Revised Common Lectionary (Complementary)
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.
உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.
நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள்.
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.
நீர் என்றென்றும் அரசாளுவீர்.
14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது
4 மேசா மோவாபின் ராஜா. அவனுக்கு ஆடு மாடுகள் இருந்தன. அவன் இஸ்ரவேல் ராஜாவுக்கு 1,00,000 ஆட்டுக்குட்டிகளையும் 1,00,000 செம்மறியாட்டுக் கடாக்களையும் கம்பளிக்காகக் கொடுத்து வந்தான். 5 ஆனால் ஆகாப் மரித்ததும் மோவாபின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் புரட்சி செய்து தன் நாட்டைப் பிரித்துக்கொண்டான்.
6 பிறகு யோராம் சமாரியாவிற்கு வெளியே சென்று இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேர்த்தான். 7 அவன் தூதுவர்களை அனுப்பி யூதாவின் ராஜாவாகிய யோசபாத்திடம் பேசினான். யோராம், “மோவாபின் ராஜா எனக்கு எதிராக என் ஆட்சியிலிருந்து விலகிவிட்டான். அவனோடு போரிட என்னுடன் சேர்ந்து வருவீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு யோசபாத், “சரி, நான் உன்னோடு வருகிறேன். நான் உன்னைப் போன்றவன். எனது ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்கள். என் குதிரைகளும் உனது குதிரைகளைப் போன்றவைதாம்” என்றான்.
மூன்று ராஜாக்களும் எலிசாவை ஆலோசனைக் கேட்கிறார்கள்
8 யோசாபாத் யோராமிடம், “நாம் எந்த வழியில் போவது?” என்று கேட்டான்.
அதற்கு யோராம், “நாம் ஏதோம் பாலைவனத்தின் வழியாகப் போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.
9 எனவே இஸ்ரவேல் ராஜா யூதாவின் ராஜாவோடும் ஏதோமின் ராஜாவோடும் பயணம் செய்தான். அவர்கள் ஏறக்குறைய ஏழு நாட்கள் பயணம் செய்தனர். பிறகு படைவீரர்களுக்கும் மிருகங்களுக்கும் குடிக்க தண்ணீரில்லை. 10 இறுதியாக இஸ்ரவேலின் ராஜா, “ஓ! கர்த்தர் நமது மூன்று ராஜாக்களையும் ஒன்றுகூடி அழைத்து நம்மை மோவாபியர்களிடம் ஒப்படைத்து நம்மை தோற்கடித்தார்!” என்றான்.
11 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசி இங்கே இருக்கவேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார் என அவரிடமே கேட்போம்” என்றான்.
இஸ்ரவேல் ராஜாவின் வேலைக்காரர் ஒருவன், “சாப்பாத்தின் குமாரனான எலிசா இங்கே இருக்கிறார். அவர் எலியாவின் வேலைக்காரர்” என்றான்.
12 யோசபாத்தும், “கர்த்தருடைய வார்த்தை எலிசாவோடு உள்ளது” என்று கூறினான்.
எனவே இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் எலியாவைப் பார்க்கப் போனார்கள்.
13 எலிசா இஸ்ரவேல் ராஜாவாகிய யோராமிடம், “நான் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தந்தை மற்றும் தாயின் தீர்க்கதரிசிகளிடம் செல்லுங்கள்!” என்றான்.
அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இல்லை, நாங்கள் உங்களைப் பார்க்கவே வந்துள்ளோம். ஏனென்றால் கர்த்தர் மோவாப் மூலம் எங்களைத் தோற்கடிக்க எங்கள் மூவரையும் ஒன்றாகக் கூட்டியுள்ளார். எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்” என்றான்.
14 அதற்கு எலிசா, “சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். அவர் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் உம்மிடம் உண்மையைப் பேசுகிறேன். யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இங்கே இல்லாவிட்டால் உங்களை நான் பார்த்திருக்கவோ கவனித்திருக்கவோமாட்டேன்! 15 இப்போது சுரமண்டலம் வாசிக்கிற ஒருவனை அழைத்து வாருங்கள்” என்றான்.
அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது, கர்த்தருடைய வல்லமை எலிசாவின் மேல் இறங்கியது. 16 பிறகு எலிசா, “இப்பள்ளத்தாக்கிலே துளைகளைப் போடுங்கள். கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: 17 நீங்கள் காற்றையும் மழையையும் பார்ப்பதில்லை. ஆனால் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிறையும். பின் நீங்களும் உங்கள் பசுக்களும் மற்ற மிருகங்களும் குடிக்க தண்ணீர் கிடைக்கும். 18 இதனை கர்த்தர் எளிதாகச் செய்வார். மோவாப் ஜனங்களை நீங்கள் வெல்லும்படியாகவும் செய்வார்! 19 நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.
20 காலையில், பலியைச் செலுத்தும் போது ஏதோம் சாலை வழியாக தண்ணீர் வந்து பள்ளத்தாக்கை நிரப்பிற்று.
12 தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். 13 ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். 14 இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது. 15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
16 கிறிஸ்துவின் போதனைகள் உங்களுக்குள் சிறந்த செல்வமாக இருக்கட்டும். ஒருவருக்கொருவர் போதிக்கவும், பலப்படுத்தவும் உங்கள் முழு ஞானத்தையும் பயன்படுத்துங்கள். உங்கள் இதயத்தில் தேவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சங்கீதம், கீர்த்தனைகள், ஞானப்பாட்டு போன்றவற்றை தேவனைக் குறித்து உங்கள் இதயங்களில் சுரக்கும் நன்றியுணர்வோடு பாடுங்கள். 17 நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். பிதாவாகிய தேவனுக்கு இயேசுவின் மூலம் நன்றி செலுத்துங்கள்.
2008 by World Bible Translation Center