Revised Common Lectionary (Complementary)
21 கர்த்தாவே, நீரே என் ஆண்டவர்.
எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும்.
உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.
22 நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன்.
நான் உண்மையிலேயே கவலையடைகிறேன்.
என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
23 என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன்.
சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.
24 நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன.
நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
25 தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.
26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்!
உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
27 நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள்.
உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
28 அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும்.
அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும்.
அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
29 என் பகைவர்களை வெட்கப்படுத்தும்!
அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.
30 நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன்.
பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
31 ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார்.
அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
18 வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். 19 நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள். 20 எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.”
21 “‘ஆனால் அப்பிள்ளைகள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. நான் சொன்னபடி அவர்கள் செய்யவில்லை. அவை நல்ல சட்டங்கள். ஒருவன் அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றவையாகக் கருதினர். எனவே அவர்களை வனாந்திரத்தில் நான் முழுமையாக அழிக்க விரும்பினேன். 22 ஆனால் நான் என்னைக் கட்டுப்படுத்தினேன். நான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்ததை மற்ற நாட்டினர் பார்த்தனர். நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை. எனவே மற்ற நாடுகளின் முன்னால் நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 23 எனவே வனாந்திரத்தில் அந்த ஜனங்களுக்கு வேறொரு வாக்கு தந்தேன். அவர்களைப் பல்வேறு நாடுகளில் சிதறடிப்பேன் என்று வாக்குறுதி செய்தேன்.
24 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் தம் தந்தையர்களுடைய அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். 25 எனவே நான் அவர்களுக்கு நன்மையற்ற சட்டங்களைக் கொடுத்தேன். வாழ்வு தராத கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். 26 நான் அவர்கள் தமது அன்பளிப்புகளால் (அவர்கள் விக்கிரகங்களுக்கு படைத்தவை) தங்களையே தீட்டுப்படுத்திக்கொள்ள இடங்கொடுத்தேன். அவர்கள் தம் முதல் குழந்தைகளைக் கூட பலியிடத் தொடங்கினார்கள். இவ்வழியில், அந்த ஜனங்களை அழிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.’ 27 எனவே இப்பொழுது, மனுபுத்திரனே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் ஜனங்கள் என்னைப்பற்றி கெட்டவற்றைச் சொன்னார்கள். எனக்கு எதிராகத் தீயத்திட்டங்களைப் போட்டனர். 28 ஆனால் நான் வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தேன். அவர்கள் அனைத்து குன்றுகளையும் பச்சை மரங்களையும் பார்த்தனர். அவர்கள் அந்த இடங்களுக்கு தொழுகைச் செய்யச் சென்றனர். அவர்கள் தம் பலிகளையும் எனக்குக் கோப பலியையும்[a] கொண்டு சென்றனர். அவர்கள் பலிகளைக் கொடுத்தனர். அது இனிய மணத்தைக் கொடுத்தது. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் பானங்களின் காணிக்கையைக் கொடுத்தனர். 29 நான் அந்த ஜனங்களிடம் அந்த மேடான இடங்களுக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டேன். இன்றும் அம்மேடான இடங்கள் அங்கு இருக்கின்றன’” என்று சொல்.
30 தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்துப் பாவங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. ‘என் கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: உங்கள் முற் பிதாக்களைப்போன்று தீமைகளைச் செய்து நீங்கள் உங்களை அசுத்தமாக்கிக்கொண்டீர்கள். நீங்கள் வேசியைப்போன்று நடந்துகொண்டீர்கள். நீங்கள் உங்கள் முன்னோர்கள் வழிபட்ட அருவருப்பான தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினீர்கள். 31 நீங்கள் அதேபோன்று அன்பளிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பொய்த் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் போடுகிறீர்கள். இன்றுவரை நீங்கள் அசுத்த விக்கிரகங்களோடு சேர்ந்து உங்களை தீட்டாக்கிக்கொண்டீர்கள்! நான் உங்களை என்னிடம் ஆலோசனை கேட்க வரவிடவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நானே ஆண்டவரும் கர்த்தருமாயிருக்கிறேன். என் உயிரின் மூலம் நான் வாக்களிக்கிறேன், நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஆலோசனை தரமாட்டேன்! 32 நீங்கள் வேறு நாட்டினரைப்போன்று இருப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிற நாட்டினரைப்போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் மரத்துண்டுகளையும் கல்லையும் (சிலைகள்) சேவிக்கிறீர்கள்.’”
பிலதெல்பியா சபைக்கு இயேசுவின் நிருபம்
7 “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது.
8 “நீ செய்பவற்றை நான் அறிவேன். நான் உங்களுக்கு முன்னால் திறந்த வாசலை வைக்கிறேன். அதனை எவராலும் அடைக்க முடியாது. நீங்கள் பலவீனமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உபதேசத்தை நீங்கள் பின்பற்றினீர்கள். என் பெயரைச் சொல்ல நீங்கள் பயப்படவில்லை. 9 கவனியுங்கள். சாத்தானைச் சேர்ந்த கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் தம்மை யூதர்கள் எனக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் பொய்யர்களே! அவர்கள் உண்மையான யூதர்கள் அல்லர். அவர்களை உங்கள் முன் அடிபணிந்து வணங்கச்செய்வேன். என்னால் நேசிக்கப்படுகிற மக்கள் நீங்கள் என்பதை அவர்கள் அறிவர். 10 எனது கட்டளைகளை நீங்கள் பின்பற்றிப் பொறுமையாக இருந்தீர்கள். அதனால் துன்ப காலத்தில் உங்களைப் பாதுகாப்பேன். முழு உலகமும் துன்பப்படும்போது நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். அத்துன்பம் உலகில் வாழும் மக்களைச் சோதிக்கும்.
11 “நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுது எவராலும் உங்கள் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. 12 இதில் வெற்றி பெறுகிறவன் என் தேவனின் ஆலயத்தில், சிறந்த தூணாக விளங்குவான். இதில் வெற்றி பெறுகிறவனுக்காக நான் இதனைச் செய்வேன். அவன் எப்போதும் தேவனின் ஆலயத்தை விட்டு விலகமாட்டான். அவன் மேல் எனது தேவனின் பெயரை எழுதுவேன். அவன் மேல் எனது தேவனுடயை நகரத்தின் பெயரையும் எழுதுவேன். அந்த நகரத்தின் பெயர் புதிய எருசலேம். பரலோகத்திலிருக்கின்ற என் தேவனிடமிருந்து இந்நகரம் இறங்கி வந்துகொண்டிருக்கின்றது. நான் எனது புதிய பெயரையும் அவன் மீது எழுதுவேன்.” 13 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center