Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 40:1-8

இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

40 கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார்.
    அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.
அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார்.
    சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார்.
என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார்.
    என் பாதங்களை உறுதியாக்கினார்.
தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலை கர்த்தர் என் வாயில் வைத்தார்.
    எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள்.
    அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.

ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
    பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்!
    எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்!
கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை!
    நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும், மீண்டும் கூறுவேன்.
    அவை எண்ணிலடங்காதவை.

கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்!
    உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை.
    உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை.
எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும்.
    நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது.
என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன்.
    உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன்.”

ஓசியா 8:11-14

இஸ்ரவேல் தேவனை மறந்து விக்கிரகங்களை வணங்குகிறது

11 “எப்பிராயீம் மேலும், மேலும் பலிபீடங்களைக் கட்டியது.
    அது பாவமானது.
    அப்பலிபீடங்கள் எப்பிராயீமின் பாவப் பலி பீடங்களாக இருந்திருக்கின்றன.
12 நான் எப்பிராயீமிற்காக 10,000 சட்டங்களை எழுதினாலும்,
    அவன் அவற்றை யாரோ அந்நியர்களுக்குரியதாகவே கருதுவான்.
13 இஸ்ரவேலர்கள் பலிகளை விரும்புகின்றார்கள்.
    அவர்கள் இறைச்சியைப் படைத்து உண்ணுகிறார்கள்.
கர்த்தர் அவர்களது பலிகளை ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்களது பாவங்களை அவர் நினைவில் வைத்திருக்கிறார்.
    அவர்களை அவர் தண்டிப்பார்.
    அவர்கள் எகிப்திற்குக் கைதிகளாகக் கொண்டுச் செல்லப்படுவார்கள்.
14 இஸ்ரவேல் ராஜாக்களின் வீடுகளைக் கட்டினார்கள். ஆனால் இஸ்ரவேல் அதனை உருவாக்கியவரை மறந்துவிட்டது.
    இப்போது யூதா கோவில்களைக் கட்டுகின்றது.
ஆனால் நான் யூதவின் நகரங்களுக்கு நெருப்பை அனுப்புவேன்.
    நெருப்பானது அதன் கோட்டைகளை அழிக்கும்!”

ஓசியா 10:1-2

இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது

10 இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன்.
    ஆனால் இஸ்ரவேல் மேலும், மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான்.
அவனுடைய நாடு மேலும், மேலும் வளம் பெற்றது.
    ஆகவே அவன் மேலும், மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான்.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஏமாற்ற முயன்றார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் அவர்கள் பலிபீடங்களை உடைப்பார்.
    அவர் அவர்கள் நினைவு கற்களை அழிப்பார்.

எபிரேயர் 13:1-16

தேவனை பிரியப்படுத்தும் வழிபாடு

13 கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன்,

“நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.(A)

எனவே,

“கர்த்தர் எனக்கு உதவுபவர்.
    நான் அச்சப்படத் தேவையில்லை.
எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம்.(B)

உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர். எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.

10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. 11 பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. 12 எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். 13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். 15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center