Revised Common Lectionary (Complementary)
மேம்
97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
தேவனை ஆராதிப்பதற்கான இடம்
12 “இவைகளே தேவனுடைய கட்டளைகளும், நியாயங்களும் ஆகும். அவற்றை நீங்கள் சுதந்திரமாக வாழப் போகின்ற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பூமியில் நீங்கள் வாழ்கின்ற நாள்வரைக்கும் இந்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து கவனமாக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கர்த்தரே! உங்கள் முற்பிதாக்களுடைய தேவன் ஆவார்! அதனாலேயே அவர்களுக்கு அளித்த வாக்கின்படி இந்த சுதந்திர தேசத்தை உங்களுக்குத் தருகிறார். 2 இப்போது வசிக்கின்ற உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து அந்த தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். அந்த ஜனங்கள் எங்கெல்லாம் அவர்களது தெய்வங்களை தொழுது கொண்டார்களோ, அந்த இடங்களையெல்லாம், முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அந்த இடங்களெல்லாம் மலைகள் மீதும், மேடுகள் மீதும், பசுமையான மரங்களுக்குக் கீழும் உள்ளன. 3 நீங்கள் அவர்களது பலிபீடங்களை இடித்து, அவர்கள் ஞாபகார்த்த கற்களையும் தூள் தூளாக தகர்த்திட வேண்டும். அவர்களது அஷேரா என்ற ஸ்தம்பத்தையும், பொய்த் தெய்வங்களின் சிலைகளையும் வெட்டி. இவ்வாறு அந்த இடத்திலிருந்து அவைகளின் பெயரை நிர்மூலமாக்க வேண்டும்.
4 “அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்கிற அதே முறையை நீங்களும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யக் கூடாது. 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகல கோத்திரங்களின் நடுவில் ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துத் தருவார். கர்த்தர் அவரது நாமத்தை அவ்விடத்திற்கு வைப்பார். அந்த விசேஷ இருப்பிடம் தேவனுடையதாகும். நீங்கள் எல்லோரும் அந்த இடத்திற்குச் சென்றே கர்த்தரை ஆராதிக்க வேண்டும். 6 அங்கே நீங்கள் வரும்போது நெருப்பினால் வேகவைத்த தகனபலியையும், உங்கள் காணிக்கைகளையும். உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுளையும், உங்களின் காணிக்கைகளையும், கர்த்தருக்குக் காணிக்கைகளாக வாக்கு கொடுத்த பொருட்களையும், கர்த்தருக்குக் கொடுக்க விரும்பும் பொருட்களையும் உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு, மாடுகளில் தலைஈற்றுகளையும் கொண்டு வரவேண்டும். 7 நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், அந்த இடத்திற்கு வந்து உண்டு மகிழவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து மகிழ்ச்சியைத் தருவார். அந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் உங்களது மகிழ்ச்சியையும், உங்கள் கைகளால் செய்த பொருட்களையும், ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாப் பொருட்களையும், அவர் உங்களுக்குத் தந்ததையும் நினைத்துப் பார்பீர்களாக.
8 “ஆனால் நாம் அனைவரும் தொழுது வந்தது போல் நீங்கள் தொழுதுகொள்வதைத் தொடரக் கூடாது. இதுவரையிலும் ஒவ்வொருவரும் தேவனை தாங்கள் விரும்பின வழியில் தொழுது கொண்டு வந்தீர்கள். 9 ஏனென்றால் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தருகின்ற, அமைதியான, அந்த தேசத்திற்குள் இன்னும் அடி எடுத்து வைக்கவில்லை. 10 ஆனால் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தில் வாழலாம். அந்த சுதந்திர தேசத்தை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அங்கே உங்கள் எதிரிகள் அனைவரையும் விலக்கி கர்த்தர் உங்களை இளைப்பாறச் செய்வார். அங்கே நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். 11 பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும். 12 கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்களும், உங்கள் பிள்ளைகளும், வேலைக்காரர் அனைவரும் வந்து, உங்கள் நகரங்களில் வசிக்கும் எந்தவொரு சொத்தும் சுதந்திரமும் இல்லாத லேவியருடன்கூடி, வந்திருந்து ஒருவொருக்கொருவர் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு மகிழ்ச்சியாக இருங்கள்.
41 பிறகு யூதர்கள் இயேசுவைப்பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் “நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம்” என்று இயேசு சொன்னார். 42 அதற்கு யூதர்கள், “இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் குமாரன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்?” என்று கேட்டனர்.
43 “ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். 44 என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை. 45 இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார்.’(A) மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள். 46 எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார்.
47 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவன் நம்பிக்கை வைத்தால் அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center