Revised Common Lectionary (Complementary)
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
8 கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன்.
உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.
9 எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே.
அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.
10 தீயோருக்கு வேதனைகள் பெருகும்.
கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.
11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.
பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.
30 “எனவே நான் கள்ளதீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “இத்தீர்க்கதரிசிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் என் வார்த்தைகளைத் திருடுகிறார்கள். 31 நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர். 32 பொய்க் கனவுகளைப் பரப்பும் பொய்த் தீர்க்கதரிகளுக்கு நான் எதிரானாவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் எனது ஜனங்களைப் பொய்யாலும், பொய் போதனைகளாலும் தவறாக வழிகாட்டுகின்றனர். ஜனங்களுக்குப் போதிக்க நான் இத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை. எனக்காக எதையும் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளை இடவில்லை. யூதாவின் ஜனங்களுக்கு அவர்களால் உதவி செய்யவே முடியாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
கர்த்தரிடமிருந்து வரும் சோகச் செய்தி
33 “யூதாவின் ஜனங்களே, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு ஆசாரியரோ உன்னிடம் ‘கர்த்தருடைய அறிக்கை என்ன என்று கேட்கும்போது’ நீ அவர்களுக்கு, ‘நீங்கள் கர்த்தருக்குப் பெரும் பாரமாக இருக்கிறீர்கள். நான் இப்பாரத்தைத் தூக்கிப் போடுவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது என்று சொல்.
34 “ஒரு தீர்க்கதரிசி அல்லது ஆசாரியன், அல்லது ஜனங்களில் ஒருவன் சொல்லலாம். ‘இது தான் கர்த்தருடைய அறிக்கை …’ அம்மனிதன் பொய் சொன்னான். அவனையும் அவனது குடும்பத்தையும் நான் தண்டிப்பேன். 35 இதைத்தான் ஒருவரிடம் ஒருவர் நீங்கள் கேட்கவேண்டும். ‘கர்த்தருடைய பதில் என்ன?’ அல்லது ‘கர்த்தர் என்ன பதில் சொன்னார்?’ 36 ‘கர்த்தருடைய அறிவிப்பு’ பெருஞ்சுமையானது என்று ஒருபோதும் மீண்டும் சொல்லமாட்டாய். ஏனென்றால், கர்த்தருடைய நற்செய்தி யாருக்கும் பெருஞ்சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் நீ எங்கள் தேவனுடைய வார்த்தையை மாற்றினாய். அவரே ஜீவனுள்ள தேவன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர்!
37 “நீ தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினால் ஒரு தீர்க்கதரிசியைக் கேள். ‘கர்த்தர் என்ன பதிலைக் கொடுத்தார்?’ அல்லது ‘கர்த்தர் என்ன சொன்னார்?’ 38 ஆனால் ‘கர்த்தரிடமிருந்து வந்த அறிக்கை (பெருஞ்சுமை) என்ன’ என்று சொல்ல வேண்டாம். நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பிறகு, கர்த்தர் இவற்றை உனக்குச் சொல்வார், ‘எனது செய்தியைக் “கர்த்தரிடமிருந்து வந்த அறிவிப்பு” பாரமானது என்று சொல்ல வேண்டாம். இவ்வார்த்தைகளைச் சொல்லவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்னேன். 39 ஆனால், நீ எனது செய்தியை பெருஞ்சுமை என்று அழைத்தாய். எனவே, நான் உன்னைப் பெருஞ்சுமையைப் போன்று தூக்கித் தூர எறிவேன். உங்கள் முற்பிதாக்களுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுத்தேன். ஆனால், நான் உன்னையும் அந்நகரத்தையும் என்னை விட்டுத் தூர எறிவேன். 40 உன்னை முடிவற்ற அவமானத்திற்கு உள்ளாக்குவேன். உன் அவமானத்தை ஒருபோதும் நீ மறக்கமாட்டாய்.’”
தவறான போதகர்களைக் குறித்து யோவானின் எச்சரிக்கை
4 எனது அன்பான நண்பர்களே, இவ்வுலகில் பல தவறான போதகர்கள் இப்போது வாழ்கிறார்கள். எனவே எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள். தேவனிடமிருந்து வந்தவையா எனப் பார்ப்பதற்கு அந்த ஆவிகளை சோதித்துப் பாருங்கள். 2 தேவனின் ஆவியை அறியும் வகை இதுவே ஆகும். ஓர் ஆவி, “இயேசு பூமிக்கு வந்து மனிதனான கிறிஸ்து என்பதை நான் நம்புகிறேன்” என்று கூறும். அந்த ஆவி தேவனிடமிருந்து வந்தது. 3 இன்னோர் ஆவி இயேசுவைக் குறித்து இவ்வாறு கூற மறுக்கிறது, இது தேவனிடமிருந்து வந்த ஆவி அல்ல. போலி கிறிஸ்து வந்துகொண்டிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இப்போது போலி கிறிஸ்து ஏற்கெனவே உலகில் வந்திருக்கிறான்.
4 எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். எனவே நீங்கள் அவர்களை வெற்றிகொண்டிருக்கிறீர்கள். ஏன்? உங்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர். 5 அம்மக்களோ உலகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் கூறுபவை உலகத்திற்குரியவை. அவர்கள் கூறுவதை உலகம் கேட்கிறது. 6 ஆனால் நாம் தேவனுக்குரியவர்கள். எனவே தேவனை அறிந்த மக்கள் நம் பேச்சைக் கேட்கிறார்கள். ஆனால் தேவனிடமிருந்து வராத மக்கள் நம் பேச்சைக் கேட்பதில்லை. இப்படித் தான் உண்மையான ஆவியானவரையும், பொய்யான பிற ஆவிகளையும் தெரிந்துகொள்கிறோம்.
2008 by World Bible Translation Center