Revised Common Lectionary (Complementary)
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
6 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
என்னைக் குணமாக்கும்!
என் எலும்புகள் நடுங்குகின்றன.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
எனவே என்னை நீர் குணமாக்கும்!
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8 தீயோரே அகன்று போங்கள்!
ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
ஆலயத்தில் எரேமியாவின் பாடம்
26 யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் வந்த முதலாம் ஆட்சி ஆண்டில் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் குமாரனாக இருந்தான். 2 கர்த்தர், “எரேமியா, கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் எழுந்து நில். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தொழுதுகொள்ள வரும் யூதாவின் ஜனங்கள் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறு. நான் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல். எனது வார்த்தையில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாதே. 3 ஒருவேளை எனது வார்த்தையை அவர்கள் கேட்டு அதற்கு அடிபணியலாம். ஒருவேளை அவர்கள் தமது தீயவாழ்வை நிறுத்தலாம். அவர்கள் மாறினால், பிறகு நான் அவர்களைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் மாற்றுவேன். அந்த ஜனங்கள் ஏற்கனவே செய்த தீயச்செயல்களுக்காகத்தான் நான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். 4 நீ அவர்களிடம் சொல்லுவாய், ‘இதுதான் கர்த்தர் சொன்னது: நான் உங்களிடம் எனது போதனைகளைக் கொடுத்தேன். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து, என் போதனைகளைப் பின்பற்றவேண்டும். 5 எனது ஊழியக்காரர்கள் சொல்லுகிறவற்றை நீங்கள் கேட்க வேண்டும் (தீர்க்கதரிசிகள் எனது ஊழியக்காரர்கள்). நான் தீர்க்கதரிசிகளை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. 6 நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால், பிறகு நான் எருசலேமிலுள்ள என் ஆலயத்தை, சீலோவிலுள்ள எனது பரிசுத்தக் கூடாரத்தைப் போன்றுச் செய்வேன். உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்கள், மற்ற நகரங்களுக்குக் கேடுகள் ஏற்படும்படி வேண்டும்போது எருசலேமை நினைத்துக்கொள்வார்கள்’” என்றார்.
7 ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் மற்றும் அனைத்து ஜனங்களும் எரேமியா கர்த்தருடைய ஆலயத்தில் இவ்வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டனர். 8 கர்த்தர் கட்டளை இட்டிருந்தபடி ஜனங்களிடம் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் எரேமியா சொல்லிமுடித்தான். பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் அனைத்து ஜனங்களும் எரேமியாவைப் பிடித்தனர். அவர்கள் “இத்தகைய பயங்கரமானவற்றை நீ சொன்னதற்காக மரிக்க வேண்டும்” என்றனர். 9 “கர்த்தருடைய நாமத்தால் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இவ்வாலயம் சீலோவிலுள்ளதைப்போன்று அழிக்கப்படும் என்று சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இந்த ஜனங்களும் வாழாதபடி எருசலேம் வனாந்தரமாகிவிடும் என்று எப்படி தைரியமாக சொல்வாய்?” என்றனர். ஜனங்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவைச் சுற்றிக்கூடினார்கள்.
10 இங்கு நடந்த அனைத்தையும் யூதாவை ஆள்பவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் ராஜாவின் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் புதிய வாயிலின் முகப்பில் தங்கள் இடத்தில் அமர்ந்தனர். புதிய வாசல் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வழிநடத்தும் வாசல். 11 பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆள்வோர்களிடமும் ஜனங்களிடமும் பேசினார்கள். அவர்கள், “எரேமியா கொல்லப்படவேண்டும். அவன் எருசலேமைப்பற்றி கெட்டவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்றனர்.
12 பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னை கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது.
சிமிர்னா சபைக்கு இயேசுவின் நிருபம்
8 “சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:
“துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர்.
9 “உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர். 10 உங்களுக்கு நிகழ்வதைக் குறித்து அச்சப்படவேண்டாம். பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் போடுவான். அவன் உங்களைச் சோதிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். நீங்கள் பத்து நாட்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் இறக்க வேண்டியதாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருங்கள். நீ இறுதிவரை உண்மையாயிருந்தால் ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.
11 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவன் இரண்டாவது மரணத்தினால் பாதிக்கப்படமாட்டான்.”
2008 by World Bible Translation Center