Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல்.
66 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
2 அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
3 அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது!
உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள்.
அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
4 உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
ஒவ்வொருவரும் உமது நாமத்தை துதித்துப் பாடட்டும்.
5 தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.
6 தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள்.
7 தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார்.
எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார்.
ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.
8 ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள்.
9 தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
10 அந்நேரத்தில், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அரபா பாலைவனமாக காலியாக இருக்கும். நாடானது கேபா தொடங்கி எருசலேமிற்கு தெற்கேயுள்ள ரிம்மோன் வரைக்கும் பாலைவனமாகும். ஆனால் எருசலேம் நகரம் முழுவதும் மீண்டும் கட்டப்படும். பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசல் (மூலை வாசல்) வரைக்கும் அனானெயேல் கோபுரம் தொடங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள் வரை குடியேற்றப்பட்டிருக்கும். 11 ஜனங்கள் அங்கே வாழப்போவார்கள். இனி மேல் அவர்களை எந்தப் பகைவரும் அழிக்க வரமாட்டார்கள். எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.
12 ஆனால் எருசலேமிற்கு எதிராக போரிட்ட நாடுகளை கர்த்தர் தண்டிப்பார். அவர்களுக்குப் பயங்கரமான நோய் ஏற்பட காரணமாக இருப்பார். அங்கு ஜனங்கள் இன்னும் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் தோல் அழுகும். அவர்களின் கண்கள் இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும் அழுகிப் போகும். 13-15 அந்தப் பயங்கரமான நோய் எதிரியின் கூடாரத்தில் இருக்கும். அவர்களின் குதிரைகள் கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும்.
அந்நேரத்தில், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு உண்மையில் பயப்படுவார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்து பற்றிக்கொண்டு சண்டையிடுவார்கள். யூதாவின் ஜனங்கள் எருசலேமில் போரிடுவார்கள். ஆனால், அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள். அவர்கள் மிகுதியாக பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைப் பெறுவார்கள். 16 எருசலேமில் போரிட வந்த ஜனங்களில் சிலர் பிழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் ராஜாவாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதிட வருவார்கள். அவர்கள் அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட வருவார்கள். 17 பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களும் ராஜாவை, சர்வ வல்மையுள்ள கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல் இருந்தால், பிறகு கர்த்தர் அவர்கள் மழை பெறாமல் போகும்படிச் செய்வார். 18 எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார். 19 அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை.
20 அந்நேரத்தில், அனைத்தும் தேவனுக்கு உரியதாகும். குதிரைகளின் மணிகளில் கூட கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய ஆலயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பானைகளும் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கும் பாத்திரங்களைப் போன்று முக்கியமானதாக இருக்கும். 21 உண்மையில், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள ஒவ்வொரு பானைக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு “பரிசுத்தம்” என்ற முத்திரையிருக்கும். கர்த்தருக்கு தகன பலிகளை செலுத்தும் ஒவ்வொருவரும் வந்து அவற்றில் சமைத்து உண்ண முடியும்.
அந்நேரத்தில், அங்கு வியாபாரிகள் எவரும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும்மாட்டார்கள்.
சீஷர்கள் அனுப்பப்படுதல்
(மத்தேயு 10:5-15; மாற்கு 6:7-13)
9 பன்னிரண்டு சீஷர்களையும் இயேசு ஒருங்கே வருமாறு அழைத்தார். நோய்களைக் குணமாக்கும் வல்லமையையும், பிசாசுகளை விரட்டும் அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்தார். 2 தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், நோயுற்றோரைக் குணமாக்கவும் இயேசு சீஷர்களை அனுப்பினார். 3 அவர் சீஷர்களை நோக்கி, “நீங்கள் பயணம் செய்யும்போது கைத்தடியை எடுக்காதீர்கள். பையையோ, உணவையோ, பணத்தையோ எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 4 ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள். 5 ஏதாவது நகரத்து மக்கள் உங்களை வரவேற்காவிடில், அந்த நகரத்திற்கு வெளியே போய் உங்கள் பாதத்தில்பட்ட தூசிகளை உதறிவிடுங்கள். இது அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.
6 பின்பு சீஷர்கள் அங்கிருந்துச் சென்றனர். பல நகரங்கள் வழியாகப் பயணம் செய்தனர். எல்லா இடங்களிலும் நற்செய்தியைக் கூறி மக்களைக் குணப்படுத்தினர்.
2008 by World Bible Translation Center