Revised Common Lectionary (Complementary)
நன்றி கூறும் பாடல்.
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
மோசேயை தேவன் மீண்டும் அழைத்தல்
28 எகிப்தில் தேவன் மோசேயிடம் பேசினார். 29 அவர், “நானே கர்த்தர். நான் உன்னிடம் கூறுகின்றவற்றை எகிப்து ராஜாவிடம் சொல்” என்றார்.
30 ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். ராஜா எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.
7 கர்த்தர் மோசேயிடம், “நான் உன்னோடு இருப்பேன். பார்வோனுக்கு நீ ஒரு பேரரசனைப் போல் தோன்றுவாய். ஆரோன் உனக்காகப் பேசுகிறவனாய் இருப்பான். 2 நான் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் ஆரோனுக்குச் சொல். நான் சொல்லும் காரியங்களை அவன் ராஜாவுக்குச் சொல்வான். இஸ்ரவேல் ஜனங்கள் இத்தேசத்தை விட்டுச் செல்வதற்கு பார்வோன் அனுமதிப்பான். 3 ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி நான் செய்வேன். நீங்கள் சொல்லுகிற காரியங்களுக்கு அவன் கீழ்ப்படியமாட்டான். நான் யாரென்பதை நிரூபிப்பதற்காக எகிப்தில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வேன். ஆனால் உங்களுக்கு செவிகொடுக்க மறுப்பான். 4 பிறகு நான் எகிப்தை அதிகமாகத் தண்டிப்பேன். என் ஜனங்களையும் வெளியே கொண்டு வருவேன். 5 அப்போது எகிப்து ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். அதன்பின் அவர்கள் தேசத்திலிருந்து என் ஜனங்களை வழி நடத்துவேன்” என்றார்.
6 கர்த்தரின் கட்டளைகளுக்கு மோசேயும் ஆரோனும் கீழ்ப்படிந்தனர். 7 பார்வோனிடம் பேசும்போது, மோசே 80 வயதுள்ளவனாகவும் ஆரோன் 83 வயதுள்ளவனாகவும் இருந்தனர்.
மோசேயின் கைத்தடி பாம்பாக மாறுதல்
8 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 9 “பார்வோன் உங்கள் வல்லமையை நிரூபித்துக் காட்டச் சொல்வான். உங்களிடம் ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டுமென பார்வோன் கேட்பான். ஆரோனின் கைத்தடியை நிலத்தில் வீசும்படியாகச் சொல். பார்வோன் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, கைத்தடி ஒரு பாம்பாக மாறும்” என்றார்.
10 எனவே மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் போய், கர்த்தர் சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் அவனது கைத்தடியைக் கீழே எறிந்தான். பார்வோனும் அவனது அதிகாரிகளும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, கைத்தடி பாம்பாக மாறிற்று.
11 எனவே, ராஜா தன் நாட்டு ஞானிகளுக்கும், மந்திரவாதிகளுக்கும் சொல்லியனுப்பினான். அம்மனிதர்களும் அவர்களது உபாயங்களைப் பயன்படுத்தி ஆரோன் செய்தவாறே செய்தனர். 12 அவர்களும் தங்கள் கைத்தடிகளை நிலத்தின் மேல் எறிந்தபோது, அக்கைத்தடிகள் பாம்புகளாயின, ஆனால் ஆரோனின் கைத்தடியோ அவற்றைத் தின்றது. 13 பார்வோனின் இருதயம் கடினமாகி, இப்போதும் ஜனங்களைப் போக விட மறுத்துவிட்டான். கர்த்தர் நடக்குமெனக் கூறியபடியே இது நிகழ்ந்தது. மோசேயும் ஆரோனும் கூறுவதைக் கேட்க ராஜா மறுத்தான்.
பிரமாணங்களும் மனிதரின் விதிமுறைகளும்
(மத்தேயு 15:1-20)
7 எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர். 2 இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) 3 பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். 4 யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர்.
5 பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவிடம், “உம்முடைய சீஷர்கள் நமக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் விதிமுறைகளைக் கைக்கொள்ளவில்லையே? உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால் தம் உணவை உண்டு வருகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.
6 இயேசு அவர்களிடம் “நீங்கள் எல்லாரும் போலித்தனமானவர்கள். உங்களைப் பற்றி ஏசாயா சரியாகவே எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருப்பது:
“‘இந்த மக்கள் என்னை மதிப்பதாய்ச் சொல்கிறார்கள்,
ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
7 அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது.
அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’(A)
8 நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார்.
9 மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். 10 ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’(B) என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’(C) என்று கூறி இருக்கிறான். 11 ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். 12 அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். 13 ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center