Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 127

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்.

127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
    கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
    தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.

பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
    குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
ஒரு இளைஞனின் குமாரர்கள்
    ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
தன் அம்புகள் வைக்கும் பையை குமாரர்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
    அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
    அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது குமாரர்கள் அவனைக் காப்பார்கள்.

பிரசங்கி 2:1-17

கேளிக்கைகளை அனுபவிப்பது மகிழ்ச்சியைக்கொண்டுவருமா?

நான் எனக்குள்: “நான் வேடிக்கை செய்வேன். என்னால் முடிந்தவரை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைவேன்” என்று சொன்னேன். ஆனால் நான் இவையும் பயனற்றவை என்று கற்றுக்கொண்டேன். எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது.

எனவே என் மனதை ஞானத்தால் நிரப்பும்போது என் உடலை திராட்சைரசத்தால் நிரப்ப முடிவு செய்தேன். இந்த முட்டாள்தனத்தை நான் முயற்சி செய்தேன். ஏனென்றால் நான் மகிழ்ச்சியடைவதற்குரிய வழியைக் கண்டுபிடிக்க எண்ணினேன். ஜனங்களின் குறுகிய வாழ்வில் அவர்கள் என்ன நன்மை செய்யக்கூடும் என்று பார்க்க விரும்பினேன்.

கடின உழைப்பு மகிழ்ச்சியைத் தருமா?

பிறகு நான் பெரிய செயல்களைச் செய்யத் துவங்கினேன். வீடுகளைக் கட்டினேன். திராட்சைத் தோட்டங்களை எனக்காக நட்டேன். நான் தோட்டங்களை அமைத்தேன், பூங்காவனங்களை உருவாக்கினேன். எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன். நான் எனக்காக குளங்களை அமைத்தேன். அதன் மூலம் பழமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினேன். நான் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன். என் வீட்டிலும் அடிமைகள் பிறந்தனர். பல பெருஞ்செல்வங்கள் எனக்குச் சொந்தமாயின. எனக்கு மாட்டுமந்தையும் ஆட்டுமந்தையும் இருந்தன. எருசலேமில் மற்றவர்களைவிட எனக்கு ஏராளமான செல்வங்கள் இருந்தன.

நான் எனக்காகப் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்தேன். ராஜாக்களிடமிருந்தும் அவர்களின் நாடுகளிலிருந்தும் பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டேன். எனக்காகப் பாடிட ஆண்களும் பெண்களும் இருந்தனர். எவரும் விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தன.

நான் செல்வந்தனாகவும் புகழுடையவனாகவும் ஆனேன். எனக்குமுன் எருசலேமில் வாழ்ந்த எந்த மனிதரையும்விட நான் பெரிய ஆளாக இருந்தேன். எப்பொழுதும் எனது ஞானம் எனக்கு உதவுவதாக இருந்தது. 10 என் கண்கள் பார்த்து நான் விரும்பியதை எல்லாம் பெற்றேன். நான் செய்தவற்றிலெல்லாம் மனநிறைவு பெற்றேன். என் இதயம் பூரித்தது, இம்மகிழ்ச்சியே எனது அனைத்து கடின உழைப்பிற்கும் கிடைத்த வெகுமதி.

11 ஆனால் பின்னர் நான் செய்த அனைத்தையும் கவனித்தேன். நான் செய்த கடின உழைப்பை எல்லாம் நினைத்துப் பார்த்தேன். அவை அனைத்தும் காலவிரயம் என்று முடிவுசெய்தேன். இது காற்றைப் பிடிப்பதுபோன்றது. நம் வாழ்க்கையில் நாம் செய்த அனைத்திலிருந்தும் இலாபகரமானது எதுவுமில்லை.

ஒருவேளை ஞானமே பதிலாயிருக்கலாம்

12 ஒரு ராஜாவால் செய்ய முடிந்ததைவிட ஒரு மனிதனால் அதிகமாகச் செய்யமுடியாது. சில ராஜாக்கள் ஏற்கெனவே நீங்கள் செய்ய விரும்புவதையே செய்திருக்கிறார்கள். அந்த ராஜாக்கள் செய்தவையும் காலவிரயம் என்று நான் கற்றுக்கொண்டேன். எனவே மீண்டும் நான் ஞானமுள்ளவனாக இருப்பதைப்பற்றியும், அறிவற்றவனாக இருப்பதைப்பற்றியும் பைத்தியக்காரத்தனமான செயல்களைப்பற்றியும் எண்ணினேன். 13 இருட்டைவிட ஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிட ஞானம் சிறந்தது என்று கண்டேன். 14 ஞானமுள்ளவன் தான் செல்லுமிடத்தை அறிய சிந்தனையைக் கண்களாகப் பயன்படுத்துகிறான். ஆனால் முட்டாளோ, இருட்டில் நடப்பவனைப் போன்றுள்ளான்.

ஆனால் ஞானமுள்ளவனுக்கும் முட்டாளுக்கும் ஒரே வழியிலேயே முடிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டேன். இருவரும் மரித்துப்போகின்றனர். நான் எனக்குள், 15 “ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும் எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று எண்ணினேன். நான் எனக்குள், “ஞானமுள்ளவனாக இருப்பதும் பயனற்றதே” என்று சொன்னேன். 16 ஞானமுள்ளவனும் முட்டாளும் மரித்துப்போகின்றனர். ஜனங்கள் ஞானவான்களையும், முட்டாள்களையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில் தாங்கள் செய்தவற்றையெல்லாம் ஜனங்கள் மறந்துபோகிறார்கள். எனவே ஞானமுள்ளவனும் முட்டாளும் உண்மையில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி உண்டா?

17 இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது. இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்ற எண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப் பிடிப்பதுபோன்ற முயற்சி.

கொலோசெயர் 3:18-4:1

மற்றவர்களோடு உங்கள் புதிய வாழ்க்கை

18 மனைவிமார்களே! உங்கள் கணவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தருக்குள் நீங்கள் செய்யத்தக்க சரியான செயல் இதுவே.

19 கணவன்மார்களே! உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்களோடு சாந்தமாய் இருங்கள்.

20 குழந்தைகளே! எல்லா வகையிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

21 பிதாக்களே! உங்கள் பிள்ளைகளை விரக்தியடையச் செய்யாதீர்கள். அவர்களோடு கடுமையாக இருந்தால் அவர்கள் முயற்சி செய்யும் தம் ஆவலை இழந்துவிடுவார்கள்.

22 வேலைக்கரார்களே! எல்லா வகையிலும் உங்கள் மண்ணுலக எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். உங்கள் எஜமானர்கள் உங்களுக்கு அருகில் இல்லாதபோதும், எல்லாக் காலங்களிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களை நீங்கள் சந்தோஷப்படுத்தவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதைச் செய்துகொண்டிருப்பது நீங்கள் தேவனை மதிக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் கர்த்தரை மதிப்பவர்கள், ஆதலால் கபடமில்லாமல் பணிசெய்யுங்கள். 23 நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை இதயப்பூர்வமாகச் செய்யுங்கள். மனிதருக்காக அல்ல, கர்த்தருக்காகச் செய்கிறோம் என்று எண்ணுங்கள். 24 நீங்கள் உங்களுக்குரிய விருதை கர்த்தரிடம் இருந்து பெறுவீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்களித்தபடி அவர் உங்களுக்குத் தருவார். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறீர்கள். 25 எவனொருவன் தவறு செய்கிறானோ, அவன் அத்தவறுக்காகத் தண்டிக்கப்படுவான் என்பதை மறவாதீர்கள். கர்த்தர் அனைவரையும் சமமாகவே நடத்துகிறார்.

எஜமானர்களே! உங்கள் வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள். பரலோகத்தில் உங்களுக்கு ஒரு எஜமானர் இருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center