Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்.
127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.
2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.
3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
4 ஒரு இளைஞனின் குமாரர்கள்
ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
5 தன் அம்புகள் வைக்கும் பையை குமாரர்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது குமாரர்கள் அவனைக் காப்பார்கள்.
முதுமையின் பிரச்சனைகள்
12 நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.
2 நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உன் கண்களுக்கு இருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின் மீண்டும், மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத் துன்பங்கள் வந்துகொண்டிருக்கும்.
3 அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும். உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும். உனது பற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாத நிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது. 4 உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.
5 நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப்போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்.
மரணம்
6 நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால்,
கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள்.
7 உன் உடல் பூமியிலிருந்து வந்தது.
நீ மரித்துப்போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும்.
ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது.
நீ மரித்துப்போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும்.
8 இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார்.
13-14 இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.
கவலை வேண்டாம்
22 இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். 23 உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது. 24 பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். 25 கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது. 26 சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?
27 “காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க ராஜாவாகிய சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். 28 வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள்.
29 “எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். 30 இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும். 31 நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”
2008 by World Bible Translation Center