Revised Common Lectionary (Complementary)
நன்றி கூறும் பாடல்.
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
இஸ்ரவேலர் தாவீதை ராஜாவாக்குகிறார்கள்
5 இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லோரும் எப்ரோனில் தாவீதிடம் கூடிவந்தார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தார்![a] 2 சவுல் நமது ராஜாவாக இருந்தபோதும் யுத்தத்தில் நீர் எங்களை வழி நடத்தினீர். யுத்தத்திலிருந்து இஸ்ரவேலரை அவர்கள் இருப்பிடத்திற்கு நீரே அழைத்து வந்தீர். கர்த்தர் உம்மிடம், ‘எனது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு மேய்ப்பனாயிருப்பாய். இஸ்ரவேலுக்கு ராஜாவாக இருப்பாய்!’ என்று சொன்னார்” என்றார்கள்.
3 எனவே இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் தாவீதைச் சந்திப்பதற்காக எப்ரோன் என்னும் நகருக்கு வந்தார்கள். தாவீது ராஜா இத்தலைவர்களோடு கர்த்தருடைய முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். இஸ்ரவேலின் ராஜாவாக தலைவர்கள் அனைவரும் தாவீதை அபிஷேகம் பண்ணினார்கள்.
4 தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். 5 எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு ராஜாவாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான்.
எருசலேமில் தாவீதின் வெற்றி
6 ராஜாவும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது.[b] எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். 7 ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)
8 அந்த நாளில் தாவீது தனது ஆட்களை நோக்கி, “நீங்கள் எபூசியரை வெல்ல விரும்பினால், தண்ணீர் குகை[c] வழியே சென்று ‘முடவரும், குருடரும்’ ஆகிய பகைவரை நெருங்குங்கள்” என்றான். இதனால்தான் மக்கள், “குருடரும் முடவரும் வீட்டினுள் வரமுடியாது” என்பார்கள்.
9 கோட்டையினுள் தாவீது வாழ்ந்தான். அதை “தாவீதின் நகரம்” என்று அழைத்தான், மில்லோ என்னும் கோபுர பகுதியையும் தாவீது கட்டினான். நகரத்திற்குள்ளும் பல கட்டிடங்களை கட்டினான். 10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தாவீதோடிருந்ததால் அவன் பலம் மிகுந்தவனானான்.
11 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடம் தூதுவர்களை அனுப்பினான். கேதுரு மரங்களையும் தச்சரையும், சிற்பிகளையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கென்று ஒரு வீட்டைக் கட்டினார்கள். 12 அப்போது தாவீது கர்த்தர் தன்னை உண்மையாகவே இஸ்ரவேலின் ராஜாவாக்கியதை அறிந்தான். தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு தனது அரசை கர்த்தர் முக்கியமானதாக ஆக்கினார் என்பதை அவன் உணர்ந்தான்.
ஆடு, வெள்ளிக்காசு உவமை
(மத்தேயு 18:12-14)
15 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். 2 உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர்.
3 அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: 4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். 5 அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். 6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். 7 அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.
2008 by World Bible Translation Center