Revised Common Lectionary (Complementary)
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.
பொய்த் தெய்வங்களுக்கு கர்த்தர் சவால் விடுகிறார்
21 யாக்கோபின் ராஜாவான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம். 22 உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம். 23 என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்.
24 “பாருங்கள், பொய்த் தெய்வங்களான நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்கள்! உங்களால் எதுவும் செய்யமுடியாது! அருவருப்பானவன் மட்டுமே உங்களை வழிபட விரும்புவான்!”
கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார்
25 “வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான்.
அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான்.
பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல
அந்தச் சிறப்பானவன் ராஜாக்களை அழிப்பான் (மிதிப்பான்).
26 “இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது.
நாம் அவனை தேவன் என்று அழைப்போம்.
எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை.
அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது.
27 கர்த்தராகிய நானே சீயோனிடம் இதைப் பற்றிச் சொன்ன முதல் நபர்.
இந்தச் செய்திகளோடு ஒரு தூதுவனை நான் எருசலேமிற்கு அனுப்பினேன்.
‘பாருங்கள், உங்கள் ஜனங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்!’”
28 நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன்.
அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல.
அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை!
29 அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்!
அவைகளால் எதுவும் செய்யமுடியாது!
அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!
நமது இரட்சிப்பானது சட்டங்களைவிடப் பெரியது
2 ஆகையால், நமக்குச் சொல்லித்தரப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் உண்மை வழியில் இருந்து விலகாமல் இருப்போம். 2 தேவ தூதர்கள் மூலமாக தேவனால் சொல்லப்பட்ட அப்போதனைக்கு எதிராக யூதர்கள் செயல்பட்டபோதும், அதற்கு கீழ்ப்படியாமல் போனபோதும், ஒவ்வொரு முறையும் அதற்காக தண்டிக்கப்பட்டனர். 3 நமக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பு மிக உயர்ந்தது. எனவே நாம் இந்த இரட்சிப்பை முக்கியமானதாகக் கருதாமல் வாழும் பட்சத்தில் நாமும் தண்டிக்கப்படுவோம். இந்த இரட்சிப்பு கர்த்தராலேயே முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. இந்த இரட்சிப்பு உண்மையானது என்பதை அவரிடத்தில் கேட்டவர்கள் நிரூபித்துள்ளனர். 4 அதிசயங்கள், பெரிய அடையாளங்கள், பலவகையான அற்புதங்கள் மூலம் தேவனும் கூட அதை நிரூபித்துள்ளார். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து மக்களுக்கு வரங்களைக் கொடுப்பதன் மூலமும் நிரூபித்துள்ளார். அவர் விரும்பிய விதத்திலேயே அந்த வரங்களை அவர் கொடுத்தார்.
மனிதர்களை இரட்சிக்க மனிதர்களைப் போலானார் கிறிஸ்து
5 வரப்போகிற புதிய உலகத்தை ஆள்பவர்களாக தேவன் தேவதூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற உலகம் அதுதான். 6 சில இடத்தில்
“தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்?
மனிதகுமாரனைப் பற்றியும்
ஏன் அக்கறை கொள்கிறீர்?
அவர் அவ்வளவு முக்கியமானவரா?
7 கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிட அவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர்.
அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர்.
8 நீர் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தீர்”(A)
என்று எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை. 9 சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார்.
2008 by World Bible Translation Center