Revised Common Lectionary (Complementary)
[a]111 கர்த்தரைத் துதியங்கள்!
நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில்
நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
2 கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
3 உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
4 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
5 தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
6 அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
7 தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
8 தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
9 தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.
தேவனும் இஸ்ரவேலரும் உடன்படிக்கையை செய்துகொள்கிறார்கள்
24 தேவன் மோசேயை நோக்கி, “நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத் தூரத்திலிருந்து தொழுதுகொள்ள வேண்டும். 2 பின்பு மோசே மாத்திரம் கர்த்தரிடம் நெருங்கி வருவான். மற்றவர்கள் கர்த்தரை நெருங்கி மலை மீது ஏறி வரக்கூடாது” என்றார்.
3 கர்த்தர் கூறிய எல்லா விதிகளையும், கட்டளைகளையும் மோசே ஜனங்களுக்குக் கூறினான். எல்லா ஜனங்களும், “கர்த்தர் கூறின எல்லா கட்டளைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று ஏகமாய் பதிலுரைத்தனர்.
4 எனவே மோசே ஒரு சுருளில் கர்த்தரின் கட்டளைகளை எழுதினான். மறுநாள் காலையில் மோசே எழுந்து மலையடிவாரத்தில், ஒவ்வொரு கல்லும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 5 பின் மோசே இஸ்ரவேலின் வாலிபர்களைப் பலி செலுத்தவதற்காக அழைத்தனுப்பினான். தகன பலியாகவும் சமாதான பலியாகவும் அவர்கள் இளங்காளைகளைப் பலியிட்டனர்.
6 மோசே இம்மிருகங்களின் இரத்தத்தை எடுத்து வைத்தான். அந்த இரத்தத்தில் பாதியைக் கிண்ணங்களில் ஊற்றினான். மீதியைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
7 விசேஷ உடன்படிக்கை பொருந்திய சுருளை எல்லா ஜனங்களும் கேட்கும்படியாக மோசே வாசித்தான். அதைக் கேட்டதும் ஜனங்கள், “கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றிற்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.
8 பலிகளின் இரத்தத்தைச் சேகரித்து வைத்திருந்த கிண்ணத்தை மோசே உயர்த்தி, இரத்தத்தை ஜனங்கள் மீது தெளித்தான். அவன், “கர்த்தர் உங்களோடு ஒரு விசேஷ உடன்படிக்கையைச் செய்தார் என்பதை இந்த இரத்தம் குறிக்கிறது. தேவன் கொடுத்த சட்டங்கள் இந்த உடன்படிக்கையை விளக்குகின்றன” என்றான்.
9 பின்பு மோசே, ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மீது ஏறி, 10 இஸ்ரவேலின் தேவனைக் கண்டனர். அவர் நின்றிருந்த இடம் வானத்தின் நிறமுள்ள தெளிந்த நீல இரத்தினக் கற்பாறை போன்று காணப்பட்டது! 11 இஸ்ரவேலின் மூப்பர் எல்லோரும் தேவனைக் கண்டார்கள். ஆனால் தேவன் அவர்களை அழிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு குடித்தார்கள்.
ரோம் செல்லப் பவுலின் திட்டம்
22 அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.
23 நான் இந்தத் திசைகளில் இப்போது எனது பணியை முடித்துவிட்டேன். பல ஆண்டுகளாக உங்களைக் காண விரும்பியிருக்கிறேன். 24 நான் ஸ்பானிய நாட்டிற்குப் போகும்போது உங்களிடம் வந்து உங்களைக் கண்டு கொள்ளவும், நான் உங்களோடு தங்கியிருந்து மகிழ்ச்சி அடைவேனென்றும் நம்புகிறேன். என் பயணத்துக்கு நீங்களும் உதவி செய்யலாம்.
25 தேவனுடைய மக்களுக்கு உதவுவதற்காக இப்பொழுது நான் எருசலேமுக்குச் செல்கிறேன். 26 எருசலேமிலுள்ள தேவனுடைய மக்களில் சிலர் வறுமையில் உள்ளனர். மக்கதோனியா, அகாயா போன்ற நாடுகளில் உள்ள விசுவாசிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களே எருசலேமில் உள்ள விசுவாசிகளுக்கு உதவிசெய்து வருகின்றனர். 27 இப்படிச் செய்வது நல்லதென்று எண்ணினார்கள். இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளியாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியினர் அவர்களுடைய ஞான நன்மைகளில் பங்கேற்கின்றனர். சரீர நன்மைகளில் அவர்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் இவ்விதம் கடனாளியாயிருக்கிறார்களே. 28 எருசலேமில் உள்ள ஏழை மக்கள் அவர்களுக்காக வழங்கப்பட்ட பொருளை அடையவேண்டும். இதை முடித்த பிறகு ஸ்பானியாவுக்குப் புறப்படுவேன்.
வழியில் உங்களைப் பார்ப்பேன். 29 நான் உங்களைப் பார்க்க வரும்போது, கிறிஸ்துவின் முழுமையான ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருவேன் என்பதை நான் அறிவேன்.
30 சகோதர சகோதரிகளே! நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமும் பரிசுத்த ஆவியானவரின் அன்பின் மூலமும் உங்களை வேண்டுகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது எனது போராட்டங்களில் பங்கு கொள்ளுங்கள். தேவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நினைவு கொள்ளுங்கள். 31 யூதேயாவிலுள்ள நம்பிக்கையற்றவர்களிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பிரார்த்தனை செய்யுங்கள். எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்கு நான் செய்யப்போகும் உதவி அவர்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படவும் பிரார்த்தனை செய்யுங்கள். 32 பிறகு, தேவனுடைய விருப்பம் இருந்தால் நான் உங்களிடம் வருவேன். நான் மகிழ்ச்சியோடு வருவேன். உங்களோடு ஓய்வுகொள்ளுவேன். 33 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக ஆமென்.
2008 by World Bible Translation Center