Revised Common Lectionary (Complementary)
5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது. அன்று இரவு கனவில் கர்த்தர் வந்தார். தேவன், “உனக்கு என்ன வேண்டுமோ கேள் அதனை நான் உனக்கு தருவேன்” என்றார்.
6 சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது குமாரனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர். 7 என் தேவனாகிய கர்த்தாவே, என் தந்தையின் இடத்தில் என்னை ராஜாவாக்கினீர். ஆனால் நான் ஒரு குழந்தையைப்போன்று இருக்கிறேன். நான் செய்யவேண்டியதைச் செய்வதற்குரிய ஞானம் இல்லாமல் இருக்கிறேன். 8 உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு ராஜா அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான். 9 எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.
10 இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார். 11 தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய். 12 எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள்.
பே
129 கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
130 ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
131 கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
132 தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
133 கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
134 கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
135 கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
136 ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
26 அதோடு ஆவியானவர் நமக்கு உதவுகிறார். நாம் பலவீனமானவர்கள். ஆவியானவர் நமது பல வீனங்களில் உதவுகிறார். நாம் எவ்வாறு வேண்டிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனினும் ஆவியானவர் நமக்காக தேவனிடம் வேண்டுகிறார். அவரது வேண்டுதல்களை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. 27 மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும்.
28 தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார். 29 தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். 30 எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமையும்படுத்தினார்.
தேவனின் அன்பு
31 எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. 32 தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார். எனவே இயேசு கிறிஸ்து இப்போது நம்மோடு இருப்பதால், தேவன் எல்லாவற்றையும் தருவார். 33 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார். 34 தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். 35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க இயலுமா? பிரச்சனைகளும், தண்டனைகளும் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்குமா? இயலாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
36 “எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம்.
வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்”(A)
என எழுதப்பட்டுள்ளது.
37 தேவன் நம்மீது அன்புகொண்டவர். அவரால் நாம் அனைத்திலும் பெரும் வெற்றி பெறுகிறோம். 38-39 தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது.
மேலும் பல உவமைகள்
(மாற்கு 4:30-34; லூக்கா 13:18-21)
31 பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான். 32 விதைகளிலெல்லாம் மிகச் சிறியது கடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாக வளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன” என்றார்.
33 இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார், “பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது” என்றார்.
புதையல், முத்து பற்றி உவமைகள்
44 “பரலோக இராஜ்யம் புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தைப் போன்றது. புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தை ஒருவன் ஒருநாள் கண்டு பிடித்தான். புதையல் கிடைத்ததால் அவன் மிக மகிழ்ந்தான். மீண்டும் அவன் அச்செல்வத்தைப் புதைத்து வைத்து அந்த நிலத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றான்.
45 “மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது. 46 ஒரு நாள் அவ்வியாபாரி மிகச் சிறந்த முத்து ஒன்றைக் கண்டான். அம்முத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த அனைத்தையும் அந்த வியாபாரி விற்றான்.
வலையைப் பற்றிய உவமை
47 “பரலோக இராஜ்யம் ஏரியில் விரிக்கப்பட்ட வலையைப் போன்றது, ஏரியில் விரிக்கப்பட்ட ஒரு வலை, பலவகையான மீன்களைப் பிடித்தது. 48 நிரம்பிய வலையை, மீனவர்கள் கரைக்கு இழுத்தனர். நல்ல மீன்களை மீனவர்கள் ஒரு கூடையிலிட்டனர். பின், தகுதியற்ற மீன்களைத் தூர எறிந்தனர். 49 இவ்வுலகின் முடிவுக் காலத்திலும் அவ்வாறே நடக்கும். தேவதூதர்கள் வந்து நல்ல மனிதர்களைத் தீயவர்களிடமிருந்து பிரிப்பார்கள். 50 அந்தத் தேவதூதர்கள் தீயவர்களைச் சூளையின் நெருப்பில் எறிவார்கள் அங்கு அவர்கள் வலியினால் கூக்குரலிட்டுப் பற்களைக் கடிப்பார்கள்.”
51 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், “உங்களுக்கு இவைகள் புரிகின்றனவா?” என்று கேட்டார். சீஷர்கள், “ஆம், எங்களுக்குப் புரிகின்றன” என்று பதிலுரைத்தனர்.
52 பின்பு இயேசு தம் சீஷர்களிடம், “பரலோக இராஜ்யத்தைப்பற்றி அறிந்த வேதபாரகர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீட்டின் சொந்தக்காரனைப் போன்றவர்கள். வீட்டின் சொந்தக்காரன் தன் வீட்டில் புதியதும் பழையதுமான பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறான். அவன் புதியதும் பழையதுமான பொருட்களைக் கொண்டு வருகிறான்” என்றார்.
2008 by World Bible Translation Center