Revised Common Lectionary (Complementary)
[a]111 கர்த்தரைத் துதியங்கள்!
நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில்
நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
2 கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
3 உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
4 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
5 தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
6 அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
7 தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
8 தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
9 தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.
மூன்று பார்வையாளர்கள்
18 பிறகு, கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக் காட்சியளித்தார். ஆபிரகாம் மம்ரேயிலுள்ள ஓக் மரங்களுக்கு அருகில் வாழ்ந்தான். ஒரு நாள், வெப்பம் அதிகமான நேரத்தில் ஆபிரகாம் தனது கூடாரத்தின் வாசலுக்கருகில் இருந்தான். 2 ஆபிரகாம் மேலே ஏறிட்டுப் பார்த்தபோது முன்றுபேர் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆபிரகாம் அவர்களைப் பார்த்ததும் குனிந்து வணங்கினான். 3 ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள். 4 உங்கள் பாதங்களைக் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன். நீங்கள் மரங்களுக்கடியில் ஓய்வுகொள்ளுங்கள். 5 நான் உங்களுக்கு உணவைக் கொண்டுவருவேன். நீங்கள் விரும்புகிற அளவிற்குச் சாப்பிடலாம். பிறகு உங்களது பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அந்த மூன்று மனிதர்களும், “அது நல்லது. நீ சொன்னபடி நாங்கள் செய்கிறோம்” என்றனர்.
6 ஆபிரகாம் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவன் சாராளிடம், “சீக்கிரம் மூன்றுபடி கோதுமை மாவை எடுத்து ரொட்டிகள் தயார் செய்” என்றான். 7 பிறகு ஆபிரகாம் தனது தொழுவத்துக்கு ஓடி இளமையான கன்றுக் குட்டியைத் தேர்ந்தெடுத்து, அதனை வேலைக்காரனிடம் கொடுத்தான். அதனை விரைவில் கொன்று உணவு தயாரிக்கும்படி கூறினான். 8 ஆபிரகாம் இறைச்சியும், கொஞ்சம் பாலும், வெண்ணெயும் கொண்டு வந்து மூன்று பார்வையாளர்கள் முன்பு வைத்து அவர்கள் அருகில் பரிமாறுவதற்குத் தயாராக நின்றான். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
9 பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், “உனது மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டனர்.
அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
10 பிறகு கர்த்தர், “நான் மீண்டும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திரும்பி வருவேன். அப்போது உன் மனைவி சாராள் ஒரு மகனோடு இருப்பாள்” என்றார்.
சாராள் கூடாரத்திலிருந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11 ஆபிரகாமும் சாராளும் மிகவும் முதியவர்களாக இருந்தனர். சாதாரணமாக பெண்கள் குழந்தை பெறுவதற்கான வயதை சாராள் கடந்திருந்தாள். 12 எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், “நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்” என்றாள்.
13 கர்த்தர் ஆபிரகாமிடம், “சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள். 14 கர்த்தருக்கு கடினமான காரியம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. நான் வசந்த காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் மகனோடு இருப்பாள்” என்றார்.
15 ஆனால் சாராளோ, “நான் சிரிக்கவில்லையே” என்றாள். (அவள் அச்சத்தால் இவ்வாறு சொன்னாள்)
ஆனால் கர்த்தரோ, “இல்லை. நீ சொல்வது உண்மையன்று என எனக்குத் தெரியும், நீ சிரித்தாய்” என்றார்.
பிலிப்பியர்களுக்கு பவுலின் நன்றி
10 மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 11 எனக்குத் தேவைகள் உள்ளன என்பதற்காக இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறவில்லை. எனக்கு இருக்கிற சூழ்நிலையில் நான் திருப்தி அடைந்த உணர்வில் இருக்கிறேன். 12 ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன். 13 கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்.
14 ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று. 15 பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோது எனக்கு ஆதரவு கொடுத்தது, உங்கள் சபை மட்டுமே. 16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப் பலமுறை தேவைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தீர்கள். 17 உண்மையில், நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18 எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தன. தேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றன. உங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. உங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தன. அப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார். அது அவருக்கு விருப்பமானதாயிற்று. 19 இயேசு கிறிஸ்துவின் மகிமையால் நமது தேவன் மிக உயர்ந்த செல்வந்தராக இருக்கிறார். அவர் அச்செல்வத்தைப் பயன்படுத்தி உமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பார். 20 நமது பிதாவாகிய தேவனுக்கு மகிமை என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
2008 by World Bible Translation Center