Revised Common Lectionary (Complementary)
ஷீன்
161 எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
162 கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
163 நான் பொய்களை வெறுக்கிறேன்!
நான் அவற்றை அருவருக்கிறேன்!
ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
164 உமது நல்ல சட்டங்களுக்காக
ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
166 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
167 நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
168 நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
குயவனும் களிமண்ணும்
18 இந்தச் வார்த்தை எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்தது: 2 “எரேமியா, குயவனின் வீட்டிற்குப் போ. அந்தக் குயவனின் வீட்டில் எனது வார்த்தையை உனக்குக் கொடுப்பேன்.”
3 எனவே, நான் கீழே குயவனின் வீட்டிற்குப் போனேன். குயவன் சக்கரத்தில் களிமண்ணை வைத்து வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். 4 அவன் களிமண்ணிலிருந்து ஒரு பானையை செய்துகொண்டிருந்தான். ஆனால் அந்தப் பானையில் ஏதோ தவறு இருந்தது. எனவே, அந்தக் குயவன் அக்களிமண்ணை மீண்டும் பயன்படுத்தி வேறொரு பானை செய்தான். தான் விரும்பின வகையில் அந்தப் பானையை வடிவமைக்கும்படி அவன் தனது கைகளைப் பயன்படுத்தினான்.
5 அப்போது கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது: 6 “இஸ்ரவேல் குடும்பத்தினரே! உங்களோடு தேவனாகிய நானும் அதே செயலைச் செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். குயவனின் கைகளில் இருக்கிற களிமண்ணைப்போன்று நீங்கள் இருக்கிறீர்கள். நான் குயவனைப் போன்றுள்ளேன். 7 ஒரு காலம் வரும். அப்போது, நான் ஒரு தேசத்தையோ அல்லது ஒரு அரசாட்சியையோ குறித்து பேசுவேன். அத்தேசத்தை உயர்த்துவேன் என்று நான் சொல்லலாம். அத்தேசத்தைக் கீழே இழுத்துப் போடுவேன். அத்தேசத்தை அல்லது அரசாங்கத்தை அழிப்பேன் என்று சொல்லலாம். 8 ஆனால், அத்தேசத்து ஜனங்கள் தங்கள் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றலாம். அத்தேசத்து ஜனங்கள் தங்கள் தீயச் செயல்களை நிறுத்தலாம். பிறகு என் மனதை நான் மாற்றுவேன். அத்தேசத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனது திட்டத்தை நான் பின்பற்றமாட்டேன். 9 இன்னொரு காலம் வரலாம். அப்போது ஒரு தேசத்தைப்பற்றிப் பேசுவேன். நான் அத்தேசத்தைக் கட்டி எழுப்புவேன் என்று சொல்லலாம். 10 ஆனால், அத்தேசம் தீயவற்றைச் செய்து எனக்குக் கீழ்ப்படியாமல் போவதை நான் பார்க்கலாம். பிறகு, நான் அத்தேசத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று போட்டிருந்த திட்டங்களுக்காக வருந்தி அவற்றை எதிராக மாற்றிப்போடுவேன்.
11 “எனவே, எரேமியா, யூதாவின் ஜனங்களிடமும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களிடமும் கூறு. ‘இதுதான் கர்த்தர் கூறுவது: நான் இப்போதிருந்தே உங்களுக்குத் தொல்லைகளை தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு எதிராகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே, நீங்கள் செய்துகொண்டிருக்கிற தீயச்செயல்களை நிறுத்துங்கள். ஒவ்வொரு நபரும் மாறவேண்டும், நல்லவற்றைச் செய்யத் தொடங்கவேண்டும்!’
நம்பிக்கையற்றோருக்கு எச்சரிப்பு
(லூக்கா 10:13-15)
20 பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை. 21 இயேசு, “கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத் தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள். 22 நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன்.
23 “கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும். 24 ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.
2008 by World Bible Translation Center