Revised Common Lectionary (Complementary)
ஆயின்
121 நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
122 என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
123 கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
124 நான் உமது ஊழியன்.
உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது ஊழியன்.
உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
126 கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
127 கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
128 நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
16 ஒரு நாள் இரு வேசிகள் சாலொமோனிடம் வந்தனர். அவர்கள் ராஜா முன்பு நின்றனர். 17 அதில் ஒருத்தி, “ஐயா, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி குழந்தைப் பேற்றுக்குத் தயாராக இருந்தோம். நான் குழந்தை பெறும்போது இவளும் கூட இருந்தாள். 18 மூன்று நாட்களுக்குப் பின் இவளும் குழந்தைப் பெற்றாள். அந்த வீட்டில் எங்களைத் தவிர எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம். 19 ஒரு இரவில் இவள் தன் குழந்தையோடு தூங்கும்போது, குழந்தை மரித்துப்போனது. 20 அப்பொழுது நான் தூங்கிக்கொண்டிருந்ததால், இவள் என் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவளது மரித்த குழந்தையை என் கையருகில் போட்டுவிட்டாள். 21 மறுநாள் காலையில் எழுந்து என் குழந்தைக்குப் பால் கொடுக்க முயன்றேன். ஆனால் குழந்தை மரித்திருப்பதை அறிந்தேன். பிறகு உற்றுப்பார்த்தபோது அது என் குழந்தையல்ல என்பதை அறிந்துகொண்டேன்” என்றாள்.
22 ஆனால் அடுத்தவள், “இல்லை உயிரோடுள்ள குழந்தை என்னுடையது. மரித்துப்போன குழந்தை உன்னுடையது” என்றாள்.
ஆனால் முதல் பெண், “இல்லை நீ தவறாக சொல்கிறாய்! மரித்த குழந்தை உன்னுடையது. உயிருள்ள குழந்தை என்னுடையது” என்றாள். இவ்வாறு இருவரும் ராஜாவுக்கு முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.
23 பிறகு சாலொமோன் ராஜா, “இருவருமே உயிரோடுள்ள குழந்தை உங்களுடையது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருத்தியும் மரித்துப்போன குழந்தை மற்றவளுடையது என்று கூறுகிறீர்கள்” என்றான். 24 பிறகு சாலொமோன் வேலைக்காரனை அனுப்பி ஒரு வாளைக் கொண்டுவரச் செய்தான். 25 பின்னர் அவன், “நம்மால் செய்யமுடிந்தது இதுதான். உயிரோடுள்ள குழந்தையை இரு துண்டுகளாக வெட்டுவோம். ஆளுக்குப் பாதியைக் கொடுப்போம்” என்றான்.
26 இரண்டாவது பெண், “அதுதான் நல்லது. குழந்தையை இரண்டாக வெட்டுங்கள். பிறகு இருவருக்குமே கிடைக்காமல் போகும்” என்றாள்.
ஆனால் முதல் பெண், அக்குழந்தை மேல் மிகுந்த அன்பு கொண்டவள். அவளே உண்மையான தாய், அவள் ராஜாவிடம், “ஐயா அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாம்! அதனை அவளிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள்.
27 பிறகு சாலொமோன், “அக்குழந்தையைக் கொல்லவேண்டாம். அதனை முதல் பெண்ணிடமே கொடுத்துவிடுங்கள். அவளே உண்மையான தாய்” என்றான்.
28 இஸ்ரவேல் ஜனங்கள் சாலொமோனின் முடி வைப்பற்றி கேள்விப்பட்டனர். அவனது அறிவுத் திறனைப் பாராட்டி அவனைப் பெரிதும் மதித்தனர். அவன் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று சரியான முடிவுகளை எடுத்துள்ளான் என்று அறிந்தனர்.
உண்மையான ஞானம்
13 உங்களில் ஞானமும், விவேகமும் பொருந்திய ஒருவன் இருந்தால் தன் நன்னடத்தையின் மூலம் பணிவோடு நற்காரியங்களைச் செய்து அதை அவன் புலப்படுத்தட்டும். 14 உங்கள் இதயத்தில் கசப்பான பொறாமையும் சுயநலமும் இருந்தால், உங்கள் ஞானத்தைப்பற்றி நீங்கள் பெருமைப்பட முடியாது. அப்பெருமைப் பாராட்டுதல் உண்மையை மறைக்கிற ஒரு பொய்யாகவே இருக்கும். 15 அவ்வித ஞானம் சொர்க்கத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது. 16 எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும். 17 ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது. 18 சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள்.
2008 by World Bible Translation Center