவும் வெறுக்கின்றார்.

“பாதைவழியே நீங்கள் நடந்து செல்லும்போது மரத்தில் அல்லது தரையில் ஏதேனும் ஒரு பறவைக் கூட்டைக் கண்டால், அதில் தாய்ப்பறவையானது தன் குஞ்சுகளையாவது, முட்டைகளையாவது அடைகாப்பதைக் கண்டால், நீங்கள் அந்தத் தாய்ப் பறவையை அதன் குஞ்சுகளைவிட்டு பிரிக்கக் கூடாது. நீங்கள் உங்களுக்காக குஞ்சுகளை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தாய்ப் பறவையைப் போக விட்டுவிட வேண்டும். இந்த நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் நன்றாயிருப்பதுடன் நீண்ட காலமும் வாழலாம்.

“நீங்கள் புது வீடு கட்டும்போது உங்களின் மாடித்தளத்தைச் சுற்றிலும் சிறிய சுவர் எழுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் அந்த மாடியிலிருந்து விழுந்து மரித்தவனின் கொலைப்பழியை நீங்கள் சுமக்க வேண்டியதில்லை.

நீங்கள் ஒன்று சேர்க்கக் கூடாதவை

“நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டத்திலேயே பிற தானியங்களையும் விதைக்கக் கூடாது. ஏனென்றால், நீங்கள் விதைத்த பயிர்களையும், திராட்சைத் தோட்டத்தின் பலனையும் பரிசுத்தமற்றதாக ஆக்கிவிடுவீர்கள். அதனால் அவை பயனற்றவையாகிவிடும். அவற்றில் எதனையும் நீங்கள் பயன்படுத்த முடியாது.

10 “நீங்கள் மாட்டையும் கழுதையையும் பிணைந்து உழக்கூடாது.

11 “நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.

12 “நீங்கள் அணிந்து கொள்கின்ற உங்களது மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும், நூல்குஞ்சங்களாலான தொங்கல்களைச் செய்திடவேண்டும்.

திருமணச் சட்டங்கள்

13 “ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்பு, அவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து, 14 அவன் அவள் மீது பொய்யாக, ‘நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளோடு பாலின உறவுகள் வைத்துக்கொள்ளும்போது அவள் கற்பில்லாதவள் என்பதைக் கண்டேன்’ என்று கூறி அதன் மூலம், ஜனங்கள் மத்தியில் அவள் மீது கெட்ட எண்ணங்களை உருவாக்கினால், 15 அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் தன் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்துடன் ஊர் கூடும் இடத்திற்கு வந்து, அவ்வூரின் தலைவர்கள் முன்பு நிற்கவேண்டும். 16 பெண்ணின் தந்தை ஊரின் தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தேன், ஆனால் இப்போது இவன் அவளை வெறுத்து, 17 “நான் உன் மகளிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் மகளுக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான். ஆனால், இதோ என் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் மகளின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார். 18 பின் அவ்வூர்த் தலைவர்கள் அவனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 அவனிடமிருந்து அபராதமாக 100 வெள்ளிக் காசுகளை வாங்கி பெண்ணின் தந்தையிடம் கொடுக்கவேண்டும். (ஏனெனில், அவள் கணவன் இஸ்ரவேல் பெண்ணுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தான்.) பின் அந்தப் பெண் அவனுக்கு தொடர்ந்து மனைவியாக இருக்க வேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.

20 “ஆனால், அவன் கூறியபடி அவனது மனைவி கற்புத்தன்மை இல்லாதவள் என்பது உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லையென்றால், 21 ஊர்த் தலைவர்கள் அந்தப் பெண்ணை அவளது தந்தை வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டு வந்து, ஊர் ஜனங்கள் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலில் அந்தப் பெண் அவமானமான செயல் ஒன்றைச் செய்துள்ளாள். தன் தந்தை வீட்டில் ஒரு வேசியைப் போன்ற செயலைச் செய்த பாவியாக இருந்துள்ளாள். உங்கள் மத்தியில் இந்தத் தீமையை இப்படியே விலக்கிட வேண்டும்.

பாலுறவுப் பாவங்கள்

22 “ஒருவன் மற்றவனது மனைவியுடன் தகாத பாலுறவுகொள்வது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் தகாத உறவு கொண்ட அந்தப் பெண்ணும் ஆணும் ஆகிய இருவரும் மரிக்கவேண்டும். நீங்கள் இந்தத் தீயச் செயலை இஸ்ரவேலிலிருந்து இவ்வாறே விலக்கிவிட வேண்டும்.

23 “ஒருவனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள கற்புள்ள பெண் ஒருத்தியை வேறொருவன் சந்தித்து அவளுடன் பாலுறவு தொடர்பு வைத்துக்கொள்வது நகரில் நடந்ததென்றால், 24 பின் நீங்கள் அவ்விருவரையும் நகர எல்லையின் பொது இடத்திற்குக் கொண்டுவந்து அவர்களைக் கற்களால் எறிந்து கொல்ல வேண்டும். நீங்கள் அவனைக் கொல்வது எதற்கென்றால், அவன் அடுத்தவனது மனைவியைக் கற்பழித்தப் பாவத்திற்காக. அவளைக் கொல்வது எதற்கென்றால், அவள் இந்நகரத்தில் அவ்வாறு நடக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க யாரையும் கூக்குரலிட்டு அழைக்காமல் இருந்ததால். உங்கள் மத்தியிலிருந்து இப்படிப்பட்ட தீமையை இவ்வாறு விலக்கிட வேண்டும்.

25 “ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் கொன்றுவிட வேண்டும். 26 அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. 27 வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம்.

28 “ஒருவன், இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை பலவந்தமாகப் பிடித்து கற்பழிப்புச் செய்ததை மற்ற ஜனங்கள் பார்த்துவிட்டால், 29 அவன் அவளது தந்தைக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுக்கவேண்டும். அவன் அவளைக் கற்பழித்த பாவத்தினால், அவளே அவனது மனைவியாவாள். அவன் வாழ்நாள் முழுவதிலும் அவளை விவாகரத்து செய்திட முடியாது.

30 “எவனும் தன் தந்தையின் மனைவியுடன் பாலின உறவு வைத்துக்கொள்வதால், அவரது மானத்தை வெளிப்படுத்தக்கூடாது.”

ஆராதனையில் கலந்து கொள்ளக்கூடிய ஜனங்கள்

23 “ஆண்மையில்லாதவனாக

விதை நசுங்கப்பட்டவனும், உடலுறவு உறுப்பு துண்டிக்கப்பட்டவனும், இஸ்ரவேல் ஜனங்களது கர்த்தருடைய ஆராதனையில் சேரக்கூடாதவர்கள் ஆவார்கள். ஒருவனது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்யாமல் அவன் பிறந்திருந்தால், அப்படிபட்டவன் இஸ்ரவேலருடன் சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க கூடிவரக் கூடாது. அவர்கள் சந்ததியாரில் பத்தாவது தலைமுறைமட்டும் எவரும் இஸ்ரவேலர்களின் ஆராதனையில் சேரத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

“அம்மோனியனும், மோவாபியனும், இஸ்ரவேல் மனிதர்கள் ஆராதிக்கும் கர்த்தருடைய சபைக்கு ஆகாதவர்கள். அவர்களது சந்ததியாரில் பத்தாம் தலைமுறையினர் கூட என்றைக்கும் கர்த்தரை ஆராதிக்கும் இஸ்ரவேல் ஜனங்களோடே சேர்ந்து வர வேண்டாம். ஏனென்றால் எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் இந்த அம்மோனியரும், மோவாபியரும். உங்களுக்கு அப்பமும், தண்ணீரும் தர மறுத்தார்கள், அது மட்டுமின்றி மெசொபொத்தாமியா நகரமாகிய பேத்தோரில் பேயோரின் மகனான பிலேயாமுக்கு கூலிபேசி உங்களை சபிக்கும்படி செய்ததற்காகவும், அவர்களை தேவனுடைய சபைக்கு உரியவராகாது செய்ய வேண்டும். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் பிலேயாம் கூறியதைக் கேட்க மறுத்தார். கர்த்தர் அந்த சாபத்தையெல்லாம் உங்களுக்காக ஆசீர்வாதங்களாக்கினார். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களை நேசிக்கின்றார். நீங்கள் அந்த ஜனங்களுடன் ஒருபோதும் எவ்வித சமாதானத்திற்கும் முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு கொள்ளக் கூடாது.

இஸ்ரவேல் ஜனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஜனங்கள்

“நீங்கள் ஏதோமியர்களை வெறுக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் உங்கள் உறவினர்கள். நீங்கள் எகிப்தியர்களை வெறுக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் அந்த தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்கள். ஏதோமியருக்கும், எகிப்தியருக்கும் பிறந்த மூன்றாவது தலைமுறையின் குழந்தைகள் இஸ்ரவேலருடன் இணைந்து கர்த்தருடைய சபையில் ஆராதிக்கலாம்.

படை முகாமினை சுத்தமாக பாதுகாப்பது

“நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடச் செல்லும்போது தீட்டான காரியங்கள் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருங்கள். 10 உங்களது போர் முகாமில் ஒருவன் இரவின் கனவுகளினால் சரீரத்தில் அசுத்தமானால் அவன் அந்த முகாமை விட்டு வெளியே போகவேண்டும். அவன் போர் முகாமிற்குள் செல்லாமல் வெளியே தங்கி இருந்து, 11 பின் அன்று மாலையில், தண்ணீரில் குளித்து சூரியன் மறைந்த பின்பே முகாமிற்குத் திரும்பலாம்.

12 “உங்கள் போர் முகாமிற்கு வெளிப் புறத்தில் மலம் கழிக்கும் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 13 உங்களது படைக் கருவிகளுடன் நீங்கள் தரையைத் தோண்டுவதற்காக சிறியகோலையும் வைத்திருக்கவேண்டும். பின் நீங்கள் மலம், சிறுநீர் கழிக்கின்றபோது அச்சிறிய கோலைக் கொண்டு மண்ணைத் தோண்டி அதில் கழிவைச் செய்த பின்பு மூடிவிட வேண்டும். 14 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது போர் முகாமில் உங்களோடே இருந்து, உங்களைக் காத்து, உங்கள் எதிரிகள் உங்களிடம் தோல்வியடைய உதவுகிறார் ஆகையால் அந்தப் போர் முகாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அப்போது கர்த்தர் உங்களுடைய சுத்தமற்ற காரியங்களைக் காணாமலும் உங்களை விட்டுப் போகாமலும் இருப்பார்.

பிற சட்டங்கள்

15 “ஒரு அடிமை தன் எஜமானனிடம் இருந்து உங்களிடம் ஓடி வந்தால் நீங்கள் அவனை அவன் முதலாளியிடமே ஒப்படைத்து விடாதீர்கள். 16 அந்தச் சேவகன் உங்களிடத்தில் எங்கும் அவன் விரும்புகிறபடி பணிசெய்யலாம். அவன் தேர்ந்தெடுக்கிற ஏதாவது நகரில் வாழலாம். நீங்கள் அவனை ஒன்றும் செய்யாதீர்கள்.

17 “எந்த ஒரு இஸ்ரவேல் ஆணோ, பெண்ணோ, ஆலய விபச்சாரக்காரனாகவோ வேசியாகவோ இருக்கக்கூடாது. 18 ஒரு ஆணோ, பெண்ணோ, விபச்சார பாவத்தினால் சம்பாதித்தப் பணத்தை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரக் கூடாது. எந்தவொரு நபரும் அந்த பணத்தை தேவனுக்கு வாக்களித்திருந்த பொருளை வாங்குவதற்கென்று பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்கள் உடல்களை விற்று விபச்சாரப் பாவம் செய்யும் அந்த ஜனங்களை அருவெறுக்கின்றார்.

19 “நீங்கள் வேறு ஒரு இஸ்ரவேல் சகோதரருக்கு கடன் கொடுத்திருப்பீர்கள் என்றால் அதற்கான வட்டியை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்குக் கொடுத்த பணத்தின் மீதோ, உணவின் மீதோ அல்லது வேறு எந்த பொருள் மீதோ நீங்கள் வட்டி வாங்கக் கூடாது. 20 நீங்கள் அந்நியர்களிடமிருந்து வட்டி வசூலித்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இஸ்ரவேல் சகோதரர்களிடம் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றினால், பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் எல்லாச் செயல்களிலும் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வாழப்போகின்ற இந்த தேசத்தில் நீங்கள் செய்யும் எல்லாவற்றினையும் ஆசீர்வதிப்பார்.

21 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஏதாவது பொருத்தனை செய்திருந்தால், அவற்றைச் செலுத்துவதில் தாமதம் செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் அவற்றை செலுத்துமாறு உரிமையோடு கேட்பார். நீங்கள் வாக்களித்தபடி அவற்றை செலுத்தவில்லை என்றால் அது உங்களுக்குப் பாவமாகும். 22 நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் மீது பாவமில்லை. 23 ஆனால் நீங்கள் செய்வதாக உங்கள் வாயினால் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் தேவனுக்குத் தருவதாக விசேஷமான வாக்களித்திருந்தால், நீங்கள் அதை நிறைவேற்றவேண்டும். தேவன் கட்டாயப்படுத்தி உங்களை வாக்களிக்கும்படிச் செய்யவில்லை. நீங்களே தருவதாக வாக்களித்திருந்தால் நீங்கள் சொன்னபடி அவற்றைச் செலுத்தவேண்டும்!

24 “நீங்கள் பிறருடைய திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்துசெல்ல வேண்டியிருந்தால், நீங்கள் விரும்புகின்ற அளவிற்கு அங்குள்ள திராட்சைப் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் போட்டுக்கொள்ளக் கூடாது. (அப்பழங்களை உங்களோடு எடுத்துவராதீர்கள்.) 25 நீங்கள் மற்றவரின் தானியவயல் வழியாக செல்ல வேண்டியிருந்தால் உங்கள் கைகளால் அங்குள்ள கதிர்களைப் பறித்து உண்ணலாம். ஆனால் பிறருடைய அந்த விளைச்சலை நீங்கள் அறுவடை செய்து தூக்கிக்கொண்டு செல்ல எண்ணி அரிவாளைப் போடக் கூடாது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center