Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.
140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2 அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
3 அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.
4 கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
5 அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.
6 கர்த்தாவே, நீரே என் தேவன்.
கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
7 கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
நீரே என் மீட்பர்.
போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
8 கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.
9 கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
அவர்களைக் குழியில் தள்ளும்,
அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.
12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.
15 பிறகு நான் உங்களுக்குப் புதிய ராஜாக்களைத் தருவேன். அந்த ராஜாக்கள் எனக்கு விசுவாசமாக இருப்பார்கள். உங்களை அவர்கள் அறிவோடும் கூர்ந்த உணர்வோடும் வழிநடத்திச் செல்வார்கள். 16 அந்த நாட்களில், இந்த நாட்டில் நீங்களே மிகுதியாக இருப்பீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த நேரத்தில் ஜனங்கள், “நான் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி எங்களோடு இருந்ததை நினைக்கிறேன், என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் இன்னொரு முறை பரிசுத்த பெட்டியை நினைவுகூரமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் பரிசுத்த பெட்டியைச் செப்பனிடுவதுமில்லை. 17 அந்நேரத்தில், எருசலேம் நகரம் ‘கர்த்தருடைய சிங்காசனம்’ என்று அழைக்கப்படும். எல்லா நாடுகளும் எருசலேம் நகரத்தில் சேர்ந்து கர்த்தருடைய நாமத்திற்கு மகிமைதரக் கூடுவார்கள். அவர்கள் இனிமேல் தங்களது பொல்லாங்கான கடின இதயம் சொல்வதுபோன்று நடக்கமாட்டார்கள். 18 அந்த நாட்களில், யூதாவின் குடும்பம், இஸ்ரவேல் குடும்பத்தோடு சேரும். அவர்கள் வடக்கு நாட்டிலிருந்து வந்து கூடுவார்கள். நான் அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அவர்கள் வருவார்கள்.
6 உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது. 7 எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். 8 கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். 9 வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். 10 தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். 11 இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். 12 அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். 13 அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். 14 எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம்.
“தூங்குகிறவர்களே எழும்புங்கள்,
மரணத்திலிருந்து எழும்புங்கள்.
கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.”
15 எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். 16 நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். 17 ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 18 மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். 19 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். 20 பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள்.
2008 by World Bible Translation Center