Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
2 என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
3 ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
4 கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
உமது வழிகளை எனக்குப் போதியும்.
5 எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
நீரே என் தேவன், என் மீட்பர்.
அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
6 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
7 எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.
8 கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
9 தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
யோசேப்பு விளக்கம் சொல்ல அழைக்கப்படுதல்
14 எனவே, பார்வோன் சிறையில் இருந்து யோசேப்பை அழைத்தான். அதிகாரி உடனே யோசேப்பை வெளியே கொண்டு வந்தான். அவன் சவரம் செய்து நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு, பார்வோனைப் பார்க்கப்போனான். 15 பார்வோன் யோசேப்பிடம், “நான் கனவு கண்டேன். எவராலும் அதற்கு பொருள் சொல்லமுடியவில்லை. உன்னிடம் அவற்றைப்பற்றி சொன்னால் நீ அதற்கு விளக்கம் சொல்ல முடியும் என்று அறிந்தேன்” என்றான்.
16 யோசேப்பு, “என்னால் முடியாது. ஆனால் தேவன் உமக்காக விளக்கம் தருவார்” என்றான்.
17 பிறகு பார்வோன், “கனவில் நான் நைல் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். 18 அப்போது ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து புல் மேய்ந்துகொண்டிருந்தது. அவை செழுமையாகவும், பார்க்க அழகாகவும் இருந்தன. 19 பிறகு மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்தன. அவை மெலிந்து, நோய் கொண்டவையாக இருந்தன. அவற்றைப் போன்று மோசமான பசுக்களை நான் எகிப்திலே எங்கும் பார்த்ததில்லை. 20 அவை செழுமையான பசுக்களை உண்டுவிட்டன. 21 அவை அதற்குப் பிறகும் ஒல்லியாகவும், நோயுற்றும் தோன்றின. அவை பசுக்களைத் தின்றுவிடும் என்று சொல்ல முடியாத வகையிலேயே இருந்தன. அதற்குள் நான் எழுந்துவிட்டேன்.
22 “அடுத்த கனவில் ஒரு செடியில் ஏழு கதிர்களைக் கண்டேன். அவை செழுமையாக இருந்தன. 23 பிறகு செடியில் மேலும் ஏழு கதிர்கள் வளர்ந்தன. காற்றில் உதிரக் கூடிய நிலையில் மெலிந்து இருந்தன. 24 பிறகு இவை செழுமையான கதிர்களை விழுங்கிவிட்டன.
“நான் இந்தக் கனவை மந்திரவாதிகளிடமும் ஞானிகளிடமும் கூறினேன். ஆனால் யாராலும் இவற்றிற்கு பதில் சொல்ல முடியவில்லை, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டான்.
யோசேப்பு கனவை விளக்குதல்
25 பிறகு யோசேப்பு பார்வோனிடம், “இரண்டு கனவுகளுக்கும் ஒரே பொருள் தான். விரைவில் என்ன நடக்கும் என்பதை தேவன் கூறிவிட்டார். 26 ஏழு செழுமையான பசுக்கள், ஏழு செழுமையான கதிர்கள் என்பது ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். 27 ஏழு மெலிந்த பசுக்கள் ஏழு மெலிந்த கதிர்கள் என்பது பஞ்சமான ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். வளமான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே பஞ்சமான ஏழு ஆண்டுகள் வரும். 28 விரைவில் என்ன நடக்கும் என்பதை தேவன் உமக்கு காண்பித்திருக்கிறார். இவ்வாறே தேவன் நடத்துவார். 29 இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு எகிப்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் விளையும். 30 பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சமும் பசியும் இருக்கும். எகிப்து ஜனங்கள் முன்பு கடந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த உணவின் மிகுதியை மறந்துவிடுவார்கள். இப்பஞ்சம் நாட்டை அழித்துவிடும். 31 ஏனென்றால் தொடர்ந்து வரும் பஞ்சம் அவ்வளவு கடுமையாக இருக்கும்.
32 “நீர் ஏன் ஒரே பொருள்பற்றிய இரு கனவுகளைக் கண்டிருக்கிறீர் தெரியுமா? இது நிச்சயம் நடக்கும் என்பதை தேவன் உமக்குக் காட்ட விரும்புகிறார். அதோடு தேவன் இதனை விரைவில் நிகழவைப்பார். 33 எனவே, நீர் புத்திசாலியான ஒருவனிடம் எகிப்தின் பொறுப்புகளை விடவேண்டும். 34 பிறகு மேலும் சிறந்த ஆட்களை தேர்ந்தெடுத்து உணவுப் பொருட்களை எல்லாம் சேகரிக்க வேண்டும். இனியுள்ள ஏழு வருடங்களும் ஜனங்கள் தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை ராஜாவுக்குரியதென இவர்களிடம் கொடுக்க வேண்டும். 35 இவ்வாறு அந்த ஆட்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து, தேவைப்படும் அளவுக்கு நன்றாகச் சேமித்து வைக்கவேண்டும். இந்த உணவு உமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். 36 பிறகு ஏழு பஞ்ச ஆண்டுகளில் தேவையான உணவுப் பொருள் எகிப்து நாட்டில் இருக்கும். அதனால் எகிப்து பஞ்சத்தில் அழியாமல் இருக்கும்” என்றான்.
விசுவாசமும் நற்செயல்களும்
14 எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? 15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். 16 நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. 17 இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.
18 ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம். 19 ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? நல்லது. ஆனால் பிசாசுகள் கூட அதை நம்பி பயத்தால் நடுங்குகின்றன.
20 நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா? 21 தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தில் காணிக்கையாக்கியபோது செயல்கள் மூலம் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான். 22 இதனால் நீ ஆபிரகாமின் விசுவாசமும் அவனது செயலும் ஒருங்கே செயல்பட்டதைக் காண இயலும். அவனது செயல்கள் அவனது விசுவாசத்தை முழுமையாக்கியது. 23 எனவே “ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது”(A) என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் “தேவனின் நண்பன்” என்று அவன் அழைக்கப்பட்டான். 24 எனவே ஒருவன் வெறும் விசுவாசத்தால் மட்டுமல்ல, தான் செய்கிற காரியங்களால் நீதிமானாக்கப்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்கமுடியும்.
25 ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள்.[a]
26 எனவேதான் ஆவி இல்லாத ஓர் சரீரம் இறந்ததாயிருக்கிறதைப்போலச் செயல்கள் அற்ற விசுவாசம் கூட இறந்ததாயிருக்கிறது.
2008 by World Bible Translation Center