Revised Common Lectionary (Semicontinuous)
10 மகளே, கேள்,
கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11 ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
13 அரச குமாரத்தி
பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
ஈசாக்கின் குடும்பம்
19 இது ஈசாக்கின் குடும்ப வரலாறு: ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன். 20 ஈசாக்கிற்கு 40 வயதானபோது அவன் ரெபெக்காளை மணந்துகொண்டான். ரெபெக்காள் பதான் அராம் என்னும் ஊரைச் சேர்ந்த பெத்துவேலின் குமாரத்தி. லாபானுக்குச் சகோதரி. 21 ஈசாக்கின் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே, அவன் தன் மனைவிக்காக கர்த்தரிடம் ஜெபித்தான். ஈசாக்கின் ஜெபத்தைக் கேட்டு, கர்த்தர் ரெபெக்காள் கர்ப்பமடையச் செய்தார்.
22 அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, “ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?” என்று கேட்டாள். 23 அதற்கு கர்த்தர்,
“உனது கர்ப்பத்தில் இரண்டு நாடுகள் உள்ளன.
இரண்டு குடும்பங்களின் ராஜாக்கள் உனக்குப் பிறப்பார்கள்.
அவர்கள் பிரிக்கப்பட்டு ஒருவனைவிட இன்னொருவன் பலவானாக இருப்பான்.
மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்” என்றார்.
24 சரியான நேரம் வந்தபோது ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 25 முதல் குழந்தை சிவப்பாக இருந்தது. அவனது உடல் ரோம அங்கி போர்த்தது போல இருந்தது. எனவே அவன் ஏசா என்று பெயர் பெற்றான். 26 இரண்டாவது குழந்தை பிறந்தபோது, அவன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டனர். யாக்கோபும் ஏசாவும் பிறக்கும்போது ஈசாக்குக்கு 60 வயது.
27 பிள்ளைகள் வளர்ந்தார்கள். ஏசா திறமை மிக்க வேட்டைக்காரன் ஆனான். அவன் எப்போதும் வெளியே அலைவதிலேயே விருப்பப்பட்டான். ஆனால் யாக்கோபு அமைதியானவன், தன் கூடாரத்திலேயே தங்கியிருந்தான்.
திருமணம்-ஒரு உதாரணம்
7 சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் மோசேயின் சட்டவிதியைத் தெரிந்திருக்கிறீர்கள். ஒருவன் உயிரோடு இருக்கும்வரைதான் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகின்றது. 2 நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். 3 தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந்துகொண்டால் அவள் விபசாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந்தபின் எல்லா திருமண விதிகளில் இருந்தும் அவள் சுதந்தரமாகிறாள். அப்போது அவள் இன்னொருவனை மணக்க விரும்பினால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது.
4 சகோதர சகோதரிகளே! இதே வழியில், உங்கள் பழைய வாழ்வு இறந்து கிறிஸ்துவின் சரீரம் மூலம் சட்டத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த மற்றவர்களோடு சேர்க்கப்படுகிறீர்கள். அதனால் தேவனுக்கு சேவைசெய்ய நாம் பயன்படமுடியும். 5 முன்பு, நாம் நமது மாமிசத்தால் ஆளப்பட்டிருந்தோம். சட்டத்தால் பாவ இச்சைகள் நம்மிடம் தோன்றின. அவை நமது சரீர உறுப்புகள் மீது ஆட்சி செலுத்தியது. அது நமக்கு மரணத்தைக் கொடுத்தது. 6 கடந்த காலத்தின் சட்டவிதிகள் நம்மைச் சிறைக் கைதிகளைப்போன்று வைத்திருந்தன. ஆனால் அந்தப் பழையவிதிகள் மறைந்துபோனது. நாமும் விதிகளினின்றும் விடுவிக்கப்பட்டோம். எனவே இப்போது புதிய வழியில் தேவனுக்கு சேவை செய்கிறோம். பழைய வழியில் சட்டவிதிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவரோடும் இருக்கிறோம்.
2008 by World Bible Translation Center