Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.
65 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.
நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன்.
2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.
நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர்.
உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர்.
3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்
அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.
4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!
உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம்.
5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.
நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர்.
அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர்.
உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.
அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம்.
7 சீறும் கடலை தேவன் அமைதியாக்கினார்.
“சமுத்திரம்” போல ஜனங்களை தேவன் பூமியில் உண்டாக்கினார்.
8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.
சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும்.
9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.
நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர்.
தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர்.
இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்:
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.
வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர்.
நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர்.
இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர்.
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.
பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.
பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
தேவன் இஸ்ரவேலைச் சுத்தப்படுத்த தண்டிக்கிறார்
6 “என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், கேட்டீர்கள்.
எனவே, நீங்கள் இந்தச் செய்தியை பிற ஜனங்களிடம் சொல்லவேண்டும்.
இப்போது, நான் இதுவரை நீங்கள் அறியாத புதிய செய்திகளைச் சொல்லுவேன்.
7 இவை நீண்டக் காலத்திற்கு முன் நடந்ததல்ல.
இவை இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கு முன்னால் நீங்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்.
எனவே, ‘நாங்கள் ஏற்கெனவே அறிவோம்’ என்று நீங்கள் சொல்லமுடியாது.
8 ஆனாலும் வருங்காலத்தில் என்ன நடக்குமென்று இப்பொழுது, நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மறுப்பீர்கள்.
நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளமாட்டீர்கள்.
நான் சொன்ன எதையும் நீ எப்பொழுதும் கேட்பதில்லை.
நீ எப்பொழுதும் எனக்கு எதிராக இருப்பாய் என்பதை நான் தொடக்க முதலே அறிவேன்.
நீ பிறந்த நாள் முதலாகவே எனக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறாய்.
9 “ஆனால், நான் பொறுமையாக இருப்பேன்.
நான் இதனை எனக்காகச் செய்வேன்.
நான் கோபங்கொண்டு உன்னை அழிக்காததற்காக ஜனங்கள் என்னைப்போற்றுவார்கள்.
காத்திருந்ததற்காக நீ என்னைப்போற்றுவாய்.
10 “பார், நான் உன்னைச் சுத்தப்படுத்துவேன்.
ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் நான் உனக்குத் துன்பங்களைத் தந்து உன்னைச் சுத்தப்படுத்துவேன்.
11 எனக்காகவே, எனக்காகவே நான் இதனைச் செய்வேன்.
நான் முக்கியமானவன் அல்ல என்று நீ என்னை நடத்த முடியாது.
எனது துதியையும், மகிமையையும் பொய்த் தெய்வங்கள் எடுத்துக்கொள்ள விடமாட்டேன்.
தன் பணியைப் பற்றிப் பவுல்
14 எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். 15 நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். 16 என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.
17 நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். 18 நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். 19 அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். 20 கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால்,
21 “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள்.
அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.”(A)
என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
2008 by World Bible Translation Center