Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 88

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.

88 தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.
    இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.
    இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.

இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,
    நான் விரைவில் மரிப்பேன்.
ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்
    வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள்.
மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.
    உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.
    ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.
தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.

என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.
    யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.
நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை.
என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.
தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்!
    ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்.

10 கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?
    ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!

11 கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.
    மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.
12 இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.
    மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.

13 கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
    ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
14 கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
    ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
15 என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.
    உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
16 கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.
    உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது.
17 வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.
    என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன்.
18 கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.
    இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.

லேவியராகமம் 21:1-15

ஆசாரியர்களுக்கான விதிகள்

21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் குமாரர்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய உறவினனாக இருந்தால் அவன் அந்தப் பிணத்தைத் தொடலாம். மரித்துபோனவர்கள் அவரது தாய் அல்லது தந்தை, குமாரன் அல்லது குமாரத்தி, சகோதரன் அல்லது திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம். ஆனால் ஆசாரியனின் அடிமைகளுள் ஒருவன் மரித்து போனால் அதற்காக ஆசாரியன் தீட்டுள்ளவனாகக் கூடாது.

“ஆசாரியர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடியின் ஓரங்களை மழிக்கவோ கூடாது. தங்கள் உடலில் வெட்டி எவ்வித அடையாளக் குறிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இவர்கள் தேவனின் பெயருக்கு மரியாதை செலுத்த வேண்டும், ஏனென்றால் இவர்கள் கர்த்தரின் தகன பலியையும் அப்பத்தையும் செலுத்துகிறவர்கள். எனவே, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

“விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. ஒரு ஆசாரியன் தேவனுக்கு விசேஷ வழியில் சேவை செய்கிறான். ஆகையால் நீங்கள் அவனை விசேஷமாக நடத்த வேண்டும். ஏனென்றால் அவன் பரிசுத்தமான பொருட்களை ஏந்திச் செல்பவன். பரிசுத்தமான அப்பத்தை கர்த்தருக்கு எடுத்து வருபவன். நான் பரிசுத்தமானவர்! நானே கர்த்தர். நான் உன்னையும் பரிசுத்தப்படுத்துவேன்.

“ஒரு ஆசாரியனின் குமாரத்தி வேசியானால் அவள் தனது பரிசுத்தத்தைக் குலைத்துகொள்வதுடன், தன் தந்தைக்கும் அவமானத்தைத் தேடித்தருகிறாள். அவளைச் சுட்டெரிக்க வேண்டும்.

10 “தலைமை ஆசாரியன் தன் சகோதரர்களுக்கிடையில் இருந்து தலைமை சிறப்பு பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன், சிறப்பான உடைகளை அணிவதற்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவன் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். அவன் தனது துன்பங்களைப் பொது ஜனங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. அவன் தன் தலை முடியை அதிகமாக வளரும்படிவிடவோ, தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது. 11 அவன் பிணத்தைத் தொட்டு தன்னைத் தீட்டுப் பண்ணிக்கொள்ளக் கூடாது. மரித்து போனது அவனது தாயாகவோ தந்தையாகவோ இருந்தாலும் பிணத்தின் அருகில் போகக்கூடாது. 12 தலைமை ஆசாரியன் தேவனின் பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அவன் அதனால் தீட்டாவதுடன், தேவனின் பரிசுத்தமான இடத்தையும் தீட்டாக்கிவிடுகிறான். அபிஷேக எண்ணெயானது தலைமை ஆசாரியனின் தலைமீது ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இது அவனை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காட்டும். நானே கர்த்தர்!

13 “கன்னியான ஒரு பெண்ணை தலைமை ஆசாரியன் மணந்துகொள்ள வேண்டும். 14 விபச்சாரியான பெண்ணையோ, வேசியையோ, விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ மணந்துகொள்ளக் கூடாது. அவன் தன் சொந்த ஜனங்களிடமிருந்து ஒரு கன்னியான பெண்ணை மணந்துகொள்ள வேண்டும். 15 அப்பொழுது அவனது பிள்ளைகளை ஜனங்கள் மதிப்பார்கள்.[a] கர்த்தராகிய நான் தலைமை ஆசாரியனை அவனது சிறப்புப் பணிகளுக்காகத் தனியாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.

2 கொரி 8:16-24

தீத்துவும் அவனது குழுவும்

16 உங்கள் மீது எனக்கிருக்கும் அன்பைப் போலவே தீத்துவின் இதயத்திலும் அன்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் என்னைப் போலவே உங்களிடம் அன்பாய் இருக்கிறான். 17 நாங்கள் செய்யச் சொன்னதையெல்லாம் தீத்து ஏற்றுக்கொண்டான். அவன் உங்களிடம் வர பெரிதும் விரும்பினான். இது அவனது சொந்த முயற்சியே ஆகும். 18 நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன். 19 அதோடு, இக்காணிக்கைப் பணத்தை சுமந்துச் செல்லும்போது எங்களுக்குத் துணையாக இருக்க சபைகளால் நியமிக்கப்பட்டவனே இச்சகோதரன் ஆவான். தேவனுக்கு மகிமை உண்டாகவே நாங்கள் இச்சேவையைச் செய்ண்டிருக்கிறோம். சேவை செய்யும் எங்கள் விருப்பத்தைப் புலப்படுத்தவும் இதைச் செய்கிறோம்.

20 இப்பெரிய தொகையை கையாள்வது குறித்து நாங்கள் கொள்ளும் அக்கறைகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது எனக் கூடுமான வரையில் எச்சரிக்கையாய் உள்ளோம். 21 சரியானவற்றைச் செய்யவே நாங்கள் முயல்கிறோம். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல. மக்களுக்கு முன்பாகவும் நேர்மையாகப்படுவதை மட்டுமே செய்ய விரும்புகிறோம்.

22 இவர்களோடு எங்கள் சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவத் தயாராய் இருப்பான். பல வழிகளில் அவன் இதை நிரூபித்திருக்கிறான். உங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பதால் அதிக அளவில் உதவ அவன் விரும்புகிறான்.

23 தீத்துவைப் பற்றிக் கூறுவதானால், அவன் எனது கூட்டாளி. உங்களுக்கு உதவுவதற்காக என்னோடு பணிபுரிபவன். மற்ற சகோதரர்களைப் பற்றி கூறுவதானால் அவர்கள் சபைகளால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் புகழ் சேர்த்தவர்கள். 24 எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center